முஸ்லிம் சிறைவாசிகளை விடுவிப்பதில் தமிழக அரசின் அநீதி!
பத்து வருடங்களுக்கும் மேலாக சிறையில் தண்டனைக் காலத்தைக் கழித்த சிறைக் கைதிகளை தலைவர்களின் பிறந்த நாளின் போது விடுவிப்பதை தமிழக அரசு வழக்கமாகக் கொண்டுள்ளது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த சட்டப்பேரவையில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு 700 ஆயுள் கைதிகளை விடுவிப்பதாக தெரிவித்தார். அதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறினார்.
பல்வேறு குற்ற வழக்கு பின்னணியில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் முஸ்லிம் சிறைவாசிகள் உள்ளிட்ட பலரும் இதனடிப்படையில் விடுதலைச் செய்யப்படுவார்கள் என்று நம்பப்பட்டது.
ஆனால் அந்த நம்பிக்கையை சீர்குலைப்பதாக சட்டத்துறை அமைச்சரின் பேட்டி அமைந்துள்ளது.
கடந்த 17.10.2021 அன்று திருச்சி மத்திய சிறையில் ஆய்வு மேற்கொண்ட சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பத்து ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்த அனைத்து கைதிகளையும் விடுதலை செய்ய முடியாது.
வெடிகுண்டு வழக்கு, கொடுங்குற்ற வழக்கு, தேசத்துரோக வழக்கு ஆகிய வழக்குகளில் தண்டனை பெறுவோர் இந்த விடுதலை பட்டியலில் இடம் பெற மாட்டார்கள். அவர்களை தவிர்த்து விட்டு விடுதலை செய்யப்படுவோரின் பட்டியல் தயார் செய்யப்படும் என்று கூறியுள்ளார்.
தேர்தல் நேரங்களில் மக்களின் ஓட்டுக்களை கவர்வதற்காக பொத்தாம் பொதுவாக அறிவிப்பு வெளியிடுவதும் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த பிறகு அறிவிப்புக்கு மாற்றமாக ஒரு விளக்க அறிக்கை கொடுப்பதும் ஆட்சியாளர்களுக்குப் பழகிப் போய் விட்டது போலும்.
பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை அனுபவித்த அனைவருக்கும் விடுதலை என்று முன்பு சொல்லிவிட்டு இப்போது அந்தப் பட்டியலில் இவர்கள் வரமாட்டார்கள், அவர்கள் வர மாட்டார்கள் என்பது எவ்வகை நேர்மை?
இது மக்களை மடையர் களாக்கும் செயலாகும்.
ஒரு புறம் வெடிகுண்டு வழக்கு குற்றவாளிகள் இப்பட்டியலில் இடம் பெற மாட்டார்கள் என்று சொல்லி விட்டு மறுபுறம் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகளை விடுதலை செய்வதில் முதல்வர் மிக உறுதியாக இருப்பதாகவும் அதையே லட்சியாக கொண்டு செயல்படுவதாகவும் தெரிவிக்கின்றார்.
என்னவொரு முரண்!.
ராஜீவ்காந்தியும் வெடிகுண்டு வைத்து தானே கொல்லப்பட்டார்?
மனிதனே வெடிகுண்டாக மாறி பல்வேறு நபர்கள் பலியாவதற்கு காரணமான மிக மோசமான குண்டு வெடிப்பு வழக்கு அது. ஏனைய எந்த குண்டு வெடிப்பிற்கும் சற்றும் குறைவில்லாத, நாட்டையே உலுக்கிய படுபயங்கர குண்டு வெடிப்புச் சம்பவம்.
ஆனால் குண்டு வெடிப்பு வழக்கில் 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையிலிருக்கும் முஸ்லிம் சிறைவாசிகளுக்கு மட்டும் விடுதலை இல்லை என்ற தமிழக அரசின் பாரபட்ச நடவடிக்கை இஸ்லாமிய சமூதாயத்தை வஞ்சிக்கும் செயலாகும்.
குண்டு வெடிப்பு வழக்கு என்றாகி விட்ட போது அதிலென்ன ராஜீவ் வழக்கு கைதிகளின் மீது மட்டும் தனிப்பாசம்? முஸ்லிம் சிறைக்கைதிகள் உள்ளிட்ட ஏனைய குற்றவாளிகள் மீது வெறுப்பு? இது பாரபட்ச மில்லையா?
இத்தகைய பாரபட்சமான நடவடிக்கையை தற்போதைய திமுக ஆட்சியில் முஸ்லிம்கள் எதிர்பார்க்க வில்லை.
10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனை பெற்றவர்கள் என்ற அடிப்படையில் ராஜீவ் காந்தி குண்டு வெடிப்பு வழக்கில் தண்டனை பெறுவோரை விடுதலை செய்வதில் இஸ்லாமிய சமூகம் தடையாக இல்லை.
