அல்லாஹுத்தஆலாவிடம் சிபாரிசு செய்வதில் முதலிடம்…
மறுமையில் மனிதர்களில் சிபாரிசு செய்வதில் முதலில் நிற்பவர்களான எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்;
”திருக்குர்ஆன் ஓதுகின்றவர்களுக்கு அது,
‘கப்ரில்’ ஒளியாக வலம் வரும்”.
மேலும் சொன்னார்கள்;
”கியாமத்து நாளில் அல்லாஹு தஆலாவிடம் சிபாரிசு செய்வதில் குர்ஆனை விடச் சிறந்தது எதுவுமில்லை, நபியுமில்லை, மலக்குமில்லை வேரெவருமில்லை”.
இந்த உலகில் மாட மாளிகை, கூட கோபுரத்தில்- வெளிச்சத்தில் வாழும் மனிதனுக்கு கடுமையான இருள் ஆட்கொண்டிருக்கும் ‘கப்ருக்குள்’ வெளிச்சத்தை கொண்டு வருவது திருக்குர்ஆன் அல்லவா? சூரியனுக்கு ‘கப்ருக்குள்’ ஊடுருவிச்சென்று ஒளி தரும் ஆற்றல் கிடையாது. ஆனால் அந்த ஆற்றலை அல்லாஹ் திருக்குர் ஆனுக்கு வழங்கியுள்ளான்.
வாழும்போது வசதியாக வாழ்வதற்கான அனைத்தையும் பார்த்துப் பார்த்து செய்கின்றோமே மரணத்திற்குப்பிறகு நாம் தங்கப்போகும் அந்த இருளடைந்த வீட்டை ஒளி பொருந்தியதாக ஆக்க இப்பொழுதே முயற்சி எடுக்க வேண்டாமா?
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்; ”எவர் குர்ஆன் ஓதுவதில் ஈடுபட்டிருந்ததன் காரணமாக என்னை திக்ர் செய்வதற்கும் என்னிடம் துஆ கேட்பதற்கும் நேரம் கிடைக்கவில்லையோ, அவருக்கு துஆ கேட்பவர்கள் அனைவருக்கும் கொடுப்பதைவிட அதிகமானதை நான் கொடுப்பேன் என்று அல்லாஹு தஆலா கூறுகின்றான்.
‘மேலும், ‘மற்றெல்லா வசனங்களைவிட அல்லாஹு தஆலாவுடைய திருவசனத்தின் உயர்வு, அல்லாஹு தஆலா படைப்பினங்களைவிட எவ்வளவு உயர்வானவனாக இருக்கின்றானோ அவ்வளவு உயர்வானதாகும்.” என்றும் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூ ஸயீத் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதீ)
– எம்.ஏ. முஹம்மது அலீ