அமைதியான நதியினிலே ஓடம்!
Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rtd)
வாழ்க்கை ஓர் ஓடமாகும். அந்த ஓடம் கடலோ அல்லது ஆரோ அமைதியான அலைகள் இருந்தால் தான் படகோட்டிகள் சீராக, சிறப்பாக தன்னுடைய இலக்கினை நோக்கி செலுத்தமுடியும். அதற்கு மாறாக கொந்தளித்தால் படகும் கவிழும், அவைகளை செலுத்துபவர்களுக்கும் ஆபத்தினை விளைவிக்கும்.
அந்த அமைதியினைத் தருவது தான் இஸ்லாமிய மார்க்கம். பலருக்கு பழமும், பாலும் இருக்கும், ஆனால் தூக்கம் வராது. சிலர் மாட மாளிகைகளில் வாசிப்பர் ஆனால் பல்வேறு பிரச்சனைகளால் தூக்கம் வராது. சிலர் ரயிலில் கூபே என்ற இரண்டு இருக்கை கொண்டதினை ரிசர்வ் செய்து பயணம் செய்வர், ஆனால் ரயில் பயணத்தில் வரும் கடக், கடக் என்ற சப்தம் அவர்களை தூங்க விடாது. சிலர் அமைதிக்காக கோடை வாசஸ்தலங்களுக்கு செல்வர். ஆனால் அங்கேயும் கவலை தூங்க விடாது.
தமிழ்நாட்டின் பிரபல சினிமா தயாரிப்பாளர் தற்கொலை செய்ததது போல மன கொந்தளிப்பில் தவறானமுடிவினை எடுத்து விடுவர்… அப்படிப் பட்ட நிம்மதியற்ற, கரையான் அரிப்பு கவலைகளுக்கெல்லாம் தீர்வு காண்பது தான் இஸ்லாமிய மார்க்கம் என்றால் மிகையாகாது.
சிலர் நிம்மதி தேடி தியானம் செய்வதிற்காக இமயமலை குகைகளை நோக்கி படையெடுப்பர். அங்கேயும் அவர்களால் நிம்மதியாக இருக்கமுடியாது. அந்த நிம்மதி பொருள் விரையும் செய்யாத வகையில் உங்கள் இருப்பிடத்திலேயே இருக்கின்றது. அது தான் தொழுகை.
தொழுகை நேர்மறை கொள்கைகளையும், படைத்த இறைவனுக்கு நன்றி மறவாமல் இருப்பதினையும், இறக்க குணத்தினையும், தன்னம்பிக்கையும், சகோதர பாசத்தினையும், உள்-புற சுத்தத்தினையும் தருகின்றது. தொழுவது மூலம் உயர் ரத்த அழுத்தத்தினை குறைக்கவும், வயது முதிர்ச்சியினால் ஏற்படும் ஞாபக சக்தியினையும் திரும்பப் பெற முடியும்.
சிறைகளில் கூட தொழுகை நடத்துவதினை நானும், நீங்களும், பார்த்திருக்கின்றோம். சிறைவாசிகளின் கரடு, முரடான முரட்டு வன்முறை குணங்கத்தினை தொழுகை குறைகின்றது. வேலை தளங்களில் தொழுகையில் ஈடுபடுவதினால் உற்பத்தி அதிகப் படுத்தமுடியும், கல்வி நிலையங்களில் தொழுகைக்கு வழிவகை செய்வதால் மாணவர்கள் கவனம் சிந்தாமல், சிதறாமல் சிறந்த கல்வியிலும், மெச்சத்தக்க நன் நடத்தையினும் காண முடியும் என்று ஆய்வு குருப்புகள் கூறுகின்றன.
அமெரிக்க ஹார்வோர்ட் பல்கலைகழக ‘நிரோசயின்ஸ்’ ஆய்வு குறிப்பில் மனிதன் தியானம் செய்வதால் மூளையின் இயக்கத்தினை ஓய்விலிருந்து தட்டி எழுப்பி நினைவாற்றலை அதிகரிக்கும் என்று கூறுகின்றது. அவ்வாறு செய்வதற்கு எட்டு வாரம் போதும் என்றும் கூறுகின்றது. ஆனால் ஒவ்வொரு முஸ்லிமும் ஒரு நாளைக்கு ஐவேளையும், நடு நிசியில் தொழும் தகஜத் அமைதியாக நின்று மனதினை அலை பாயவிடாது, படைத்த இறைவனுக்கு நன்றி செலுத்தும் போது மூளை செயல்பாடு இன்னும் அதிகரிக்கின்றது.
யோகாவிற்கு தனி உடை, விரிப்பு, பயிற்சியாளர் தேடி அலைய வேண்டும். ஆனால் சுத்தமான இடம் எங்கே இருக்கின்றதோ அங்கே உடுத்திய துணியுடன் தொழும் பாக்கியம் முஸ்லிம்களுக்கு கிடைத்திருக்கின்றது. கண்காணாத இடங்களில் தன் குடும்பத்திற்குக் கூட தெரியாத இடத்தில் தியானத்தில் ஈடுபடுவது போல தொழுகையில் இல்லை. குறிப்பிட்ட நேரத்தில் குடும்பப் பொறுப்பினையும் கவனித்துவிட்டு தொழும் நெகிழ்வுத்தன்மை வேறு எந்த வழிபாட்டிலும் இல்லை.
