தீவிர சிந்தனையால் மறக்கப்படும் வாழ்க்கை
( வாழ்க்கைத் தத்துவங்கள் )
ரஹ்மத் ராஜகுமாரன்
17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ரீனீ டிஸ்கார்டிஸ் (Rene Descartes ) என்னும் பிரெஞ்சு தத்துவ ஞானி “நான் சிந்திக்கிறேன் அதனால் இருக்கிறேன்” என்று ஒரு சித்தாந்தத்தை முன் வைத்தார். இது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி பிரபலமானது. இதை அடிப்படையாகக் கொண்டே மேற்கத்திய அனேக தத்துவங்கள் உருவாகின.
நீங்கள் இருப்பதால்தான் உங்களால் எண்ணம் என்ற ஒன்றை உருவாக்க முடிகிறது. ஆனால் இன்று உங்கள் எண்ணங்கள் அதீத முக்கியத்துவம் பெற்றுவிட்டன. உங்கள் கவனம் வாழ்வில் இருந்து விலகி எண்ணத்தில் லயிக்க ஆரம்பித்து விட்டது. நீங்கள் உயிர் வாழ முடிவது எண்ணங்கள் இருப்பதால்தான் என்று நீங்கள் நம்பும் அளவிற்கு இது வளர்ந்து விட்டது.
நீங்கள் இருக்கிறீர்கள். நீங்கள் இருப்பதால், நீங்கள் சிந்திக்கவும் செய்யலாம். சிந்திக்காமலும் இருக்கலாம். அது உங்கள் தேர்வு. உங்கள் வாழ்வின் மிக அழகான தருணங்கள் எவை என்று யோசித்துப் பாருங்கள்.
ஆனந்தம், பேரானந்தம், பரவசம், முழுமையான நிம்மதி போன்றவற்றை நீங்கள் உணர்ந்த தருணங்கள் எவை எவை என்று சொல்லுங்கள்? அவை எல்லாம் நீங்கள் எதைப் பற்றியுமே சிந்திக்காமல் சும்மா இருந்த நொடிகள்தான். அந்த நொடிகளில் நீங்கள் இருந்தீர்கள் அவ்வளவுதான். உங்கள் எண்ணங்கள் சிந்திக்காவிட்டாலும் இப்பிரபஞ்சம், படைப்பு எல்லாமே இருந்தது. இருக்கிறது.
உண்மையில் இந்த எண்ணங்கள் என்றால் என்ன? எண்ணங்கள் என்பது நீங்கள் சேகரித்து மறுபயன்பாடு செய்யும் தகவல்கள். இதுவரை உங்கள் மனம் சேகரிக்காத எதையேனும் நீங்கள் சிந்திக்க முடியுமா? மனித மனம் எப்போதும் பழைய தகவல்களை மீண்டும் மீண்டும் மறுபயன்பாடு செய்கிறது.
வாழ்க்கை செயல் முறையோடு ஒப்பிட்டால், உங்கள் சிந்தனை செயல்முறை மிக மிக சிறிய நிகழ்வு.
ஆனால் இன்று உங்கள் வாழ்வை விட அது மிகவும் முக்கியம் ஆகிவிட்டது . இது உடனடியாக மாற வேண்டும் வாழ்க்கை செயல்முறைக்குரிய முக்கியத்துவத்தை நாம் அதற்கு வழங்கிய ஆகவேண்டும். இது மிகவும் அவசியமான அவசரத்தேவை . நம் வாழ்வே செயலைச் சார்ந்துதான் இருக்கிறது.
“நவீன தர்க்க அறிவின் தந்தை” என்று அழைக்கப்படும் கிரேக்க மாமேதையான அரிஸ்டாட்டில் ஒருமுறை கடற்கரையில் உலாவி கொண்டிருந்தார்.
அங்கு பிரமாதமானதொரு சூரிய அஸ்தமனம் நிகழ்ந்து கொண்டிருந்தது .மக்கள் அதனை ரசித்துக் கொண்டிருந்தனர். ஆனால் அவருக்கு இது போன்ற அற்ப நிகழ்வுகளை பார்க்க நேரம் ஏது? இப்படைப்பின் மாபெரும் பிரச்சினை ஒன்றைப் பற்றி அவர் சிந்தித்துக் கொண்டிருந்தார்.
