وَلَيَعْلَمَنَّ اللّٰهُ الَّذِيْنَ اٰمَنُوْا وَلَيَعْلَمَنَّ الْمُنٰفِقِيْنَ
அன்றியும், நம்பிக்கை கொண்டவர்களை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான்;
நயவஞ்சகர்களையும், அவன் நிச்சயமாக நன்கறிவான்.
(அல்குர்ஆன் : 29:11)
ஹவாரிய்யீன்களாய் மாறுவோம்!
(ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் ஜும்ஆ உரை – 10.12.2021)
இஸ்லாத்திற்கு எதிராகவும்,முஸ்லிம் சமூகத்திற்கு எதிராகவும் அசத்திய சக்திகள் மிகவும் திட்டமிட்டு வேகமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
அவர்களது சூழ்ச்சிகள் இஸ்லாமிய கட்டமைப்புக்குள்ளும் ஊடுருவி மிகப்பெரும் குழப்பத்தை விளைவிக்கக்கூடிய வகையிலான உதாரணங்களை தினம் தினம் நாம் செவியேற்று வருகிறோம்.
இப்படிப்பட்ட மிக மோசமான காலகட்டத்தில் ஆபத்துக்களை உணர்ந்து மிக வேகமாக பணியாற்ற வேண்டிய முஸ்லிம் சமூகம் மிகவும் பின்னடைவுலேயே உள்ளது.
இதற்கான காரணங்களை பரஸ்பரம் நினைவுபடுத்தி அவற்றை களைந்து முன்னேறிச் செல்வது காலத்தின் அவசியமாகும்.
01. வறுமையும்,செல்வ நிலையும்
ஆரோக்கியமான ஒரு சமூகம் பலவீனப்படுவதற்கு இந்த இரண்டும் முக்கியப் பங்காற்றுகின்றன.
மனித வாழ்விற்கு தேவையான அடிப்படையான பொருளாதாரம் இல்லாமல் போகும் போதும் மனிதனிடம் ஒரு தடுமாற்ற நிலை ஏற்படும்;அதனால்தான் வறுமையிலிருந்து பாதுகாப்புத் தேடினார்கள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.
அதேசமயம் செல்வநிலை அதிகமாக இருப்பதும் மிகப்பெரிய பலவீனங்களை சமூகத்தில் உண்டாக்கிவிடும் என்பதற்கு தற்போது நடந்து கொண்டிருக்கும் செயல்பாடுகள் உதாரணங்களாக இருக்கின்றன.
பின்வரும் நபிமொழி சமகால சூழ்நிலையை உணர்த்திக் காட்டக்கூடிய வகையில் அமைந்துள்ளன.
عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللّهِ صلى الله عليه وسلم قَالَ: அبَادِرُوا بِالأَعْمَالِ فِتَنا كَقِطَعِ اللَّيْلِ الْمُظْلِمِ. يُصْبِحُ الرَّجُلُ فِيْهَا مُؤْمِناً وَيُمْسِي كَافِراً. أَوْ يُمْسِي مُؤْمِناً وَيُصْبِحُ كَافِراً. يَبِيعُ دِينَهُ بِعَرَضٍ مِنَ الدُّنْيَا
மேற்கூறப்பட்ட ஹதீஸிலிருந்து சமகாலத்திற்கு தோதுவாக நாம் பெற வேண்டிய பாடங்கள் நிறையவே உண்டு.
சோதனைகள் கடுமையாகும் போது முற்றிலும் செயல்பட முடியாத நிர்பந்த நிலைக்கு தள்ளப்படுவோம்.
இதனை கடும் இருளுக்கு ஒப்பாக கூறினார்கள் எம்பெருமானார்;கடும் இருளில் எந்த ஒன்றையும் கண்ணால் பார்க்க முடியாத நிலை ஏற்படுவது போல கடும் சோதனைகள் வரும்போது எதைப் பற்றியும் சிந்திக்க முடியாத நிலைக்கு ஒரு அடியான் தள்ளப்படுவான்.
இதனால்…
பயம் அதிகமாகும்.
பலவீனங்கள் ஆட்கொண்டுவிடும்.
