இமாம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் வாழ்வும், பணியும், செல்வாக்கும்!
ஹிஜ்ரி(இஸ்லாமிய) நாட்காட்டியின் நான்காவது மாதமான ரபீய்யுனில் ஆகிர் மாதம் பிறை 11இல் இமாம் அப்துல் காதிர் ஜீலானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் நினைவுகூறப்படுகின்றார்கள்.
இவர்கள் இஸ்லாமிய வரலாற்றில் தோண்றிய மாபெரும் சிந்தினையாளர் ஒருவராக கருதப்படுகின்றார்கள். நபிகள் நாயகம் ﷺ மற்றும் நேர்வழிபெற்ற நான்கு கலீபாக்களுக்கும் பின்னர் தற்காலம் வரையான முஸ்லிம்கள் மத்தியில் ஆழமாகத் தாக்கம் செலுத்திய ஒருவர் இருப்பாரென்றால், அது இமாம் அப்துல் காதிர் ஜீலானி ரஹிமஹுல்லாஹ் அவர்களாகத்தான் இருக்கும் என நவீன காலத்தில் வாழ்ந்த தலைசிறந்த ஆங்கில இஸ்லாமிய அறிஞரான மார்டின் லிங்ஸ் (ஷைய்க் அபூபக்கர் ஸிராஜுதீன்) அவர்கள் குறிப்பிடுகின்றார்.
இமாம் அப்துல் காதிர் ஜீலானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் முழு உம்மத்தினதும் அன்பை வென்ற ஒருவராக காணப்படுவதோடு, இஸ்லாமிய உலகில் இமாம் அப்துல் காதிர் ஜீலானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் மேல் மக்கள் அன்பு வைத்ததுபோல் எந்தவொரு இறைஞானிகள் மீதும் மக்கள் இவ்வாறு அன்பு வைக்கவில்லை.
ஏழையோ, பணக்காரனோ, படித்தவனோ, படிக்காதவனோ என்றில்லாமல் அனைவரும் இமாம் அவர்கள் மீது நேசம் உடையவராக காணப்படுகின்றார்கள் என நவீன காலத்தின் செல்வாக்குள்ள கிழக்கத்தேய ஆய்வாளரும்,எழுத்தாளரும், பிற்காலத்தில் இஸ்லாத்தை ஏற்றவருமான ஜெர்மன் நாட்டைச் சேரந்த ஆன்மெரி ஸ்ச்சிமெல் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
இமாம் அப்துல் காதிர் ஜீலானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கி.பி. 1077இல் அதாவது ஹிஜ்ரி 470இல், பாரசீகத்தின்(இன்றயை ஈரானின்) ஜீலான் நகரில் பிறந்தார்கள். இவர்கள் தந்தை வழியில் இமாம் ஹஸன் (றழியல்லாஹு அன்ஹு) அவர்கள் ஊடாகவும், தாய் வழியில் இமாம் ஹுஸைன் (றழியல்லாஹு அன்ஹு) அவர்கள் ஊடாகவும் நபிகள் நாயகம் ﷺ அவர்களின் வழித்தோண்றலைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள்.
தனது 18ஆவது வயதில் உயர் கல்வியை பெற்றுக்கொள்வதற்காக ஈராக்கின் பக்தாத் நகருக்குச் சென்றார்கள். அப்போது அப்பாஸிய கிலாபத்தின் தலைநகராக பக்தாத் நகரம் விளங்கியது. அக்காலப் பகுதியில் பக்தாதின் புகழ்பெற்ற மத்ரஸாவாக காணப்பட்ட ஜாமிய்யா நிழாமிய்யா மத்ரஸாவில் இமாம் அப்துல் காதிர் ஜீலானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தனது கல்வியைத் தொடர்ந்தார்கள். ஜமிய்யா நிழாமிய்யாவில் ஏழு வருடங்கள் கற்றார்கள். பின்னர், தன்னை ஆன்மீக ரீதியாக பலப்படுத்துவதில் கவனம் செலுத்தினார்கள். 25 வருடங்களாக தன்னை ஆன்மீக ரீதியில் பக்குவப்படுத்துவதில் ஈடுபட்டார்கள்.
