வரலாற்றுப் பொன்னேடு
அப்துல் முத்தலிப் இப்னு ரபீஆ பின் அல்ஹாரிஸ் ரலியல்லாஹ் அன்ஹு அவர்கள் கூறினார்கள்:
(என் தந்தை) ரபீஆ இப்னு அல்ஹாரிஸ் (ரலியல்லாஹ் அன்ஹு) அவர்களும் (என் பாட்டனாரின் சகோதரர்) அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிப் (ரலியல்லாஹ் அன்ஹு) அவர்களும் (ஓரிடத்தில்) ஒன்றுகூடி, (என்னையும், ஃபள்ல் பின் அப்பாஸையும் சுட்டிக்காட்டி)
“இவ்விரு இளைஞர்களையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் அனுப்பி, அவ்விருவரையும் இந்தத் தர்மப்பொருட்களை வசூலிக்கும் பொறுப்பில் அமர்த்துமாறு கேட்கச் சொல்வோம். (அவ்வாறு இவர்கள் அமர்த்தப் பட்டால்), மக்கள் வழங்குகின்ற (ஸகாத்)தை அவர்கள் இருவரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் ஒப்படைப்பார்கள். (இந்தப் பணிக்காக) மக்களுக்குக் கிடைக்கின்ற (சன்மானப்) பொருள் இவர்களுக்குக் கிடைக்கும்” என்று பேசிக்கொண்டனர்.
இவ்வாறு அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போதே அலீ இப்னு அபூதாலிப் (ரலியல்லாஹ் அன்ஹு) அவர்கள் அங்கு வந்து அவர்களுக்கு முன்னால் நின்றார்கள். அப்போது அவர்கள் இருவரும் அலீ (ரலியல்லாஹ் அன்ஹு) அவர்களிடம் அ(வர்களிருவரும் பேசிக்கொண்ட)தைத் தெரிவித்தனர்.
அதைக் கேட்ட அலீ இப்னு அபீதாலிப் (ரலியல்லாஹ் அன்ஹு) அவர்கள், “அவ்வாறு செய்யாதீர்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அவ்வாறு செய்யமாட்டார்கள்” என்று கூறினார்கள்.
ரபீஆ இப்னு அல்ஹாரிஸ் (ரலியல்லாஹ் அன்ஹு) அவர்கள் அலீ (ரலியல்லாஹ் அன்ஹு)அவர்களை நோக்கி,
“அல்லாஹ்வின் மீதாணையாக! எங்கள்மீதுள்ள பொறாமையால்தான் இவ்வாறு நீங்கள் செய்கிறீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களு(டைய மகளை மணமுடித்துக் கொண்டதன் மூலம் அவர்களு)டன் திருமண பந்தத்தை அடைந்து கொண்டு விட்டீர்கள். அதைக் கண்டு நாங்கள் உங்கள் மீது பொறாமை கொள்ளவில்லையே!” என்று கூறினர்.
அதற்கு அலீ (ரலியல்லாஹ் அன்ஹு) அவர்கள், “(சரி) அவர்கள் இருவரையும் அனுப்பிவையுங்கள்” என்று கூறினார்கள்.
நாங்கள் இருவரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை நோக்கி நடந்தோம். அலீ (ரலியல்லாஹ் அன்ஹு) அவர்கள் (அங்கேயே) சாய்ந்து படுத்துக் கொண்டார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் லுஹர் தொழுகையை முடித்ததும் அவர்களது அறையை நோக்கி நாங்கள் (இருவரும்) முந்திக்கொண்டு சென்று, அவர்களது அறைக்கு அருகில் நின்றோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் வந்து எங்களுடைய காதுகளைப் பிடித்து, “நீங்கள் இருவரும் உங்கள் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்துங்கள்” என்று கூறினார்கள்.
*(الكتاب : صحيح مسلم باب ترك استعمال آل على الصدقة )*
பிறகு அறைக்குள் நுழைந்தார்கள். நாங்களும் உள்ளே நுழைந்தோம்.