தர்க்கரீதியாக சிந்திக்கும் மனதுக்கு, இப்படைப்பு எப்போதுமே சிக்கலான பிரச்சனைதான். அதற்கான தீர்வைதான் அரிஸ்டாட்டில் மும்முரமாக சிந்தித்துக் கொண்டிருந்தார். இந்த தீவிர சிந்தனையில் ஆழ்ந்து அவர் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார்.
அதே கடற்கரையில் மற்றொரு மனிதர் மிகத்தீவிரமாக வேற ஒரு செயலில் ஈடுபட்டு இருந்தார். அவரின் செயல் தீவிரம் சிறிது நேரத்தில் அரிஸ்டாட்டிலின் கவனத்தை ஈர்த்து விட்டது. பொதுவாக தம் சிந்தனையில் ஆழ்ந்து இருப்பவர்கள் தங்களைச் சுற்றியிருக்கும் உலகை கவனிக்க மாட்டார்கள்.
ஆனாலும் அரிஸ்டாட்டில் ஆழ்ந்த சிந்தனையை விட்டு விட்டு அவரிடம், “நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டார்.
அதற்கு அந்த மனிதர், “தயவு செய்து என்னை தொந்தரவு செய்யாதீர்கள். நான் மிக முக்கியமான ஒன்றை செய்து கொண்டிருக்கிறேன்” என்று சொல்லிவிட்டு மீண்டும் தன் வேலையில் முழு உத்வேகத்துடன் ஈடுபட்டார்.
இது அரிஸ்டாடிலின் ஆர்வத்தை தூண்டியது. மீண்டும் கேட்டார். ”சரி ஆனால் நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று சொல்லுங்களேன்.”
அதற்கு அந்த மனிதர், “என்னை தொந்தரவு செய்யாதீர்கள். நான் மிக மிக முக்கியமான வேலையில் ஈடுபட்டு இருக்கிறேன்” என்றார்.
“அப்படி என்ன முக்கியமான வேலை? என்று அழுத்திக் கேட்டார் அரிஸ்டாடில்.
இப்போது அம்மனிதர் தான் தோண்டியிருந்த சிறு குழியை காண்பித்து, “கடல்நீர் முழுவதையும் இந்த குழிக்குள் இடம் மாற்ற நான் முயன்று கொண்டிருக்கிறேன்” என்றார். அவர் கையில் ஒரு டேபிள்ஸ்பூன் மட்டும் இருந்தது .
இதை பார்த்ததும் அரிஸ்டாட்டில் வாய்விட்டு சிரித்தார்.
“என்ன பைத்தியக்காரத்தனம் இது உண்மையிலேயே உங்கள் புத்தி மழுங்கி விட்டது இந்த கடல் நீர் எவ்வளவு பெரியது என்று தெரியுமா? உங்களுக்கு அந்த கடல் நீர் முழுவதையும் இந்த சிறு குழிக்குள் எப்படி இடம் மாற்ற முடியும் அதுவும் ஒரு டேபிள் ஸ்பூன் கொண்டு குறைந்தபட்சம் ஒரு வாளியை வைத்து இருந்தாலாவது பரவாயில்லை அதுவுமில்லை. தயவு செய்து இந்த முயற்சியை கைவிட்டு விடுங்கள் இது சுத்த முட்டாள்தனம்” என்றார்.
அம்மனிதர் நிமிர்ந்து அரிஸ்டாட்டிலைப் பார்த்தார். அந்த டேபிள் ஸ்பூனைக் கீழே எறிந்தார். பின்பு சொன்னார்” என் வேலை முடிந்துவிட்டது” என்று!
அதற்கு அரிஸ்டாட்டில், “என்ன சொல்கிறீர்கள்? உங்கள் வேலை எப்படி முடிந்தது ? கடல்நீர் முழுவதையும் இடம் மாற்றுவது ஒரு புறம் இருக்கட்டும். நீங்கள் தோண்டிய இந்த சிறுகுழி கூட இன்னும் நிறையவில்லையே” என்று கேட்டார்.