தனது 51ஆவது வயதில் மக்கள் மத்தியில் பிரச்சாரப் பணியை ஆரம்பித்தார்கள். ஹிஜ்ரி ஆறாவது நுாற்றாண்டில் அப்பாஸிய கிலாபத்தின் ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது. அக்காலப் பகுதியில் முஸ்லிம்களுக்கும், இஸ்லாத்திற்கும் இடையில் தொடர்பு குறைவாகக் காணப்பட்டது. மக்கள் சொகுசான சுகபோக வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தனர். ஊழல் நிறைந்த, அநீதியான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஆட்சியாளர் முதல் பொது மகன் வரை அனைவரும் மார்க்கத்தில் இருந்து துாரமாகக் காணப்பட்டனர்.
அவ்வாறான ஒரு சூழலிலேயே இமாம் அப்துல் காதிர் ஜீலானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் ,இவற்றிற்கு எதிராக எழுந்துநின்று, மக்களுக்குள்ள தார்மீகப் பொறுப்புகளைப் பற்றிப் பேசினார்கள். மக்கள் செய்யும் குறைகளை சுட்டிக்காட்டிப் பேசிய செய்ஹ் அவர்கள், மக்களை இஸ்லாத்தின் பால் மீளுமாறு அழைப்புவிடுத்தார்கள். காலப்போக்கில் இமாம் அப்துல் காதிர் ஜீலானி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் உரையை கேட்கவரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்தது. எனவே, இமாம் அவர்கள் பிரசங்கம் செய்யக்கூடிய இடம் விரிவாக்கப்பட்டு ஆயிரக்கணக்கானோர் கலந்துகொள்ளக்கூடியவாறு புணரமைக்கப்பட்டது. இமாம் அவர்களின் உரையைக் கேட்க ஏறத்தாள அறுபது முதல் எழுபதாயிரம் வரையான மக்கள் ஒன்றுதிரண்டனர் என சில வரலாற்றுக் குறிப்புகளில் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
மேலும், இமாம் அவர்களின் உரையை கேட்கவருபவர்களுக்கான வதிவிட வசதிகளும் செய்துகொடுக்கப்பட்டன. மாணவர்கள், அறிஞர்கள் மற்றும் ஏழைகளுக்கு இலவசமாக வதிவிட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. ஆயிரக்கணக்கானோர் இமாம் அவர்களின் மாணவர்களாக காணப்பட்டனர். எனவே, இமாம் அவர்களுக்கு ‘முஹியித்தீன்’ அதாவது இஸ்லாத்தை மறுமலர்ச்சி அடையச்செய்தவர் என்ற பட்டம் வழங்கப்பட்டது. இமாம் அவர்களின் ஆயிரக்கணக்கான மாணவர்களுள் சூபிகள், புகஹாக்கள், உலமாக்கள்,அமைச்சர்கள், கலீபா மற்றும் பொதுமக்கள் போன்றோர் இடம்பெற்றிருந்தனர்.
தனது ஆசிரியரான அஷ்செய்க் யூசுப் அல்-ஹம்தானி அவர்களின் மத்ரஸாவை இமாம் அவர்கள் நடாத்தி வந்தார்கள். இமாம் அப்துல் காதிர் ஜிலானி அவர்கள் ஒரு வாரத்தில் மூன்று தடவை விரிவுரை நடத்துபவராக இருந்தார்கள். இரண்டு தடவை அவர்களது மத்ரஸாவிலும், அதாவது வெள்ளிக்கிழமை அதிகாலை நேரத்திலும் மற்றும் செவ்வாய்க்கிழமை மாலை நேரத்திலும் மற்றும் அவர்களது தங்குமிடத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நேரத்திலும் விரிவுரை நடத்துபவராக இருந்தார்கள்.
அவர்களது விரிவுரைக்கு வழக்கமாக இஸ்லாமிய அறிஞர்கள்(உலமாக்கள்),சட்ட நிபுணர்கள் (புகஹாக்கள்) செய்குமார்கள் மற்றும் மேலும் பலர் வருகை தருபவர்களாக இருந்தார்கள்.
இமாம் அவர்கள் 40 வருட காலமாக பொதுமக்களுக்கு விரிவுரைகளை நடத்தினார்கள். அவர்கள் ஹிஜ்ரி 521 முதல் விரிவுரைகள் வழங்குவதை ஆரம்பித்து, ஹிஜ்ரி 561 இல் விரிவுரைகள் வழங்குவதை நிறைவு செய்தார்கள். அதே காலப்பகுதியில், அவர்கள் தனது மத்ரஸாவில் கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதுடன், பத்வாக்களையும் வழங்கினார்கள். இதனை 33 வருட காலம் தொடர்ந்தார்கள். அதாவது, ஹிஜ்ரி 528 இல் ஆரம்பித்து, ஹிஜ்ரி 561 இல் நிறைவு செய்தார்கள்.
