அழகும் ஆபத்தும் – ரஹ்மத் ராஜகுமாரன்
கவர்ச்சிகரமான ஆணோ, பெண்ணோ அவர்கள் கவர்ச்சியால் வசீகரமாக உங்களை ஈரக்கிறார்கள். அவர்களின் பிடியில் நீங்கள் அகப்பட்டுக் கொண்டால் முதலில் உங்களுக்கு பயம் ஏற்படும். பின் நீங்கள் அவர்களுக்கு அடிமையாகவே மாறி விடுவீர்கள்.
அவர்கள் அழகானவர்கள். நீங்கள் அவர்களை சார்ந்திருக்க விரும்பலாம்; அவர்களை சார்ந்திருப்பது என்றால் உங்கள் சுதந்திரத்தை அவர்களிடம் இழப்பதாக அர்த்தம். ஒத்துக் கொள்கிறீர்களா?
அவர்களைச் சார்ந்து இருக்கும்போது அதன் பிறகு நீங்கள் நீங்களாக இருக்க முடியாது. காரணம் அவர்கள் கவர்ச்சியானவர்கள். எப்போதும் அவர்களைப் பற்றியே சிந்தனை. அவர்களை விட்டு விலக உங்களால் முடியவே முடியாது. நீங்கள் அவர்களைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு இருக்கிறீர்கள்.
உங்கள் சுபாவம் குறித்து உங்களுக்குத் தெரியும். அவர்கள் எவ்வளவு கவர்ச்சியாக இருக்கிறார்களோ அந்த அளவுக்கு அவர்களைப் பிடித்துக் கொண்டு நீங்கள் தொங்கிக் கொண்டிருக்கிறீர்கள் . நீங்கள் மேலும் மேலும் சார்ந்திருக்க முயல்கிறீர்கள். அதுவே பயத்திற்கு காரணம்.
உலகின் அழகான பெண்ணை விரும்பும் ஒருவர் அவள் தனக்கு மட்டுமே விசுவாசமாக நடந்து கொள்ள வேண்டும். தனக்காக அவள் தன்னை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அது மிகவும் சிரமமான காரியம். நடக்க முடியாத ஒன்றை கேட்கும் செயல்.
ஒரு பெண் அழகாக உங்களுக்குத் தோன்றினால், நீங்கள் அழகாக இல்லை என்பது அது காட்டுகிறது . நீங்கள் பயப்படவும் செய்கிறீர்கள் . உங்களுக்கு அந்தப் பெண் அழகாகத் தோன்றினால் மறுபக்கம் என நடக்கிறது? நீங்கள் மிகவும் அழகாக இல்லை அதனால் அவள் உங்களை விட்டு விலகி விடலாம் என்று பயப்படுகிறீர்கள். அந்தப் பயத்திலேயே பொய்யான அன்பை போலியாக செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறீர்கள்.
யாரும் பிறரைச் சார்ந்து இருக்க விரும்புவது கிடையாது. சுதந்திரம் என்பது உன்னதமான மதிப்புமிக்கது சுதந்திரத்தை காட்டிலும் அன்பு பெரிய விஷயமல்ல; சுதந்திரம் உன்னதமான மதிப்புள்ளது அன்பு அதற்கு அடுத்தபடியானதான் அன்புக்கும், சுதந்திரத்திற்கும் இடைவிடாத சச்சரவு நடந்துகொண்டிருக்கிறது. அன்பு உன்னதமான மதிப்பை எட்ட முயல்கிறது அதனால் முடிவதில்லை எனவே சுதந்திரத்தை அது அழித்துவிட முயல்கிறது. அப்புறம் அதன் உன்னத இடத்தை பிடித்து விடலாகுமே?
சுதந்திரத்தின் மீது ஆசை உள்ளவர்கள் அன்பை கண்டு பயம் கொள்கிறார்கள்.
நகரில் இருந்த மிக அசிங்கமான பெண்ணை முல்லா நஸ்ருதீன் மணந்துகொண்டார். யாரும் அதை நம்பவில்லை. ஜனங்கள் அவரிடம் “நஸ்ருதீன் உங்களுக்கு என்ன ஆயிற்று?” என்று கேட்டார்கள்.
