குர்ஆனை ஓதும் ஒழுங்கு முறைகள்
சகோதரர்களே! எந்தக் குர்ஆன் உங்கள் கைகளில் உள்ளதோ – எந்த குர்ஆனை நீங்கள் ஓதுகிறீர்களோ, செவி மடுக்கிறீர்களோ, மனப்பாடம் செய்கிறீர்களோ, எழுதுகிறீர்களோ அந்தக் குர்ஆன் – அகிலம் முழுவதையும் படைத்துப் பரிபாலிக்கும் இரட்சகனாகிய-முன்னோர்கள், பின்னோர்கள் அனைவரின் இறைவனாகிய அல்லாஹ்வின் வேதவாக்கு.
அது அவனது உறுதியான கயிறு. அவனது நேர்வழி.
பாக்கியமிக்க நல்லுரை. மிகத் தெளிவான ஒளி ஆகும்.
மெய்யாகவே அல்லாஹ் அதனை மொழிந்தான்.
அந்த மொழிதல், அவனது கண்ணியத்திற்கும் மாட்சி மைக்கும் ஏற்றமுறையில் அமைந்திருந்தது.
தன்னிடம் நெருக்கமான,கண்ணியமிக்க மலக்குகளில் ஒருவரான நம்பிக்கைக்குரிய ஜிப்ரீல் மீது அல்லாஹ் அதனை சுமத்தினான்.
அவர் அதை முஹம்மத் நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உள்ளத்தில் இறக்கியருளினார்.
தெளிவான அரபி மொழியில் எச்சரிக்கை செய்பவர்களுள் ஒருவராக அவர்கள் திகழ வேண்டும் என்பதே குறிக்கோள்.
அல்லாஹ், இந்த குர்ஆனை மகத்தான தன்மைகளைக் கொண்டு புகழ்ந்துரைத்தான். நீங்கள் அதனைக் கண்ணியப்படுத்த வேண்டும், கௌரவிக்கவேண்டும் என்பதற்காக!
ரமளான் மாதம் எத்தகையதெனில்,அதில்தான் மனிதர் களுக்கு முழுமையான வழிகாட்டியாகவும் நேர்வழியின் தெளிவான அறிவுரைகளைக் கொண்டதாகவும் சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்துக்காட்டக் கூடியதாகவும் உள்ள குர்ஆன் இறக்கியருளப்பட்டது. (2 : 185)
(நபியே) உமக்கு நாம் எடுத்துரைக்கும் இவை இறைவசனங்கள். ஞானம் நிறைந்த அறிவுரை (3 : 58)
மனிதர்களே! உங்கள் இரட்சகனிடம் இருந்து உங்களுக்குத் தெளிவான சான்று வந்துள்ளது. தெள்ளத்தெளிவாய் வழிகாட்டும் ஒளியையும் உங்களுக்கு இறக்கியிருக்கிறோம்! (4: 174)
அல்லாஹ்விடமிருந்து ஒளியும் சத்தியத்தைத் தெளிவாக எடுத்துரைக்கும் வேதமும் உங்களிடம் வந்துள்ளது. தனது திருப்பொருத்தத்தை விரும்புவோருக்கு அதன் மூலம் அல்லாஹ் சாந்தி மார்க்கங்களைக் காண்பிக்கிறான்! (5 : 15௧6)
இந்த குர்ஆன் அல்லாஹ்(வின் வஹியே தவிர அவன்) அல்லாதவர்களால் புனைந்துரைக்கப்பட்டதன்று! உண்மையில் இது தனக்கு முன்னால் வந்துள்ள வேதங்களை மெய்ப்படுத்தக் கூடியதாகவும் அல் கிதாப் எனும் மூலவேதத்தின் விளக்கமாகவும் திகழ்கிறது! அகிலம் முழுவதையும் படைத்துப் பரிபாலிக்கும் இறைவனிடம் இருந்து இது வந்துள்ளது என்பதில் எவ்வித ஐயமும் இல்லை! (10 : 37)
மனிதர்களே! உங்கள் இறைவனிடம் இருந்து ஓர் அறிவுரை திண்ணமாக உங்களிடம் வந்திருக்கிறது. இது இதயங்களில் உள்ள நோய்களைக் குணப்படுத்தக் கூடியதாகவும் இறைநம்பிக்கையாளர்களுக்கு வழிகாட்டக் கூடிதாகவும் ஓர்அருட்கொடையாகவும் திகழ்கிறது. (10 : 57)
மேலே நாம் எடுத்தெழுதிய இதுபோன்ற மகத்தான ஏராளமான புகழுரைகள் யாவும் குர்ஆனின் மாண்பினை எடுத்துரைக்கின்றன. அதற்குக் கண்ணியம் அளிப்பதன் அவசியம் பற்றியும் அதனை ஓதும் பொழுது மரியாதையைக் கடைப்பிடிக்க வேண்டும்.,கேலி விளையாட்டைத் தூரமாக்கிட வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றன.
