கடிதங்கள் மூலம் தகவல்கள் (தகவல் பரிமாற்றம்)
நாட்கள் மாறி, நவீன தொழில்நுட்பங்கள் உருவாக்கிக் கொடுத்த காகிதம் புழக்கத்திற்கு வந்தது. கடிதங்கள் எழுதும் பழக்கம் துவங்கியது. எழுதுபவரிடமிருந்து கடிதங்களைப் பெற்று உரிய நபரிடம் கொண்டு சேர்க்கும் அஞ்சல் சேவை உருவாக்கப்பட்டது;.
இதற்கான கட்டணங்களை பெறுவதற்கு பல்வேறு முறைகள் முயற்சிக்கப்பட்டன. இறுதியாக இன்றைய நாட்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்ற தபால் தலை முறை அறிமுகப்படுத்தப்பட்டது. உலகிற்கு இதனை அறிமுகப்படுத்தியவர்கள் தாங்களே என்பதால், இன்றும் தபால் தலையில் இங்கிலாந்து நாட்டின் பெயர் கொடுக்கப்படுவதில்லை.
நாட்டின் பெயர் இல்லாத தபால் தலை ஒன்றைக் கண்டால் அது இங்கிலாந்து நாட்டினுடையது என்பதை அறிந்து கொள்ளலாம்.
ஓரிடத்தில் சேகரிக்கப்படும் கடிதங்களை மற்றொரு இடத்திற்கு, நாட்டிற்குக் கொண்டு செல்ல, குதிரைகள், உந்து வண்டிகள், கப்பல்கள், புகை வண்டிகள் என்று எல்லாவிதமான போக்குவரத்து முறைகளும் பயன்படுத்தப்பட்டன. நவீன மின்னணுச் சாதனங்கள், தொலை தொடர்பிற்காக அறிமுகப்படுத்தப்பட்ட பிறகும் இந்தக் கடிதப் போக்குவரத்து இன்றும் உலகளவில் நடைமுறையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இஸ்லாமிய வரலாற்றில் மிகவும் பிரசித்தமான ஒற்றர் மூலம் அனுப்பப்பட்ட ரகசிய கடிதம்
மக்காவை நோக்கி இஸ்லாமியப் படை வருகிறது என்ற செய்தி இரகசியமாக இருக்க வேண்டும். மக்காவிற்குள் திடீரென நுழையும் வரை ஒற்றர்கள் மூலம் குறைஷிகளுக்கு இச்செய்தி தெரியாமல் இருக்க வேண்டுமென்று பார்த்துக் கொண்டார்கள் நபி(ஸல்) அவர்கள்.
அலீ (பின் அபீ தாலிப் (ரலி) அவர்கள் அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் குதிரை வீரர்களான என்னையும், அபூ மர்ஸத் (கினாஸ் இப்னு ஹுஸைன்) அவர்களையும், ஸுபைர் இப்னு அவ்வாம் அவர்களையும், ‘நீங்கள் ‘ரவ்ளத்து காக்’ என்னுமிடம் வரை செல்லுங்கள்; ஏனெனில், அங்கு (ஒட்டகச் சிவிகையில் இணைவைப்பவர்களில் ஒருத்தி இருக்கிறாள். இணைவைப்பவர்(களின் தலைவர்)களுக்கு ஹாதிப் இப்னு அபீ பல்தஆ அனுப்பியுள்ள (நம்முடைய ரகசியத் திட்டங்களைத் தெரிவிக்கும்) கடிதம் ஒன்று அவளிடம் இருக்கும்; (அவளிடமிருந்து கடிதத்தைக் கைப்பற்றி வாருங்கள்)’ என்று கூறினார்கள்.
(பிறகு நாங்கள் புறப்பட்டுப் போனோம்.) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் குறிப்பிட்ட இடத்தில் அந்தப் பெண் தன்னுடைய ஒட்டகத்தில் சென்று கொண்டிருக்க, அவளை நாங்கள் அடைந்தோம். அவளிடம், ‘கடிதம் (எங்கே? அதை எடு)’ என்று கேட்டோம்.
அவள், ‘எம்மிடம் கடிதம் எதுவுமில்லை’ என்று பதிலளித்தாள். (அவள் அமர்ந்திருந்த) ஒட்டகத்தை நாங்கள் படுக்க வைத்து (அந்தக் கடிதத்தைத்) தேடினோம். எந்தக் கடிதத்தையும் நாங்கள் காணவில்லை. அப்போது, ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பொய் சொல்லமாட்டார்கள். ஒன்று, நீயாக கடிதத்தை எடு(த்துக் கொடு); அல்லது உன்னை(ச் சோதிப்பதற்காக உன்னுடைய ஆடையை) நாங்கள் கழற்ற வேண்டியிருக்கும்’ என்று நாங்கள் சொன்னோம்.
