இந்தியாவில் இஸ்லாம் வந்த வரலாறு
அல்லாஹ் மனித இனத்தை படைத்து அவர்களுக்கு இயற்கையான இயல்பான ஒரு வாழ்வியழை தேர்ந்தெடுத்து கொடுத்தான். அது படைத்த இறைவனை வணங்கி அவன் கட்டளைகளுக்கு வழிப் படும் படியான ஓர் உன்னத மார்க்கமான இஸ்லாமாகும்.
நிச்சயமாக (தீனுல்) இஸ்லாம் தான் அல்லாஹ்விடத்தில் (ஒப்புக்கொள்ளப்பட்ட) மார்க்கமாகும்;
வேதம் கொடுக்கப்பட்டவர்கள் (இதுதான் உண்மையான மார்க்கம் என்னும்) அறிவு அவர்களுக்குக் கிடைத்த பின்னரும் தம்மிடையேயுள்ள பொறாமையின் காரணமாக (இதற்கு) மாறுபட்டனர்;
எவர் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்தார்களோ, நிச்சயமாக அல்லாஹ் (அவர்களுடைய) கணக்கைத் துரிதமாக முடிப்பான். (அல்குர்ஆன்: 3-19)
மேலும் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள் “இவ்வுலகில் பிறக்கும் எல்லா குழந்தைகளும் இஸ்லாத்தை ஏற்கும் மனப் பக்குவத்தில் தான் பிறக்கிறது அவர்களின் பெற்றோர்கள் தாம் அவர்களை யூதர்களாகவும், கிறிஸ்தவர்களாகவும், நெருப்பு வணங்கிகளாகவும் மாற்றி விடுகிறார்கள்” (நூல் : புகாரீ- முஸ்லிம்)
இந்தியாவிற்கு இஸ்லாம் எப்போது யாரால் வந்தது?
நம் தாய் நாட்டில் இஸ்லாம் எப்போது தோன்றியது என்றால் உலக வாழ்க்கையில் மனிதன் தோன்றியது முதலே இஸ்லாமும் தோன்றிற்று… அந்த வகையில் இந்திய மண்ணில் தான் இஸ்லாம் முதலில் தோன்றியது…
ஆமாம் முதல் மனிதரும் முதல் நபியுமான ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சுவனத்திலிருந்து பூமிக்கு இறக்கப்பட்டபோது அவர்கள் லெமூரியா கண்டம் என்று சொல்லப்படும் அன்றைய தமிழ்நாடு இலங்கை உள்ளிட்ட மிகப் பெரிய நிலப் பரப்பில் உள்ள “ஆதம் மலை” என்று பின்னாளில் பெயர் கூறப் பட்ட ஒரு மலையின் உச்சியில் தான் இறங்கினார்கள். இலங்கை அன்று இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகவே இருந்தது. நூஹ் அலை அவர்கள் காலத்தில் ஏற்பட்ட வெள்ளப் பிரளயத்தில் தான் பிரிந்து தனி தீவானது
எனவே தான் “ஸைலான்” (سيلان) என்பது மருவி “சிலோன்” என்று அழைக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது.
ஹஜ்ரத் இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் இக்கூற்று இப்னு அஸாகிர், இப்னு சஅத் என்ற வரலாற்று நூல்களில் இடம் பெற்றுள்ளது.
ஆதம் அலை அவர்கள் இந்தியாவில் தான் வாழ்ந்தார்கள் என்பதற்கான பல ஆதாரங்களில் ஒன்றாக ஹதீஸ் ஷரீஃபில் வருகிறது.
இந்தியாவிலிருந்து ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் 40 முறை கால்நடையாக ஹஜ்ஜுக்கு சென்றுள்ளார்கள். அவர்களின் அடக்கஸ்தலமும் ஆதம் மலையில் உள்ள ஒரு குன்றில் தான் அமைந்துள்ளது இக்கூற்றினை இமாம் பைஹகியும், தபரியும் உறுதிப் படுத்துகிறார்கள்.
மேலும் இராமேஸ்வரத்தில் அமைந்திருக்கும் பெரிய இரண்டு கப்ர்கள் “ஹாபில் காபில்” இருவருடையது என்று சொல்லப் படுவதும், ஆதம் அலை அவர்களின் பிள்ளைகளில் ஒருவரான “ஷீத்” அலை அவர்கள் பெயரில் சேது நாடு என்றும், அதே பெயரில் சேது சமுத்திரத் திட்டத்தின் பெயர் வந்ததும், ஆதம் பாலத்தை தான் ‘இராமர் பாலம்’ என்று புனைந்து கூறுகிறார்கள் என்பதும் இதை உறுதிப்படுத்துகிறது.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்திலேயே அவர்களின் (ملة الاسلام) மார்க்கத்தை பின்பற்றுவது தொடங்கி விட்டது சேரமான் பெருமாள் என்ற கொடுங்களூரை ஆண்டு வந்த சாமுத்திரி மன்னன் இஸ்லாத்தை ஏற்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை சந்தித்து அப்துர் ரஹ்மான் என்று பெயர் மாற்றம் செய்து கொண்டார் என்றும், பாபா ரதன் என்ற வணிகர் அரபு நாடு சென்று நபிகளாரின் கரம் பற்றி இஸ்லாத்தை தழுவினார், மேலும் தமிழகத்தில் இருந்து இராமதேவர் என்ற சித்தர் நபிகள் நாயகம் ஸல் அவர்களின் கரம் பற்றி தனது பெயரை யாகூப் என்று மாற்றிக் கொண்டார் என்றும் வரலாறு கூறுகிறது.
