ததப்புருல் குர்ஆன் – அருள்மறை ஆய்வுரை
தன் அழைப்புப்பாதையின் ஊடாக சில சமூகங்களின் வரலாற்று நிகழ்வுகளை வான்மறை குர்ஆன் எடுத்தியம்புகின்றது.
உண்மையில் வரலாறு எனில் அதை இவ்வாறு தான் அணுகவேண்டும் எனும் பாடத்தையும் உணர்த்துகின்றது.
சமுகங்கள் எழுவதும் தாழ்வதும் தற்செயலாக தோன்றும் நிகழ்வுகளின் அடிப்படையில் அல்ல,
மாறாக, தெளிவான நியதி ஒன்றின் கீழாகத்தான் நடைபெறுகின்றது என்பதை வான்மறை உணர்த்த வருகின்றது!
ஒரு சமூகத்தின் எழுச்சியை வீழ்ச்சியை சில அகக்காரணிகளும் ஒழுக்கக்காரணிகளும்தான்
தீர்மானிக்கின்றன!
தனது இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்கான ஆன்மீக, ஒழுக்க விழுமியங்களை ஒரு சமூகம் முற்றிலும் தொலைத்துவிடும்போது ‘இயற்கை விதிகள்’ அதை அழிவை நோக்கி நகர்த்திச் செல்கின்றன.
ஒழுக்கத்திலும் நடத்தையிலும் அதைக் காட்டிலும் சிறந்த வேறொரு சமூகத்தை அதன் இடத்தில் நிலைநிறுத்துகின்றன!.
அதிகாரத்தைக் கைக்கொண்ட பிறகு அச்சமூகத்தின் நடத்தையும் போக்கும் எவ்விதம் அமைகின்றது என அதனையும் சோதித்தறிகின்றன, அவ்விதிகள் எதிர்பார்த்தபடி அதுவும் அமை யாதுபோனால், அலங்கோலம் ஆகிப்போனால் அதனையும் வாழ்வின் பக்கத்தில் எழுதப்பட்ட தவறெழுத்தாய் கருதி அழித்துவிடுகின்றன இயற்கைவிதிகள்!.
பிறகு அவ்விடத்தில் வேறொரு சமூகத்தை நிறுத்துகின்றன.
சமூகங்களின் எழுச்சி-வீழ்ச்சி குறித்த இந்நியதியை தொட்டுக்காட்டி உணர்த்தியவாறு அரபியர்களிடம் அவர்கள் நாட்டு வரலாற்றையும் அக்கம்பக்கம் உள்ள நாடுகளில் வாழ்ந்த ஆது, ஸமூது, மத்யன், ஸபா, லூத் அவர்களின் சமூகம், ஃபிர்அவ்ன் சமூகம் போன்ற சமூகங்களின் வர லாறுகளையும் சுட்டிக்காட்டுகின்றது.
இவர்கள் யாவரும் அழிந்து சுவடின்றிப் போனதற்கு தற்செயல் நிகழ்வுகள் காரணமல்ல. என்றும் அழியாது நிலைத்து நின்று இயங்கும் வல்ல இறைவனின் நியதிகள்தாம் காரணம் என்பதை உணர்த்துகின்றது!
அகமும் ஆன்மாவும் கெட்டுப்போய் முழுமையான ஒழுக்க வீழ்ச்சியை ஆன்மீக வீழ்ச்சியை இந்த சமூகங்கள் சந்தித்துவிட்டிருந்தன.
அகத்தைக்கழுவி ஆன்மாவை தூய்மைப்படுத்த இவர்களிடம் ஆன்ம மருத்துவர்களை அதாவது இறைத்தூதர்களை இறைவன் அனுப்பியிருந்தான். தமது சக்தி முழுவதையும் பயன்படுத்தி இவர்களது அகநோய்களை நீக்கி முழுத்தூய்மையை நல்க அந்தத் தூதர்கள் பெரும்பாடுபட்டார்கள்.
ஆனால்
அந்தச் சமூகங்கள் இறைத்தூதர்களின் பேச்சை காதில் போட்டுக்கொள்ள தயாராகவே இல்லை என்றபோது இறைவன் அவர்களை
அழிக்கும் முடிவையெடுத்தான்.
இந்த வரலாறுகளை எடுத்துச்சொன்ன பிறகு வாழ்வா, சாவா என இருப்பைத் தீர்மா னிக்கும் அதே திருப்புமுனையில்தான் நீங்களும் இன்று நிற்கிறீர்கள் என அரபியர்களை எச்சரித்தது, குர்ஆன்.