குர்ஆனை ஓதும் ஒழுங்கு முறைகளில் மற்றொன்று: அல்லாஹ்வுக்காக ஓதுகிறோம் என்று எண்ணத் தூய்மை கொள்வதாகும்.
ஏனெனில் குர்ஆனை ஓதுவது உன்னதமான வழிபாடுகளில் ஒன்று.
குர்ஆனை ஓதும் ஒழுங்குமுறைகளில் மற்றொன்று, கவனத்துடனும் மன ஓர்மையுடனும் அதை ஓதுவதாகும்.
ஒருவர் தாம் ஓதுகிற வசனங்களை சிந்திக்கவேண்டும்.,அதன் அர்த்தங்களை விளங்க வேண்டும். அந்த நேரத்தில் அவரது உள்ளம் பணிவை மேற்கொள்ள வேண்டும். மேலும் திண்ணமாக இந்த குர்ஆனில் அல்லாஹ் தம்மை நோக்கி உரையாடுகிறான் என்கிற எண்ணம் இருந்து கொண்டிருக்க வேண்டும். ஏனெனில் குர்ஆன் அல்லாஹ்வின் வாக்காகும்.
குர்ஆனை ஓதும் ஒழுங்கு முறைகளில் இன்னொன்று சுத்தமான நிலையில் அதை ஓதுவதாகும்.
ஏனெனில் இது தான் அல்லாஹ்வின் வேதத்திற்கு அளிக்கும் கண்ணியம்! பெருங்துடக்கு உடையவராயின் குளிக்காத வரையில் குர்ஆனை அவர் ஓதக்கூடாது.,இது தண்ணீர் கிடைக்கும்பட்சத்தில்! நோயினால் தண்ணீரைப் பயன்படுத்த இயலாதவராக இருந்தாலோ தண்ணீர் கிடைக்க வில்லை என்றாலோ தயம்மும் செய்யாதவரை குர்ஆனை அவர் ஓதக் கூடாது!
பெருந்துடக்கு உடையவர் அல்லாஹ்வை திக்ர் செய்யலாம்., பிரார்த்தனையாக அமைந்துள்ள குர்ஆன் வசனங்களைக் கூறி அவனிடம் துஆ செய்யலாம். அப்போது அவர் திருக்குர்ஆன் ஓதுவதாக நினைக்கக் கூடாது. எடுத்துக் காட்டாக,”லா இலாஹ இல்லா அன்த இன்னீ குன்தும் மினழ் ழாலிமீன்”” (பொருள்: உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. இறைவா! உன்னைத் தூயவன் என்று துதிக்கிறேன். திண்ணமாக அநீதம் செய்தவர்களில் ஒருவனாக நான் ஆகிவிட்டேன்.)
குர்ஆனை ஓத விரும்பும்போது சபிக்கப்பட்ட ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவதும் ஓதும் ஒழுங்கு முறைகளில் ஒன்றாகும். ஏனெனில் அல்லாஹ் கூறியுள்ளான்:
”இதா கரஃதல் குர்ஆன ஃபஸ்தஇத் பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்””
நீர் குர்ஆனை ஓதத் தொடங்குவீராயின் சபிக்கப்பட்ட ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருவீராக!”(16:98) குர்ஆனை ஓத விடாமல் அல்லது நிறைவுபடுத்த விடாமல் ஷைத்தான் தடுக்காமல் இருப்பதே இதன் நோக்கமாகும்.
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் சொல்வதாகிறது ….. அத்தியாயத்தின் நடுவிலிருந்து ஓதத் தொடங்குவதாக இருந்தால் பிஸ்மில்லாஹ் சொல்லப்பட மாட்டாது. அத்தியாயத்தின் ஆரம்பத்திலிருந்து ஓதுவதாயின் பிஸ்மில்லாஹ் சொல்ல வேண்டும். ஆனால் அத்தௌபா அத்தியாயத்தைத் தவிர! ஏனெனில் அதன் ஆரம்பத்தில் பிஸ்மில்லாஹ் இல்லை! காரணம், குர்ஆன் எழுதிப் பதிவு செய்யப்பட்ட போது இது தனியோர் அத்தியாயமா அல்லது அல் அன்ஃபாலின் எஞ்சிய பகுதியா? என்று நபித்தோழர்ளுக்கு ஐயம் வந்து விட்டது.