முஹம்மத் இப்னு காசிம் ரஹ்மதுல்லாஹி அலைஹி வருகை
என்கினும் இஸ்லாம் இந்தியாவில் பரவியது முஹம்மத் இப்னு காசிம் (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்கள் இந்தியாவில் மார்க்கத்தை பரப்பும் நோக்கில் கி.பி 712 -ல் இந்தியாவிற்கு வந்தது முதல் தான்…
மாபெரும் தளபதியான இவர் ஹஜ்ஜாஜ் இப்னு யூசுஃபின் சிறிய தந்தை காசிமின் மகனாவார். இவரது தந்தை காசிம் ஹஜ்ஜாஜின் கீழ் பஸராவின் ஆளுநராக இருந்தார். இளமைப் பருவத்திலேயே இவருடைய அறிவாற்றலை விளங்கிக் கொண்ட ஹஜ்ஜாஜ் இவர் மீது தனி அன்பு செலுத்தி இவருக்கு உயர்கல்வி அளிப்பதில் பெரும் அக்கறை செலுத்தி போர் பயிற்சி கொடுத்து அறிவிலும், வீரத்திலும் சிறந்தவராக உருவாக்கினார்.
இளம் வயதிலேயே முஹம்மத் இப்னு காசிம் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் புரட்சி செய்த குர்துகளை அடக்குவதற்கு படைக்கு தலைமையேற்று சென்று வெற்றியோடு திரும்பினார்.
அச்சமயம் சிந்து நாட்டை ஆண்டு வந்த “ராஜா தாஹிர்” என்ற மன்னன் அரபுகளை சிறையில் அடைத்து கொடுமைப் படுத்துவதாகவும், மேலும் அவர்கள் பயணித்து சென்ற கப்பலை அபகரித்துக் கொண்டதாகவும், அந்நாட்டு சிறையில் இருந்து தப்பி வந்த ஜூபைர் என்பவர் ஹஜ்ஜாஜிடம் முறையிட அரபுகளை விடுவிக்கவும் அந்நாட்டு மக்களை அவர்களது ஆட்சியாளர்களின் அநீதச் செயலிலிருந்து பாதுகாக்கவும் கலீஃபா வலீத் இப்னு அப்துல் மலிகின் அனுமதியோடு முஹம்மத் இப்னு காசிம் ரஹ் அவர்களை 6000 பேர் கொண்ட படையுடன் சிந்து நாட்டிற்கு (அன்றைய சிந்து நதியை ஒட்டியிருந்த இந்தியா பாகிஸ்தானின் ஒரு பகுதி) ஹஜ்ஜாஜ் இப்னு யூசுஃப் அனுப்பி வைத்தார்.
கி.பி 712 முதல் 714 வரை சுமார் பதினொரு போர்கள் செய்து வாகை சூடிய முஹம்மத் இப்னு காசிம் ரஹ் அவர்கள் சிந்து, முல்தான், குஜராத் ஆகிய பகுதிகளை வென்றெடுத்தார்கள்.
இஸ்லாமிய மன்னர்களின் ஆட்சி முறை
முஹம்மத் இப்னுல் காசிம் ரஹ்மதுல்லாஹி அலைஹி
மிக நேர்மையான முறையில் ஆட்சி செய்தார்கள். மிகவும் இரக்க சிந்தனை உள்ளவர்களாகவும், மன்னிக்கும் மனப்பான்மை உள்ளவர்களாகவும் திகழ்ந்தார்கள். எனவே தான் இவர்கள் நாடு திரும்பும் போது மக்கள் கண்ணீர் மல்க அவரை இங்கேயே இருந்து விடுமாறு வேண்டிக் கொண்டார்கள் ஆனாலும் முஹம்மத் இப்னு காசிம் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் நாங்கள் ஆட்சியாள்வதற்காக இங்கே வரவில்லை மக்களுக்கு நல்வழிகாட்டவே வந்தோம். நான் மட்டுமல்ல என்னைப் போலவே எல்லா முஸ்லிம் மன்னர்களு.ம் நேர்மையாகவே நடந்து கொள்வார்கள் என மக்கள் மனதில் முஸ்லிம் ஆட்சியாளர்கள் குறித்து நல்லெண்ணத்தை ஏற்படுத்திச் சென்றார்கள்.
