ஜின்களைப் பற்றி அறிந்துகொள்வோம்
• ஜின் என்றாலே நம்மில் பலருக்கு பேய்கள் அல்லது பயம் என்ற உணர்வு தான் உள்ளத்தில் ஏற்படும்!
• நம்முடைய முஸ்லீம் சமூகத்தில் இதை பற்றி தெளிவு இல்லாத காரணத்தில் ஜின்களை போய்களை விட அதிகமான கதைகளை கூறி பயம் படுத்தி வைத்து உள்ளார்கள்!
• ஜின் என்ற அரபு சொல்லுக்கு மறைவானது அல்லது கண்ணுக்கு தெரியாது என்று பொருள் ஆகும்!
• ஷைத்தானும் ஜின்களின் இணைத்தை சேர்ந்தவன் தான்! ஜின்களும் யாரின் கண்களுக்கும் தெரிய மாட்டார்கள் ஆனால் நாம் அவர்களின் கண்களுக்கு தெரிவோம்!
• ஜின்களும் நம்மை போன்ற ஒரு படைப்பே! அவர்களும் நம்மை போன்றவர்கள் தான் ஆனால் அவர்கள் நம்மை போன்று உருவ அமைப்பு இருக்காது மற்றும் நம்மை விட சற்று ஆற்றல் மிக்கவர்கள்!
• நம்மை போன்று அவர்களுக்கும் குடும்பம் உண்டு நல்லவர்கள் கேட்டவர்கள் உண்டு அவர்களுக்கும் வாழ்வு மரணம் மறுமை நாளில் கேள்வி கணக்கு என்று அனைத்தும் உண்டு!
ஜின் படைப்பு :
• இந்த உலகில் அல்லாஹ் மனிதர்களை படைக்கும் முன்பே ஜின் இனத்தை அல்லாஹ் படைத்துவிட்டான்!
• மனிதர்களை அல்லாஹ் மண்ணால் படைத்தான் என்றால் ! ஷைத்தானும் ஜின் இனத்தை சேர்த்தவன் தான்! ஜின் இனத்தை அல்லாஹ் நெருப்பால் படைத்தான் ! (அல்குர்ஆன் :15 : 27 | 55 : 15 | 18 : 50)
ஜின் படைப்பின் நோக்கம் :
ஜின்களையும் மனிதர்களையும் என்னை வணங்குவதற்காகவே தவிர நான் படைக்கவில்லை. (அல் குர்ஆன் : 51 : 56)
• அல்லாஹ் மனிதனை எந்த நோக்கத்திற்கு படைத்தானோ அதே நோக்கத்திற்கு தான் ஜின்ககளையும் அல்லாஹ் படைத்தான்!
• ஜின்களும் இஸ்லாம் தான் மார்க்கம் அல்லாஹ் தான் இறைவன் நபி (ஸல்) அவர்கள் தான் இறைத்தூதர்கள் ஜின்கள் இதை ஏற்று பின் பற்ற வேண்டும்!
ஜின்களில் முஸ்லீம்களும் உண்டு காஃபிர்களும் உண்டு :
• மனிதர்களில் எப்படி நல்லவர்கள் கெட்டவர்கள் உள்ளார்களோ அதே போன்று ஜின்களிலும் நல்லவர்கள் தீயவர்கள்,காபிர்கள், முஸ்லிம்களும் உள்ளனர்!
நம்மில் முஸ்லிம்களும் உள்ளனர். அநீதி இழைத்தோரும் உள்ளனர். இஸ்லாத்தை ஏற்போர் நேர் வழியைத் தேடிக்கொண்டனர். (அல் குர்ஆன் : 72 : 14)
ஜின்களிளும் ஆண் பெண் உள்ளனர் :
• மனிதர்களில் நாம் எப்படி ஆண்கள்,பெண்கள் என்ற இரு இணத்தவர்கள் இருக்கின்றோமோ அதே போல ஜின்களிலும் ஆண்,பெண் என்ற இரு இணத்தவர்கள் உள்ளனர் (அல்குர்ஆன் : 72 : 6)
• ஜின்களும் மனிதர்களை போன்று ஒருவருக்கு ஒருவர் நேசித்து கொள்ளுவார்கள் ! அவைகளும் நம்மை போன்று குழந்தைகளை பெற்று கொள்ளும்! (அல்குர்ஆன் : 18 : 50) (நூல் : முஸ்லீம் : 5312)
• ஜின்களில் உள்ள ஆண் ஜின்களிடம் தான் சூனியகாரர்கள் உதவி தேடுகிறார்கள் நம்மில் சில ஆண்கள் எப்படி இந்த உலகத்திற்கோ அல்லது மறுமை உலகத்திற்கோ எந்த பயனும் இல்லாமல் உள்ளார்களே அதே போன்று ஜின்களிலும் சிலர் உள்ளார்கள்!
