சுத்திகரிப்பு நாள் – ரஹ்மத் ராஜகுமாரன்
உடலின் இயற்கையான சுழற்சியைக் கவனித்தால் “மண்டலம்” என்று ஒன்று இருப்பதை நீங்கள் உணர்வீர்கள். இந்த மண்டலம் நிலவின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டது.
ஒரு மண்டலம் என்பது 40 – 48 நாட்களுக்குள் உடலில் ஏற்படும் சுழற்சி. இந்த ஒவ்வொரு சுழற்சியிலும் உடலுக்கு உணவு தேவைப்படாத மூன்று நாட்கள் இருக்கும்.
உங்கள் உடல் எப்படி வேலை செய்கிறது என்பதை நீங்கள் கவனித்தால் உடலுக்கு உணவு தேவைப்படாத நாளை நீங்கள் மிக எளிதாக கண்டு கொள்வீர்கள். அன்றைய தினத்தில் அதிக பிரயத்தனம் படாமலேயே, நீங்கள் உணவு உண்ணாமல் இருக்க முடியும்.
நாய்களுக்கும் பூனைகளுக்கும் கூட இது பற்றிய விழிப்புணர்வு உண்டு. அது போன்ற நாட்களில் அவை உணவு உண்பதை தவிர்த்து விடுகின்றன.
“உணவு வேண்டாம்” என்று உடல் சொல்லும் அந்த நாள்தான் சுத்திகரிப்பு நாள். இந்த நாள் மனிதருக்கு மனிதர் மாறுபடலாம் .ஆனால் எந்த நாளில் தங்களுக்கு உடல் உணவின்றி இருக்கவேண்டும் என்பதை பலரும் உணராததால் இந்துப் பாரம்பரியத்தில் “ஏகாதசி” நாளை இதற்கென்று குறித்து வைத்தார்கள்.
நிலவின் சுழற்சியை வளர்பிறை தேய்பிறை என்று இரண்டாக பிரிக்கலாம். இந்த வளர்பிறை தேய்பிறை ஒவ்வொரு பாகத்திலும் பதினோராவது நாள் ஏகாதசி எனப்படுகிறது.
அதனால் இரண்டு ஏகாதசிகளுக்கிடையே 14 நாட்கள் இடைவெளி இருக்கும். பாரம்பரியமாகவே இந்த நாளைத்தான் உணவை தவிர்த்து விரதம் இருக்கும் நாளாக இந்துக்கள் கடைப்பிடித்து வந்தார்கள்.
இன்று இதை உடல் – சுத்திகரிப்பிற்காக என்று வைத்துக் கொண்டாலும், இதன் உண்மையான உள் நோக்கம் உடலையும் மனதையும் தேவையான வகையில் தயார் செய்வதற்காக நோற்கப்படும் நோன்பாகும்.
உலகத்தின் எல்லா ஆன்மீக பாரம்பரியங்களும் சில குறிப்பிட்ட நாட்களில் விரதம் இருக்குமாறு வலியுறுத்தப்படுகிறது.
இந்த விரதம் நிலவின் சுழற்சியை சார்ந்து நிர்ணயிக்கப்பட்டது இது. ஏனெனில் நிலவின் சுழற்சியில் சில குறிப்பிட்ட நாட்களில் நீர், காற்று மற்றும் சூரிய ஒளியில் இருந்து சக்தி பெறும். உங்கள் திறன் அதிகமாக இருக்கும்.
பெண்கள் சந்திர மாதக்கணக்கின்படி 28 நாட்களில் உடலில் அசுத்தங்கள் நீங்க மூன்று நாட்கள் மாதவிடாய் ஏற்படுகிறது.
உணவு தேவைப்படாத மூன்று நாட்களில் இந்த திறன் என்பது விழிப்புணர்வோடு இருத்தல் ஆகும். நீங்கள் செய்யும் சின்ன விஷயமும் கூட உடலோடு நீங்கள் கொண்டிருக்கும் ஆழமான அடையாளத்தை தகர்க்க உதவும்.
உடலோடு நீங்கள் கொண்டிருக்கும் அடையாளம் குறைய குறைய உங்களின் மற்ற பரிமாணங்கள் இயல்பாகவே உங்கள் கவனத்திற்கு வரும் .
மாதந்தோறும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பதும், ரமளானில் நோன்பு நோற்பதும் காலமெல்லாம் நோன்பு நோற்பதாக அமையும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர் அபூகதாதா ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத்)
”நீர் மாதத்தில் மூன்று நோன்புகளை நோற்றால் அதை பிறை பதிமூன்று, பதினான்கு, பதினைந்து ஆகிய நாட்களில் நோற்குமாறு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர் அபூதர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: திர்மிதி, நஸயீ, அஹ்மத்)
ஒரே ஒரு வேளை கூட உணவு இல்லாமல் இருக்க முடியாது என்பதுபோல் உணவின் மீது நீங்கள் அதிக பற்று கொண்டு இருந்தால், நீங்கள் உணவை தவிர்த்துவிடுங்கள்.