ஆலம்கீர் அவுரங்ஜீப் ரஹ்மதுல்லாஹி அலைஹி
முகலாய மன்னர்களில் அவுரங்ஜீப் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் ஷரீஅத் சட்டப்படி ஆட்சி புரிந்தார்கள். சிறுபான்மை மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நல்லாட்சி தந்தார்கள். இவர்களின் ஆட்சியில் கட்டப்பட்டது தான் சிதம்பரம் நடராஜர் கோயில் மேலும் சிறுபான்மை மக்களின் வழிபாட்டுத் தலங்களுக்கு மானியங்கள் வழங்கி வந்தார்கள்.
ஆலம்கீர் அவுரங்ஜீப் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் ஆட்சிக் காலத்தில் தான் ஏராளமானோர் இஸ்லாத்தை தழுவினார்கள். வங்காளத்தின் ஆளுநராக இருந்த முர்ஷித் குலிகான் பிராமணராயிருந்து இஸ்லாத்தை தழுவினார். இவர்கள் இந்தியாவின் மிகப் பெரும் நிலப் பரப்பை ஆட்சி செய்த முகலாய மன்னராக திகழ்ந்தார்கள். மிக நீதமான ஆட்சி செய்தார்கள் தவறிழைத்தது தந்தையாயினும் சிறை தண்டனை அனுபவித்தாக வேண்டும் என்று தன் காதலிக்காக பைதுல் மாலிலிருந்து பெரும் தொகை செலவழித்து “தாஜ் மஹலை” எழுப்பியதற்காக ஷாஜஹானை சிறையில் அடைத்தார்கள்.
நல்லவர்களை இழித்துப் பேசும் ஈன உலகம் அவர்களை இழித்துக் கூறி வரலாற்றை எழுதி வைத்துள்ளது.
தீரர் திப்பு சுல்தான் ரஹ்மதுல்லாஹி அலைஹி
இந்தியாவை ஆண்ட முஸ்லிம் மன்னர்களில் மைசூரை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்த தீரர் ஹைதர் அலீயின் தவப் புதல்வர் திப்பு சுல்தான் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள். ஆற்காடு “திப்பு ஷா” வலியின் நினைவாக இவருக்கு இப்பெயரை பெற்றோர்கள் சூட்டினார்கள். இவர் கி.பி 1750 -ல் மைசூரில் பிறந்தார். கி.பி 1767 -ல் தனது 17 -ம் வயதிலேயே இவருக்கு இராணுவத்தில் பணியாற்ற பொறுப்பு கொடுக்கப்பட்டது. இளம் பருவத்தில் ‘காஜீகான்’ என்ற இராணுவ கமாண்டரிடம் இராணுவப் பயிற்சி பெற்றார். தனது தந்தைக்கு உறுதுணையாக இராணுவத்தில் பணியாற்றினார்.
இளமையிலேயே கன்னடம், உர்தூ, ஃபார்ஸீ ஆகிய மொழிகளை கற்றுத் தேறினார்.
தனது தந்தை இறந்த 4 -ம் நாளில் 1782 -ல் தனது 32 -ம் வயதில் மைசூரு மன்னராக முடி சூடினார். இவரது அரசாங்கத்தின் வடக்கு எல்லையாக கிருஷ்ணா நதியும், தெற்கு எல்லையாக திருவாங்கூரும், கிழக்கு எல்லையாக கிழக்குத் தொடர்ச்சி மலையும், மேற்கு எல்லையாக அரபிக் கடலும் ஆகியிருந்தது.
ஷஹீத் திப்பு சுல்தான் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் ஆங்கிலேயருக்கு எதிரான தன் யுத்தத்தை “ஜிஹாத்” என்றே கருதி வந்தார்கள்.
ஆங்கிலேயர்களுக்கெதிரான போரில் தனக்கு உதவி செய்ய காபூல் – வெர்சேல்ஸ் -மொரீசியஸ் – துருக்கி ஆகிய பகுதிகளுக்கெல்லாம் தூதுவர்களை அனுப்பி வைத்தார். ஆங்கிலேயரை தாம் பிறந்த மண்ணிலிருந்து விரட்டியடிக்கும் வரை தான் பஞ்சு மெத்தையில் படிப்பதில்லை என்று சூளுரைத்து கூடாரம் தைக்கப் பயன்படுத்தும் முரட்டுத் துணியில் படுத்துறங்கினார்.
1789 -ம் ஆண்டு திருவாங்கூர் மீது திப்பு சுல்தான் படையெடுத்த போது 1784 -ம் ஆண்டு தங்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை திப்பு முறித்து விட்டார் என்று கூறி ஆங்கிலேயர்கள் மராட்டியர்களையும் நிஜாமையும் உதவிக்கு அழைத்துக் கொண்டு தாக்குதல் தொடுத்தனர் ஆம்பூரில் நடந்த போரில் திப்பு தோல்வியுற்றார். இதைத் தொடர்ந்து ‘கார்ன் வாலிஸ் பிரபு’ ஸ்ரீரங்கப் பட்டணத்தில் திப்புவின் அரண்மனையை முற்றுகையிட்டார். அச்சமயம் திப்பு தனது அரசாங்கத்தில் பாதியையும், 30 இலட்சம் ரூபாயும் தருவதாகக் கூறி உடன்படிக்கை செய்து தனது மகன்களான முஙிஜ்ஜூத்தீன் , அப்துல் காலிக் இருவரையும் அடைக்கலம் வைத்தார்.