• இது போன்ற ஜின்களிடம் சூனியக்காரர்கள் அடிபணித்து அவர்களை வணங்க ஆரம்பம் செய்கிறார்கள் இன்னும் அவர்களுக்கு குர்பானி போன்றவை கொடுக்கிறார்கள்!
• இதனால் கெட்ட ஜின்கள் இவர்களுக்கு உதவி செய்ய முன் வருகிறது!
ஜின்களை விலங்குகளால் காண முடியம் :
• நம்முடைய கண்களுக்கு ஜின்கள் ஒரு போதும் தெரியாது ஆனால் விலங்குகள் கண்களுக்கு தெரியும்!
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் :
நீங்கள் இரவில் நாய் உளையிடுவதையும் கழுதை கத்துவதையும் செவியுற்றால் அல்லாஹ்விடம் பாதுகாப்புத்தேடுங்கள். ஏனென்றால் அவைகள் உங்களால் பார்க்க முடியாத (தீய)வற்றை பார்க்கின்றன! (நூல் : அபூதாவுத் : 4439)
ஜின்களின் உருவ அமைப்பு :
• ஜின்களின் உருவம் பற்றி ஆதாரப்பூர்வமான விரிவான செய்திகள் எதுவும் இல்லை!
• ஹதீஸ்களில் உள்ள செய்திகளை வைத்து ஜின்களில் மொத்தம் மூன்று வகையினர் உள்ளனர் !
1 ) நாய் மற்றும் பாம்பு வடிவில் உள்ளவைகள்!
2 ) (கண்ணுக்கு புலப்படாமல்) பூமியில் வாழும் ஜின்கள்!
3 ) ஆகாயத்தில் பறக்கக்கூடிய ஜின்கள்! (நூல் : முஷ்கிலுல் ஆஸார் : 2473)
• அனைத்து நாய் மற்றும் பாம்புகளும் ஜின்கள் கிடையாது! அதில் ஒரு சிலவைகள் மட்டும் தான் ஜின்கள் ஆகும் ஆனால் அவைகள் ஜின்கள் என்று உறுதியாக கூற எந்த அறிகுறியோ அல்லது அடையாளமோ கிடையாது!
• மதினாவில் வாழும் பாம்புகளுக்கு மட்டும் நபி (ஸல்) அவர்கள் உடனே கொல்ல வேண்டாம் என்று கூறி உள்ளார்கள் அதற்கு மூன்று நாட்கள் அவகாசம் அளிக்க சொல்லி உள்ளார்கள் நான்காம் நாள் அவை நம்மை விட்டு செல்ல வில்லை என்றால் கொல்ல அனுமதி கொடுத்து உள்ளார்கள்!
• ஆனால் நமது ஊர்களில் உள்ள விஷ பாம்புகள் நமக்கு தீங்கு கொடுத்தால் அவைகளை கொல்ல வேண்டும்! (நூல் : முஸ்லீம் : 4503)
பாம்பு பழி வாங்குமா?
:அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் :
பாம்புகள் பலிவாங்கிவிடும் என்று பயந்து யார் அவைகளை கொல்லாமல் விட்டுகிறாரோ அவர் நம்மைச் சார்ந்தவரல்ல. (நூல் : அபூதாவுத் : 4570)
• இன்று நமது நாட்டில் பல ஊர்களில் பாம்புகளை கொல்ல தயக்கம் காட்டுகிறார்கள் பாம்புகளை கொன்றால் அவை நம்மை பழி வாங்கும் என்று ஆனால் இது அறியாமையே!