யோகா, தியானம் ஆகியவைகளில் ஈடுபடுபவர்கள் ஒரு ஆடியோ கேஸட்டினை இயக்கிக் கொண்டு, கண்ணை மூடிக் கொண்டு செய்வதினை பார்த்திருப்பீர்கள். அவர்களிடம் விளக்கம் கேட்கும்போது இசை மூளையின் செயல் திறனை தட்டி எழுப்புகின்றது என்று கூறுகின்றனர். ஆனால் முஸ்லிம்கள் பள்ளிவாசல்களில் தொழும்போது கிபிலாவினை நோக்கி அல்லாஹ்விற்காக தொழுகின்றேன் என்று ‘அல்லாஹு அக்பர்’, இறைவன் பெரியவன் என்று சொல்லி இமாம்கள் குரான் ஆயத்துக்களை ஓதும் போது காது கொடுத்து கேட்டும், அடக்கம் ஒடுக்கத்துடன், அருகில் நிற்பவர் அந்தஸ்து பாராது, தன் பதவி பகட்டுகள் மறந்து ஓரிறைக் கொள்கையுடனும், மனதினை ஓர் நிலைப் படுத்தியும் தொழும் போது மெய் சிலிர்ப்பு இயற்கையாகவே ஏற்படும்.
சிலர் ரயிலிலோ, விமான பயணத்திலோ கையில் புத்தகங்களை வைத்துக் கொண்டு பயணம் முடியும் வரை படிப்பார்கள் என்பதினை நீங்கள் பார்த்திருப்பீர்கள். மருத்துவமனையில் சிகிச்சை
பெரும் நோயாளிகளிடம், புத்தகங்களை கொடுத்து படிக்கச் சொல்லி ஆய்வுகள் நடத்தப் பட்டன. அவர்கள் தங்கள் கவலை, நோய்களை மறந்து படிப்பதினை கண்டார்களாம். பள்ளிவாசல்களில், குரான், ஹதீஸ் சம்பந்தமான புத்தகங்கள் அடுக்கி வைத்திருப்பதினை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால் அதனை எடுத்து ஓதுவதோ, படித்து பயன் பெருவரோ ஒரு சிலர் தான்.
தொழுகைக்கு முன்பே பள்ளிகளுக்கு வருபவர் அருகில் இருப்பவரிடம் வெளி விவகாரங்களை நிசப்தத்தினை கெடுக்கும் விதமாக சப்தம் போட்டு பேசுவதினையும், சிலர் செல்போனில் பல விஷயங்களை தேடுவதிலும், அடுத்தவர் கவனத்தினை திருப்புவதிலும் ஈடுபடுவதினை பார்த்திருப்பீர்கள். அதற்கு பதிலாக பள்ளியில் வைத்திருக்கும் புத்தகங்களை எடுத்துப் படிக்கலாம், அதன் மூலம் இறை தொழுகைக்கு வந்திருக்கின்றோம் என்று உணர்ந்து செயலாற்றலாம்.
பஜர் தொழுகைக்குப் பின்பு இமாம் குரான் ஆயத்துகளை ஓதி அதற்கான விளக்கத்தினை சொல்வது ‘கம்யூனிட்டி ரீடிங்’ என்று கூறப்படுகின்றது. நீங்கள் கூட உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு ஒரு நல்ல புத்தகத்தினில் கண்டுள்ள விஷயங்களையோ அல்லது செய்தித் தாள்களில் வந்துள்ள செய்திகளையே சொல்லிக் காட்டுவது மூலம் தங்களது கவனங்கள் வேறு திசைகளில் செல்லாது பார்த்துக் கொள்வதுடன், மார்க்க மற்றும் பொது அறிவுவினை புகுத்த முடியும். இரண்டாம் நூற்றாண்டு கிரேக்க அறிஞர் டாக்டர் அண்ட்டிலஸ் (Antyllus) ‘படிப்பது உடலுக்கு உற்சாகம் தரும் டானிக்’ என்று கூறியுள்ளார்.
நான் இளையாங்குடி பள்ளியில் பயின்றபோது பிரேயர் முடிந்து ஒரு அன்றைய செய்தி தாளில் வந்துள்ள தலைப்பு செய்திகளை படிக்க மற்ற மாணவர் கேட்கும் முறையினை மேற்கொண்டார்கள், அதன் மூலம் மாணவர்கள் நாட்டில் நடந்த செய்திகளை அறிந்து கொள்வதோடு பொது அறிவினையும் அதிகப் படுத்தினர். 2007ல் லண்டனில் நடத்திய ஆய்வின்படி சமூக வாசிப்பின் மூலம் அதனில் ஈடுபாடு கொள்ளும் பேரியக்கமாக மாறும் என்று கூறுகின்றது. அதனையே உங்கள் வீடுகளிலும் செயல் படுத்தினால் சால சிறந்த செயலாகுமல்லவா?
