ஊரடங்கில் உதவும் கரங்களே!
இந்த ஊரடங்கில் உலகடங்கில் பலரும் தங்களால் இயன்ற உதவி ஒத்தாசைகளை செய்யக் காணுகிறோம். பிறருக்கு உதவுவது என்பது இறைநம்பிக்கை ஈமானில் அடங்கிய அம்சமாக உள்ளது. பல இடங்களில் இதுபற்றிய குறிப்புகளை வான்மறை தந்துள்ளது. அவற்றில் சிலவற்றை நினைவூட்டுகின்றேன்,
இங்கே
இரவுபகலாக தெரிந்தும் தெரியாமலும் தங்கள் செல்வத்தை செலவளிப்போருக்கு அவர்களது இறைவனிடத்தில் உள்ளது கூலி!. அவர்களுக்கு பயமும் இருக்காது, கவலைப்படவும் மாட்டார்கள், அவர்கள். (அல்குர்ஆன் 2/274)
.
இறைவனுக்காகக் கொடு என்பது முதல் இலக்கணம்.
.
நீங்கள் கொடுப்பது எதுவாக இருந்தாலும் அது உங்கள் மறுமைக்கான சேமிப்பு என்பது இரண்டாவது இலக்கணம்.
.
இறைவனுக்கான என்கின்ற இக்ளாஸ் கலங்கிவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்பது மூன்றாவது இலக்கணம்.
.
உங்களுக்கே தேவை இருக்கின்ற பட்சத்தில் உங்கள் தேவையை பின்தள்ளி உங்களைக் காட்டிலும் தேவை உடையோருக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பது நான்காவது இலக்கணம்.
.
நன்றியையோ கைம்மாறையோ எதிர்பார்க்கக் கூடாது என்பது ஐந்தாவது இலக்கணம்.
.
கொடுத்ததை சொல்லிக்காட்டவோ விளம்பரப்படுத்தவோ கூடாது என்பது ஆறாவது இலக்கணம்.
.
முடிந்தவரைக்கும் மறைவாகக் கொடுத்து உதவுங்கள் என்பது ஏழாவது இலக்கணம்.
.
– இவையாவும் அடிப்படை அம்சங்கள்.
அப்ரார்கள் எனும் சான்றோர்களின் செயல்பாடுகள்
இவற்றைக் காட்டிலும் மிகைத்திருக்கும் என்பது தெளிவு.
.
மேற்கண்ட ஒவ்வொன்றையும் அழகாகக் குறிப்பிடும் வசனங்களை விளக்கிக்கூறினால் இது ஒரு நெடுங்கட்டுரை ஆகிவிடும். அது இப்போதைக்கு வேண்டாம்
.
சில காட்சிகள் கண்ணை உறுத்துகின்றன. அவற்றை மட்டும் சுட்டிக்காட்டுகின்றேன்.
சிலர் பிறருக்குக் கொடுப்பதை ஒளிப்படம் எடுத்து வெளியிடுகிறார்கள். தாங்கள் இவற்றை – தாங்கள் என்றால் தங்கள் அமைப்பு – செய்துவருகிறோம் என்பதை அறிவிக்கும் விதத்தில், இந்த அறிவிப்பு எதற்காக? யாருக்காக? என்பதை கொஞ்சம் யோசித்துப் பார்க்க வேண்டும்.
.
அமைப்பின் புரோஃபைலுக்காக என்றால் அதனையும் பொறுப்பாளர்கள் கொஞ்சம் பரிசீலனை செய்துபார்க்க வேண்டும்.
கெட்ட நோக்கம் எதுவுமின்றி நாம் செய்யும் சிறுசெயலும் நமது இஃக்ளாஸை குலைத்து விடலாம்.
பால் நிரம்பிய ஒரு குவளையில் ஒரு ஸ்பூன் நீர்சேர்த்தாலும் அதன்பிறகு அது, நீர் கலக்காத பாலாக இருக்க வாய்ப்பில்லை என்பதை அறிக. தனது இஃக்ளாஸை அக்குவளை இழந்துவிடும்.
.
இடக்கை அறியாமல் வலக்கையால் கொடுத்தவர் ரஹ்மானின் அர்ஷின் நிழலின் கீழிருப்பார் என்கின்றது நபிமொழி ஒன்று.
அர்ஷின் நிழல் கிடைக்காது நமக்கெல்லாம். .. ஆனால் அந்த ரஹ்மானின் கவனத்திற்காவது நம் செயல் கொண்டுசெல்லப்பட வேண்டுமல்லவா?
நிதியுதவி அளித்தோர் பார்வைக்கு என்றும் ஒரு விளக்கம் தரப்படுகின்றது.
நாங்கள் ஓர் இஸ்லாமியப் பணி செய்கிறோம், நீங்கள் அதற்கு நிதியுதவி அளியுங்கள் என விண்ணப்பிப்பதே முறையன்று என பலகாலமாய் சொல்லி வருகின்றோம்.
ஓர் இஸ்லாமியப் பணி செய்யலாம், வாருங்கள். நாம் அனைவரும் இணைந்து செய்யலாம் – என அதனை மாற்றிகொண்டாலாவது தேவலை.
நிதியுதவி என்பதை நிதிப்பங்களிப்பு என்றாக்கிக் கொள்ளுக.
நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை அறிந்தவர்கள், உங்களை உங்கள் பணிகளை நன்கு தெரிந்தவர்கள் தாமாக முன்வந்து உங்களோடு கைகோர்ப்பார்கள். அத்தகைய நிலையை உருவாக்கிக் கொள்க.
இறைவனுக்காக இப்பணியை செய்கின்றோம் என்றால் அந்த இறைவனிடம் விண்வெளியின் புவியுலகின் களஞ்சியங்கள் யாவும் கொட்டிக் கிடக்கின்றன. அவன் தருவான், கண்டிப்பாக என்பதில் கொஞ்சம் நம்பிக்கை கொள்ளுங்கள்.
.
உதவி செய்கிறோம் என்பதற்காக யாருடைய தன்மானத்தையும் சுரண்ட நமக்கு அனுமதி இல்லை என்பதை நாம் உணர வேண்டும்.
ஆகையால் ஒளிப்படங்களை எடுப்பதை தவிர்த்துக் கொள்க அந்தப் பொட்டலங்களில் உங்கள் பெயர் பொறிப்பதையும் தவிர்த்துக் கொள்க.
.
நாம் கொடுப்பது சாப்பாடோ மளிகையோ அல்ல, நமக்கான மறுமைச் சேமிப்பு.
– Sayed Abdur Rahman Umari