• இஸ்லாத்தில் பாம்புகளை அடித்து கொல்ல அனுமதி உண்டு ஆனால் அதற்கு என்று அவைகளை எரித்து விட கூடாது!
ஜின்களின் வசிக்கும் இடங்கள் :
• நம்மை போன்று தான் ஜின்களும் பூமியில் வாழுகின்றன! ஆனாலும் ஜின்களின் வாழ்க்கை முறை மாறுபடும் !
• ஜின்கள் பின்வரும் இடங்களில் வாழ்வதை வழக்கமாக்கிக் கொள்கின்றனர்.
1) இருட்டான இடங்கள்
2) பாழடைந்த இடங்கள்
3) பராமரிப்பில்லாத கட்டிடங்கள்
4) பராமரிப்பில்லாத மைதானங்கள்
5) பாலை வனங்கள்
6) அடர்ந்த காடுகள்
7) மலைகள்
8) ஓடைகள்
9) மையவாடிகள்
10) பாழடைந்த பள்ளிவாசல்கள்
11) கிணறுகள்
12) சமுத்திரங்கள்
13) வயல் வெளிகள்
14) சுரங்கங்கள்
15) பொந்துகள்
16) வீட்டின் முகடுகள்
17) மரங்கள்
18) குகைகள்
19) ஒட்டகம் போன்ற விலங்குகள் அடைக்கப்படும் இடங்கள்
20) அசுத்தமான (நஜீஸ்) இடங்கள்
• மேற் கூறிய இடங்களில் ஜின்கள் தனது வாழ்விடத்தை அமைத்துக் கொள்கின்றன. (நூல் : மஜ்முஉல் பதாவா : பாகம் 19 : பக்கம் 40 : 41)
ஜின்களின் உணவுகள் :
• ஜின்களும் மனிதர்களை போன்று உண்ணும் ஆனால் அவைகளின் உணவுகள் மாறுபடும்!
1) அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்பட்ட பிராணியின் எலும்புகள் !
2) கெட்டியான சாணம்!
3) இது அல்லாமல் சில ஜின்கள் நம்மை போன்று நெருப்பு மூட்டி பாத்திரங்களை வைத்து சமைத்து சாப்பிட கூடியவைகளும் உண்டு! (நூல் : புகாரி : 3860 | முஸ்லீம் : 762 |திர்மிதி : 3311)
• இவைகள் தான் ஜின்களின் உணவுகள் ஆகும் நமக்கு இவை சாதாரணமான ஒன்றாக தெரியலாம் ஆனால் ஜின்களுக்கு இவைகள் மாமிசத்தை விட நிறைவான உணவுகள் ஆகும்!
ஜின்களுக்கும் நபிமார்கள் அனுப்பப்பட்டுள்ளனர் :
• மனிதர்களுக்கும் மற்றும் ஜின் படைப்புகளுக்கும் நேர் வழி படுத்த அல்லாஹ் நபிமார்களை அனுப்பி உள்ளான்!
• ஜின்களில் நபிமார்களின் பேச்சை கேட்டு கட்டுப்பட்டவர்களும் உண்டு அவர்களை மறுத்துவர்களும் உண்டு! (அல்குர்ஆன் : 6 : 130)
ஜின்களுக்கும் வணக்க வழிபாடுகள் உண்டு :
• நமக்கு எப்படி தொழுகை இன்னும் சில அமல்கள் செய்வது கடமையோ அதே போன்று அல்லாஹ்வை வணங்குவது ஜின்கள் மீதும் கடமையாகும்! ஜின்களும் தொழுகும் அல்லாஹ்விடம் துஆ செய்யும்!