அதற்கு அவர் “அது தர்க்க ரீதியான உளவியல் விஷயம் அடங்கி இருக்கிறது. இந்த ஒரு பெண்ணிடமிருந்துதான் நான் எந்நேரமும் தப்பித்துவிட முடியும். உண்மையில் தப்பிப்பது மிக சிரமமான காரியமல்ல.
நகரில் உள்ள பெண்களில் இவள் மட்டும்தான் நம்பலாம். அழகான பெண்கள் நம்பிக்கைக்குரியவர்கள் அல்லர். எளிதாக அவர்கள் காதல் வயப்பட்டு விடலாம். ஏனென்றால் பல பேர் அவளால் கவரப்படுகிறார்கள். இந்தப் பெண்ணை நான் நம்பலாம். எனக்கு எப்போதுமே விசுவாசமாக இருப்பாள். அவளைப் பற்றி நான் கவலைப்பட, பயப்பட தேவையில்லை. நான் பல மாதங்கள் வெளியூரில் தங்கி இருக்கலாம். நான் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை எனது பெண்மணி என்னுடையவளாகவே இருப்பாள்” என்றார்.
கவர்ச்சிகரமானவர்கள் பயம் மூட்டுபவர்களாக இருப்பதை நீங்கள் அறிவீர்களா? அது ஏன்? நீங்கள் விழிப்புணர்வும், புரிதலும் இல்லாது போனால் அந்த பயம் உங்களுக்கு நிலைத்து நின்று விடும்.
கவர்ச்சி, பயம் என்ற இரண்டும் அழகு விஷயத்தின் இரண்டு அம்சங்கள். எப்போதும் உங்களை கவரும் ஒரு மனிதரிடம் உங்களுக்கு பயம் இருந்து கொண்டே இருக்கும். பயம் என்றால் நீங்கள் இரண்டாம் தரமான இடத்தில் இருப்பதாக ஆகிறது.
பெண் ஒரு ஆணை விரும்புகிறாள்.அந்த ஆண் உலகிலேயே மிகவும் அழகான செல்வாக்கான நபர். அவர் தன்னிடம் மட்டுமே விருப்பம் கொள்ள வேண்டும் என்று அந்த பெண் நினைக்கிறாள். அது நடக்க முடியாத ஒரு வேண்டுகோள். மிகுந்த அழகும், ஈர்ப்பும் உள்ள அந்த மனிதரிடம் பலர் ஆர்வம் கொண்டிருப்பார்கள். அவர் மீது பலர் ஆர்வம் காட்டியிருக்கலாம்.
அழகான ஆணிற்கு ஏற்பட்ட ஆபத்தும், அந்த ஆணின் ஈர்ப்பால் பெண் அடைந்த அவமரியாதையும். அதனால் அவள் அபாண்டத்தை அவர் மீது சுமத்துவதுப் பற்றி குர்ஆன் நபி யூசுப் _ சுலைகா வரலாற்றில் கூறுகிறது.
وَرَاوَدَتْهُ الَّتِىْ هُوَ فِىْ بَيْتِهَا عَنْ نَّـفْسِهٖ وَغَلَّقَتِ الْاَبْوَابَ وَقَالَتْ هَيْتَ لَـكَ
قَالَ مَعَاذَ اللّٰهِ اِنَّهٗ رَبِّىْۤ اَحْسَنَ مَثْوَاىَ اِنَّهٗ لَا يُفْلِحُ الظّٰلِمُوْنَ
அவரிருந்த வீட்டின் எஜமானி (அவரைக் காதலித்துத் தன்னை அலங்கரித்துக் கொண்டு) எல்லாக் கதவுகளையும் மூடிவிட்டு தன் விருப்பத்திற்கு இணங்குமாறு அவரை “வாரும்” என்றழைத்தாள். அதற்கவர், “(என்னை) அல்லாஹ் பாதுகாத்துக் கொள்வானாகவும்! நிச்சயமாக என் எஜமானாகிய (உன் கண)வர் என்னை மிக்க (அன்பாகவும்) கண்ணியமாகவும் வைத்திருக்கிறார். (இத்தகைய நன்மை செய்பவர்களுக்குத் துரோகம் செய்யும்) அநியாயக்காரர்கள் நலம்பெற மாட்டார்கள்” என்று கூறினார்.