பின்னாளில் அவர்களை மீட்டெடுத்த பின்பு பிரெஞ்சுப் படையுடன் சேர்ந்து கொண்டு ஆங்கிலேயரை எதிர்த்தார்.
இவரின் அலுவலர்களான திவான்பூர் – பூர்ணையா – மீர் சாதிக் – மீர் குலாம் அலீ போன்றோர் இவருக்கு செய்த துரோகத்தால் 18 -ம் நூற்றாண்டிலேயே விரட்டியடிக்கப் பட்டிருக்க வேண்டிய ஆங்கிலேயர்கள் மேலும் இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக நம்மை அடிமைப்படுத்த காரணமானது.
ஆம்! 1799 மே 4 -ல் முன்னரே தீட்டிய திட்டப்படி படை வீரர்களுக்கு சம்பளம் தரப்படுவதாக “மீர் சாதிக்” அறிவிப்புச் செய்ய படைவீரர்கள் முண்டியடித்துக் கொண்டு ஓரிடத்தில் ஒன்று கூட ஆங்கிலேயப் படை ஸ்ரீரங்கப் பட்டணக் கோட்டையை முற்றுகையிட்டது.
அவ்வமயம் உணவருந்திக் கொண்டிருந்த திப்பு அக்கனமே களமிறங்கி ஒரு சாதாரண போர் வீரர் போல ஆங்கிலேயரை எதிர்த்து போர் செய்து ஷஹீதானார்.
“ஒரு நூறு ஆண்டுகள் நரி போன்று வாழ்வதை விட ஒரு நாள் புலி போல் வாழ்வது மேல்” என்று அவர் அடிக்கடி சொல்வது போல அவரது வாழ்க்கையின் முடிவும் அமைந்தது.
இவருடைய இறப்பு உறுதி செய்யப்பட்ட பின் ‘ஜெனரல் ஹார்ஷ்’ என்ற ஆங்கிலத் தளபதி “இன்றிலிருந்து இந்தியா நம்முடையது” என்று கூறினார்.
முஸ்லிம்களின் ஆட்சியில் இந்திய மக்களின் மனநிலை
முஸ்லிம்களின் ஆட்சியில் இந்திய மக்கள் மிகவும் நிம்மதியாக வாழ்ந்தார்கள்.
ஏனெனில் முஸ்லிம் ஆட்சியாளர்கள் இந்த மண்ணை அந்நிய பூமியாக கருதவில்லை தங்களது சொந்த மண்ணைப் போல கருதி இங்கேயே திருமணம் முடித்து கோட்டைகள் கட்டி ஆட்சி செய்தார்கள். எனவே இங்கிருந்து எதையும் அவர்கள் தங்கள் நாட்டுக்கு எடுத்துச் செல்லவில்லை. இந்த மண்ணின் வளத்தை பெருக்கினார்கள். அணைகள் கட்டி, குளங்கள் வெட்டி நீராதாரத்தை பாதுகாத்தார்கள். பூங்காக்கள்,சாலைகள் அமைத்து நாட்டை அழகுபடுத்தினார்கள்,
பிரயாணிகள் வசதிக்காக ஆங்காங்கே நிழற்குடைகள் மற்றும் முஸாஃபிர் கானா ஏற்படுத்தினார்கள். சிறுபான்மை மக்களை அரவணைத்து பாதுகாத்தார்கள்.
எனவே இன்றளவும் அவர்களின் கோட்டைகள் இம்மக்களால் பாதுகாக்கப் பட்டு வந்துள்ளது. முகலாயர்களின் நினைவுச் சின்னங்கள், திப்பு சுல்தான் அரண்மனைகள் இதற்கு பெரும் சாட்சியாக திகழ்கிறது.
கர்நாடக அரசாங்கமே திப்பு சுல்தான் பிறந்த தினத்தை கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்தது. அவர்களின் பாட புத்தகத்தில் இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்ட வீரர் திப்பு சுல்தான் என்று எழுதி வைக்கப்பட்டுள்ளது.
முஹம்மத் இப்னு காசிம் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் இந்தியாவில் இருந்து தன் நாட்டுக்கு கிளம்ப முற்பட்டபோது அந்த மக்கள் எங்கள் ஆட்சியாளர்களின் அநீதத்திலிருந்து நாங்கள் இப்போத தான் நாடு மீண்டிருக்கிறோம் என்ற கூற்றும் இதை மெய்ப்படுத்துகிறது.