அசத்தியத்தின் காலடியில் விழக்கூடிய சந்தர்ப்பங்கள் நிறைய உண்டாகும்.
இதன் விளைவாக காலையில் ஒருவன் முஃமினாக இருந்தால் மாலையில் குஃப்ரை நோக்கி சென்றுவிடுவான்;மாலையில் முஃமினாக இருப்பவன் காலையில் காஃபிராகிவிடுவான்.
இப்படிப்பட்ட தலைகீழான பிறழுதல் உலகத்தின் அற்ப காரணங்களுக்காக ஏற்படும் என்பதும் இந்த நபிமொழியில் உணர்த்தப்படுகிறது.
பின்வரும் இறை வசனமும் இதே கருத்தை உணர்த்தக்கூடியதாக உள்ளது.
وَمِنَ النَّاسِ مَنْ يَّقُوْلُ اٰمَنَّا بِاللّٰهِ فَاِذَاۤ اُوْذِىَ فِى اللّٰهِ جَعَلَ فِتْنَةَ النَّاسِ كَعَذَابِ اللّٰهِ وَلَٮِٕنْ جَآءَ نَـصْرٌ مِّنْ رَّبِّكَ لَيَقُوْلُنَّ اِنَّا كُنَّا مَعَكُمْ اَوَلَيْسَ اللّٰهُ بِاَعْلَمَ بِمَا فِىْ صُدُوْرِ الْعٰلَمِيْنَ
மேலும், மனிதர்களில் சிலர் “நாங்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கைக் கொண்டுள்ளோம்” என்று சொல்கிறார்கள்; எனினும், அவர்களுக்கு அல்லாஹ்வின் பாதையில் துன்பம் உண்டானால், மனிதர்களால் ஏற்படும் அந்த இம்சையை அல்லாஹ்வின் வேதனைபோல் கருதி (உம்மை விட்டும் நீங்க முனைந்து) விடுகிறார்கள்; ஆனால் உம் இறைவனிடத்திலிருந்து உதவி வரும்போது: “நிச்சயமாக நாங்கள் உங்களுடனே தான் இருந்தோம்” என்று கூறுகிறார்கள். அல்லாஹ் அகிலத்தாரின் இதயங்களில் இருப்பவற்றை நன்கறிந்தவனாக இல்லையா? (அல்குர்ஆன் : 29:10)
وَلَيَعْلَمَنَّ اللّٰهُ الَّذِيْنَ اٰمَنُوْا وَلَيَعْلَمَنَّ الْمُنٰفِقِيْنَ
அன்றியும், நம்பிக்கை கொண்டவர்களை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான்; நயவஞ்சகர்களையும், அவன் நிச்சயமாக நன்கறிவான். (அல்குர்ஆன் : 29:11)
இப்படிப்பட்ட எல்லா தடுமாற்றங்களிலும் நாம் விழுவதற்கு நல்லமல்கள் மட்டுமே தீர்வாக அமையும்;எனவே அதை நோக்கி விரைந்து செல்லுங்கள் என்பதே இந்த நபிமொழி நமக்கு எடுத்துரைக்கும் முக்கியச் செய்தியாகும்.
02. பயம்
உலகத்தில சத்தியங்கள் மிகைத்து நிற்கும் போது மனிதர்களுக்கு அஞ்சாமல் அல்லாஹ்விற்கு மட்டும் அஞ்சும் நிலை முஃமின்களிடம் உண்டாக வேண்டும்;மாறாக மனிதர்களுக்கு பயப்படும் நிலை உருவாகும்போது ஏராளமான இழப்புகளை அவன் சந்திக்க நேரிடும்.
அதனால்தான் கொடுங்கோலன் ஃபிர்அவ்னை எதிர்க்கும் தருணங்களில் பயப்படாமல் இருங்கள் என்பதையே மூஸா(அலை)அவர்களுக்கு அல்லாஹ் முக்கிய பண்பாக பயிற்றுவித்தான்.
மனிதர்களை பயமுறுத்தி அதன் வழியே அல்லாஹ்வின் பாதையிலிருந்து திருப்பி விடுவதை ஷைத்தானிய,அசத்திய சக்திகள் எதிர்பார்க்கிறார்கள்.