இமாம் அப்துல் காதிர் ஜீலானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் வாழ்ந்த காலப்பகுதியில், அவர்கள் ஷாபி, ஹனபி, ஹம்பலி மற்றும் மாலிக்கி சிந்தனைப் பள்ளிகளினுடைய அறிஞர்கள் மத்தியில் மிகச்சிறந்த நிலையில் உள்ள அறிஞராக திகழ்ந்தார்கள்.
மேலும், இமாம் அப்துல் காதிர் ஜீலானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் ஷாபி மற்றும் ஹம்பலி சிந்தனை பள்ளிகளைச் சேர்ந்த சிறந்த அறிஞர்கள் இடையில் உயர்ந்த ஒருவராகக் காணப்பட்டார்கள் என இமாம் நவவி அவர்கள் குறிப்பிடுகின்றார். இமாம் அப்துல் காதிர் ஜீலானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் ஷரீஅத்தின் வெளிவாரியான 13 கலைகளில் முழுமையாகத் தேர்ச்சி பெற்றவர்களாக இருந்தோடு, அக்காலப்பகுதியில் இருந்த மாணவர்களுக்கு,இமாம் அப்துல் காதிர் ஜீலானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் போன்று வேறு எந்த ஒரு அறிஞரையும் பார்க்கக் கிடைக்கவில்லை.
மேலும், இமாம் அப்துல் காதிர் ஜீலானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் குர்ஆன்,ஹதீஸ், இஸ்லாமிய சட்டவியல் போன்ற கலைகளிலும், பத்வாக்கள் வழங்குவதிலும் மற்றும் ஏனைய கலைகளிலும் அறிவுக்கடலாக இருந்தார்கள் என இமாம் அப்துல் காதிர் ஜீலானி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் மாணவரான செய்க் முவப்பாக் அல்தீன் இப்ன் ஹுதாமா அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
இமாம் இமாம் அப்துல் காதிர் ஜீலானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் சிறந்த முன்னுதாரனமாகவும், அனைத்து ஆத்மஞானிகளுக்கு வழிகாட்டியாகவும், இஸ்லாத்திற்கு புத்துயிரூட்டிய பெரும் அறிஞராகவும் திகழ்ந்தாக புகழ்பெற்ற ஹதீஸ்துறை அறிஞர் இமாம் தஹபி அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
இமாம் அப்துல் காதிர் ஜீலானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் பரந்த அளவில் நன்மதிப்பை பெற்ற அறிஞராகவும், அவர்கள் வாழ்ந்த காலப்பகுதியில் ஏனைய செய்ஹ்மார்களுக்கு எல்லாம் சுல்தானாகவும், ஆன்மீகத்தில் உயர்ந்தநிலையை அடைந்தவராகவும் காணப்பட்டதோடு, அவர்கள் மூலம் பலர் தமது பாவச்செயல்களை விட்டும் மீண்டு நல்வழியில் வாழ்ந்தனர் என புகழ்பெற்ற இஸ்லாமிய அறிஞர் இமாம் இப்ன் ரஜப் அல்-ஹம்பலி அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
இமாம் அப்துல் காதிர் ஜீலானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் அல்லாஹுத்தஆலாவின் ஏவல் விலக்கல்களுக்கு முற்றிலும் கட்டுப்பட்டு நடப்பவர்களாகவும், அவ்வாறே ஏனையவர்களுக்கு ஏவுபவர்களாகவும் இருந்தார்கள் என இப்னு தைமியா அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
இமாம் அப்துல் காதிர் ஜீலானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் நான்கு திருமணங்கள் செய்தார்கள். அதன்மூலம் அவர்களுக்கு 27 மகன்களும், 22 மகள்களும் கிடைக்கப்பெற்றது. இமாம் அவர்கள் வருடத்தில் ஐந்து நாட்களைத் தவிர, ஏனைய நாட்கள் முழுவதும் நோன்பு நோற்பவராக இருந்தார்கள். அவர்கள் பகல் காலங்களில் பிரசங்கங்கள் நிகழ்த்துவதையும், பத்வாக்கள் வழங்குவதையும் வழக்கபடுத்திக் கொண்டிருந்தார்கள்.