அதற்கு அம்மனிதர், “நான் இக்கடல் நீர் முழுவதையும் இந்த சிறு குழியில் இடம் மாற்றம் செய்தேன். அதுவும் ஒரு சிறிய டேபிள் ஸ்பூன் கொண்டு . இது சுத்த பைத்தியக்காரத்தனம் என்று சொன்னீர்கள். ஆனால் நீங்கள் என்ன செய்ய முயன்று கொண்டிருக்கிறீர்கள்? இந்தப் படைப்பும் இந்த பிரபஞ்சமும் எத்தனை எத்தனை பெரியது என்று உங்களுக்கு தெரியுமா? அதில் இதுபோல் நூறு கோடி கடல்கள் என்ன, அதற்கு மேலும் கூட உள்ளடக்க முடியும். ஆனால் அத்தகையதை, உங்கள் மூளை என்னும் சிறு குழிக்குள் உள்ளடக்க நீங்கள் முயலவில்லையா? அதுவும் எதைக்கொண்டு? டேபிள் ஸ்பூன் போன்ற உங்கள் எண்ணங்களைக் கொண்ட ! தயவுசெய்து இம்முயற்சியை நீங்கள் கைவிட்டு விடுங்கள். இது சுத்த முட்டாள்தனம் என்று கூறி நகர்ந்தார்.
அந்த மனிதர்தான் ஹெராக்ளிடஸ் (Heraclitus) கிரேக்க நாட்டின் மற்றுமொரு பெரிய தத்துவஞானி. வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் தன் தர்க்க அறிவை செயல்படச் செய்து அரிஸ்டாட்டில் எப்படிப்பட்ட குறுகிய, முடமான வாழ்வை வாழ்ந்து கொண்டிருந்தார் என்பது அவருக்கு இவர் உணர்த்தினார்.
– ‘உன்னை அறியும் விஞ்ஞானம்’ நூலிலிருந்து
பின்னூட்டம்….
Hajamohideen Mohamed Nizam
உங்களுக்குள்ளேயே கவனித்துப் பார்க்க வேண்டாமா என்ற இறை அறிவுறுத்தலை நடைமுறைப்படுத்தினால் இக்கேள்வி விடை கிடைத்து விடும். அல்லது கேள்வி எழுந்திராது.
அல்லாஹ் அனைத்திலும் அத்தாட்சிகளையும், படிப்பினைகளையும் வைத்திருப்பதாகக் கூறி, அவற்றைப் பற்றி சிந்திக்க வேண்டாமா எனவல்லவா நம்மிடம் கேட்கிறான்!
பார்வைகள் அவனை அடைய முடியாது எனினும், கருணையாளனான அவன் அனைத்துப் பார்வைகளையும் தான் அடைந்து விடுவதாகக் கூறியதனால், அனைத்துக்கும் தனக்குள்ளே விடை தரும் வழி அதனுள் உள்ளதைத்தானே கூறுகிறது.
ஓரே இரவில் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அண்மையிலுள்ள பள்ளிக்கு அழைத்துச் சென்ற அல்லாஹ், அண்ணலாருக்கு அனைத்தும் காட்டப்பட்டது எனக் கூறியிருப்பதில் அனைத்துக்கும் உரிய, அரிய பதில்கள் மறைந்து உள்ளனவல்லவா!
குறுமுனியான அகத்தியர் கடலைத் தன் கெண்டியுள் அடக்கி விட்ட ஞானமும் திறனும் மனிதனுக்கு இருந்துள்ளதை நாமும் அறிவதன் மூலம், அல்லாஹ் மனிதனைத் தன் சூரத்தில் படைத்து, வானோரை சுஜூது செய்ய வைத்து, கற்பித்து, விளக்கியும் தந்து, அனைத்தையும் வசப்படுத்தித் தந்து, தனது பிரதிநிதியாகவும் நம்மை ஆக்கியதன் மர்மம் வெளியாகிறதல்லவா!
எண்ணங்களில் அதிகமானவை பாவம் என்பதும் அவன் அறிவிப்பே!
அல்ஹம்துலில்லாஹ்!
source: https://www.facebook.com/photo/?fbid=2825002764425727&set=a.1412423615683656