மேலும் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருஜி அவர்கள் தாங்கள் எழுதிய “DISCOVERY OF INDIA” என்ற நூலில் “இந்திய மக்கள் எங்களுக்கு நியாயம் வேண்டும் நீதி வேண்டும் என்று மற்ற மதங்களை ஏற்றுக் கொண்டு ஏமாற்றம் அடைந்த போது அந்த மக்களுக்கு இஸ்லாம் தான் சமத்துவத்தை நீதியை நியாயத்தை கொடுத்தது” என்று குறிப்பிடுகிறார். (நூல் : இஸ்லாமிய கலைக் களஞ்சியம்)
இந்தியாவில் இஸ்லாம் பரவியது
இந்தியாவில் இஸ்லாம் பரவியதற்கு இஸ்லாமிய ஆட்சியாளர்களில் ஒரு சிலரைத் தவிர வேறு யாரும் பெரிதாக பங்களிப்புச் செய்யவில்லை காரணம் சிறுபான்மை மக்களிடம் தங்களின் மார்க்கத்தை போதிப்பதால் தங்களின் ஆட்சிக்கு எதிராக புரட்சி ஏற்படுவதை அவர்கள் பயந்து ஒதுங்கி இருந்தார்கள்.
இந்திய நாட்டிற்கு மார்க்கத்தை போதிக்க வந்த மகான்களே இங்கே இஸ்லாம் தளைக்க பெரும் பங்காற்றினார்கள்.
கி.பி 9 -ம் நூற்றாண்டில் அபூ ஹிஃப்ழ் இப்னு ரபீஃ இப்னு சாஹிப் என்ற மகான் சிந்துவுக்கு வந்து மார்க்க அழைப்புப் பணி செய்து இங்கேயே அடக்கமானார்கள்.
கி.பி 979 -ல் ஷைகு ஸைஃபுத்தீன் கர்ஸோனீ இந்தியா வந்து ‘உச்’ என்னுமிடத்தில் தங்கி இஸ்லாமிய பிரச்சாரம் செய்தார்கள்.
கி.பி 11 -ம் நூற்றாண்டில் ‘பாபா ரிஹான்’ பக்தாதிலிருந்து பல சீடர்கள் புடை சூழ “புரோச்” என்ற இடத்திற்கு வந்து இஸ்லாமிய பிரச்சாரம் செய்து புரோச் அரசரின் மகனை இஸ்லாத்தை தழுவச் செய்தார்.
“மஹ்மூத் ஙஜ்னவி”யின் இந்திய படையெடுப்புக்குப் பிறகு இங்கு ஏராளமான முஸ்லிம் மகான்கள் மதப் பிரச்சாரம் செய்ய இந்தியா வந்தனர்.
அவர்களில் குறிப்பிடத்தக்கவர் ‘சையது அலீ இப்னு உஸ்மான் அல்ஹூஜ்வீரீ’ ரஹ்மதுல்லாஹி அலைஹி ஆவார்கள். கஜினியில் பிறந்த இவர்கள் இஸ்லாமிய நாடுகளில் பிரச்சாரம் செய்து லாகூர் வந்து தங்கி மார்க்கப் பிரச்சாரம் செய்து அங்கேயே இறப்பெய்தினார்கள்.
இவர்களின் கரம் பற்றி லாகூரின் ஆளுநர் ‘ராய் ராஜா’ என்பவர் இஸ்லாத்தை தழுவினார்.
மேலும் ‘ஸையத் அஹ்மத்’ என்ற ஷைகு அப்துல் காதிர் ஜீலானீ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் சீடர் இந்தியாவில் இஸ்லாமிய பிரச்சாரம் செய்தார்கள். இவர்களின் கரம் பற்றி இலட்சக்கணக்கான மக்கள் இஸ்லாத்தை தழுவினார்கள். மக்கள் இவர்களை “ஸ(கீ)ஹீ ஸர்வர்” (தர்மப்பிரபு) “லாக் தாதா” (இலட்சம் அறம் செய்தவர்) என்றும் பிரியமுடன் அழைத்தனர்.
கி.பி 1197 -ல் காஜா முயீனுத்தீன் சிஸ்தீ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் இந்தியா வந்து இஸ்லாமிய பிரச்சாரம் செய்தார்கள் அவர்கள் கரம் பற்றி 90 இலட்சம் நபர்கள் இஸ்லாத்தை தழுவினார்கள். கி.பி 1234 – ல் இவர்கள் அஜ்மீரில் வஃபாத்தானார்கள்.
இவர்கள் தவிர 13 -ம் நூற்றாண்டில் குத்புத்தீன் பக்தியார் காக்கீ ரஹ்மதுல்லாஹி அலைஹி, பஹாவுத்தீன் ஜகரிய்யா ரஹ்மதுல்லாஹி அலைஹி, ஜலாலுத்தீன் ஷர்க்கு போஸ் ரஹ்மதுல்லாஹி அலைஹி போன்றோரும், கி.பி 16 -ம் நூற்றாண்டில் முஹம்மத் கௌஸ் குவாலியரீ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களும் இந்தியாவில் இஸ்லாம் தளர முக்கியப் பங்காற்றினார்கள்.
தமிழகத்தில் ஏர்வாடி ஷஹீத் இப்ராஹீம் பாதுஷா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள், நாகூர் ஷாஹூல் ஹமீது பாதுஷா நாயகம் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள், திருச்சி நத்ஹர் வலீ ரஹ்மதுல்லாஹி அலைஹி போன்றோர்கள் இஸ்லாமிய வளர்ச்சிக்கு மிக முக்கியப் பங்காற்றினார்கள்.