இதை செய்து பாருங்கள் ஒரு நாள் நீங்கள் மிகவும் பசியாக இருக்கும் போது அல்லது உங்களுக்கு மிகப் பிடித்தமான உணவுகள் சமைக்கப்படும் போது அந்த வேளை உணவை தவிர்த்து பாருங்கள் இது உங்களை நீங்கள் சித்தரவதை செய்து கொள்ள வேண்டும் என்பதற்காக சொல்லப்படவில்லை. ஆனால் உங்களுடைய மன வலிமை அதிகமாகி விடவும் நீங்கள் விழிப்புணர்வு பெறவும் இது வழி வகுக்கிறது.
உங்களுக்கு மிக அதிகமாகப் பசி எடுக்கும்போது ‘உண்டால்’ போதுமே என்று உங்கள் உடல் பரபரக்கும் போது, உங்கள் உணவை வேறொருவருக்கு கொடுத்தால், நீங்கள் இன்னும் மனவலிமை பெற்றவர்களாகி விடுவீர்கள். இது உடல்மீதும், உணவு மீதும் நீங்கள் கொண்டிருக்கும் பற்றை அது தகர்த்துவிடும்.
அன்னை பாத்திமா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சியைக் கண்டு மனம் மகிழ்ந்த அல்லாஹ், ஒரு வசனத்தை திருமறை குர்ஆனில் இறக்கி வைத்து, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மூலம் அன்னை பாத்திமா ரளியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு சுபச்செய்தி சொன்னான். இந்த நிகழ்வை காண்போம்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எப்படி தன் வாழ்க்கையை வறுமையோடு ஒன்றிணைந்து அமைத்துக் கொண்டார்களோ, அதே அடிச்சுவட்டைப் பின்பற்றி அவரது மகள் பாத்திமா ரளியல்லாஹு அன்ஹா அவர்களும் தன் வாழ்வை வறுமையோடு தோழமை கொண்டே வாழ்ந்து வந்தார்கள்.
ஒரு முறை பாத்திமா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் மகன்கள் இருவரும் ஒரு கொடிய நோயால் பாதிக்கப்பட்டனர்.
அந்த சூழ்நிலையில் அன்னை பாத்திமா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் இறைவனிடம் இவ்வாறு பிரார்த்தனை செய்தார்கள்:
‘என் அருமைச் செல்வங்கள் இந்த நோயிலிருந்து வெகுவிரைவில் மீண்டு வருவார்களேயானால், நான் இதற்கு பதிலாக, இறைவனுக்கு நன்றி செலுத்த மூன்று நாட்கள் நோன்பு நோற்பேன்’.
இதனை அறிந்த அலி ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் பாத்திமா ரளியல்லாஹு அன்ஹா அவர்களோடு தானும் இணைந்து, நோன்பு வைக்க பிரார்த்தனை செய்து கொண்டார்கள்.
அல்லாஹ்வும் அவர்கள் பிரார்த்தனையை ஏற்றுக்கொண்டு, அருமைச் செல்வங்கள் இருவரையும் அந்த நோயிலிருந்து காப்பாற்றி சுகமளித்தான். எனவே அவர்கள் இருவரும் நேர்ச்சையை நிறைவேற்ற எண்ணம் கொண்டார்கள்.
கடும் கோடை வெயில், அலி ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒரு ஈச்சமரத் தோப்பிற்கு நீரிறைத்து விடும் வேலையை ஒப்புக்கொண்டார்கள். மிகவும் குறைந்த தினக்கூலிக்கு வேலை செய்தார்கள். வேலை முடிந்த மாலை வேளையில் சொற்பமான கூலியை பெற்றுக் கொண்டு கடைத்தெருவிற்கு வந்தார்கள்.
அங்கே அவர்கள் கைவசம் இருந்த சொற்பத் தொகையில், நன்றாக சலிக்காத கோதுமை மாவைத்தான் அவர்களால் வாங்க முடிந்தது.
பாத்திமா ரளியல்லாஹு அன்ஹா அவர்களும் கல் திருவையில் போட்டு முடிந்த அளவிற்கு அதனை அரைத்து ரொட்டிக்கான மாவை தயார் செய்தார்கள். நோன்பு திறக்கும் நேரம் நெருங்கியது. மாவை தண்ணீர் விட்டு பிசைந்து ரொட்டிகளைத் தயார் செய்தார்கள்.