இந்தியாவில் ஹிந்துக்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது முகமன் கூறும் விதமாக ‘நமஸ்தே’ என்று சொல்வதினை பார்த்திருக்கின்றோம், தமிழர்கள் ‘வணக்கம்’ என்றும் கூறுகின்றோம். ஜப்பானியர் ஒருவருக்கொருவர் ‘தலை குனிந்து’ முகமன் கூறுவதினையும், மேலை நாட்டவர் கால பருவநிலைக்கு ஏற்ப ‘good morning, afternoon, evening, night’ கூறுவதனை பார்க்கின்றோம். அந்த முகமென் எல்லாம் ஒருவருக்கொருவருடைய எந்த நெருக்கத்தினையும் ஏற்படுத்தாது. ஆனால் முஸ்லிம்கள் மட்டும் ‘மலகாத்’ என்ற அரவணைப்பு ஆங்கிலத்தில் cuddling முறையில் ஈடுபடுவதினால் ஒருவருக்கொருவர் அன்பு, பாசம், பரிவு, நட்பு ஆகியவற்றினை பரிமாறிக்கொள்ள முடியும் என்று BBC நடத்திய Touch test ல் கூறுகின்றது.
12th Nov 2021 ல் Gloscow வில் நடந்த உலக தலைவர்கள் சுற்றுப் புற சூழல் சம்பந்தமான மாநாட்டில் பங்கேற்ற இந்திய பிரதமர் கூட எப்போதும் இரு கை கூப்பி நமஸ்தே என்று சொல்பவர் இந்தத் தடவை தலைவர்களை கட்டி அணைப்பதினை காணொளியில் பார்த்திருப்பீர்கள்.
கொரானா காலத்தில் தனிமைப் படுத்தப் பட்ட 112 நாடுகளைச் சார்ந்த 40,000 நோயாளிகளைக் கண்டு ஆய்வு நடத்தினார்களாம். தனிமைப் படுத்த காலத்தில் தங்களை உற்றார், உறவினர், உடன் பிறந்தோர் கூட வந்து பார்க்காதது மனதளவில் பாதிக்கப் பட்டார்களாம். பாஸ்டன் பல்கலைக்கழக பேராசிரியர், மனோதத்துவ நிபுணர் James Cordova, ‘We are born cuddlers’ நாம் அனைவருமே ஒருவரோடு ஒருவர் ஓட்டிப் பிறந்தவர் தான் என்று கூறி அதற்கு உதாரணமாக தாயின் கர்ப்பப்பையில் இருக்கும் குழந்தை எப்படி ஒட்டி இருக்கின்றது என்ற உதாரணத்தை கூறுகின்றார்.
பல்காரியா நாட்டின் சோபியா பல்கலைக்கழகத்தின் immunologist நோய் எதிர்ப்பு சக்தி நிபுணர் Velikova , ‘அரவணைப்பு மூலம் ஒருவருடைய ஹார்மோன் அதிகரித்து, Cortosol என்ற சுரப்பி ரத்த ஓட்டத்தினை சீராக்கி, நரம்பின் இயக்கத்தினை முடுக்கி விடுவதுடன், ஒருவரை சோகத்திலிருந்தும், நிம்மதியற்ற தூக்கத்திலீசுந்தும், படபடப்பிலிருந்தும் விடுபடச் செய்கிறது’ என்று கூறுகிறார்.
அதனையேதான் 2018ல் நடத்தப்பட்ட ‘Proceedings of National Academy of Science’ ஆய்வில் அரவணைப்பு ஒருவரை அமைதிப் படுத்துவதுடன், வலி நிவாரணியாகவும், ஒருவருக்கு பாதுகாப்பு சூழலையும் ஏற்படுத்தும்’ என்றும் கூறுகிறார். அதனையே நீங்கள் உங்கள் வீட்டில் உள்ள பெற்றோர், மனைவி, குழந்தைகள், உடன் பிறந்தோர், உற்றாரிடம் காட்டுங்கள் அவர்களிடம் பெரிய மாற்றத்தினை காண்பீர்கள் என்று பேராசிரியர் Velikova கூறுகிறார். சிலர் வளர்ப்புப் பிராணிகள் அமைதியின்றி குறைக்கும்போது அவைகளை தடவிக் கொடுத்தவுடன் அமைதியாகி விடுவதினை பார்த்திருப்பீர்கள்.
ஆகவே அமைதியான தொழுகை, அறிவான புத்தகங்கள், திருக்குரான், அன்பான அரவணைப்பு மனிதனுக்கு ஆறுதல், அமைதி, பாசம், பரிவு, நோயிலிருந்து ஆறுதல் பெறுதல், சஞ்சலமான மனது ஆகியவற்றிலிருந்து போற்றத்தக்க மாற்றத்தினை பெற்று வாழ்க்கை ஓட்டத்தினை அமைதியாக கரடு, முரடு பயணத்திலிருந்து சீராக செலுத்தலாம் என்றால் சரிதானே!
Ap. Mohamed Ali