எனவே தான் அவ்விரண்டு அத்தியாயங்களையும் பிஸ்மில்லாஹ் அன்றிப் பிரித்துவிட்டார்கள். இந்த ஆராய்ச்சி ஐயமின்றி எதார்த்த நிலைக்கு ஏற்புடையதாகும். ஏனெனில் இந்த அத்தியாயத்தின் ஆரம்பத்தில் பிஸ்மில்லாஹ் இறக்கியருளப்பட்டிருந்தால் அல்லாஹ்வுடைய பாதுகாப்பின் மூலம் அது பாதுகாக்கப்பட்டிருக்கும்.
ஏனெனில் அல்லாஹ் கூறியுள்ளான்: “திண்ணமாக இந்த (குர்ஆன் எனும்) நல்லுரையை நாம்தான் இறக்கி வைத்தோம். திண்ணமாக நாமே இதனைப் பாதுகாப்போராயும் உள்ளோம்! (15: 9)
குர்ஆனை அழகிய குரலில் ராகத்துடன் ஓதுவதும் ஓதும் ஒழுங்கு முறைகளைச் சேர்ந்ததே. அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்:
அழகிய குரலுடைய ஒரு நபி, குர்ஆனை சப்தமாக-ராகமிட்டு ஓதுவதை அல்லாஹ் கேட்டது போன்று வேறெதையும் கேட்டதில்லை!” (நூல்: புகாரி, முஸ்லிம்)
ஜுபைர் பின் முத்இம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறர்கள்:
“நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மஃரிப் தொழுகையில் அத்தூர் அத்தியாயத்தை ஓதிடக் கேட்டேன். நபிஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களைவிட அழகிய குரலுடைய ஒருவரை அல்லது அழகாக ஓதுபவரை நான் கேட்டதில்லை” (புகாரி. முஸ்லிம்)
ஆனாலும் ஓதுபவருக்கு அருகில் – அவர் சப்தமிட்டு ஓதுவதனால் தொல்லைக்குள்ளாகும் நிலையில் – தூங்குபவர்,தொழுபவர் போன்று -இயாராவது இருந்தால் அவரைக் குழப்பும் வகையில் அல்லது தொல்லை கொடுக்கிற வகையில் குரல் உயர்த்தி அவர் ஓத மாட்டார். ஏனெனில் ஒருதடவை நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் வெளியே வந்தார்கள்.,அங்கே மக்கள் குர்ஆனை சப்தமிட்டு ஓதிக் கொண்டிருந்தார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் சொன்னார்கள்: தொழுபவர் தன் இறைவனுடன் மெதுவாக உரையாடுகிறார். எனவே எதைக் கொண்டு அவர் அவனுடன் உரையாடுகிறார் என்பதைக் கவனித்துக் கொள்ளட்டும்! மேலும் உங்களில் ஒருவர் மற்றவருக்கு இடைஞ்சல் ஏற்படுத்தும் முறையில் குர்ஆனை சப்தமிட்டு ஓத வேண்டாம்!, (நூல் : முஅத்தா)
ஓதும் ஒழுங்கு முறைகளில் மற்றொன்று நிறுத்தி நிதானமாக ஓதுவதாகும். ஏனெனில் அல்லாஹ் கூறியுள்ளான் :
மேலும் குர்ஆனை நிறுத்தி நிதானமாக ஓதுவீராக!,(73: 3)
எனவே ஓதுபவர் நிதானமாக – வேகமின்றி குர்ஆனை ஓத வேண்டும். ஏனெனில் அப்படி ஓதுவது அதன் அர்த்தங்களைச் சிந்திப்பதற்கும் அதன் எழுத்துக்களை – வார்த்தைகளை நேர்த் தியாக உச்சரிப்பதற்கும் பெரிதும் உதவியாக இருக்கும்!