இந்த மகான்கள் எல்லாம் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர்கள் அல்ல அரச குடும்பத்தில் பிறந்து மார்க்கப் பணிக்காக உலக ஆடம்பரங்களை துறந்தார்கள்.
ஷாஹூல் ஹமீது பாதுஷா நாயகம் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருப்பரம்பரையில் வந்தவர்கள்.
ஏர்வாடி ஸையது இப்ராஹீம் பாதுஷா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் தந்தை மொரோக்கோவின் ஆளுநராக இருந்தவர்.சிலுவைப் போர் உள்ளிட்ட நிறைய ஜிஹாத்களில் பங்கேற்று இறுதியாக மதுரையில் ஆட்சியாளராக இருந்து கொண்டு மார்க்கப் பிரச்சாரம் செய்து வந்த போது பாண்டிய மன்னர்களோடு ஏற்பட்ட யுத்தத்தில் ஷஹீதானார்கள்.
திருச்சி நத்ஹர் ஷாஹ் வலீ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் தந்தை “அஹ்மத் கபீர்” சிரியா நாட்டின் அரசராக இருந்தார்கள். இவர்களுக்கு ஏழு வயது இருக்கிற போது தந்தை இறப்பை தொடர்ந்து அரியணை ஏறினார் பதினைந்து ஆண்டுகள் அரசாண்ட பின்னர் ஒரு நாள் உலகில் சுகபோகமாக வாழ்ந்த மன்னர் ஒருவர் நரகில் வேதனை செய்யப்படுவதைப் போல கனவு காண்கிறார்
அதற்கு பின் சொத்து சுகங்களை துறந்து தனது இளைய சகோதரரை அரசாளச் செய்து விட்டு ஹஜ்ஜூக்காக மக்கா சென்று விட்டு மதீனாவில் நபிகள் நாயகம் ஸல் அவர்களை ஜியாரத் செய்து விட்டு கனவில் நபிகளாரின் உத்தரவுக்கிணங்க தமிழ் நாடு வந்து தீன்பணி செய்தார்கள் திருச்சியில் மார்க்கப் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த அவர்கள் அங்கேயே மரணித்து அடக்கமானார்கள். (நூல் : இஸ்லாமிய கலைக் களஞ்சியம்)
மேலும் இந்தியாவில் இஸ்லாம் ஸ்தரம் பெறுவதற்கு ஆலிம்களின் மார்க்கக் கல்வியை போதித்த சேவை முக்கியத்துவம் வாய்ந்தது.
காஜீ முபாரக் ரஹ் அவர்களின் மாணவர்களான ஷைகு ஷாஹ் வலிய்யுல்லாஹ் தெஹ்லவீ ரஹ்மதுல்லாஹி அலைஹி, ஷைகு அப்துல் அஜீஜ் தெஹ்லவீ ரஹ்மதுல்லாஹி அலைஹி, ஷைகு ரஃபீவுத்தீன் ரஹ்மதுல்லாஹி அலைஹி, ஷைகு அப்துல் காதிர் ரஹ்மதுல்லாஹி அலைஹி, ஷைகு அப்துல் ஹை ரஹ், ஷைகு இஸ்மாயீல் ரஹ், ஷைகு முஹம்மத் இஸ்ஹாக் ரஹ்மதுல்லாஹி அலைஹி ஆகியவர்கள் இந்தியாவில் தீன் கல்வி கற்றுத் தந்து இஸ்லாம் நிலை பெற பெரும் முயற்சி கொண்டார்கள்.
இவர்களின் வழியில் ஆங்கிலேயர்களின் ஆட்சியில் மார்க்கத்தை பாதுகாக்கும் பொருட்டு வட இந்தியாவில் 19 -ம் நூற்றாண்டில் துவக்கப்பட்ட தாருல் உலூம் தேவ்பந்த் சர்வ கலா சாலை இந்திய முஸ்லிம்களின் ஈமானை பாதுகாக்க பெரும் பங்காற்றியது இன்றளவும் பங்காற்றிக் கொண்டிருக்கிறது. (நூல் : அல் – முஸ்லிமூன ஃபில் ஹிந்த்)
முஸ்லிம்கள் இந்தியாவிற்கு வழங்கிய கொடைகள்
1. ஏக இறைத் தத்துவம் இந்த மண்ணிற்கு இஸ்லாம் வழங்கிய பெரும் கொடையாகும்.
மலையாள நாட்டில் உள்ள ‘காலடியில்’ பிறந்த ‘சங்கரர்’ கி.பி 8 -வது நூற்றாண்டின் பிற்பகுதியில் கேரளத்தில் இஸ்லாமியப் பிரச்சாரம் செய்தவர்களிடம் வந்து உருவமற்ற ஒரே இறை வணக்கப் பிரச்சாரத்தால் ஈர்க்கப்பட்டு “அத்வைதக் கொள்கையை” இந்து மதத்தில் நுழைத்தார் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இஸ்லாத்தின் ஏக தெய்வ வணக்கப் பிரச்சாரத்தின் காரணமாக லிங்காயத்துகள் தோன்றினர். இவர்கள் சமீபத்தில் கூட கர்நாடக மாநிலத்தில் தாங்கள் இந்துக்கள் அல்ல என்று அறிவிக்கக் கோரி போராட்டம் நடத்தியது நினைவிருக்கலாம்.