விடாப் பிடியாக (நாங்கள்) இருப்பதை அவள் கண்டபோது, (கூந்தல் நீண்டு தொங்கும்) தன்னுடைய இடுப்புப் பகுதிக்கு அவள் கையைக் கொண்டு சென்றாள். அவள் ஒரு துணியை இடுப்பில் கட்டியிருந்தாள். (அங்கிருந்து) அ(ந்தக் கடிதத்)தை வெளியில் எடுத்தாள். அந்தக் கடிதத்துடன் இறைத்தூதர்(ஸல்) அவர்களை நோக்கி நடந்தோம்.
நபி(ஸல்) அவர்களின் முன்பு ஹாதிப் இழுத்து வரப்பட்டார். உமர்(ரலி), “ஹாதிப் துரோகமிழைத்துவிட்டார், ஆணையிடுங்கள் அவருடைய கழுத்தைக் கொய்துவிடுகிறேன்” என்று கூறினார். மிகப் பொறுமையுடன் நபி(ஸல்) அவர்கள் ஹாதிப்பை பார்த்து “ஏன் இப்படிச் செய்தீர்கள்?” என்று கேட்டார்கள்.
அதற்கு ஹாதிப் “நான் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் விசுவாசமில்லாதவனாக நடந்து கொள்ள வேண்டுமென்று இப்படிச் செய்யவில்லை. இணைவைப்பாளர்களுக்கு நான் செய்யும் இந்த உதவியால் எனக்கு அங்கு செல்வாக்கு கிடைக்கும், அதன் மூலம் மக்காவிலிருக்கும் என் மனைவியும் மக்களும் பாதுகாக்கப்படுவார்கள் என்று நம்பியே இக்காரியத்தைப் புரிந்தேன்.
நான் மக்காவில் வாழ்ந்தேனே தவிர நான் குறைஷியல்ல, என் குடும்பத்தைப் பாதுகாக்க எனக்கு அங்கு எந்தக் குறைஷி உறவினரும் இல்லை. உங்களுடைய தோழர்கள் அனைவருக்குமே மக்காவில் அவர்களின் குடும்பத்தையும் அவர்களின் செல்வத்தையும் பாதுகாப்பதற்கு அங்கு அவர்களது மற்ற உறவினர்கள் இருக்கின்றார்கள். எனக்கு அப்படி யாரும் அங்கில்லை” என்று கூறினார்.
இதைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள், “இவர் உண்மையைத்தான் சொல்கிறார் என்று நான் நம்புகிறேன்” என்று கூறினார்கள். இருப்பினும் கோபத்தில் கொந்தளித்த உமர்(ரலி), “இவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் இறைநம்பிக்கையாளர்களுக்கும் துரோகமிழைத்துவிட்டார், என்னை விடுங்கள், இவரின் கழுத்தைக் கொய்து விடுகிறேன்” என்று மீண்டும் கூறினார்கள்.
அப்போது நபி(ஸல்) அவர்கள், ”இவர் பத்ருப் போரில் பங்கெடுத்தவர். பத்ரில் பங்கெடுத்தவர்களை நோக்கி அல்லாஹ், ‘நீங்கள் விரும்பியதைச் செய்யுங்கள். உங்கள் பாவங்களை நான் மன்னித்துவிட்டேன். உங்களுக்குச் சொர்க்கம் உறுதியாகிவிட்டது’ என்று கூறியிருக்கிறான். உமரே! இவர் பத்ரில் கலந்து கொண்டவர் என்பது உனக்குத் தெரியுமா?” என்றார்கள்.
இதைக் கேட்ட உமர்(ரலி) ஸ்தம்பித்து நின்றார்கள். அவர்களின் கண்கள் கண்ணீர் உகுத்துக் கொண்டிருக்க, ‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்’ என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் ஹாதிப்பை மன்னித்து விடுவித்தார்கள்.
ஒற்றர்கள் வழியாகச் செய்தி செல்வதை அல்லாஹ் தடுத்துவிட்டான். குறைஷிகளுக்கு எந்தச் செய்தியும் கிடைக்கவில்லை. முஸ்லிம்கள் போருக்கு தயாராகி மக்காவிற்குப் புறப்பட்டனர். ஸஹீஹ் புகாரி 3983
ரஹ்மத் ராஜகுமாரன்