• அதே போன்று நாம் எப்படி பிறருக்கு தாவாஹ் செய்கிறோமோ அதே போன்று ஜின்களும் மற்ற ஜின்களுக்கு தாவாஹ் செய்கின்றன! (அல்குர்ஆன் : 51 : 56 | 46:30) (நூல் : புகாரி : 1071 | முஸ்லிம் : 5033)
ஜின்களுக்கும் மறுமை நாளில் விசாரணை உண்டு :
• மனிதர்களை போன்று ஜின்களும் பாவங்கள் செய்யும் இதை பற்றி மறுமையில் அல்லாஹ் ஜின்களையும் விசாரனை செய்வான்! (அல்குர்ஆன் 37 : 158 | : 55 : 39)
ஜின்களுக்கும் சொர்க்கம் & நரகம் உண்டு :
• மனிதர்களுக்கு எப்படி அவர்களின் செயலுக்கு ஏற்றால் போல் சொர்க்கம் நரகம் உள்ளதோ அதே போன்று ஜின்களுக்கும் சொர்க்கம் நரகம் உள்ளது! (அல்குர்ஆன் : 72 : 13 & 15)
ஜின்களிடம் உதவி தேடலாமா?
• ஜின்கள் நம்மை விட அதிகம் ஆற்றல் உள்ளதாக இருந்தால் அவைகளால் நமக்கு எந்த நன்மையும் செய்ய முடியாது!
• பாங்கு கூறியவருக்கு மட்டும் மறுமை நாளில் ஜின்கள் சாட்சி கூறும்! (நூல் : புகாரி : 3296)
• அவைகள் நமது கண்களுக்கும் தெரியாது அதனால் நாம் அவர்களிடம் நேரடியாக உதவியும் கேட்க முடியாது!
• நம்முடைய கண்களால் பார்க்காமல் துஆ செய்வதற்கு அல்லாஹ் ஒருவன் மட்டுமே தகுதி வாய்ந்தவன்!
• ஜின்களிடம் சிறியதோ அல்லது பெரியதோ உதவி கேட்பது ஷிர்க் (இணைவைப்பு) ஆகும்!
• ஆரம்ப காலத்து மக்கா காஃபிர்கள் ஜின்களிடம் உதவி கேட்டார்கள் இதை அல்லாஹ் ஷிர்க் வைத்து விட்டார்கள் என்று கூறி உள்ளான்! (அல்குர்ஆன் : 72 : 6)
ஜின்களுக்கு பயப்படலாமா? :
• ஜின்களுக்கு பயப்படுவது அறியாமை செயல் ஆகும்!
• நமக்கு நன்மையோ அல்லது தீங்கோ எந்த ஒன்றும் அல்லாஹ்வின் நாட்டம் இல்லாமல் நமக்கு ஏற்படாது!
• இதை ஒவ்வொரு முஸ்லிமும் மனதில் ஆழமாக பதிய வைத்துக்கொண்டால் அல்லாஹ்வை தவிர மற்ற எதற்கும் அஞ்ச மாட்டார்கள் !
• நாம் அஞ்ச தகுதியானவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே!
ஷைத்தானே, தனது நேசர்களை (இவ்வாறு) அச்சுறுத்துகிறான். அவர்களுக்கு அஞ்சாதீர்கள்! நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் எனக்கே அஞ்சுங்கள்! (அல்குர்ஆன் 3 : 175)
ஜின்கள் மனிதர்களை வழிகெடுப்பார்களா? :
• நம்மில் சில மனிதர்கள் சில மனிதர்களை வழிக்கெடுகிறார்கள் !அதே போன்று சில ஜின்களும் சில ஜின்களை வழிகெடுக்கிறார்கள்!
• ஜின்கள் மனிதர்களை உள்ளம் சார்ந்த விசியக்களை தீய எண்ணங்களை ஏற்படுத்தி வழிகெடுப்ப்பார்கள்!
(அந்நாளில்:) காஃபிர்கள்: “எங்கள் இறைவா! ஜின்களிலிருந்தும் மனிதனிலிருந்தும் எங்களை வழி கெடுத்தோரை எங்களுக்குக் காட்டுவாயாக! அவ்விருவரும் தாழ்ந்தவர்களாக ஆவதற்காக நாங்கள் எங்களுடைய கால்களுக்குக் கீழாக்கி (மிதிப்போம்)” எனக் கூறுவார்கள். (அல்குர்ஆன் : 41: 29)
ஜின்கள் மனிதர்களுக்கு செய்யும் தீங்குகள் :
• ஜின்களை பற்றி அறியாமை செய்திகள் சில : மனிதர்களின் உடலில் பலவீனத்தை ஏற்படுத்துதல் மனித உயிர்களை பறித்தல் வறுமையை ஏற்படுத்துதல் போன்ற
செயல்களை ஜின்கள் செய்யும் என்று கூறுகிறார்கள் ஆனால் இதற்கு எல்லாம் எந்த ஆதாரமும் கிடையாது!