இவர்கள் இஸ்லாமியக் கொள்கைகள் பலவற்றை பின்பற்றினார்கள்.
உதாரணமாக :
*திருமணத்திற்கு முன் மணமகளின் அனுமதி பெறுவது.
*மணவிடுதலையை அங்கீகரிப்பது.
*விதவைகளின் மறுமணத்தை அங்கீகரிப்பது.
*பிரேதங்களை எரிக்காது குளிப்பாட்டி அடக்கம் செய்வது.
*சாதியக் கொடுமைகளை ஒழித்து எல்லோரும் ஒன்று கூடி அமர்ந்து உண்ணும் வழக்கத்தை மேற்கொள்வது.
இஸ்லாம் வருவதற்கு முன்பு இவ்வழக்கம் இந்திய மண்ணில் இருந்ததில்லை.
தமிழ் நாட்டில் சித்தர்கள் தோன்றி உருவமற்ற ஒரே வழிபாட்டை மேற்கொண்டதும் இஸ்லாத்தால் ஏற்பட்ட நற்பலனேயன்றி வேறில்லை.
2. இறைவனின் படைப்பில் எல்லோரும் சமமே;பிறப்பால் உயர்வு தாழ்வு இல்லை, எந்தத் தொழிலையும் எவரும் செய்யலாம் என்னும் உயரிய கொள்கையை இந்தியாவில் புகுத்தி வர்ணாச்சிரம தர்மத்தை தகர்த்தெறிந்தது இஸ்லாம்.
3. பெண்களுக்கு சொத்துரிமை முதலான சுதந்திரங்களை வழங்கியது இஸ்லாம்.
4. கணவன் இறந்ததும் மனைவி உடன்கட்டை ஏறும் வழக்கத்தை நிறுத்தியது இஸ்லாம்.
5. ஆங்கிலேயர்களுக்கு முன் சிதறுண்டு கிடந்த இந்திய அரசுகளை ஒன்றிணைத்து ஒரே குடையின் கீழ் ஆண்டவர்கள் முஸ்லிம்களே ஆவர். இத்தகு அரசியல் ஜக்கம் முஸ்லிம்கள் வருவதற்கு முன் இந்தியாவில் இருக்கவில்லை.
6. இந்தி, ஃபார்ஸீ, அரபி கலந்த ஒரு பொது மொழியான உர்தூவை வழங்கி அம்மொழியில் இஸ்லாமிய இலக்கியக் கருவூலங்களை கொண்டு வந்து குவித்து அதனை வளப்படுத்தியவர்கள் முஸ்லிம்களேயாவர்.
7. முஸ்லிம்கள் வரவால் இந்தியாவின் விண்ணியல் கல்வி வளம் பெற்றது. அக்ஷரேகை, தீர்க்க ரேகை ஆகியவை பற்றிய முஸ்லிம்களின் கணிதமுறைகளை இந்துக்கள் பின்பற்றலாயினர்.
நஸீருத்தீன் தூஸி அவர்களின் விண்கலை முறைகளை பின்பற்றி இங்கு பல ஆய்வுகள் நடத்தப்பட்டன.
8. முஸ்லிம்களே இந்தியாவிற்கு “யுனானீ” மருத்துவ முறையைக் கொண்டு வந்தார்கள். ஐநூறு ஆண்டுகள் இம்மருத்துவ முறை இந்தியாவில் செல்வாக்கு பெற்றிருந்தது.
9. காகிதத்தை முதன் முதலில் இந்தியாவில் புகுத்தியவர்கள் முஸ்லிம்களே! “சுல்தான் மஹ்மூத் ஷா” குஜராத்தில் காகித உற்பத்தி சாலையை நிறுவினார்.
10. துணி நெய்யும் தொழிலை இந்தியாவில் முஸ்லிம் மன்னர்கள் அபிவிருத்தி செய்தனர். அதற்கு முன்பு முரட்டுத் துணிகளே இங்கு தயாரிக்கப்பட்டு வந்தது. அக்பர் ஆட்சிக் காலத்தில் துணி நெய்யும் தொழிற்சாலைகள் நிறுவப்பட்டன.
11. முஸ்லிம்களே நிலங்களை அளந்து கணக்கிட்டு வரிவிதித்து வசூலிக்கும் சிறந்த முறையை இந்தியாவில் புகுத்தினர். நிதித் துறையில் அக்பரும், ஷேர்ஷாவும் சிறந்த சீர்திருத்தங்களை செய்தனர்.
12. இந்தியாவின் பல்வேறு பாகங்களையும் ஒன்றிணைக்கும் சாலைகளையும், இடையிடையே பயணிகள் தங்குவதற்கான தங்குமிடங்களையும் நிர்மாணித்து சாலைகளின் ஓரங்களில் பழம் தரும் மரங்களை வைத்து வளர்த்தவர்கள் முஸ்லிம்களேயாவர்.
