நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் – தொழில்நுட்பம் – நுகர்வியம்
ஏ.பி.எம். இத்ரீஸ்
M U S T R E A D
[ இன்றைய தொழில் நுட்பத்தின் அதிகாரத்தை புரிந்து கொள்வது பற்றி அறிஞர்கள் கூறும் கருத்தும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கருத்தும் ஒத்துச் செல்வதைக் காணலாம். பொருட்களை நோக்கிய விடுபடலே அக்கருத்தாகும். தேவையான அளவுக்கு நுகரும்போதே ஆரோக்கியமான மகிழ்வான வாழ்வு கிட்டும்.
பொருட்கள் மீதான அதீத மோகமும் நுகர்வு வெறியும் அழிவையே தேடித்தரும் என்பதற்கு பாலைவனச்சூழலில் இருந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உதாரணம் காட்டுகின்றார்கள்.
பொதுவாக உலக வாழ்வு குறித்தும் குறிப்பாக அதிகரித்த செல்வமும் தொழில்நுட்பமும் உருவாக்கும் சொகுசு வாழ்வும் குறித்து மற்றொரு சிந்தனையில் நபிகள் முன்வைக்கின்றார்கள். அதாவது நவீன தொழில் நுட்பத்திலும் சிதறடிக்கும் தன்மை காணப்படுகின்றது.
ஒருங்கு சேரும் மக்களை சிதறடித்து தனியன்களாக உருமாற்றும் பணியை இன்றைய தொழில்நுட்பம் கனகச்சிதமாகச் செய்து கொண்டிருக்கிறது. பெருங்கலாச்சார நடவடிக்கைகள் சிறுகலச்சார நடவடிக்கைகளை ஓரங்கட்டி விளிம்பு நிலைக்குத் தள்ளிவிடுகின்றன.
செல்வம் குவிந்து நுகர்வு வெறி மேலோங்கும் போது என்ன செய்வது என சில தோழர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்ட கேள்விக்கு கவினுறு வனாந்தரங்களில் ஆடுகளுடன் அலைந்து திரிதல், ஆட்டுப் பாலை அருந்துதல், மரத்தடிகளில் வாழுதல், கனவாய்கள், பல்லத்தாக்குகளை நோக்கிச் செல்லுதல், நாடேடி வாழ்வு, பரதேசித் தன்மை பற்றியெல்லாம் நபிகள் சிலாகித்துப் பேசியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
இன்றைய செல்போன் உலகின் சிதறுதல்களுக்கும் தொழில்நுட்ப உலகில் எல்லாவற்றையும் காத்திருக்கும் சேமப்படையாக மாற்றும் செயலுக்கும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இவ்வாலோசனைகள் எதிராக, எதிர் இயக்கமாக எதிர் வாழ்வு முறையாக அமையக்கூடும். இன்றைய ஜிப்சி வாழ்க்கையோடு இதனை ஒப்பிட்டு நோக்க முடியும்.]
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் – தொழில்நுட்பம் – நுகர்வியம்
இது பேச்சு பணத்தால் அளவிடப்படுகின்ற யுகமாகும். சென்ற நூற்றாண்டில் கம்பித் தொலைபேசி தொடங்கப்பட்ட போது பேசுவது சிறந்தது என்றுதான் சொல்லப்பட்டது. ஆனால் இன்று பேச்சு நின்று குருஞ்செய்தி அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டது. ஆனால் தத்துவ சிந்தனைப்படி பேச்சும் உரையாடலும்தான் முக்கியமானது.