பின்வரும் இறை வசனத்தை பாருங்கள்;
اِنَّمَا ذٰلِكُمُ الشَّيْطٰنُ يُخَوِّفُ اَوْلِيَآءَهٗ فَلَا تَخَافُوْهُمْ وَخَافُوْنِ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ
ஷைத்தான்தான் தன் சகாக்களைக் கொண்டும் இவ்வாறு பயமுறுத்துகிறான்;ஆகவே நீங்கள் அவர்களுக்குப் பயப்படாதீர்கள் – நீங்கள் முஃமின்களாகயிருப்பின் எனக்கே பயப்படுங்கள் (அல்குர்ஆன் : 3:175)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்;
الله تبارك وتعالى يقول للعبد يوم القيامة: ما منعك إذا رأيت المنكر أن لا تغيره؟ فيقول: يا رب خشيت الناس, فيقول: إياي كنت أحق أن تخشى. رواه أحمد.
படைப்பினங்களின் பயத்தை விட்டொழித்து படைப்பாளன் அல்லாஹ்விற்கு மட்டும் அஞ்சுகின்ற நிலையும் உருவாக வேண்டும்.
03. அறியாமை
நபி யூசுப்(அலை)அவர்கள் இந்த அறியாமையிலிருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள சிறைவாசம் சிறந்தது என்று எண்ணினார்கள்.
قَالَ رَبِّ السِّجْنُ اَحَبُّ اِلَىَّ مِمَّا يَدْعُوْنَنِىْۤ اِلَيْهِ وَاِلَّا تَصْرِفْ عَنِّىْ كَيْدَهُنَّ اَصْبُ اِلَيْهِنَّ وَاَكُنْ مِّنَ الْجٰهِلِيْنَ
(அதற்கு) அவர், “என் இறைவனே! இவர்கள் என்னை எதன் பக்கம் அழைக்கிறார்களோ, அ(த்தீய)தை விடச் சிறைக்கூடமே எனக்கு அதிக விருப்பமுடையதாகும்; இவர்களின் சதியை விட்டு நீ என்னைக் காப்பாற்றவில்லையானால், நான் இவர்கள் பால் சாய்ந்து (பாவத்தால்) அறிவில்லாதவர்களில் ஒருவனாகிவிடுவேன்” என்று (பிரார்த்தித்தவராக) கூறினார். (அல்குர்ஆன் : 12:33)
இந்த விஷயங்களின் அடிப்படையில் அறியாமை எனும் இருள் முஸ்லிம் சமூகத்தை பரவலாக ஆக்கிரமித்துள்ளதை நாம் உணர முடிகிறது.
சமகாலத்தில் இஸ்லாத்தின் விரோதிகள் எவ்வளவு திட்டமிடுதலுடன்,மூர்க்கத்தனமாக இஸ்லாத்தையும்,முஸ்லிம்களையும் எதிர்க்கிறார்கள் என்பதை முஸ்லிம் சமூகம் அறியவில்லை.
இதுபோன்ற காலங்களில் ஒரு இஸ்லாமியன் எவ்வாறு செயல்பட வேண்டும் என்கிற இஸ்லாமிய வழிகாட்டுதல்களை முஸ்லிம் சமூகம் அறியவில்லை.
ஈமானுக்கு எப்படிப்பட்ட எதிர்ப்புகளெல்லாம் உருவாகும்? கடந்த கால வரலாற்றில் எவ்வாறான எதிர்ப்புகள் உருவாகியிருக்கிறது? என்பதைப் பற்றிய பார்வை இன்றைய முஸ்லிம்களுக்கு இல்லை.
சத்தியத்திற்கு அடுக்கடுக்கான சோதனைகள் நிச்சயம் வந்தே தீரும்; அவற்றையெல்லாம் எதிர்கொண்டுதான் அசத்தியங்களை வீழ்த்த வேண்டும்; அதற்கான சக்தி சத்தியத்திற்கும், அதில் நிலைத்திருப்பவர்களுக்கும் நிச்சயம் இருக்கிறது என்கிற சுபச் செய்தியை முஸ்லிம்கள் உணரவில்லை.