இரவுவேளைகளில் இறைவனை நின்று வணங்குபவர்களாக இருந்தார்கள். இதுவே அவருடைய வழமையான செயற்பாடாக அமைந்திருந்தது. இமாம் அவர்கள் மஹ்ரிப் தொழுகையின் பின்னர் உணவு உட்கொள்வதை வழக்கப்படுத்திக் கொண்டிருந்தார்கள். இமாம் அவர்கள் உணவு உட்கொள்ளும் போது, அவர்களுடன் ஆதாரவற்றோரும், பிச்சைக்காரர்களும் உடன் இருந்தோடு, இமாம் அவர்கள் சாப்பிடும் அதே உணவு வகையே அவர்களுக்கும் பரிமாறப்பட்டது.
இவ்வாறு இமாம் அப்துல் காதிர் ஜீலானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தனது வாழ்வை இஸ்லாத்திற்கு அர்ப்பணித்ததோடு, மனிதாபிமானத்துடனும் நடந்துகொண்டார்கள். இமாம் அப்துல் காதிர் ஜீலானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தனது 91ஆவது வயதில் வபாத்தானார்கள். இமாம் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட காதிரிய்யா சூபி வழியமைப்பை (காதிரிய்யா தரீக்கா) இன்றுவரையும் உலகில் பல இலட்சக்கணக்கணக்கான மக்கள் பின்பற்றி வருகின்றனர்.
பைத்துல் முக்கத்தஸ்ஸை மீட்கப் போராடிய சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி அவர்கள், இமாம் அப்துல் காதிர் ஜீலானி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் மகனான இமாம் அப்துல் அஸீஸ் அல்-ஜீலானி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் மாணவராக காணப்பட்டார்கள். சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி அவர்களின் படையில் இணைந்திருந்த 50 சதவீதமானோர் இமாம் அப்துல் அஸீஸ் அல்-ஜீலானி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் மாணவர்களாகக் காணப்பட்டனர்.
இமாம் அப்துல் காதிர் ஜீலானி ரஹிமஹுல்லாஹ் அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட காதிரிய்யா சூபி வழியமைப்பின் (தரீக்கா) பாசறையில் பயிற்றுவிக்கப்பட்டவர்கள், உலகின் பல்வேறு நாடுகளில் இஸ்லாத்தின் துாதை கொண்டு செல்வதிலும், இஸ்லாமிய மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதிலும், மேற்கத்தேய கலாநித்துவத்திற்கு எதிராக போராடுவதிலும் பெரும் பங்காற்றியுள்ளனர். இமாம் அப்துல் காதிர் ஜீலானி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் மகனாரான அஷ்செய்ஹ் அப்துல் ரஸ்ஸாக் அல்ஜீலானி அவர்களின் பேரர் அஷ்செய்ஹ் தியாஅத்தீன் அப்துல் ரஸ்ஸாக் அல்- காதிரி அவர்கள் கி.பி. 13ஆம் நுாற்றாண்டின் ஆரம்பப் பகுதியில் சீனாவின் மத்திய பகுதிக்கு புனித தீனுல் இஸ்லாத்தின் துாதை எடுத்துச்சென்றார்கள். தென்கிழக்காசிய நாடுகளில் இஸ்லாத்தின் வளர்ச்சியில் காதிரிய்யா தரீக்காவின் பிரிவான அலவிய்யா பெரும் பங்காற்றியுள்ளது. கி.பி. 13ஆம் நுாற்றாண்டில் யெமன் ஹளரமெத் பிரதேசத்தில் இருந்து சென்ற அலவிய்யா வழியமைப்பைச் சேரந்த ஷைய்க்குமார்கள் இப்பிராந்தியத்தில் இஸ்லாத்தின் வளர்ச்சியில் பெரும்பங்காற்றியுள்ளனர்.
இந்தோனேஷியாவின் ஜாவா மற்றும் சுமாத்ரா தீவுகளில் இஸ்லாத்தை பரப்புவதில் பங்காற்றியவர்களாக காதிரிய்யா வழியமைப்பின் அலவிய்யா பிரிவைச்சேர்ந்த ஒன்பது ஆத்மஞானிகள் அடையாளப்படுத்தப்படுகின்றனர். இந்த ஒன்பது ஆத்மஞானிகளும், “வலி சொங்கோ” என்று அழைக்கப்படுகின்றனர்.