• ஜின்களால் மனிதர்களின் உள்ளம் சார்ந்த தீங்குகளை ஏற்படுத்த முடியும் உள்ளத்தில் தீய எண்ணங்களை ஏற்படுத்துதல்! சந்தேகம்! கணவன் மனைவியிடையே சண்டை போன்றவைகளை ஜின்களால் செய்ய முடியும்! (அல்குர்ஆன் : 114 : 5 & 6)
• அதே போன்று நாம் தொழுகையில் இருக்கும் போது வஸ்வாஸ் (வீணான எண்ணங்கள்) ஏற்படுத்த முடியும்!
• அல் குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் சொல்லப்பட்டுள்ள இந்த விபரத்தைத் தாண்டி ஜின் பைத்தியத்தையும் நோயையும் ஏற்படுத்தும் என்று நிறைய நபர்கள் கூறுகிறார்கள் ஆனால் இதற்கு எல்லாம் எந்த ஆற்றலும் கிடையாது!
ஜின்களின் சக்தி :
• ஜின்களுக்கு அல்லாஹ் நம்மை விட அதிகம் ஆற்றல் கொடுத்து உள்ளான ஆனால் அனைத்து ஜின்களுக்கும் இந்த ஆற்றல் கிடையாது!
மின்னல் வேகத்தில் பயணிக்க ஆற்றல் உண்டு :
• நபி சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் ஒரு பலம் பொருந்திய ஜின் கூறியது : நீங்கள் உங்கள் இடத்திலிருந்து எழுந்திருப்பதற்கு முன் பைத்துல் முகத்திஸில் ராணியின் சிம்மாசனத்தை நான் உங்களிடம் கொண்டு வந்து விடுவேன் என்று கூறிய ஒரு பலம் பொருந்திய ஜின் அதையும் செய்தும் முடித்தது! (அல் குர்ஆன்: 27 : 39)
• நபி சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இருந்த ஊர் எமன் ஆகும் அந்த இடத்தில் இருந்து பைத்துல் முகத்திஸ் சுமார் 2000 Km மேல் இருக்ககும்!
• நொடி பொழுதில் ஏமனில் இருந்து பைத்துல் முகத்திஸ் பயணம் செய்து அந்த ஜின் ராணியின் சிம்மாசனத்தை உடனடியாக தூக்கி வந்து சுலைமான் (அலை) அவர்களிடம் ஒப்படைத்தது!
வானத்தில் பயணிக்கும் ஆற்றல் :
• ஆரம்ப காலத்தில் ஜின்கள் வானம் வரை சென்று மலக்கு மார்கள் பேசுவதை மறைத்து இருந்து ஒட்டு கேட்டு வந்து அதை குறி சொல்ல கூடியவர்களிடம் வந்து கூறும் அவர்கள் அதனுடன் பொய்களை சேர்த்து மக்களிடம் கூறி வந்தனர்!
• ஆனால் அல்லாஹ் அதற்கு பின்பு ஜின்களால் வானம் செல்ல முடியாத அளவுக்கு ஒரு பாதுகாப்பை உண்டாகினான் அது தான் நெருப்பு கல் (வால் நட்சத்திரம்) அவர்கள் வானம் பக்கம் சென்றால் அல்லாஹ் அவர்களை நெருப்பு கல் மூலம் விரடி அடிப்பான் அல்லது அதனை கொண்டு நெருப்பில் பொசுக்கி விடுவான்! (அல்குர்ஆன் : 72:9)
ஆழ் கடல் பெரிய கட்டிடம் கட்ட போன்றவை செய்ய ஆற்றல் :
• பெரும் பெரும் கட்டிடங்களை எந்த கருவின் உதவி இல்லாமல் அவைகளை கட்டிமுடிக்க முடியும்!
