கருப்பின மக்களை விட வெள்ளை நிற மக்கள் மேன்மையானவர்கள் இல்லை!
சில தினங்களுக்கு முன் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவிற்கும் மேற்கிந்திய தீவிற்கும் இடையே நடந்த போட்டி தொடங்குவதற்கு சற்று முன்பு திடீரென்று அந்த அணியின் முன்னணி வீரர் குண்டன் டீ காக் விளையாடாதது தெரிய வந்தது.
அதற்கான காரணமாகக் கூறப்பட்டது….
உலகம் முழுவதும் உள்ள விளையாட்டு வீரர்கள் குறிப்பாக கிரிக்கெட் வீரர்கள் “BLACK LIVES MATTER MOVEMENT” என்று அடர் நிறத் தோல் கொண்ட மக்களின் உரிமைகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்றும் இந்த உலகில் பிறந்த மக்களை நிற ரீதியாக பிரித்துப்பார்ப்பது தவறென்றும். ஒருவரை விட இன்னொருவர் தாழ்ந்தவரும் இல்லை. உயர்ந்தவரும் இல்லை என்ற இந்த உயர்ந்த எண்ணத்தை அனைவரும் வெளிப்படுத்த வேண்டும் என்ற கொள்கை முழக்கமாக சூளுரைக்கப்பட்டு வருகிறது.
இதில் தென் ஆப்பிரிக்க தேசத்தின் பிரச்சனை என்னவென்றால், அங்கு பூர்வீகமாக வாழ்ந்து வரும் கருப்பின பழங்குடி மக்களின் உரிமைகளை நசுக்கி அவர்களை அடிமைப்படுத்தி வந்த பிரிட்டிஷ் வெள்ளையர்கள் “அபார்த்தைடு” எனும் கொடிய நிறவெறிக்கொள்கையை வெளிப்படையாக அமல்படுத்தி வந்தனர்.
இதனால் மற்ற உலக நாடுகளால் விளையாட்டு மற்றும் ஏனைய பல துறைகளில் இருந்தும் ஒதுக்கி வைக்கப்பட்டனர்.
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி கூட 1970 முதல் 1992 வரை இந்த அபார்த்தைடு கொள்கையின் விளைவால் கிரிக்கெட் விளையாட தடை செய்யப்பட்டது
பிறகு திரு. நெல்சன் மண்டேலா எனும் கருப்பின தலைவர் தென் ஆப்பிரிக்காவின் தலைவராக உயர்ந்து இந்த கொடிய இனவெறிக்கொள்கையை ஒழித்தபின் மீண்டும் கிரிக்கெட் உலகால் சேர்த்துக் கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் தென் ஆப்பிரிக்க அணியில் உள்ள வெள்ளைத் தோல் வீரர்களிடம் இன்னும் இந்த கர்வம் மற்றும் அபார்த்தைடு குணம் இருப்பதை அறிந்த கிரிக்கெட் தென் ஆப்பிரிக்கா
இந்த உலகக்கோப்பையின் ஒவ்வொரு போட்டிக்கு முன்பும் தென் ஆப்பிரிக்க வீரர்கள் அனைவரும் ஒரு கால் மண்டியிட்டு ஒரு கரத்தின் விரல்களை மடித்து மேலே உயர்த்தி
நாங்களும் கருப்பின மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கிறோம் என்ற உறுதி மொழியை ஏற்க வேண்டும் என்று கட்டளை பிறப்பித்திருந்தது.
தென் ஆப்பிரிக்கா தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடியது.
அப்போது குய்ண்டன் டீ காக், நார்ட்ஜே ஆகிய வெள்ளைத் தோல் வீரர்கள் சிலர் இந்த உறுதிமொழியை ஏற்காமல் புறக்கணித்து அந்த போட்டியில் விளையாடி உள்ளனர்.
இதற்கிடையில் மேற்கிந்திய தீவுகளுடனான அடுத்த போட்டிக்கு முன்பு கிரிக்கெட் தென் ஆப்பிரிக்கா தனது வீரர்களுக்கு அனுப்பிய சுற்றிக்கையின் மூலம் அனைவரும் இந்த உறுதிமொழியை மண்டியிட்டு எடுத்து தங்களின் ஒற்றுமையை வெளிப்படுத்துவது கட்டாயம் என்று கூறியது.
இதை ஏற்க மறுத்த குய்ண்டன் டீ காக் அந்த போட்டியை புறக்கணித்து விட்டார்
இந்த எண்ணத்திற்கு பாடம் புகட்டும் விதமாக பாவுமா எனும் கருப்பின வீரரை கிரிக்கெட் தென் ஆப்பிரிக்கா அந்த அணியின் கேப்டனாக முன்னரே அறிவித்திருந்தது.
அவரும் மேற்கிந்திய தீவு அணியை சந்தித்து கேப்டனாக உலகக்கோப்பையில் தனது முதல் வெற்றியையும் பெற்று விட்டார்.
அனைத்து மக்களும் ஒன்றே
நிற வெறி தவறு.
கருப்பின மக்களை விட வெள்ளை நிற மக்கள் மேன்மையானவர்கள் இல்லை.
இது போன்ற எளிமையான சமத்துவத்தைப் பேணும் கொள்கையை ஏற்காமல் புறக்கணிக்கும் யாருக்கும் அணியில் இடமில்லை என்று கிரிக்கெட் தென் ஆப்பிரிக்கா கூறாமல் கூறியிருக்கிறது .
இது பார்க்க கடுமையான முடிவாகத் தோன்றினாலும் வளமான எதிர்காலத்திற்கு உரிய சிறந்த முடிவாகும்.
மும்பை இந்தியன்ஸ் அணியும் குய்ண்டனின் இந்த முடிவையொட்டி அவரை அணியில் இருந்து விடுவிப்பது குறித்து யோசிக்கிறது என்று செய்திகள் வருகின்றன
உலகில் பிறந்த அனைவரும் சமமே என்பதை ஏற்பதற்கு பெரிய அறிவோ மூளையோ அவசியமில்லை என்பது எனது கருத்து..
குய்ண்டன் டீ காக் தனது நிறவெறிக் கொள்கையை மாற்றிக் கொண்டு விரைவில் அணிக்குத் திரும்புவாராக…
நிறவெறிக்கு எதிராக கடுமையான முடிவுகளை எடுத்து வரும் கிரிக்கெட் தென் ஆப்பிரிக்காவிற்கு பூங்கொத்துகள்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் பிறந்த பின்னர் “யாதும் ஊரே யாவருங் கேளிர்”
– டாக்டர். அ.ப.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை