நோன்பு காலங்களில் ஷைத்தானுக்கு
விலங்கிடப்பட்டாலும் சில தவறுகள்
செய்து விடுகிறோமே! ஏன்?
நோன்பு காலங்களில் ஷைத்தானுக்கு விலங்கிடப்படுகிறது. இருந்தாலும் சில தவறுகள் தெரிந்தோ தெரியாமலோ செய்து விடுகிறோமே ஏன்? என ஒரு நண்பர் கேட்டார்.
நோன்பு காலங்களில் இறைவன் ஷைத்தான்களை விலங்கிடுவது உண்மைதான் என்றாலும் நம்மிடமிருந்து வெளியாகும் தவறுகள் ஷைத்தான்களால் மட்டுமல்ல. நமது நப்ஸ் எனும் மனோ இச்சைகளின் மூலமாகவும் தவறுகள் வெளியாகும்.
உலகில் மனிதனுக்கு பெரும் எதிரி நப்ஸ் என சொல்லப்படும் மனோ இச்சைதான் .ஷைத்தானை விட பெரும் எதிரி. எனவேதான் கண்மனி ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தபூக் யுத்தத்திலிருந்து வந்தவுடன் சிறிய போரிலிருந்து விடுதலையாகி பெரிய போருக்கு தயாராகிக்கொள்ளுங்கள் என்றார்கள்.
நபித்தோழர்கள் யாரசூலுல்லாஹ் தபூக் யுத்தமே பெரும் போர்தானே அதைவிட பெரிய போரா? என கேட்டபோது ஆம் உங்கள் நப்ஸோடு (மனதோடு)போர் செய்ய வேண்டும் அதுவே ஜிஹாதுல் அக்பர் பெரிய போர் என கூறினார்கள்.
கண்ணுக்கு தெரிந்த எதிரியுடன் போர் செய்யலாம். கண்ணுக்கு தெரியாத நமது உள்ளத்திலே குடிகொண்டிருக்கும் நப்ஸை எதிர்த்து போரிடுவதே சிரமமான விஷயம்.
நாம் நம்மிடமிருந்து என்ன தவறுகள் வெளியானாலும் ஷைத்தானின் மீது பழியை சுமத்தி தப்பித்துக்கொள்வோம்.
பாதையை கவனிக்காமல் நடந்து கல் தடுக்கி விழுந்தால்கூட கல் இடறிவிட்டது என கல்லின் மீது பழியை போட்டு தப்பித்துக்கொள்பவர்கள்தானே நாம்.
அதைப்போலவே ஷைத்தான் என்ற ஒருவன் இருப்பதால் நம்மிடமிருந்து என்ன தவறுகள் வெளியானாலும் ஷைத்தான் வழி கெடுத்துவிட்டான் என ஷைத்தானின் மீது பழியைப்போடுகிறோம்.
நபி ஆதம் அலைஹி வஸல்லம் அவர்களை மரத்தின் பக்கம் நெருங்காதீர்கள் என இறைவன் கூறினான்.ஷைத்தானின் பேச்சைக்கேட்டு நெருங்கினார்கள்.
நபி ஆதம் அலைஹி வஸல்லம் அவர்கள் நினைத்திருந்தால் “இறைவா ஷைத்தான் எங்களை வழிகெடுத்துவிட்டான்”என கூறியிருக்கலாம்.
ஆனால்”ரப்பனா லலம்னா அன்புஸனா” இறைவா எங்கள் நப்ஸிற்க்கு நாங்களே தீங்கிழைத்துக்கொண்டோம் என கூறி தவறை ஒப்புக்கொண்டார்கள்.
பெரும் நபிமார்களும் “வமா உபர்ரிஉ நப்ஸி”
எங்கள் மனோ இச்சைகளிலிருந்து நாங்கள் விடுதலையாகவில்லையே என கவலைப்பட்டார்கள்.
ஆனால் நமக்கு நப்ஸை பற்றிய கவலையே இல்லை.
நப்ஸுக்கு நாம் எதை பழக்குகிறோமோ அது மீண்டும் மீண்டும் வெளியாகும்.
பதினோரு மாதங்களில் நாம் நம் நப்ஸை எவ்வாறு பழக்கி வைத்திருக்கிறோமோ அதுவே இம்மாதத்திலும் வெளியாகும்.
எனவே தவறுகள் ஷைத்தானைக்கொண்டு மட்டுமல்ல நப்ஸைக்கொண்டும் வெளியாகும்.
ஷைத்தானுக்குத்தான் விலங்கிடப்பட்டிருக்கிறது
நப்ஸுக்கல்ல..
அல்லாஹ் அஹ்லம்.
– உலமா ஊடகம்