(அல்குர்ஆன் : 12:23)
وَاسْتَبَقَا الْبَابَ وَقَدَّتْ قَمِيْصَهٗ مِنْ دُبُرٍ وَّاَلْفَيَا سَيِّدَهَا لَدَا الْبَابِ قَالَتْ
مَا جَزَآءُ مَنْ اَرَادَ بِاَهْلِكَ سُوْۤءًا اِلَّاۤ اَنْ يُّسْجَنَ اَوْ عَذَابٌ اَلِيْمٌ
(யூஸுஃப் அவளை விட்டுத் தப்பித்துக்கொள்ளக் கருதி வெளியில் செல்ல ஓடினார். அவள் அவரைப் பிடித்துக்கொள்ளக் கருதி அவர் பின் ஓடினாள்.) இருவரும், ஒருவர் ஒருவரை முந்திக் கொள்ள கதவின் பக்கம் விரைந்து ஓடினார்கள். (யூஸுஃப் முந்திக் கொள்ளவே அவருடைய சட்டையைப் பிடித்திழுத்தாள்.) ஆகவே, அவருடைய சட்டையின் பின்புறம் கிழிந்துவிட்டது. அச்சமயம், வாசற்படியில் அவளுடைய கணவர் இருப்பதை இருவரும் கண்டனர். (ஆகவே, அவள் பயந்து, தான் தப்பித்துக்கொள்ளக் கருதி) அவரை நோக்கி “உங்களுடைய மனைவிக்குத் தீங்கிழைக்கக் கருதியவனுக்குச் சிறையில் இடுவதோ அல்லது துன்புறுத்தும் வேதனையைத் தருவதோ அன்றி வேறு தண்டனை உண்டா?” என்று கேட்டாள். (அல்குர்ஆன் : 12:25)
இதுவே ஒரு பெண் பேரழகியாக இருந்ததால் ஏற்பட்ட பிரச்சனையும் குர்ஆன் வர்ணிக்கிறது.
ஆதம் அலை ஹிஸ்ஸலாம் ஹவ்வா அலை ஹிஸ்ஸலாம் தம்பதிகளுக்கு ஒவ்வொரு சூலிலும் ஒரு ஆண், ஒரு பெண் குழந்தைகள் பிறக்கும்.
முதல் பிரசவ ஆணுக்கும் இரண்டாம் பிரசவ பெண்ணுக்கும் திருமணம்.
முதல் பிரசவ பெண்ணுக்கும் இரண்டாம் பிரசவ ஆணுக்கும் திருமணம்.
இது இறைச் சட்டம் காரணம் வேறு மக்கள் எவரும் இல்லை. இப்போது இச்சட்டம் உலகில் எங்குமே இல்லை.
முதல் சூலில் காபிலும் + இக்லீமா என்ற பேரழகியும் இரண்டாம் சூலில் ஹாபிலும் + லுபூதா என்ற குறைவான அழகியும் பிறந்தார்கள்.
காபில் இறைச் சட்டத்தை மீறி தன்னுடன் பிறந்த பேரழகி இக்லீமாவை மணப்பேன் என்று கூற பிரச்சனை காபில், ஹாபீலை கொலை செய்கிறான்.
உலகின் முதல் மரணம் கொலை. அதுவும் ஒரு பெண்ணுக்காக நடந்த கொலை.
ஆக குர்ஆன் கூறிய அழகான ஆண், அழகான பெண் இரண்டு அழகிலும் ஆபத்துதான் மிஞ்சியது.
கவர்ச்சிகரமான மனிதர்களிடம் பயப்பட பல்வேறு காரணங்கள் உள்ளன என்பதை உளவியல் ரீதியாக சொல்லப்படுகிறது.
அழகின் மிக அருகில் ஆபத்தும் இருக்கிறது. ரோஜாவோடுதான் முள்ளும் இருக்கிறது .
– ரஹ்மத் ராஜகுமாரன்