ஒலி வழித் தகவல்கள்!
தகவல் தொடர்பிற்கு அந்த நாட்களில் சில வழிமுறைகளும் கருவிகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் முதல் நிலையில் உள்ளது தோல் கருவிகளால் ஒலி எழுப்பப்பட்டு செய்யப்பட்ட தகவல் பரிமாற்றமாகும்.
இன்று பயன்பாட்டில் உள்ள பேரிகைகள், மத்தளங்கள் , நவரா போன்ற தோல் கருவிகளால் ஒலி எழுப்பப்பட்டது. மகிழ்ச்சி, ஆபத்து, போர், வரவேற்பு போன்ற நேரங்களிலெல்லாம் அந்த நிகழ்விற்கு ஏற்ற ஒலிகளை எழுப்ப இந்தத் தோல் கருவிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதில் யுத்த காலங்களில் எழுப்பப்படும் போர் முரசு பிரசித்திப்பெற்றது.
தமிழ்நாட்டில், குறுநில மன்னராக இருந்த வீரபாண்டிய கட்டபொம்மன் இதுபோன்ற ஒரு வசதியை பயன்படுத்தியுள்ளதாக வரலாற்றறிஞர்கள் கூறுகின்றனர்.
மாநபி (ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் ஹிஜ்ரத் செய்து மதீனாவிற்கு வந்து குன்றுகள் சூழ்ந்த அந்த பாலைவன நகரில் பரவலாக பல்வேறு பகுதிகளில் குடியேறினர். குடிசைகள் கட்டி வாழ்ந்தனர்.
அவர்கள் தொழுகை நேரம் அறிந்து கூடி தொழ கூடுவதற்கு ஏற்பாடு செய்ய நிர்ப்பந்தம் உண்டானது. நபி (ஸல்) அவர்கள் தோழர்களிடம் ஆலோசனை சேட்டார்கள்.
சில தோழர்கள் கொடியை நட்டு தொழுகை நேரத்தை நினைவு படுத்தலாம் என்றனர். கொடி நடப்பட்டிருப்பதைத் தேடி வந்து பார்ப்பது எளிதன்று என்று ஏற்கபடவில்லை.
மணியடித்து அறிவிக்க சொன்ன ஆலோசனையும் கிறித்துவத்தில் கடைபிடிக்கப்படுவதால் நடைமுறையில் குழப்பம் ஏற்படுத்தும் என்று ஏற்கப்படவில்லை.
சிலர் கொம்பு வைத்து குழலூதுவது போல் சங்கு ஊத உரைத்தனர். யூத முறை என்பதால் இதுவும் ஏற்படையதல்ல என்று தள்ளப்பட்டது.
நெருப்பு மூட்டி நினைவுபடுத்துவது மஜூஸிகளின் வழக்கம் என்பதால் நிராகரிக்கப்பட்டது.
கைகளைத் தட்டி ஓசை எழுப்பி, அதன் மூலம் மக்களைத் தொழுகைக்கு அழைக்கலாமே என்றொரு யோசைனையும் பிறந்தது.
ஒருநாள் இரவு நபித்தோழர்களில் ஒருவரான அப்துல்லா பின் ஜைத் (ரலி) அவர்கள், தொழுகைக்கு மக்களை எப்படி அழைப்பது என்பது பற்றியதொரு கனவைக் காண்கின்றார்கள், அதனை இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் :
”எனது கனவில் இறையச்சமுள்ள மனிதர் ஒருவர் பச்சை ஆடைகளை அணிந்த நிலையில் தோன்றினார். அவரது கையில் கைக்கொட்டு ஒன்றை வைத்திருந்தார். நான் அந்த கைக்கொட்டை எனக்குத் தருமாறு கேட்டேன்.
அதற்கு அவர் எதற்காக அதனைக் கேட்கின்றீர்கள் என்று என்னிடம் கேட்டார்,
அதற்கு நான் முஸ்லிம்களைத் தொழுகைக்கு அழைப்பதற்காக எனக்கு இது தேவைப்படுகின்றது என்று கூறினேன்.
அதற்கு அந்த மனிதர், தொழுகைக்கு அழைக்கும் நோக்கத்திற்கு இது பயன்படாது என்று கூறினார்.
அதற்கு நான், பின் எந்த முறையில்தான் மக்களை தொழுகைக்கு அழைப்பது என்று கேட்டேன்.