• பெரும் பெரும் கட்டிடங்களை எந்த கருவின் உதவி இல்லாமல் அவைகளை கட்டி முடிக்க முடியும்! (அல் குர்ஆன் : 38 : 37)
ஜின்களுக்கும் குறைகள் உண்டு :
• ஜின்களுக்கு மனிதர்களை விட அதிக ஆற்றல் இருந்தாலும் அவைகளுக்கும் குறைகளும் உண்டு !
• ஜின்களால் மறைவானதை அறிந்து கொள்ள முடியாது! நபி சுலைமான் (அலை) அவர்கள் தொழுகையில் நிற்கும் நிலையிலயே மரணம் அடைந்து விட்டார்கள் ஆனால் இதை பற்றி அறியாத ஜின்கள் அவர்கள் தொழுகும் முன் கூறிய வேலையை தொடர்ந்து செய்து கொண்டு இருந்தனர்!
• நபி சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கை தடியின் உதவினால் தொழுகையில் நின்று கொண்டு இருந்தார்கள் அவர்கள் மரணம் அடைந்தும் அவர்கள் கிழே விழ வில்லை அந்த கை தடி அவர்களை தாங்கி பிடித்து கொண்டு இருந்தது!
• அந்த கைத்தடியும் கரையான்கள் கடித்து அந்த கைத்தடி கிழே விழ நபி சுலைமான் (அலை) அவர்களும் கிழே விழுந்தார்கள்! அப்போது தான் ஜின்களுக்கு நபி சுலைமான் (அலை) அவர்கள் மௌத் ஆகி விட்டார்கள் என்று தெரிய வந்தது!(அல்குர்ஆன் : 34 : 14)
• அதே போன்று உலகில் ஏதேனும் அல்லது யாருக்கேனும் நன்மையான காரியம் நடைபெற போகிறது அல்லது தீங்கு ஏற்பட போகிறது என்றாலும் இதையும் ஜின்களால் அறிந்து கொள்ள முடியாது! (அல்குர்ஆன் : 72 : 10)
ஜின்கள் மனிதர்கள் உடலில் புகுவார்களா?
• இதை பற்றி அல் குர்ஆனிலோ அல்லது ஸஹீஹான ஹதீஸ்களிலோ எந்த செய்தியும் கிடையாது!
• ஜின்களால் உள்ளம் சார்ந்த சில பிரச்சனைகளை ஏற்படுத்த முடியும்!
• ஜின் பிடித்து உள்ளது என்று சிலர் கூறுவார்கள் அதற்கு ஏற்றால் போல் சில செயல்களையும் செய்வார்கள்!
• உதாரணமாக : ஒரு பெண்ணுக்கு மாப்பிளை பார்த்து இருப்பார்கள் ஆனால் அந்த பெண் வேறு ஒருவரை நேசிக்கும் வீட்டில் கூற முடியாது! அதனால் அவள் ஜின் தன் மீது ஏறி விட்டது போன்று நடிப்பார்கள் இதனால் அவர்களை யாரும் நிக்காஹ் செய்ய முன் வர மாட்டார்கள் இது ஒரு காரணம்!
• இரண்டாவது : அதிக மன அழுத்தம் அல்லது உள்ளத்தில் ஏற்படும் அதிகபடியான பயம் இதனால் மனம் அளவிலும் சிந்தனை அளவிலும் மிகவும் பாதிக்கப்பட்டு இருப்பார்கள் இவர்களுக்கு நாம் என்ன செய்கிறோம் என்ன பேசுகிறோம் என்று கூட விளக்க முடியாத அளவுக்கு சென்று விடுவார்கள் இதை தான் நாம் போய் பிடித்து உள்ளது அல்லது ஜின் ஏறி விட்டது என்று கூறுகிறோம் ஆனால் இது மருத்துவ சார்ந்த பிரச்சனை ஆகும்!
• ஜின்கள் மனிதர்களின் உடலில் புகுந்து ஏதேனும் தீங்கு செய்ய முடியம் என்றால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதில் இருந்து பாதுகாப்பு பெற வழிமுறைகளை நமக்கு கூறி இருப்பார்கள் ஆனால் நபி (ஸல்) அவர்கள் இதை பற்றி எந்த செய்தியும் நமக்கு கூற வில்லை!
