நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கவி பாடினார்களா?
[ நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சில கவிஞர்களுக்கு கவிதையை சொல்லிக் கொடுத்தார்கள் என்பது பச்சைப்பொய் ]
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சில கவிதைகள் பாடியதாக ஒரு சில அறிவிப்புகளில் காணப்படுவதை அடிப்படையாக வைத்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு கவிதைப் பாடத் தெரியும். கவித்திறமை அவர்களுக்கு உண்டு என்று சிலர் தவறாகக் கருதுகின்றனர். இப்படிக் கருதிக்கொண்டு பல பொய்யான கதைகளையும் உருவாக்கி விட்டனர்.
‘புர்தா’ போன்ற அரபிக் கவிதையையும் ‘சீறா’ போன்ற தமிழ்க் கவிதைகளையும் அந்தக் கவிஞர்கள் பாடியபோது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கனவில் தோன்றி அதை அங்கீகரித்ததாகவும், அந்த கவிஞர்கள் கவிதை இயற்றும் வேளையில் அடுத்து எப்படி பாடுவது என்று தடுமாறியபோது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அடுத்த அடியை எடுத்து கொடுத்ததாகவும் கதைகள் பல உண்டு. அந்த கவிதைகளில் எவரும் குறைக் கண்டுவிடக்கூடாது என்று திட்டமிட்டு இப்படி பொய்யைச் சொல்லி அதற்கு மிகப்பெறும் மதிப்பை ஏற்படுத்தி விட்டனர்.
காசிம் புலவர் ‘திருப்புகழ்’ பாடும்போது, ஓரிடத்தில் தடுமாறும்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நேரடியாகவே தோன்றி அடுத்த அடியை எடுத்துக்கொடுத்தனர்.என்றுகூட எழுதி வைத்துள்ளனர். அல்லாஹ் தன் திருமறையில்
”(நம்முடைய தூதராகிய) அவருக்கு கவிதையை கற்றுக் கொடுக்கவில்லை. அது அவருக்கு தகுமானதுமல்ல.” (அல்குர்ஆன் 36:69)
திருக்குர்ஆன் மிகத் தெளிவாகவே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு கவிதை தெரியாது என்றும், அவர்களுக்கு அது தகுதியானதுமல்ல என்றும் சொல்கிறது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு சொந்தமாக கவிதை இயற்றத் தெரியாது என்பது மட்டுமின்றி பிறர் கவிதைகளை உதாரணத்துக்குக் கூறும் நேரங்களில் கூட முறையாகக் கூறமாட்டார்கள்.
“பிறர் கவிதைகளில் எதையாவ்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உவமையாக குறிப்பிடுவதுண்டா?” என்று அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் கேட்கப்பட்டது. கவிதை அவர்களுக்கு மிகவும் பிடிக்காததாகும். சில சமயங்களில் ஒரு கவிஞரின் கவிதையை எடுத்துச் சொல்லும்போது அதன் ஆரம்பத்தை கடைசியிலும், கடைசியை ஆரம்பத்திலும் ஆக்கிவிடுவார்கள். அப்போது அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! அந்தக்கவிதை அவ்வாறு இல்லை” என்று சுட்டிக் காட்டினார்கள். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நான் கவிஞனல்ல. அது எனக்கு தகுதியானதுமல்ல என்று குறிப்பிட்டார்கள் என அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல்கள்: இப்னு ஜரீர், இப்னு அபீஹாதம்)
அப்பாஸ் என்ற கவிஞரின் கவிதை ஒன்றை முன் பின்னாக மாற்றிச் சொல்லி “நீர் தான் இந்தக் கவிதையை இயற்றியவரோ?” என்று அந்தக் கவிஞரிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர், “நான் அப்படி இயற்றவில்லை” என்று கூறி கவிதையை முறையாகச் சொல்லிக் காட்டினார். அபோது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எல்லாம் ஒன்றுதான் என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல் பைஹகீ)
பிறர் கவிதையை எடுத்துச் சொல்லும்போது கூட யாப்பிலக்கண அடிப்படையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறமாட்டார்கள் என்பதை மேற்கூறிய ஹதீஸ்கள் தெளிவுபடுத்துகின்றன. ஆனால் யாப்பிலக்கணப்படி அந்தக் கவிஞர் கூறியதே முறையானது. இவைகளெல்லாம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அல்லாஹ் கவிதை இயற்றும் தன்மையை அறிவித்துக் கொடுக்கவில்லை என்ற குர்ஆன் வசனமே எடுத்துக்காட்டாகும்.
ஒரு சில சந்தர்ப்பங்களில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓரிருவரிகள் பாடியதாக வந்துள்ளவை தற்செயலாக கவிதை அமைப்பில் அமைந்தது என்றே முடிவு செய்யவேண்டும்.
நான் என்புறத்திலிருந்து கவிதயைச் சொன்னால், அது நான் திட்டமிட்டுச் சொன்னதல்ல என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளனர். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அபூதாவூத்)
இந்த தெளிவான ஆதாரங்களில் அடிப்படையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சில கவிஞர்களுக்கு கவிதயை சொல்லிக் கொடுத்தார்கள் என்பது பச்சைப்பொய் என்று அறியலாம். இது கனவில் தானே நடந்ததது கனவில் எதுவும் நடக்கலாமே! என்ற ஜயம் சிலருக்கு தோன்றலாம்.
யார் கனவில் என்னைக் கண்டானோ அவன் என்னையே கண்டான். என் வடிவத்தில் ஷைத்தான் தோன்றமாட்டான். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: புகாரி, முஸ்லிம்)
மற்றவர்கள் தோற்றத்தில் கனவில் ஷைத்தான் விளையாடுவது போல நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய தோற்றத்தில் விளையாட முடியாது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாழும்போது எந்த போதனையை சொன்னார்களோ அதற்கு மாற்றமாக கனவில் சொல்ல மாட்டார்கள் என்று இந்த ஹதீஸிலிருந்து விளங்கமுடியும்.
அந்த அப்பா பாடலில் அடியெடுத்து கொடுத்தார்கள் என்பதும், இந்த இமாமுடைய கவிதையில் பிழைதிருத்தம் செய்தார்கள் என்பதும் கொஞ்சமும் உண்மையல்ல. கவிதைகள் பொதுவாக இஸ்லாத்தில் தடுக்கப்படவில்லை என்பதையும், இஸ்லாத்தின் எந்த போதனைக்கும் முரண்படாத கவிதைகளுக்கு அங்கீகாரம் உண்டு.
கவிதைகளில் நல்லதும் உண்டு, கெட்டதும் உண்டு. நல்லதை எடுத்துக்கொள் கெட்டதை விட்டுவிடு. (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல்: புகாரி இமாமிம் அதபுல் முஃபரத்)
மேலும் எந்தக் கவிஞர்களின் கனவில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தோன்றி அடி எடுத்துக்கொடுத்தார்கள் என்று கூறப்படுகின்றதோ அந்தக் கவிஞர்களின் கவிதைகளில் இஸ்லாத்தின் அடிப்படைக்கு முரணானவை காணப்படுகின்றன. இத்தகைய கவிதைகளை நிச்சயம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அங்கீகரித்திருக்கவே மாட்டார்கள் என்று நாம் உணரலாம்.
– இப்னு மர்யம்