13. முஸ்லிம்கள் வரவால் இந்தியாவின் உணவுக்கலை பல்வேறு மாறுதல்கள் அடைந்தது. பிரியாணி, குருமா, ஹல்வா, ஜிலேபி, பாதாம்கீர், ஷர்பத் முதலானவைகள் முஸ்லிம்களால் இந்தியாவிற்கு வழங்கப் பட்டவையாகும்.
14. தென்னாட்டவரின் கையில் அயர்து கிடந்த கடல் வழி வாணிபத்தை புதுப்பித்தவர்கள் முஸ்லிம்கள் தான்.
இந்திய கடற்படையை முதன்முதலில் நிர்மாணித்தவர்கள் முஸ்லிம்கள் தான்.
15. முஸ்லிம்களே இந்தியாவின் வரலாற்றை முதன்முதலில் எழுதியவர்களாவர். முஸ்லிம் அரசர்கள் சிலர் தங்களின் வாழ்க்கைக் குறிப்புகளை எழுதியதோடு பல வரலாற்றாசிரியர்களைக் கொண்டு இந்திய வரலாற்றை எழுதுமாறும் செய்தனர்.
16. இந்தியாவின் கட்டடக் கலையில் முஸ்லிம்களின் கட்டடக் கலையும் ஒன்று சேர்ந்து இந்தோ – முஸ்லிம் கட்டடக் கலை உருவாகியது.
இந்தியாவில் முஸ்லிம் கட்டடக் கலை குத்புத்தீன் ஐபக் டில்லியிலும், அஜ்மீரிலும் இரண்டு பள்ளிவாயில்களை நிர்மாணித்ததில் இருந்து துவங்கியது எனலாம்.
முஸ்லிம்களின் கட்டடக் கலைக்கு சான்றாக தாஜ்மஹால், செங்கோட்டை, குதுப்மினார், முஸ்லிம்களின் அரண்மனைகள் பெரும் எடுத்துக் காட்டாக திகழ்கிறது.
17. அனைத்திற்கும் முத்தாய்ப்பாக ஆலம்கீர் அவுரங்கஜீப் ரஹ் அவர்களின் ஆட்சிக் காலத்தில் “ஃபதாவா ஆலம்கீரி” என்ற ஃபதாவா ஹின்திய்யா என்ற ஓர் அற்புத நூல் மார்க்கச் சட்டங்களின் கருவூலம் 24 பெரும் உலமாக்களை வைத்து தொகுக்கப் பட்டது. இதில் நான்கு பெரும் ஆலிம்கள் முக்கியப் பங்காற்றினர்.
இவர்கள் நால்வரில் ஒவ்வொருவருக்கும் இந்த கிதாபை தொகுப்பதில் கால் பங்கு உள்ளது என்று அல்லாமா அபுல் ஹஸன் அலீ அந்நத்வீ ரஹ் “المسلمون في الهند” என்ற தங்களது நூலில் குறிப்பிடுகிறார்கள்.
இதில் தேர்வு செய்யப்பட்ட மார்க்கச் சட்டங்களையே தொகுத்துள்ளார்கள்.
இந்த நூலை தொகுப்பதற்காக ஆலம்கீர் அவுரங்ஜீப் ரஹ் அவர்கள் அப்போதே இரண்டு இலட்சம் ரூபாய்களை செலவழித்தார்கள்.
இன்னும் எண்ணற்ற வெகுமதிகளை இஸ்லாம் இந்திய மண்ணிற்கு வழங்கியுள்ளது எனவே தான் இம்மண்ணிலிருந்து இஸ்லாத்தை அப்புறப் படுத்த நினைப்பவர்கள் ஆட்சியில் இருந்த போதும் அது சாத்தியப் படவில்லை இன்ஷா அல்லாஹ் கியாமத் வரை சாத்தியப்படாது.
இறுதியாக அல்லாமா அபுல் ஹஸன் அலீ அந்நத்வீ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறியது போல “இந்தியாவில் முஸ்லிம்களுக்கு மிக நீண்ட வரலாறு இருக்கிறது இம்மண்ணில் கடமையான வணக்கங்கள் மட்டுமல்ல எல்லா சுன்னத்தான நஃபிலான காரியங்களையும் கடைபிடித்து வாழ்வோம்” நம் முன்னோர்களின் தியாகங்களை நினைவு கூர்ந்து பிற மக்களுக்கும் போதித்து நம் வாழ்வியலை அர்த்தமுள்ளதாக ஆக்கிடுவோம் வல்ல ரஹ்மான் தனது கிருபையால் இந்தியாவில் முஸ்லிம்களை அவர்களின் ஷரீஅத் சட்டங்களை பேணி வாழ்வதற்கான எல்லா சாதகமான சூழ்நிலைகளையும் ஏற்படுத்துவானாக.
source : https://www.facebook.com/photo?fbid=3049684091963905&set=a.1403362506596080