மனைவியைத் தாய்க்கு ஒப்பிட்டால்….
‘உங்களில் எவர்கள் தமது மனைவியரைத் தாய்க்கு ஒப்பிட்டுக் கூறுகிறார்களோ, அவர்கள் இவர்களது தாய்மார்கள் இல்லை. இவர்களின் தாய்மார்கள் இவர்களைப் பெற்றெடுத்தவர்களே, நிச்சயமாக இவர்கள் வெறுக்கத்தக்க பேச்சையும், பொய்யையுமே கூறுகின்றனர். நிச்சயமாக அல்லாஹ் பிழைகளைப் பொறுப்பவன்ளூ மிக்க மன்னிப்பவன்.’
‘எவர்கள் தமது மனைவியரைத் தாய்க்கு ஒப்பிட்டு, பின்னர் (தாம்) கூறியதிலிருந்து மீண்டு விடுகின்றார்களோ அவர்கள், (கணவன், மனைவியாகிய இருவரும்) ஒருவரை ஒருவர் தீண்டுவதற்கு முன்னர் ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும். இதைக் கொண்டே நீங்கள் உபதேசிக்கப்படுகிறீர்கள். மேலும், நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன்.
‘எவர் (அடிமையைப்) பெற்றுக் கொள்ள வில்லையோ அவர், ஒருவரை ஒருவர் தீண்டுவதற்கு முன்னர் தொடராக இரண்டு மாதங்கள் நோன்பு நோற்கவேண்டும். (இதற்கு) எவர் சக்திபெறவில்லையோ அவர் அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். இது நீங்கள் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொள்வதற்காகவே (விதியாக்கப்பட்டுள்ளது.) இவை அல்லாஹ்வின் வரம்புகளாகும். நிராகரிப்பாளர்களுக்கு நோவினை தரும் வேதனையுண்டு.’ (58:2-4)
ஜாஹிலிய்யாக் காலத்தில் மனைவியை தாய்க்கு ஒப்பிட்டால் அவர்கள் பின்னர் கணவன்-மனைவியாகச் சேர்ந்து வாழ முடியாது என்ற விதி இருந்தது. இஸ்லாம் மனைவியைத் தாய்க்கு ஒப்பிடுவதைக் கண்டிக்கின்றது. அப்படி ஒருவர் ஒப்பிட்டால் மீண்டும் மனைவியுடன் சேர்வதற்கு முன்னர் பரிகாரம் காண வேண்டும். தகுந்த பரிகாரம் கண்ட பின்னர் அவர்கள் கணவன்-மனைவியாக இணைந்து இல்லறம் நடாத்தலாம் என்று கூறுகின்றது.
இந்த வசனத்தில் இதற்கான பரிகாரம் பற்றி விபரிக்கப்படுகின்றது. மனைவியைத் தாயிற்கு ஒப்பிட்டால் அவர்கள் மீண்டும் இணைவதற்கு முன்னர் பின்வருவனவற்றை செய்ய வேண்டும் என இந்த வசனம் கூறுகின்றது.
1. ஒரு அடிமையை விடுதலை செய்ய வேண்டும்.
2. அதற்கு முடியாவிட்டால் இரண்டு மாதங்கள் தொடராக நோன்பு நோற்க வேண்டும்.
3. அதற்கும் முடியாவிட்டால் அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்.
இஃதல்லாமல் பல குற்றச் செயல்களுக்கு நோன்பு பரிகாரமாக அமையும் என நபிமொழிகளும் கூறுகின்றன. இந்த சட்டங்களிலிருந்து, நோன்பு பாவங்களுக்குப் பரிகாரமாக அமையத்தக்க அற்புத வழிபாடாக இருப்பதை அறியலாம். அத்துடன், இஸ்லாம் அடிமைகளை விடுதலை செய்தல், ஏழைகளுக்கு உணவளித்தல் போன்ற பண்புகளைப் போற்றுவதையும் உணரலாம்.
எனவே, நோன்பு என்பது எமது பாவங்களை அழிக்கும் முக்கியமானதொரு இபாதத் என்பதை உணர்ந்து அதன் மூலம் எமது பாவக் கறைகளை அகற்றிப் பரிசுத்தமாக முயல்வோமாக!