டைம் லூப் (Time loope )
ரஹ்மத் ராஜகுமாரன்
‘மாநாடு’ படம் வந்ததிலிருந்து அநேகருக்கு டைம் லூப் பற்றியே பேசுகிறார்கள்.’ இதெல்லாம் சயின்ஸ் பிக் ஷன் கதை மனிதர்களின் தினம் வாழ்வில் இதெல்லாம் நினைத்து கற்பனை செய்யக் கூட முடியாது’ என்று கொஞ்சம் விபரம் தெரிஞ்ச மாதிரி சிலர் பேசிக் கொள்கிறார்கள்.
இன்னும் சிலர் இஸ்லாத்திற்கு அப்பாற்பட்ட விஷயமாக டைம் லூப், டைம் டிராவல் சித்தரிக்கப்பட்டு, இந்த அதீத கற்பனை நமக்குத் தேவையே இல்லை. இது மார்க்கத்திற்கு முரணானது என்பது மாதிரி பேசிக் கொண்டே…
இந்த நவீன காலத்தின் அறிவியல் சித்தாந்தங்களெல்லாம் மெல்லமெல்ல மற்ற மதங்கள் உள்வாங்க ஆரம்பித்திருக்கும் இந்தவேளையில், டைம் லூப், டைம் டிராவல் கோட்பாட்டை இஸ்லாம் மார்க்கம் முன்னரே வழிமொழிந்திருப்பதை எத்தனை பேர் அறிவார்கள்?
عُرِضَ عَلَيْهِ بِالْعَشِىِّ الصّٰفِنٰتُ الْجِيَادُ ۙ
நன்கு பயிற்சியளிக்கப்பட்ட உயர்ந்த குதிரைகள் (ஒரு) மாலை நேரத்தில் (சுலைமான்) அவர் முன் கொண்டுவரப்பட்ட பொழுது: (அல்குர்ஆன் : 38:31)
فَقَالَ اِنِّىْۤ اَحْبَبْتُ حُبَّ الْخَيْرِ عَنْ ذِكْرِ رَبِّىْ حَتّٰى تَوَارَتْ بِالْحِجَابِ
“நிச்சயமாக நான் (சூரியன் இரவாகிய) திரைக்குள் மறைந்து விடும்வரை, என்னுடைய இறைவனை நினைப்பது விட்டும் இந்த நல்ல பொருட்களின் மேல் அதிக அன்பாக அன்பு பாராட்டிவிட்டேன்” என அவர் கூறினார். (அல்குர்ஆன் : 38:32)
போருக்காக நபி சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அதை அவர்களிடம் குதிரைகள் பார்வைக்கு அனுப்பப்பட்டன. அக்குதிரைகளை பார்வையிட்டுக் கொண்டிருந்தபோது, சூரியன் மறைந்து விட்டது. அப்பொழுது இறைவனது கட்டளைப்படி, ‘ சூரியன் மீது நியமிக்கப்பட்டுள்ள மலக்குகளிடம், அஸருடைய நேரம் சூரியன் இருக்கிற இடத்திற்கு அதனை திரும்ப மீட்டுங்கள்’
அதாவது ‘சூரியனை திரும்பவும் கொண்டு வாருங்கள்’ என்று நபி சுலைமான் அலைஹிஸ்ஸலாம் கூறினார்கள்.
அவ்வாறு செய்யப்பட்டு, அஸர் தொழுகையை அதற்குரிய வேளையில் தொழுது கொண்டார்கள். இது சுலைமான் (அலை) அவர்களுக்குள்ள முஃஜிஸாக்களில் ஒன்று என்று அலீ (ரலி) அவர்கள் கூறியிருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது. ( ஆதாரம் தப்ஸீருல் ஹமீது )
இதே மாதிரியே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில், நபிகளார் இட்ட பணியை முடித்த வேளையில் அலீ (ரலி) அவர்களுக்கு அஸர் வஃது தொழுகை ‘களா’ ஆகி விட்டது .உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சூரியனை அஸர் தொழுகை வஃதுக்கு கொண்டு செல்ல, அலீ (ரலி ) அவர்கள் அவ்வேளையில் தொழுது கொண்டதாக நபிமொழியிலிருந்து அறிந்து கொள்ள முடிகிறது.
இவ்விரு சம்பவங்களும் டைம் லூப் என்ற தத்துவத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது. மாநாடு திரைப்படத்தில் மாநாடு நடைபெறும் போது, அந்த ஒரேநாளில் ஏற்படும் துர்நிகழ்வுகளைத் தவிர்த்து, தவிர்த்து இறுதியில் குறிப்பிட்ட அன்றைய தினத்தில் மாநாடு நடைபெறாமல், கதாநாயகன் ஜெயித்து விடுவதாக காட்டப்படுகிறது.
‘டைம் டிராவல்’ என்பது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் விண்வெளி பயணம் செய்து, சுவர்க்கம், நரகம் மற்றும் மறுமையின் நிகழ்வுகளை தன்பூத உடலுடன் தர்சித்து விட்டு, இரவில் அவர்கள் படுத்திருந்த படுக்கையின் சூடு ஆறுவதற்குள் போய் வந்ததை விவரிக்கிறது. ஆதாரம் முஸ்லிம் 259-ல் பார்வையிடவும்.
ஆக டைம் லூப்போ, டைம் டிராவலோ இஸ்லாம் மார்க்கத்திற்கு புதிதான விஷயமும் அல்ல; புறம்பான விஷயமும் அல்ல.
ரஹ்மத் ராஜகுமாரன்