பேசுவது சிறந்தது மட்டுமல்ல அது மனிதத்தன்மையானது. மனிதன் தெளிவாகப் பேசுவதற்கு கற்றுக் கொடுக்கப்பட்டவன் என்று அல்குர்ஆன் கூறுகின்றது. பேசுவது மற்றவர்களோடு இருப்பதற்கான அடையாளமாகும். நமது இருப்பில் அவர்களும் அவர்களின் இருப்பில் நாமும் இடம்பெறுகிறோம். பேச்சு மக்களை ஒன்று குவிக்கும் செயற்பாடாகும். ஆனால் இந்த ஒரு திசையிலிருந்து செய்தி அனுப்புதல் என்பது இத்தகைய குவித்தலையும் ஒன்று சேர்தலையும் இல்லாமல் ஆக்கி மனிதர்கள் இன்றைய வலையமைப்புக்களில் சிக்கவைக்கப்படுகின்றனர்.
ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலில் அவர்கள் அங்கமாகிப் போகின்றனர். எனவே அவர்களுக்கு தேர்வு செய்யும் உரிமையும் மாற்றுக்களை யோசிக்கும் உரிமையும் இல்லாமல் போய்விடுகிறது. முடிவெடுக்கும் சாத்தியமற்றுப் போய்விடுகிறது. மொபைல் மூலமான கருத்துருவாக்கமும் இத்தன்மையானதே. மொபைல் சிந்தனையில் புரிதல் முக்கியமல்ல. ஆம்-இல்லை என்பதற்குள் அது சுருங்கிவிடுகிறது.
விரைவான எதிர்வினையும் எதிர்வினைக்கான புதிய புதிய சனல்களை அதிகரித்தலுமே தொடர்புறுத்தலை மேம்படுத்த உதவுகிறது. மொபைல் கருத்தாக்கத்தின் படி அறிவுறுத்தல் என்பது எவ்வளவு தகவல்கள் உங்கள் விரலின் தொடுமுனையில் குவிந்துள்ளது என்பதையும் அவற்றை எவ்வளவு விரைவாக நீங்கள் கீழிறக்க முடியும் என்பதையும் மட்டுமே பொறுத்தது. ஆனால் அந்த அறிவு எப்படிப் பெறப்படுகிறது, அதில் விமர்சனங்கள், உரையாடல்கள் ஆகியவற்றின் பங்கு என்பதெல்லாம் கிடையாது.
ஈ-வணிகம் போய் எம்-வணிகம் வந்துவிட்டது. அதாவது மொபைல் வணிகம் வந்துவிட்டது. இச்சிறு கருவி இப்போது ஒரு இலத்திரனியல் பணப் பையாகவும் மாறிவிட்டது. அவ்வாறே பின்நவீன யுகத்தில் மாய எதார்த்த உலகின் ஆதிக்கம் வந்துவிட்டது. அதாவது பௌதீக இருப்பு இல்லாத இருப்பு ஏற்பட்டு விட்டது. இதற்கு நல்ல உதாரணம் வேர்சுவல் யூனிவசிட்டியாகும். இங்கே ஆசிரியர்கள், கட்டிடங்கள், நூலகங்கள், பரீட்சை மண்டபங்கள் எதுவுமில்லை. ஆனால் பல்கலைக்கழகம் இயங்குகிறது. உங்களை அனுமதிக்கின்றது. உங்களுக்குப் பயிற்சியளிக்கின்றது. உங்களுக்கு பட்டமும் வழங்குகின்றது.
இந்த மாய யதார்த்த உலகின் ஒரு வகை மாதிரியான வெளிப்பாடாக மொபைல் போன் அமைகின்றது. இன்றைய நவீன தொழில்நுட்பங்களின் விளைவாக நமது வாழ் உலகம் சுருங்கி வருவதற்கு மொபைல் ஓர் உதாரணமாகும். அதாவது வாழ்வு முறை வாழ் உலகத்தை வென்றுவிட்டது. புதிய தொழில் நுட்பங்கள் மனித இருப்பின் மீது மிகப்பெரும் ஆதிக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. சுருக்கமாகச் சொல்வதானால் நாம் அனைவரும் ஒரு விமானத்திற்குள் தினிக்கப்பட்ட பயணிகளாக ஆக்கப்பட்டிருக்கிறோம் என்பதுதான்.