உங்களிடமும் வந்துள்ளார், இறைத்தூதர். நீங்களும் அவர் பேச்சை கேட்கவில்லை என்றால் புறக்கணிப்பீர்கள் என்றால் உங்கள் விஷயத்திலும்
– உங்களுக்கு முன்சென்றோர் விஷயத்தில் எடுத்ததைப்போன்றே-
‘வேறு’ முடிவை இயற்கை எடுக்கவேண்டியிருக்கும் என்றது!
அரபியர்களின் பொதுப்புத்திக்கு வேம்பாய் கசந்தது இது.
அகமாசிலும் ஒழுக்க சீர் கேடுகளிலும் தாங்கள் புதைந்துகிடக்கிறோம்,
அதனால் இறைவனின் பிடியும் வேத னையும் தங்கள்மீது விடியவுள்ளது எனும் விஷயத்தை அவர்களால் ஜீரணிக்கவே இயலவில்லை.
இரண்டாவதாக,
ஒழுக்கக்குறைகள் ஆன்மீக சீர்கேடுகள் போன்றவை ஒரு சமூகத்தின் அழிவுக்குக் காரணமாக அமையும் என்பதை அவர்களால் நம்பவே இயலவில்லை!.
மரமோ மனிதனோ பிறக்கின்றது, கொஞ்ச காலம் உயிர்வாழ்கின்றது. பிறகு ‘தானாக’ செத்துப்போய்விடுகின்றது.
இதுபோலத்தான் சமூகங்களும் பிறக்கின்றன, கோலோச்சுகின்றன, கொஞ்சகாலம் வாழ்கின்றன. பிறகு ‘காலம்’ முடிந்தவுடன் செத்துப்போய்விடுகின்றன – என அவர்கள் நினைத்துக் கொண்டிருந்தார்கள்.
அக ஒழுங்கிற்கும் மெய் நம்பிக்கைக்கும் இதற்கும் என்ன தொடர்பிருக்கும்?
என வியந்தார்கள். அரபியர்களின் இந்த நம்பிக்கையை குர்ஆன் எடுத்துப் பதியவும் செய்கின்றது
‘உலகவாழ்வோடு முடிந்தது வாழ்க்கை. சாவதும் இங்குதான் வாழ்வதும் இங்கு தான், காலமாற்றம் ஒன்றே நம்மை அழிக்கின்றது!’ என்றெல்லாம் சொல்கிறார் கள். இதைப்பற்றிய எந்த அறிவுமே இவர்களுக்குக் கிடையாது. வெறுமனே வார்த் தைகளை ஓட்டுகிறார்கள்’. (அல்குர்ஆன் 45:24)
அதுவும் எப்போது சொன்னார்கள்?
சமூகங்களின் எழுச்சிக்கும் வீழ்ச்சிக்கும் உரிய காரணங்களை இறைமறையும் மறைத்தூதரும் விளக்கியபோது அவற்றை ஏற்க மனமில்லாமல் மறுதலிக்கும் எண்ணத்தில் கூறினார்கள்.
இறைநம்பிக்கைக் கும் ஈமானுக்கும் இதிலென்ன பங்கு?
காலமாற்றத்தின் விளைவுகள்தாமே இவை யாவும்?
என வினா எழுப்பினார்கள்.
அவர்களது கருத்தும் கண்ணோட்டமும் இப்படியிருக்கும்போது இந்த நியதிகளுக்கு ஆதரவாக வான்மறை எடுத்துக்கூறிய சமூக வரலாறுகள் அவர்களுக்குக் கோபத்தையே வரவழைத்தன.
இந்தத்தூதரின் பேச்சைக்கேட்காமல், வேதமறையின் கூற்றைக் கேளாமல் இருந்தால் தம்மீதும் இறைவேதனை வந்திறங்கிவிடுமோ? என சிலர் அச்சம் தெரிவித்தபோது அவர்களது சினம் பன்மடங்கானது.‘இதையெல்லாம் ஏனப்பா கேட்கிறீர்கள்?
இதெல்லாம் ஒன்றுமே கிடையாது. வெறும் புராணக் கதைகள்தாம். வெற்று இதிகாசக்குப்பையை நம்பி வீண் அச்சத்தில் உழலாதீர்கள்!’.
இன்னும் சில நாள்களில்
மூன்றாம் பாகம் உங்கள் கரங்களில்
910 பக்கங்கள், டபுள் கிரவுன் சைஸ்,
விலை. ரூ. 800
உங்களுக்கான அழகிய பரிசுகளோடு
கூரியர் செலவுகூட உங்களுக்கு இல்லை
பதிவு செய்து கொள்ளுங்கள்.
7871611173