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கிராஅத் – ஓதும் முறை பற்றி அனஸ் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள்,“நபியவர்களின் ஓதும் முறை நீட்டமாக இருந்தது என்று பதிலளித்துவிட்டு பிறகு,பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்று ஓதிக்காட்டினார்கள். பிஸ்மில்லாஹ் – வை நீட்டினார்கள்… அர்ரஹ்மான்…ஐ யும் நீட்டினார்கள். அர் ரஹீம் …ஐ யும் நீட்டினார்கள்!” (நூல்: புகாரி)
உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் -நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் ஓதும் முறை பற்றி கேட்கப்பட்டது. அவர்கள் பதிலளித்தார்கள்: நபியவர்கள் ஒவ்வொரு வசனம் வசனமாகப் பிரித்து ஓதுவார்கள்! பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் – அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் – அர் ரஹ்மானிர் ரஹீம் – மாலிகி யௌமித்தீன்… என்று! (நூல்: அஹ்மத்,அபூதாவூத்1,திர்மிதி)
இப்னு மஸ்வூத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: “அதை (குர்ஆனை) மணலைத் தூவுவது போன்று தூவாதீர்கள்! கவிதையை முறிப்பது போன்று முறிக்காதீர்கள்! அதன் ஆச்சரியங்களின் போது சற்று நிறுத்துங்கள். அதனைக் கொண்டு உள்ளங்களை உலுக்குங்கள்! (ஓதும் போது) உங்களின் குறிக்கோள் அத்தியாயத்தின் கடைசியாக இருக்க வேண்டாம்”
எந்த வேகத்தில் சில எழுத்துக்களை விட்டுவிடுதல் இல்லையோ – எந்த வேகத்தில் இணைத்து வாசிப்பதும் இல்லாத எழுத்துக்களைக் கூட்டிவாசிப்பதும் இல்லையோ-எந்த வேகம் வார்த்தையைத் தெளிவு குன்றச் செய்யாதோ அந்த வேகம் பரவாயில்லை. வார்த்தையைத் தெளிவு குன்றச் செய்யும் அளவிலான வேகமாக இருந்தால் அந்த வேகம் ஹராம் – தடுக்கப்பட்டதாகும். ஏனெனில் அது குர்ஆ(னின் வார்த்தை யி)னை மாற்றிவிடுவதாக உள்ளது!
‘ஓதலின் மற்றொரு ஒழுங்குமுறை, ஓதுபவர் ஸஜ்தா வசனத்தைக் கடந்து சென்றால் அது – அவர் உ@வுடனும் இருந்தால் -ஸுஜூது செய்வதாகும்.
இரவு பகல் எந்நேரமாக இருந்தாலும் சரியே! ஸுஜூதுக்கு தக்பீர் சொல்வார். ஸ{ப் ஹான ரப்பியல் அஃலா (உயர்வான என் இறைவனைத் துதிக்கின்றேன்) என்று ஓதுவார். பிரார்த்தனை செய்வார். பிறகு ஸுஜூதிலிருந்து எழுவார்., தக்பீரோ ஸலாமோ எதுவுமின்றி!
ஏனெனில் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து அவ்வாறு எதுவும் அறிவிக்கப்படவில்லை! ஆனால் அந்த ஸுஜூது தொழுகையில் ஏற்பட்டாலே தவிர! அதில் ஸுஜூதுக்கு செல்லும் போது தக்பீர் சொல்ல வேண்டும். ஏனெனில் அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் இருந்து அறிவிக்கப்படுள்ளது: அவர்கள் தொழுகையில் குனிந்தாலோ நிமிர்ந்தாலோ எல்லா நிலைகளிலும் தக்பீர் சொல்பவர்களாய் இருந்தார்கள். நபியவர்கள் அவ்வாறு செய்பவர்களாய் இருந்தார்கள் என்றும் அறிவித்துள்ளார்கள், (நூல்: முஸ்லிம்)
இப்னு மஸ்ஊது ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பார்த்துள்ளேன். (தொழுகையில்) குனிந்தாலோ நிமிர்ந்தாலோ நின்றாலோ உட்கார்ந்தாலோ ஒவ்வொரு நிலைகளிலும் தக்பீர் சொல்வார்கள்” (நூல்: அஹ்மத், திர்மிதி)
இது தொழுகையின் ஸுஜூதையும் உள்ளடக்கும். தொழுகையில் குர்ஆன் ஓதியதற்கான ஸ{ஜூதையும் உள்ளடக்கும். -இவை தாம் குர்ஆன் ஓதும் போது கடைப்பிடிக்க வேண்டிய சில ஒழுங்குமுறைகள். இவற்றைக் கடைப்பிடியுங்கள்! இவற்றில் ஆர்வம் கொள்ளுங்கள்! இவற்றின் மூலம் அல்லாஹ்வின் அருளைத் தேடுங்கள்!
யா அல்லாஹ்! புனிதமானவை என்று உன்னால் நிர்ணயிக்கப்பட்டவற்றை கண்ணிய்படுத்தக் கூடியவர்களுள் எங்களைச் சேர்ப்பாயாக! மேலும் உன் சுவனங்களுக்கு வாரிசுகளாக வரக் கூடிய மேலும் உன்னுடைய வெகுமதிகளை வெல்லக் கூடிய குழுவில் எங்களையும் இணைப்பாயாக! கருணையாளர்களில் எல்லாம் கருணைமிக்கோனே! உன் கருணை கொண்டு எங்களுக்கும் எங்கள் பெற்றோருக்கும் அனைத்து முஸ்லிம்களுக்கும் மன்னிப்பு வழங்குவாயாக!
– தமிழ் இஸ்லாம்