மனிதர்கள் காத்திருக்கும் சேமப்படைகளாக மாற்றப்பட்டு வருகின்றனர். மேலும் மேலும் நெகிழ்ச்சி மிக்கவர்களாகவும் திறன் நிறைந்தவர்களாகவும் தம்மை மேம்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். இதன் கருத்து இன்றைய மென் தொழில்நுட்பங்களை எல்லாம் உதறித்தள்ள வேண்டும் என்பதோ அது தந்திருக்கின்ற வசதிகளை விட்டொதுங்க வேண்டும் என்றோ கூறவரவில்லை. மாறாக தொழில்நுட்பம் குறித்த புரிதல் எவ்வாறு அமைய வேண்டும் என்பதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வழிகாட்டுகின்றார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்கு உலகம் மற்றும் உலக இருப்பு குறித்த தெளிவான கருத்தை முன்வைக்கின்றார். பொருட்களை எவ்வாறு அனுபவிக்க வேண்டும்? எவ்வாறு விட்டுவிட வேண்டும் என்பது பற்றியெல்லாம் அழகான உதாரணங்கள் மூலம் கூறுகின்றார். அது இன்றைய தொழில் நுட்ப புரிதலுக்கு மட்டுமன்றி நடைமுறையிலும் அதிலிருந்து விடுபடுவதற்கு உதவுகின்றது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள். உலகின் வசந்தம் குறித்து நான் பயப்படுகின்றேன். இதைக் கேட்ட நபித்தோழர்களில் ஒருவர் நலம் கேட்டைத் தருமா? என வினவுகிறார். நபிகள் மௌனமாக இருந்தார்கள். மீண்டும் தலையை உயர்த்தி அத்தோழரைப் பார்த்து நீர் என்ன கேட்டீர் திரும்பவும் சொல் என்றார்கள். அதுதான் நலமான இந்த உலகவாழ்வு எவ்வாறு கேடாக முடியும். என்று கேட்டேன் என்றார். அதற்கு நபிகள் நிச்சயம் நலம் நலத்தைத்தான் கொண்டுவரும். அதில் சந்தேகமில்லை. ஓர் ஒட்டகம் வயிறுபுடைக்கச் சாப்பிட்டு அஜீரணமாகி வயிறு வெடித்து மரணித்து விடுகின்றது. இன்னொரு ஒட்டகம் தனக்குத் தேவையான அளவு சாப்பிட்டு பின்னர் அதை அசைபோட்டு மறுநாள் கழிவகற்றுகின்றது. யார் இவ்வுலக செல்வங்களை தனக்குத் தேவையான அளவு எடுத்துக் கொள்கின்றாரோ அவர் மேம்பாடடைவார். யார் தனது தேவைக்கு மேலாகவும் நீதியற்ற முறையிலும் பெறுகின்றாரோ வயிறு ஊதிப்புடைத்து அழிவைத்தேடிக் கொள்கின்ற ஒட்டகத்தைப் போலாவார் எனக் குறிப்பிட்டார்கள்.
இன்றைய தொழில் நுட்பத்தின் அதிகாரத்தை புரிந்து கொள்வது பற்றி அறிஞர்கள் கூறும் கருத்தும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கருத்தும் ஒத்துச் செல்வதைக் காணலாம். பொருட்களை நோக்கிய விடுபடலே அக்கருத்தாகும். தேவையான அளவுக்கு நுகரும்போதே ஆரோக்கியமான மகிழ்வான வாழ்வு கிட்டும். பொருட்கள் மீதான அதீத மோகமும் நுகர்வு வெறியும் அழிவையே தேடித்தரும் என்பதற்கு பாலைவனச்சூழலில் இருந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உதாரணம் காட்டுகின்றார்கள்.