முஸ்லிம்கள் விஷயத்தில் மட்டும் பாரபட்சமாக நடப்பதையே எதிர்க்கிறோம். ஏற்கனவே கடந்த கால ஆட்சிகளில் முஸ்லிம் சிறைகைதிகளுக்கு பல்வேறு அநீதிகள் இழைக்கப்பட்டன.
ராஜீவ் குண்டு வெடிப்பு வழக்கு கைதிகள் மட்டும் மாதக்கணக்கில் பரோலில் விடுவிக்கப்படுவதும் ஆனால் முஸ்லிம் சிறைக் கைதிகளுக்கு கடும் நிபந்தனைகளின் பெயா¤ல் பரோலின் கால அளவு குறைக்கப்படுவதும் அரசின் வழக்கமாக இருந்தது.
எந்தக் கட்சியின் ஆட்சியாக இருந்தாலும் தங்கள் கட்சி சார்ந்த நபர்களை விடுவிப்பதற்கு மட்டுமே அண்ணா பிறந்த நாள் போன்ற தலைவர்களின் பிறந்த நாளை பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
தமிழகத்தையே அதிர வைத்த மதுரை லீலாவதி படுகொலை வழக்கில் கைதான குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஆறு ஆண்டுகள் தண்டனையைக் கூட அவர்கள் முழுமை செய்திடவில்லை.
ஆனால் அந்த குற்றவாளிகள் திமுக பின்னணி கொண்டவர்கள் என்பதால் திமுக ஆட்சி அமைந்த 2008 ல் அண்ணா பிறந்த நாளின் போது விடுதலை செய்யப்பட்டார்கள்.
ஜெயலலிதா குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்ட நேரத்தில் மாணவிகள் பயணித்த பஸ் ஒன்று தர்மபுரியில் தீ வைத்து எரிக்கப்பட்டது. அநியாயமாக 3 மாணவிகளின் உயிர் பறிபோனது.
தர்மபுரி பஸ் எரிப்பு கொலைக் குற்றவாளிகளுக்கு முதலில் மரண தண்டனையும் பிறகு ஆயுள் தண்டனையும் அளிக்கப்பட்டது. ஆனால் குற்றவாளிகள் அதிமுகவைச் சார்ந்தவர்கள் என்பதால் அதிமுக ஆட்சியின் போது எம்.ஜி.ஆர் பிறந்த நாளின் பெயரால் விடுதலை செய்யப்பட்டார்கள்.
அது போல 25 ஆண்டுகளுக்கு முன்பு மொத்த தமிழகத்தையும் உலுக்கிய மேலவளவு முருகேசன் கொலை வழக்கு.
சாதிய வெறியின் அடிப்படையில் மதுரை மேலூர் மேலவளவு முருகேசன் உள்ளிட்ட ஏழு பேர் படுகொலை செய்யப்பட்டார்கள்.
இந்தக் கொலைக்குற்றவாளிகளுக்கு பல்வேறு கட்டங்களுக்கு பிறகு 2001 ல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
ஆனால் கடந்த 2018 அன்று எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவின் பெயரில் மேலவளவு கொலைக்குற்றவாளிகளை எடப்பாடி அரசு விடுதலை செய்தது.
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று கூறிக் கொண்டு தங்களுக்கு விருப்பமானவர்களையும் தங்கள் கட்சி சார்புள்ளவர்களையும் மட்டும் விடுதலை செய்யும் போக்கு சட்டத்தைக் கேலிக்கூத்தாக்கும் செயலாகும்.
வெடிகுண்டு வழக்கு குற்றவாளிகள் விடுதலையில்லை. ஆனால் ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் மட்டும் விடுதலை எனும் தற்போதைய தமிழக அரசின் நிலைப்பாடு இதே அடிப்படையிலான, ஒரு தலைபட்சமான முடிவாகும்.
பத்து வருடங்களுக்கும் மேல் தண்டனை அனுபவித்தவர்கள் விடுதலை என்றால் ஒரே அளவு கோலில் எவ்வித பாகுபாடும் இல்லாமல் அனைத்துக் குற்றவாளிகளும் விடுவிக்கப்பட வேண்டும்.
ஏனைய கடும் கொலைக் குற்றவாளிகளை எல்லாம் மென்குற்றம் எனும் போர்வையில் பாரபட்சத்துடன் விடுதலை செய்து விட்டு முஸ்லிம் சிறைவாசிகளை மட்டும் பொருந்தாக் காரணங்களைச் சொல்லி ஒதுக்கி வைத்தால் முஸ்லிம் சமூகம் அந்த அநீதியை ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாது.
– நடுநிலைச்_சமுதாயம் வார இதழ் (உரிமை : 3 குரல் : 42) (22.10.2021 – 28.10.2021)