அல்ஜீரியாவில் பிரான்ஸ் கலாநித்துவத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்த அமீர் அப்துல் காதிர் அல்-ஜஸாஇரி அவர்கள் காதிரிய்யா வழியமைப்பைச் சேர்ந்தவர். இவர்கள், இமாம் அப்துல் காதிர் ஜீலானி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் காதிரிய்யா தரீக்காவின் மேற்கு அல்ஜீரியாவுக்கான செய்ஹ் ஆக செயற்பட்டார்கள்.அஷ்ஷெய் இஸ்ஸதீன் அல்-கஸ்ஸாம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் பலஸ்தீன விடுதலைப் போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படுகின்றார்.சிரியாவைச் சேர்ந்த இவர் கௌதுல் அஹ்லம் முஹியத்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹிமஹுல்லாஹ் அன்னவர்களின் வழியமைப்பான காதிரிய்யா தரீக்காவின் சிரியாவின் جبلة நகரின் கலீபாவாக இருந்தார்கள்.
பிரான்ஸ், இத்தாலி, பிரித்தானியா போன்ற நாடுகளின் ஆக்கிரமிப்புக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டி விடுதலைப் போராட்டங்களை நடத்தினார். இஸ்ரேலின் சட்டவிரோத ஆக்கிரமிப்புக்கு எதிராக குரல் கொடுத்துப் போராடிய முக்கிய தலைவராக இஸ்ஸதீன் அல்-கஸ்ஸாம் அல் காதிரி அவர்கள் கருதப்படுகிறார்கள்.
16ஆம் நுாற்றாண்டில் போர்த்துக்கேயரின் ஆதிக்கத்தின் கீழ் இலங்கை மற்றும் தென் இந்தியா என்பன வந்ததன் பின்னர், இவ்விரு நாடுகளுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையிலான தொடர்பு பாதிக்கப்பட்டது. அக்காலப் பகுதியில் இலங்கை மற்றும் தென்னிந்தியாவில் தீனுல் இஸ்லாத்தை பாதுகாத்த முக்கியமான ஒருவராக நாகூர் சாகுல் ஹமீத் மீரான் ஸாஹிப் காதிரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் அறியப்படுகின்றார்கள்.
தாய் வழியிலும், தந்தை வழியிலும் இமாம் முஹியித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் வழித்தோண்றலைச் சேர்ந்த இவர்கள், காதிரிய்யா வழியமைப்பின் செய்காக காணப்பட்டார்கள்.இவர்கள் தென்னிந்தியா மற்றும் இலங்கையின் பல பகுதிகளுக்கு விஜயம் செய்து அங்கு அவர்களது மாணவர்களை இஸ்லாமிய பிரச்சாரப் பணிகளுக்கு நியமித்து தீனுல் இஸ்லாத்தை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள்.
நாகூர் ஷாஹுல் ஹமீத் மீரான் ஸாஹிப் காதிரி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் மாணவரான குஞ்சாலி மரிக்கார் அவர்கள் இலங்கையின் மாயதுன்னை மன்னனின் அழைப்பை ஏற்று, போர்த்துக்கேயருக்கு எதிராக போராடுவதற்கு பல தடவைகள் இலங்கைக்கு வந்தார்கள். போர்த்துக்கேயருக்கு எதிரான கடற்போர்களில் போர்த்துக்கேயரின் பல கப்பல்களை குஞ்சாலி மரிக்காரின் படையினர் அழித்தது. ஒருமுறை புத்தளம் கடற்கரைக்கு அண்மித்த பகுதியில் நடைபெற்ற போரில் போர்த்துக்கேயரின் தாக்குதலில் ஷஹீதாக்கப்பட்ட குஞ்சாலி மரிக்கார் அவர்கள் இலங்கையின் சிலாபம் நகரில் அடக்கம் செய்யப்பட்டார்கள்.