பொதுவாக உலக வாழ்வு குறித்தும் குறிப்பாக அதிகரித்த செல்வமும் தொழில்நுட்பமும் உருவாக்கும் சொகுசு வாழ்வும் குறித்து மற்றொரு சிந்தனையில் நபிகள் முன்வைக்கின்றார்கள். அதாவது நவீன தொழில் நுட்பத்திலும் சிதறடிக்கும் தன்மை காணப்படுகின்றது. ஒருங்கு சேரும் மக்களை சிதறடித்து தனியன்களாக உருமாற்றும் பணியை இன்றைய தொழில்நுட்பம் கனகச்சிதமாகச் செய்து கொண்டிருக்கிறது. பெருங்கலாச்சார நடவடிக்கைகள் சிறுகலச்சார நடவடிக்கைகளை ஓரங்கட்டி விளிம்பு நிலைக்குத் தள்ளிவிடுகின்றன.
செல்வம் குவிந்து நுகர்வு வெறி மேலோங்கும் போது என்ன செய்வது என சில தோழர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்ட கேள்விக்கு கவினுறு வனாந்தரங்களில் ஆடுகளுடன் அலைந்து திரிதல், ஆட்டுப் பாலை அருந்துதல், மரத்தடிகளில் வாழுதல், கனவாய்கள், பல்லத்தாக்குகளை நோக்கிச் செல்லுதல், நாடேடி வாழ்வு, பரதேசித் தன்மை பற்றியெல்லாம் நபிகள் சிலாகித்துப் பேசியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும். இன்றைய செல்போன் உலகின் சிதறுதல்களுக்கும் தொழில்நுட்ப உலகில் எல்லாவற்றையும் காத்திருக்கும் சேமப்படையாக மாற்றும் செயலுக்கும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இவ்வாலோசனைகள் எதிராக, எதிர் இயக்கமாக எதிர் வாழ்வு முறையாக அமையக்கூடும். இன்றைய ஜிப்சி வாழ்க்கையோடு இதனை ஒப்பிட்டு நோக்க முடியும்.
மனிதச் சிந்தனைக்கும் தொழில்நுட்ப அறிவியல் தர்க்கங்களுக்கும் சில வேறுபாடுகள் உள்ளன. கணனியில் சிந்தனை என்பது முற்றிலும் தர்க்கவகைப்பட்டது. ஒன்று X சைபல் என்கிற இருமைச் சமிக்ஞைகளுக்கு எந்திரகதியில் அது எதிர்வினையாற்றுகிறது. ஆனால் மனிதச் சிந்தனையோ ஒப்புமை, உள்ளுணர்வு ஆகியவற்றை அதிகம் சார்ந்துள்ளது. தகவல் துணுக்குகளை உள்ளீடாக்க் கொண்டு அவற்றை பகுத்து வடிவமைப்பது மட்டுமன்றி புதிய எடுகோல்களையும் பிரமானங்களையும் முன்வைத்து செயல்படக்கூடிய சாத்தியம் மனிதச்சிந்தனைக்கு உண்டு. முன்தீர்மானிக்கப்பட்ட சமிக்ஞைகள், சமிக்ஞை நீக்க முறைகள் இவற்றைத்தாண்டி துள்ளியமற்ற சந்தேகத்திற்குரிய தகவல்களையும் கூட ஏற்று பகுப்பாய்வு செய்யும் திறமை மனிதச் சிந்தனைக்கு உண்டு. துல்லியம் என்பது அதிகார மமதையின் வெளிப்பாடாக அமைகின்றது. தொழில்நுட்ப வகைப்பட்ட பண்பாகவே இதைப் பார்க்க வேண்டும்.
