கவலைகளில் இரு வகை!
கவலைகளில் இரு வகை உண்டு; உலக வாழ்வு தொடர்பிலான கவலைகள் முதல் வகை; மறுமை பற்றிய கவலைகள் இரண்டாம் வகை.
மிதமிஞ்சிய முதல் வகைக் கவலைகள் மனிதனுக்கு தீமை பயக்கக் கூடியவை; இரண்டாம் வகைக் கவலைகளோ அவனுக்கு நன்மை பயக்கக் கூடியவை.
இப்றாகீம் இப்னு அத்ஹம் ரஹ்மதுல்லாஹி அலைஹி சொல்கின்றார்கள்:
“கவலைகள் இருவகைப்படும்; முதலாம் வகை உனக்கு எதிரானதாகும்; இரண்டாம் வகையோ உனக்கு சாதகமானதாகும். உலகக் கவலைகள் உனக்கு எதிரானவை; மறுமை பற்றிய கவலைகள் உனக்கு சார்பானவை; சாதகமானவை.”
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்கின்றார்கள்:
“யார் தனது ஒரே கவலையாக மறுமை பற்றிய கவலையை ஆக்கிக் கொள்கின்றோ அவரது உலக கவலைகளுக்கு அல்லாஹ் போதுமானவனாக இருப்பான்; பொறுப்பாக இருப்பான்;யார் உலக வாழ்வின் பல்வேறு கவலைகளை சுமப்பவராக இருப்பாரோ அவரை அல்லாஹ் எங்கு போய் அழிந்தாலும் பரவாயில்லை என்று விட்டு விடுவான்; கைவிட்டு விடுவான்.”
மிதமிஞ்சிய உலகக் கவலைகள் ஒருவரை பல வழிகளில்-வகைகளில் பாதிக்கும்.
அவை அவரது உடல் ஆரோக்கியத்தைப் பாதிக்கும்; உள ஆரோக்கியத்தையும் பாதிக்கும்; அறிவையும் ஆன்மாவையும் பாதிக்கும். மொத்தத்தில் மித மிஞ்சிய உலகக் கவலைகள் ஒருவரின் வாழ்க்கையைக் குட்டிச்சுவராக்கிவிடும்.
ஹதீஸ்களின் ஒளியில் பார்க்கின்ற போது மறுமை பற்றிய கவலையை சுமப்பவருக்கு பல பரிசுகள் காத்திருக்கின்றன; அவர் அடையக்கூடிய நன்மைகள் பல.
அவருக்கு அல்லாஹ் அனைத்தையும் ஒருமுகப்படுத்திக் கொடுப்பான்; அவரது உள்ளம், சிந்தனை, பார்வை, இலக்கு உட்பட அவரது வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களையும் ஒருமுகப்படுத்திக் கொடுப்பான்; அவற்றில் எதனையும் சிதறடிக்க மாட்டான்.
மேலும் உள்ளத்தில் செல்வ நிலையை, இருப்பதைக் கொண்டு திருப்தி அடையும் மனோநிலயை ஏற்படுத்திவிடுவான்;
உலகம் அவரை நாடிவரும்;தேடிவரும்;அவர் காலடியில் வந்து நிற்கும்.
அவரது உலகக் கவலைகளை அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொள்வான்.
மறுபக்கம் உலகக் கவலைகளை அதிகம் அலட்டிக்கொள்ளும் ஒருவரைப் பொறுத்தவரையில் அல்லாஹ் அவரது விவகாரங்களை சிதரடித்து விடுவான்; வறுமையை அவரது கண்ணெதிரே கொண்டு வந்து வைத்துக் விடுவான்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அடிக்கடி கேட்ட ஒரு துஆ மிகவும் பிரபலமானது.
لا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا
“உலக வாழ்வை நாம் சுமக்கும் பெரும் கவலையாகவோ எமது அறிவின் முடிவாகவோ ஆக்கிவிடாதே!”
மறுமை வாழ்வு தொடர்பிலான கவலையே நபிகளாரின் வாழ்வில் எப்போதும் மிகைத்திருந்தது. தீனுடைய கவலை, மக்கள் நேர்வழி பெற வேண்டும்; மறுமையில் வெற்றி பெற வேண்டும் என்ற கவலை, தஃவா சார்ந்த கவலை. இவைதாம் அன்னார் சுமந்திருந்த பெரிய கவலைகள்!
நபிமார்கள், றஸூல்மார்கள் உட்பட நமது முன்னோர்களும் மறுமை சார்ந்த கவலைகளையே மிகப் பெரும் கவலைகளாகச் சுமந்திருந்தார்கள் என்பதற்கு அவர்களின் வாழ்க்கை சாட்சி பகர்கின்றது.
எமது கவலைகளின் பட்டியலில் மறுமை தொடர்பிலான கவலைகள் முதலிடம் பெறட்டும்; முன்னுரிமையும் முக்கியத்துவமும் பெறட்டும்!