இஸ்லாமிய மாதங்களும் அதன் சிறப்பம்சங்களும்!
இஸ்லாமிய ஆண்டிலும் மற்ற எல்லா ஆண்டுகளைப் போல 12 மாதங்கள் வகுக்கப்பட்டுள்ளன. சந்திரனின் ஓட்டத்தை அடிப்படையாக வைத்து அமைந்த இஸ்லாமிய மாதங்கள் ஒவ்வொற்றிலும் சிறப்பம்சங்கள் நிறைந்துள்ளது. அவற்றை பார்க்கலாம்.
முகரம் :
இஸ்லாமிய ஆண்டின் முதல் மாதமாகும். போர் செய்யத் தடை செய்யப்பட்ட மாதமாக இருந்ததால், போர் விலக்க மாதம் என்ற பொருளில் இடம் பெறுகிறது. இந்த மாதத்தில் தான் இஸ்லாம் கூறும் பல முக்கிய நிகழ்வுகளும், அற்புதங்களும் நடந்துள்ளன.
ஸஃபர் :
பயணம் என்ற பொருளிலும், இலைகள் பழுத்து விழும் இலையுதிர் காலத்தில் வருவதால் பழுப்பு நிறம் என்ற பொருளிலும் இம்மாதம் அழைக்கப்படுகின்றது. பீடை மாதம் என ஒதுக்கும் ஒரு சிலருக்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஸ்லாத்தில் இதுபோன்ற எண்ணத்திற்கே இடமில்லை என வலியுறுத்தினார்கள். வெற்றியின் மாதம் என்றும், நன்மை நல்கும் மாதம் என்றும் நவின்றார்கள்.
ரபீஉல் அவ்வல் :
வசந்தம் எனும் பொருள் கொண்ட ரஃபீ எனும் அரபி மூலச் சொல்லில் இருந்து வருகின்றது. இம்மாதத்தில் வசந்த காலம் துவங்குவதால் முதல் வசந்தம் அல்லது வசந்தத்தின் துவக்கம் என்று பொருள்படுகின்றது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்ததும், மரணித்ததும் இம்மாதத்தின் 12ஆம் நாளில்தான் என்பதால் இம்மாதம் மிகவும் சிறப்புக்குரிய மாதமாகும்.
ரபீஉல் ஆகிர் :
வசந்தத்தின் இறுதி எனப் பொருளில் வரும் இந்த மாதத்தில் தான் ஆன்மிகப் பேரொளி முஹிய்யுத்தீன் அப்துல் காதிர் (ரஹ்) அவர்கள் மரணித்தார்கள்.
ஜமாதில் அவ்வல் :
இம்மாதத்தில் பனி உறையத் துவங்குவதால் இம்மாதம் பனி உறையும் மாதத் துவக்கம் என்னும் பொருள்பட அழைக்கப்படுகின்றது. இம்மாதத்தில் இறைத் தூதர் ஸாலிஹ் (அலை) அவர்கள் பிறந்தார்கள்.ஜமாதில் ஆகிர் : பனி உறையும் இறுதி மாதம் என்ற பொருளில் அழைக்கப்படுகின்றது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தோழர் அபூபக்கர் பிறந்தார்கள்.
ரஜப் :
ரஜப் தர்ஜீப் : என்ற சொல்லில் இருந்து வந்தது ரஜப் சொல்லாகும். கண்ணியமிக்க அல்லது மதிப்புமிக்க என்று பொருள்படும் இம்மாதத்தின் 27ஆம் தேதி இரவில்தான் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இறைவனைச் சந்திக்க விண்ணேற்றம் செய்தார்கள்.
ஷஃபான் :
பங்கிடுதல் என்ற பொருளில் இம்மாதத்தில் இறைவன் தன் அடியார்க்கு உணவைப் பங்கீடு செய்வதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது. ஷபே பராஅத் என்னும் பாவ விடுதலை இரவு இம்மாதத்தில் தான் வருகிறது. ரமலான் இறைவனுடைய மாதம், ஷஅபான் என்னுடைய மாதம் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அருளியிருக்கின்றார்கள்.
ரமலான் :
ரமீது என்ற வேர்ச்சொல்லில் இருந்து ரமலான் பிறந்தது. இதன் பொருள் எரிப்பது என்பதாகும். ஆரம்பக் காலத்தில் சூரியக் கணக்குப்படி இம்மாதம் கோடை காலத்தில் வந்ததால் எரிக்கும் கோடை வெப்பத்திற்காகவும், இம்மாதம் நோன்பு நோற்பதால் அடியார்களின் பாவங்கள் எரிக்கப்படுவதாலும் இப்பெயர் பெற்றது. இம்மாதம் வேதங்கள் இறக்கப்பட்ட மாதமாகும்.
ஷவ்வால் :
ஷவ்ஸ் என்ற அரபிச் சொல்லில் இருந்து ஷவ்வால் வந்தது. சிதறி விடுதல் என்ற பொருள்படும் இம்மாதத்தில் தான் சொர்க்கம், நரகம் படைக்கப்பட்டன. இம்மாதத்தின் முதல் நாளில் தான் முப்பது நாட்கள் நோன்பேற்ற மக்கள் ஈதுல் ஃபித்ர் பெருநாள் கொண்டாடுகின்றனர்.
துல்கஃதா :
இறைவனால் சிறப்பிக்கப்பட்ட நான்கு மாதங்களில் இதுவும் ஒன்றாகும். இருத்தல் என்ற பொருளில் வரும் இம்மாதத்தில் அக்கால அரபிகள் போரைத் தவிர்த்து வீட்டில் இருந்தார்கள். இறைவன் ஆணைப்படி நபி இப்றாஹீம் (அலை) அவர்களும், நபி இஸ்மாயீல் (அலை) அவர்களும் கஃபாவை நிர்மாணிக்கத் துவங்கி, முடித்த மாதமாகும்.
துல்ஹஜ் :
இஸ்லாமிய ஆண்டின் நிறைவு மாதம் இது. இஸ்லாமிய ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ஹஜ் கடமை நிறைவேற்றப்படும் மாதம் இது. இம்மாதத்தின் முதல் பத்து இரவுகள் மிகப் புனிதமானவை.