• ஆனால் ஜின்களை வைத்து பிழைப்பு நடத்த கூடியவர்கள் இவர்களுக்கு ஜின் பிடித்து உள்ளது! ஜின்களை விரட்டுகிறோம் என்று பணத்தை வாங்கி கொண்டு மக்களை ஏமாற்றி வருகிறார்கள்!
ஜின்களும் & மனிதர்களும் :
• அல்லாஹ் மனிதனை படைக்கும் போதே ஒவ்வொரு மனிதரிடமும் ஒரு மலக்குமார் மற்றும் ஒரு கெட்ட ஷைத்தான் அல்லது கெட்ட ஜின்னை வைத்தே நம்மை படைத்து உள்ளான்!
• மலக்குமார் நல்லதை ஏவுவார்கள் ஷைத்தான் அல்லது கெட்ட ஜின் நமக்கு பாவமான காரியங்களை செய்ய ஏவும்! (நூல் : முஸ்லிம் : 5421)
• இதை தவிர ஒரு ஜின்னால் நமக்கு எந்த தீங்கும் செய்ய முடியாது!
நபி சுலைமான் அலைஹிஸ்ஸலாம் & ஜின்களும் :
• அல்லாஹ் நபி சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு மட்டும் ஜின்களை வசப்படுத்தி கொடுத்தான்!
• நபி சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் என்ன கூறினாலும் ஜின்கள் அதற்கு கட்டுப்பட்டு அவர்கள் கூறும் வேலையை செய்யும்! (அல்குர்ஆன் : 34 : 12)
• நபி சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஜின்களை கொண்டு போர் செய்வதற்கு கட்டிடங்கள் கட்டுவது! கடலில் இருந்து பொக்கிஷங்கள் எடுப்பது போன்ற வேலைகளை ஜின்களை வைத்து செய்தார்கள்! (அல்குர்ஆன் : 21 : 82)
ஜின்களை வசப்படுத்த முடியுமா? (1) :
• ஜின்களை பொறுத்த வரை அவை யாருக்கும் வசப்படாது அதை அல்லாஹ்வை தவிர வேறு யாராலும் ஜின்களை கட்டுப்படுத்தவும் முடியாது!
• ஏன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுது கொண்டு இருக்கும் போது அதிகம் சக்தி வாய்ந்த ஜின் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தொழுகையில் தடங்கள் ஏற்படுத்தியது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் கூட அந்த ஜின்னை கட்டுப்படுத்த முடியவில்லை!
• பிறகு அல்லாஹ் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஜின்களை கட்டுப்படுத்தும் ஆற்றலை வழங்கினான்! அதற்கு பின்பு தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்த ஜின்னை பிடித்தார்கள்! (நூல் : புகாரி : 4921)
• நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் கூட ஜின்னை கட்டுப்படுத்த இயலவில்லை அந்த அளவுக்கு ஜின்கள் வலிமை வாய்ந்தது!
• ஆனால் இன்று பலர் அறியாமை காரணமாக ஜின் சூராவை 40 முறை ஓதினால் ஜின் வசப்படும் இரவில் தொடர்ந்து ஓதினால் வசப்படும் என்று எல்லாம் கூறுவார்கள் நவதுபில்லாஹ்!
• நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகையில் அல் குர்ஆனை ஓதுவதை கேட்ட ஜின்கள் தானும் இஸ்லாத்தை ஏற்று கொண்டு தன்னுடைய சமூகத்திற்கு சென்று பிறரையும் இஸ்லாத்தின் பக்கம் அழைப்பு கொடுத்தது இந்த அழகிய சம்பவத்தை தான் அல்லாஹ் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு சூரத்துல் ஜின் மூலம் தெரியப்படுத்தினான்!
• ஆனால் இன்று சூரா ஜின்னையே ஓத கூடாதா அளவுக்கு மக்களின் உள்ளத்தில் பயத்தை ஏற்படுத்தி உள்ளார்கள்!