அன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் (தம் துணைவியார்) ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலியல்லாஹ் அன்ஹா) அவர்களிடம் தங்கியிருந்தார்கள்.
நாங்கள் இருவரும் (“நீ பேசு, நீ பேசு” என) ஒருவரையொருவர் பேசச்சொல்லிக் கொண்டிருந்தோம்.
பிறகு எங்களில் ஒருவர், “அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் மக்களிலேயே மிகவும் ஈகை குணம் கொண்டவரும் உறவினர்களை நன்கு அரவணைத்துக்கொள்பவரும் ஆவீர்கள். நாங்கள் மணமுடிக்கும் வயதை அடைந்துவிட்டோம். எனவே, இந்தத் தானதர்மங்களை வசூலிக்கும் பொறுப்புகளில் ஒன்றில் எங்களை நீங்கள் நியமிப்பதற்காக நாங்கள் வந்துள்ளோம். மக்கள் வழங்கும் ஸகாத் பொருட்களை அப்படியே உங்களிடம் கொண்டுவந்து ஒப்படைப்போம். (இப்பணிக்குச் சன்மானமாக) அவர்கள் பெற்றுக்கொள்வதை நாங்களும் பெற்றுக்கொள்வோம்” என்று கூறினார்.
இதைக் கேட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் நீண்டநேரம் அமைதியாக இருந்தார்கள்.
இறுதியில் அவர்களிடம் நாங்களே பேசலாமா என்று எண்ணினோம். (இதற்குள்) ஸைனப் (ரலியல்லாஹ் அன்ஹா) அவர்கள் திரைக்கு அப்பாலிருந்து பேசவேண்டாம் என எங்களுக்குச் சைகை செய்யலானார்கள்.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், “தர்மப் பொருள் முஹம்மதின் குடும்பத்தாருக்குத் தகாது. (ஏனெனில்,) அவை மக்களின் (செல்வத்திலிருந்து வரும்) அழுக்குகள்தாம்” என்று கூறிவிட்டு, “(பனூ அசத் கூட்டத்தைச் சேர்ந்தவரான) மஹ்மியாவையும், நவ்ஃபல் பின் அல்ஹாரிஸ் பின் அப்தில் முத்தலிபையும் என்னிடம் வரச் சொல்லுங்கள்” என்று கூறினார்கள். (அப்போது மஹ்மியா (ரலியல்லாஹ் அன்ஹு) அவர்கள் போரில் கிடைத்த ஐந்தில் ஒரு பாகம் (குமுஸ்) நிதியைப் பாதுகாக்கும் பொறுப்பில் இருந்தார்கள்.)
அவர்கள் இருவரும் வந்தபோது மஹ்மியா (ரலியல்லாஹ் அன்ஹு)அவர்களிடம், “இந்த இளைஞருக்கு (ஃபள்ல் பின் அப்பாஸுக்கு) உங்களுடைய மகளை மணமுடித்து வையுங்கள்” என்று கூறினார்கள்.
அவ்வாறே மஹ்மியா (ரலியல்லாஹ் அன்ஹு) அவர்கள் மணமுடித்து வைத்தார்கள். பிறகு நவ்ஃபல் இப்னு அல்ஹாரிஸ் (ரலியல்லாஹ் அன்ஹு)அவர்களிடம், (என்னைச் சுட்டிக்காட்டி), “இந்த இளைஞருக்கு உங்களுடைய மகளை மணமுடித்து வையுங்கள்” என்று கூறினார்கள்.
அவ்வாறே நவ்ஃபல் (ரலியல்லாஹ் அன்ஹு) அவர்கள் எனக்கு(த் தம்முடைய மகளை) மணமுடித்து வைத்தார்கள்.
மேலும், மஹ்மியா (ரலியல்லாஹ் அன்ஹு) அவர்களிடம் “இவர்கள் இருவருக்காகவும் போரில் கிடைத்த ஐந்தில் ஒருபாகம் நிதியிலிருந்து இன்ன இன்னதை மணக்கொடையாக (மஹ்ர்) கொடுங்கள்” என்று கூறினார்கள்.