அதற்கு அந்த மனிதர், பள்ளியின் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தில் நின்று கொண்டு, உரத்த சப்தமிட்டு, அல்லாஹ் மிகப் பெரியவன் (அல்லாஹு அக்பர்) என்றும், இன்னும் நான் அல்லாஹ்வைத் தவிர வணக்கதிற்குரிய இறைவன் வேறு இல்லை என்றும், தொழுகைக்கு வாருங்கள் என்றும் கூறி மக்களைத் தொழுகைக்கு அழையுங்கள் என்று கூறினார்””.
அப்துல்லா பின் ஜைத் (ரலி) அவர்கள் கூறிய வண்ணம், மக்களைத் தொழுகைக்கு அழைக்குமாறு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கேட்டுக் கொண்டார்கள்.
தொழுகைக்கான நேரம் வந்ததும், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பிலால் (ரலி) அவர்களை அழைத்து, அப்துல்லா பின் ஜைத் (ரலி) அவர்கள் கூறியவாறு, மக்களைத் தொழுகைக்கு அழைக்குமாறு கூறினார்கள்.
உமர் (ரலி) அவர்களும் இந்தப் புதிய பாங்கின் ஓசையைத் தனது வீட்டிலிருந்து செவிமடுத்து விட்டு, தனது ஆடை இழுபட பள்ளியை நோக்கி விரைந்து வந்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வருவதற்காக சற்று தாமதித்த உமர்(ரலி) அவர்கள்,
‘இறைத்தூதர் (ஸல்) அவர்களே..! இவ்வாறு மக்களை பாங்கின் மூலம் அழைக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு எவ்வாறு ஏற்பட்டது” என்று வினவினார்கள்.
அப்துல்லா பின் ஸைத் (ரலி) அவர்களின் கனவுதான், இந்த மாதிரியான முறையைப் பின்பற்றி மக்களைத் தொழுகைக்கு அழைக்க வேண்டும் என்ற உதிப்பைத் தந்தது, அதனை நானும் ஏற்றுக் கொண்டு, அவ்வாறே மக்களைத் தொழுகைக்கு அழைப்பு விடுக்குமாறு கேட்டுக் கொண்டேன்” என்றார்கள்
“நானும் இதே போன்றதொரு கனவைத் தான் கண்டேன், ஆனால் அப்துல்லா பின் ஸைத் (ரலி) அவர்கள் இந்த விஷயத்தில் என்னை முந்திக் கொண்டார்கள். ஆனால் அவர்கள் கண்ட கனவிற்கும் நான் கண்ட கனவிற்கு ஒரு வித்தியாசம் இருக்கின்றது என்று கூறினார்கள்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அந்த வித்தியாசம் என்ன என்று கூறுங்கள் என்று கேட்டுக் கொண்டதும், உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள் :
அப்துல்லா பின் ஸைத் (ரலி) அவர்களின் கூற்றுப்படி, ”அல்லாஹ்வைத் தவிர வணங்கத்தக்க இறைவன் வேறு ஒருவன் இல்லை”என்று நான் சாட்சி கூறுகின்றேன், என்ற வாசகத்துடன், இன்னும் நான் இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களை அல்லாஹ்வின் தூதர் என்றும் நான் சாட்சி கூறுகின்றேன்”, என்ற வாசகத்தையும் நான் செவிமடுத்தேன் என்று கூறினார்கள்.
இதற்குப் பின், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பிலால் (ரலி) அவர்களை அழைத்து, பாங்குடன் மேற்கண்ட ”நான் இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களை அல்லாஹ்வின் தூதர்” என்றும் நான் சாட்சி கூறுகின்றேன், என்றும் சேர்த்துக் கூறுமாறு கேட்டுக் கொண்டார்கள்.
பின்னர், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அப்துல்லா பின் ஸைத் (ரலி) மற்றும் உமர்(ரலி) அவர்களின் பக்கம் திரும்பி, ”இறைவனுக்கே எல்லாப் புகழும். என்னைப் பின்பற்றும் என்னுடைய சத்தியத் தோழர்களுக்கு அல்லாஹ் கனவின் வழியாக உண்மையை அருள் செய்கின்றான்”என்று கூறினார்கள்.
– ரஹ்மத் ராஜகுமாரன்