இந்த துல்லியத்தை மனிதன் மீது பிரயோகிப்பது பாசிசத்திற்குச் சமனாகும். நபிகள் மனிதனை பற்றிக் கொண்டுள்ள கண்ணோட்டம் வித்தியாசமானது. அவர் மனிதனைப் பற்றி பின்வருமாறு பிரகடனம் செய்கின்றார். ஆதமுடைய மக்கள் அனைவரும் தவறு செய்பவர்களே. அவர்களில் சிறந்தவர் அதிலிருந்து மீள்பவர்களே என்று கூறுகின்றார். எனவே மனிதன் துள்ளியமற்றவனாகவும் தவறுகளை இழைக்கக்கூடியவனாகவும் உள்ளான் என்பதே நபிகளின் சிந்தனையாகும். இயந்திரம் ஒழுங்குட்பட்டது. மனிதன் ஒழுங்கவிழ்க்கும் அம்சங்கள் நிறைந்தவன். தவறிழைக்காத நிலையில் ஒழுங்கு முறை பிறழாத செயற்பாடுகளும் எப்போதும் பெருமைக்குரியன அல்ல என்றே நபிகள் இதன் மூலம் நமக்கு உணர்த்துகின்றார். முகவரி பிழையாக இருந்தாலும் தபால்காரன் விசாரித்து வீடுதேடிவந்து கடித்த்தைத் தருகிறான். ஆனால் ஈமெயில் முகவரியில் ஓர் எழுத்துப் பிழை என்றாலும் தபால் திரும்பிவிடுகிறது.
இயற்கையை முடிந்தவரை சுரண்டி மனிதர்களின் நுகர்வு வெறியை திருப்திசெய்து பெரும் லாபம் அடையும் பல்வேறு உத்திகளையே நாம் தொழில்நுட்பம் என்கிறோம். இந்த தொழில்நுட்பம் மூலம் உலகைக் காப்பாற்ற முடியும். மானுடத்துயரங்களை முழுமையாக ஒழிக்க முடியும் என்று சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் அரசியல்வாதிகள் கனவு கண்டார்கள். ஆனால் அரேபிய யுகத்தில் வாழ்ந்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இது பற்றி ஐயப்பட்டார்கள். அதில் அறமீறலாக ஒன்று உள்ளது என்றார்கள். தன் மகிழ்ச்சிக்காக இன்னொன்றை அல்லது இயற்கையை மிதமிஞ்சிச் சுரண்டுவதை ஒழுக்கமற்றது என்று கூறினார்கள். தன் தேவைகளை மட்டுமே ஆதாரமாக்க் கொண்டு சிந்திக்கும் எந்தக் கருத்தும் இயற்கைக்கு மாறானது. ஆகவே அது அழிவையே உருவாக்கும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
ஆனால் அன்றைய ரோம, பாரசீக நாடுகளில் நுகர்வே மேலோங்கியிருந்த்து. அடிமைகளைச் சுரண்டி மேட்டுக்குடி மக்கள் நுகர்வு வெறியால் பெருச்சாளிகளாக மாறியிருந்தனர். நுகர்வே மனிதனின் இன்பம் என்றும் இன்பமே நாகரீகத்தின் அளவுகோள் என்றும் நிறைய நுகரும் சமூகமே நாகரீகமானது என்றும் அன்றைய மக்கள் நம்பினர். அன்றைய வல்லாதிக்க அரசுகளின் வன்முறையை நபிகள் எதிர்த்து வந்தார். அவர்களின் மேலாதிக்கத்திற்கும் பொருளியல் சுரண்டலுக்கும் அடிப்படையாக வன்முறை பிரயோகிக்கப்பட்டதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிகச்சரியாக இனங்கண்டார்கள்.