நாகூர் ஷாஹுல் ஹமீத் மீரான் ஸாஹிப் காதிரி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் 404 சீடர்களில் ஒருவரான காயல்பட்டிணத்தைச் சேர்ந்த செய்ஹ் ஸதக் இப்ராஹீம் மரிக்கார் அவர்கள் குஞ்சாலி மரிக்காரினது படையின் தளபதிகளில் ஒருவராக காணப்பட்டதோடு, போர்த்துக்கேயருக்கு எதிராக இந்தியாவின் தென்கடலில் நடந்த யுத்தமொன்றில் மெனுவல் டீ சூசா என்ற போர்த்துக்கேய தளபதியின் கப்பலை மூழ்கடித்தார். தென்னிந்தியாவிலும், இலங்கையிலும் தீனுல் இஸ்லாத்தை பாதுகாக்க பல முயற்சிகளை மேற்கொண்ட மகான் நாகூர் சாகுல் ஹமீத் மீரான் ஸாஹிப் காதிரி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் மக்பரா தமிழ்நாட்டின் நாகூரில் அமைந்துள்ளது.
17ஆம் நுாற்றாண்டில் தமிழ்நாட்டில் வாழ்ந்த தலைசிறந்த இஸ்லாமிய அறிஞராக அஷ்செய்க் ஸகதுல்லாஹ் காஹிரி றஹிமஹுல்லாஹ் அவர்கள் அறியப்படுகின்றார்கள். போர்த்துக்கேய காலநித்துவவாதிகள் கீழ் தென்னிந்தியா மற்றும் இலங்கை வந்ததன் பின்னர், இந்தியத் துணைக்கண்ட பிராந்தியத்தில் புனித தீனுல் இஸ்லாத்தை பாதுகாத்த அஷ்ஷைய்க் ஸகதுல்லாஹ் காஹிரி றஹிமஹுல்லாஹ் அவர்கள், நாகூர் ஷாஹுல் ஹமீத் மீரான் ஸாஹிப் காதிரி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் சீடரும், கடற்படை தளபதியுமான செய்ஹ் இப்ராஹீம் ஸதக் மரிக்கார் அவர்களின் பேரரான செய்ஹ் சுலைமான் வலீயுல்லாஹ் அவர்களின் மகனாவார். காதிரிய்யா தரீக்காவின் செய்ஹாக இருந்தார்கள்.
இவர்களதும், இவர்களது நான்கு சகோதரர்களும் போர்த்துக்கேயரை தொடர்ந்துவந்த ஒல்லாந்தர் ஆட்சிக் காலப்பகுதியில் தமிழ்நாட்டிலும், இலங்கையிலும் புனித தீனுல் இஸ்லாத்தை பாதுகாப்பதற்காக பெரும் பங்காற்றினார்கள். இமாம் ஸதகதுல்லாஹ் காஹிரி அவர்கள் இந்திய துணைக்கண்டத்திற்கு வெளியிலும் தனது பணிகளை மேற்கொண்டார்கள். மக்கா மதீனா நகரங்களிலும் சட்டகல்வியை அவர்கள் போதித்தார்கள். குறிப்பாக புகழ்பெற்ற ஷாபிஈ சட்டவாக்க நிபுணரும், முஹத்திஸூமான இமாம் இப்னு ஹஜர் அல் ஹைதமி அவர்களின் மாணவர்கள் மஸ்ஜிதுன் நபவியில் இமாம் ஸதகதுல்லாஹ் காஹிரி அவர்களிடம் ஷாபிஈ சட்டக்கல்வியைப் கற்றுக்கொண்டார்கள்.
உஸ்மானிய கிலாபத்தின் கீழ் மக்கா மதீனாவின் நிர்வாகம் இருந்தது. இரண்டு நகரங்களிலும் அதிகளவிலானோர் புகைப்பதை கண்ணுற்ற இமாம் அவர்கள், ஹரம்களின் எல்லைக்குள் புகைப்பது ஹராம் என்ற ஃபத்வாவை வழங்கினார்கள்.
பின்னர் அன்றைய உஸ்மானிய கிலாபத்தின் கலீபா சுல்தான் 4ம் முராத்(முராத் ராபிஃ) அவர்களை சந்தித்து புகைப்பதன் விளைவுகள் பற்றி எடுத்துக்கூறினார். பின்னர் உஸ்மானிய கிலாபத்தின் கீழ் உள்ள நாடுகளில் புகையிலை உற்பத்தியையும், அதன் பாவனையையும் சுல்தான் 4ம் முராத் அவர்கள் தடைசெய்தார்கள்.
தொகுப்பு :© இப்ஹாம் நவாஸ் (Ifham Nawas)