ஜின்களை வசப்படுத்த முடியுமா ? (2):
1) ஜின்களை பொறுத்த வரை அல்லாஹ் நபி சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு மட்டும் வசப்படுத்தி கொடுத்தான் ! நமது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு கூட ஜின்னை கட்டுப்படுத்தும் ஆற்றல் இல்லை பின்னர் தான் அல்லாஹ் நமது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அந்த ஆற்றலை கொடுத்தான் !
• இப்படி இருக்க ஒரு சாதாரண மனிதர்களால் ஜின்களை வசப்படுத்தி தங்களுடைய தேவைகளுக்கு பயன் படுத்த முடியுமா? என்றால் ஒரு போதும் முடியாது!
2) அப்படி இருந்தும் இன்று பலர் கூறுகிறார்கள் : என்னுடைய ஹஜ்ரத் ஜின்னை வசப்படுத்தி வைத்து உள்ளார் ! எங்கள் ஊரில் உள்ள பெரிய அவ்லியா ஜின்னை வசப்படுத்தி வைத்து உள்ளார் அதன் மூலம் சில வேலைகள் செய்கிறார்கள்!
இதற்கு விளக்கம் :
• ஜின்களை பொறுத்த வரை அவை யாருக்கும் வசப்படாது நாம் என்ன செய்தாலும் சரியே! ஆனால்
• ஜின்களுக்கும் மனிதர்களுக்கும் இடையே ஒரு தொடர்பு உள்ளது ! இந்த தொடர்பை பயன் படுத்தி கொண்டு அல்லாஹ்விற்கு இணைவைத்து ! ஜின்கள் மீது ஈமான் கொண்டால் அவைகள் நமக்கு உதவி செய்ய முன் வரும்!
• உங்களிடம் யாரேனும் வந்து நான் ஜின்னை வசப்படுத்தி உள்ளேன் என்றால் அப்போதே நாம் விளங்கி கொள்ளலாம் அவன் காஃபிர் ஆகி விட்டான் என்று !
• ஜின்களை பொறுத்த வரை அல்லாஹ் நபி சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு மட்டுமே வசப்படுத்தி கொடுத்தான் ~ மனிதர்களால் என்ன செய்தாலும் சரி ஒரு போதும் ஜின்களை வசப்படுத்த முடியாது!
ஜின்களுக்கும் மரணம் உண்டு :
• மனிதர்களைப் போலவே ஜின்களுக்கும் மரணம் உண்டு!
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (பின்வருமாறு) பிரார்த்தனை செய்துவந்தார்கள் :
(இறைவா!) உன் கண்ணியத்தின் பெயரால் பாதுகாப்புக் கோருகிறேன். உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. ஜின் இனத்தாரும் மனித குலத்தாரும் இறந்துவிடுவார்கள்; (ஆனால்,) நீ இறக்கமாட்டாய். (நூல் : புகாரி : 7383)
ஜின்களின் தீங்குகளில் இருந்து பாதுகாப்பு பெற :
சூரா பகராவின் கடைசி 2 வசனங்கள் :
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் :
‘அல்பகரா’ அத்தியாயத்தின் இறுதி இரண்டு (திருக்குர்ஆன் : 2 : 285 – 286) வசனங்களை இரவு நேரத்தில் ஓதுகிறவருக்கு (மனிதன் மற்றும் ஜின் இனத்தாரின் தீங்குகளிலிருந்து பாதுகாக்கப்) போதுமானதாக அவை ஆகிவிடும்! (நூல் : புகாரி : 4008)
ஆயத்துல் குர்ஸி :
• இரவில் அல்குர்ஆனில் : 2 : 255 | ஆயத்துல் குர்ஸியை ஓதினால் உங்களுடன் பாதுகாவலர் (வானவர்) ஒருவர் இருந்து கொண்டேயிருப்பார். காலை நேரம் வரும் வரை ஷைத்தான் உங்களை நெருங்க மாட்டான்! (நூல் : புகாரி : 3275)
சூரா நாஸ் & சூரா ஃபலக் :
சூரத்துல் : நாஸ் 114 | சூரத்துல் : ஃபலக் : 113 ஆகிய சூராக்களை ஓதி பாதுகாப்பு தேடலாம்! (நூல் : திர்மிதி : 2135)
அல்லாஹ் போதுமானவன்