கணவன்-மனைவி இருவரும் நோன்பு திறப்பதற்காக அமர்ந்திருந்த வேளையில், அவர்கள் வீட்டு வாசலில் ஒரு அபயக்குரல்..,
“சொர்க்கத்தின் தலைவியே! அன்னை பாத்திமாவே! நான் ஒரு பரம ஏழை. பசியாறி பல நாட்கள் ஆகிவிட்டன. என்னால் நடக்க முடியாத அளவு பலவீனப்பட்டு போனேன். அன்னையே! என் பசி தீர ஏதாவது உணவளியுங்கள்” என்று வேண்டி நின்றார்.
நோன்பு திறக்கும் வேளை. இருப்பதோ குறைந்த உணவு, என்ன செய்வது? இருவருமே அந்த உணவை ஏழைக்கு வழங்கி விட முடிவு செய்தார்கள். அதன்படி ஏழைக்கு அந்த உணவை வழங்கி விட்டு, அன்றைய தினம் தண்ணீரைக் கொண்டே நோன்பை நிறைவு செய்தார்கள்.
மறுநாள் இரண்டாம் நோன்பு. அதே கடின உழைப்புக்குப் பின் அதே சொற்பமான கூலியைப் பெற்று கோதுமை மாவினை வாங்கி வந்தார் அலி (ரலி) அவர்கள். அன்றும் நோன்பு திறக்கும் நேரம் வாசலிலிருந்து ஒரு அழுகுரல். “நானோ அநாதை, ஆதரிப்பார் யாருமில்லை. பசியை போக்க வழியும் தெரியவில்லை. அருமை நபிகளாரின் அன்பு மகளே, பாத்திமாவே! எனக்கு உணவு தந்து உதவுங்கள்” என்று குரல் ஒலித்தது.
சற்றும் சிந்திக்கவில்லை. தம்பதியர் இருவரும், அன்று தயார் செய்த ரொட்டியையும் அந்த அநாதையின் பசி தீர்க்க வழங்கி விட்டு தண்ணீர் மட்டும் குடித்து நோன்பினை நிறைவு செய்தார்கள்.
மூன்றாம் நாள், அன்றும் இருவரும் நோன்பு நோற்றார்கள். நோன்பு திறக்கும் நேரத்தில் வாசலில் அதே வேண்டுகோளோடு ஒரு புதிய குரல். “நான் சற்று முன்பு தான் சிறையிலிருந்து மீண்டு வந்த சிறைக்கைதி. என்னை இங்கே யாரும் ஆதரவு கரம் நீட்டி அரவணைக்கவில்லை. மாறாக சிறைக்கைதி என்று என்னை விரட்டியடிக்கிறார்கள். திக்கற்ற நிலையில் உங்களிடம் வந்து விட்டேன். அன்னையே! எனக்கு உணவு தந்து ஆதரியுங்கள்” என்றது.
கணவன்-மனைவி இருவரும் மனம் இளகியவர்களாக, அன்றும் தங்களிடம் இருந்த உணவைக்கொடுத்தார்கள்.
பின்னர் இறைவனிடம் கையேந்தி அன்னை பாத்திமா இவ்வாறு பிரார்த்தனை செய்தார்கள்:
“எங்கள் இறைவா! எத்தனையோ பேரை எங்களை விட வறுமையில் வாழச் செய்திருக்கிறாய். அப்படிப்பட்டவர்களை விட எங்களை மேலாக்கி வைத்துள்ளாய். அது மட்டுமல்ல, ஏழைகளுக்கு எங்களால் உதவக்கூடிய வகையில் எங்களை மேன்மைப்படுத்தியும் வைத்துள்ளாய். வறுமையிலும் தர்மம் செய்யக்கூடிய மாபெரும் பாக்கியத்தை தந்த ரஹ்மானே, எல்லாப் புகழும் உனக்கே. எங்களின் இந்த நற்செயலை ஏற்றுக்கொள்வாயாக”.
இந்த பிரார்த்தனையை ஏற்றுக்கொண்ட அல்லாஹ், மிகவும் மனம் மகிழ்ந்தவனாக, அந்த நற்செயலை தான் ஏற்றுக்கொண்டதின் அடையாளமாக கீழே சொல்லப்பட்ட திருக்குர்ஆன் வசனத்தை இறக்கிவைத்தான்.
“மேலும் அல்லாஹ்வின் மீதுள்ள அன்பின் காரணமாக ஏழைகளுக்கும், அனாதைகளுக்கும், சிறைப்பட்டவர்களுக்கும் உணவளிப்பார்கள்” (திருக்குர்ஆன் 76:7-8)
தன் தேவையைப் பிற்படுத்தி பிறரின் தேவைக்கு முன்னுரிமை வழங்கிய இந்த சம்பவத்திலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள நிறையவே இருக்கிறது
– ரஹ்மத் ராஜகுமாரன்