இப்படி பல்வேறுபட்ட அறியாமையிலிருந்து முஸ்லிம்கள் மீண்டு வர வேண்டிய கட்டாயமும் இருக்கிறது.
“நாம் ஹவாரிய்யீன்களாய் மாறுவோம்!*
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا كُوْنُوْۤا اَنْصَارَ اللّٰهِ كَمَا قَالَ عِيْسَى ابْنُ مَرْيَمَ لِلْحَوٰارِيّٖنَ مَنْ اَنْصَارِىْۤ اِلَى اللّٰهِ قَالَ الْحَوٰرِيُّوْنَ نَحْنُ اَنْصَارُ اللّٰهِ
ஈமான் கொண்டவர்களே! மர்யமின் குமாரர் ஈஸா (தம்) சீடர்களை நோக்கி, “அல்லாஹ்வுக்காக எனக்கு உதவி செய்வோர் யார்?” எனக் கேட்க, சீடர்கள், “நாங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்களாக இருக்கின்றோம்” என்று கூறியதுபோல், நீங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்களாக ஆகிவிடுங்கள். (அல்குர்ஆன் : 61:14)
நீங்கள் உதவியாளர்களாக ஆகிவிடுங்கள் என்று அல்லாஹ் நம்மை பனிப்பதன் மூலம் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை;அல்லாஹ் எப்போதும் எல்லாவற்றை விட்டும் தேவையற்றவன்;நாம் அல்லாஹ்வின் உதவியாளர்களாக மாறுவதன் மூலம் நமக்குத்தான் பயன்.
இதனடிப்படையில்…
o தொழுகையை நிலை நிறுத்துதல் ஜகாத் கொடுத்தல்
o நன்மையை ஏவுதல்
o தீமையை தடுத்தல்
o அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிதல்
o அசத்தியவாதிகளை அவர்களுடைய அழிச்சாட்டியங்களிலிருந்து தடுத்து நிறுத்துதல்
o அநீதியாளர்களின் கொடுமைகளுக்கு தக்க தண்டனை வழங்குதல்
இப்படிப்பட்ட செயல் திட்டங்களின் மூலம் அல்லாஹ்வின் உதவியாளர்களாக நாம் மாற வேண்டும்.
நபிக்கு உதவியாளர்களாக மாறியதன் மூலம் அல்லாஹ்வின் உதவியாளர்களாக மாறினார்கள்; அதுபோல சமகாலத்தில் சத்தியப்பாதையில் உழைக்கும் நபர்களுக்கு உதவியாளர்களாக மாறுவதன் மூலம் நாமும் அல்லாஹ்வின் உதவியாளர்களாக மாறுகிறோம்.
ஹவாரிய்யீன்களின் தன்மைகள்
வெண்மை நிறம் என்ற அர்த்தத்தை கொண்ட ஒரு வார்த்தையாகும் இது.
அதாவது ஹவாரிய்யீன்கள் என்போர்..
ஈமானில் பூரண சக்தி படைத்தவர்கள்.
எண்ணங்களில் பரிசுத்தமானவர்கள்.
நயவஞ்சகம்,குரோதம் ஆகியவற்றிலிருந்து அந்தரங்கம் பரிசுத்தமானவர்கள்.
அசத்தியத்தை விட்டு முழுவதுமாக நீங்கியவர்கள்.
சத்தியத்திற்காக முழக்கத்தை ஓங்கி முன்வைத்தவர்கள்.
எண்ணிக்கை குறைவாக இருந்த போதிலும் எதற்கும் அஞ்சாதவர்கள்.
தன் தூதரிடமிருந்து எது வந்ததோ அதுதான் சத்தியம் என்று உறுதியாக நம்பியவர்கள்.
இந்த சத்தியப்பாதையில் யாருடைய பழிப்பிற்கும் பயப்படாதவர்கள்.
எனவே நாம் மேற்கூறப்பட்ட பல்வேறு விஷயங்களை மனதில் நிறுத்தி ஹவாரிய்யீன்களாய் பரிணமித்திட முழு முயற்சிகளை மேற்கொள்வோம்! அல்லாஹ் அருள் பாலிப்பானாக!!
(ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் ஜும்ஆ உரை – 10.12.2021)