பேராசையினாலேயே மேலாதிக்கம் உருவாகின்றது. கட்டுக்கடங்காத நுகர்வு வெறியினால் பேராசை உருவாகின்றது. சுயகட்டுப்பாடின்மையால் நுகர்வுவெறி உருவாகின்றது. எனவே சுய கட்டுப்பாட்டால் மட்டுமே இவற்றை சமன் செய்ய முடியும். எனவே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சுயகட்டுப்பாட்டிலிருந்து தொடங்கும் ஒரு உம்மத்தை-சமூக அமைப்பை உருவாக்க விரும்பினார்கள். அதுவே அவர்கள் உருவாக்கிய உம்மத் கருத்தாக்கத்திற்குள் ஆழப்பதிந்திருந்த்து. அந்த உம்மத்தின் அங்கத்தவர்கள் ஒரு ஆட்டுத்தலையை தமக்குள் பகிர்ந்து கொண்டதை வரலாற்றில் காணமுடிகிறது. மரணத்தருவாயில் கூட தண்ணீரை பிறருக்குப் பகிர்ந்தளிப்பதை பார்க்கும் போது மெய்சிலிர்த்துப் போகிறது.
அப்படைத் தேவைகள் அனைவருக்கும் நிறைவேறும்போதே மனிதர்கள் மகிழ்ச்சியடைகின்றார்கள். அதன் விளைவாகவே நிறைவான மனம் கொண்ட உம்மத்-மக்கள் சமூகம் உருவாகின்றது. அச்சமூகத்தில்தான் மேலே நாம் குறிப்பிட்ட மேலான மானுட உறவுகள் பூக்கத்தொடங்கும். இத்தகைய மானுட நேயம் கொண்ட சமூகம் வன்முறையை மெல்லமெல்ல இல்லாதொழிக்கும். ஏனெனில் மகிழ்ச்சி இன்மையால்தான் வன்முறை உருவாகின்றது. அம்மகிழ்ச்சி இன்மைக்கு பிறரே காரணம் என எண்ணுவதாலும் பிறரை ஒதுக்குவதன் மூலமே மகிழ்ச்சியை பெற முடியும் என நினைப்பதாலும் இது ஏற்படுகிறது. ஃபிர்அவ்னிய, ஆதிய, தமூதிய சமூகங்கள் வண்முறையில் செயற்பட்டு ஒழிந்து போனமைக்கு மகிழ்ச்சியான உள்ளம் இன்மையே காரணம் என நபிகள் வரலாற்றிலிருந்து ஆதாரம் காட்டினார்.
இன்றும் தொழில்நுட்பத்தின் வன்முறை பற்றி பேசப்படுகின்றது. இன்றைய நவீன தொழில்நுட்பம் யுத்தம் இன்றி வாழ முடியாத நிலையில் உள்ளது. அந்தளவுக்கு நவீன தொழில்நுட்பத்தின் மைய ஆளுமைகள் அனைவரும் போருடன் சம்பந்தப்பட்டவர்களாக இருக்கிறார்கள் என்பது உலகறிந்த விடயமாகும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உலக செல்வத்தை அனுபவிப்பதையோ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதையோ அதன் சொகுசுகளை பெற்றுக் கொள்வதையோ ஒட்டுமொத்தமாக எதிர்க்கவில்லை. அவர்கள் அதில் உள்ளடங்கியிருக்கும் நுகர்வு வெறியையும் வன்முறைத் தன்மையையும் மட்டுமே எதிர்க்கின்றார்கள். ஏனெனில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அன்றைய தொழில்நுட்பத்தில் பல அம்சங்களை ஏற்றுக் கொண்டார்கள்.
தனது தோழர்களையும் அவற்றை பயன்படுத்தும்படி ஊக்குவித்தார்கள் என்பதையே அவர்களின் சீறா நமக்கு சொல்லித்தருகின்றது. மதீனா விவசாயிகள் மகரந்தச் சேர்க்கை மூலம் விளைவை அதிகரிக்க முயற்சித்த போது அதை எதிர்த்த நபிகள் விளைவு குன்றியதைப் பார்த்து அத்தொழில்நுட்பத்தை ஆதரிப்பவராக மாறியமை குறிப்பிடத்தக்கதாகும்.
source: http://idrees.lk/?p=1814