நான்தான்
உங்கள் பள்ளிவாசலின் இமாம் பேசுகிறேன்…
உங்களுக்கு என்னை ஞாபகம் இருக்கிறதா..?
ஒரு நாள் பள்ளியில் தொழுகை முடிந்தவுடன் “ஹழ்ரத்.. எனக்கு குழந்தை பிறக்க இருக்கிறது சாலிஹான குழந்தை பிறக்க துவா செய்யுங்கள்”
என்று நா தழுதழுக்க கூறினீர்களே..! உங்கள் குழந்தைக்காக துவா செய்த இந்த இமாமை உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா..?
குழந்தை பிறந்தவுடன் “ஹழ்ரத்.. எனக்கு குழந்தை பிறந்திருக்கிறது.. குழந்தைக்கு அழகிய பெயர் வைக்க வேண்டும் . வீட்டிற்கு வாருங்கள்”.. என்று என்னை அழைத்துச் சென்று குழந்தைக்கு பெயர் சூட்டி அழகு பார்த்தீர்களே..!
உங்கள் குழந்தைக்கு நான் வைத்த பெயரைச் சொல்லி நாள்தோறும் அழைக்கும் நீங்கள்.. அந்த பெயர் வைத்த இந்த இமாமை மறந்திருக்க நியாயமில்லை..!
“ஹல்றத்… நான் ஒரு புது வியாபாரம் தொடங்கியிருக்கிறேன்.. வியாபாரத்தில் இறைவன் பரக்கத்தை கொடுக்க துஆ செய்யுங்கள்” என்று என்னை கடைக்கு அழைத்துச் சென்று கல்லாவில் உட்காரவைத்து அல்லாஹ்விடம் துஆ செய்ய சொன்னீர்களே..!
வியாபாரத்தில் பரக்கத்திற்காய் துஆ செய்த இந்த இமாமை உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா..?
“ஹல்றத்.. வியாபாரத்தில் நல்ல லாபம்.. புது வீடு ஒன்று கட்டி இருக்கிறேன் நீங்கள்தான் வந்து துவா செய்ய வேண்டும்.. அதன் பின்புதான் நாங்கள் குடியேற வேண்டும்..” என்று என்னை அழைத்துச் சென்று துஆச் செய்ய வைத்தீர்களே..!
இப்படியே புது வீடு, புது வாகனம், புதுக்குடித்தனம் என்று அனைத்தின் பரக்கத்திற்கும் துஆ செய்த இந்த இமாமை உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா..?
“ஹல்றத்.. என் மகனுக்கு திருமணம் நீங்கள் தான் வந்து நல்ல முறையில் நடத்தி வைத்து மண மக்களுக்காக துஆ செய்ய வேண்டும்”. என்று என்னை மேடையில் அமர வைத்து அழகு பார்த்தீர்களே..! என்னை உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா?
இதோ .. அடுத்து உங்கள் மகனின் முறை..
“ஹழ்ரத் எங்கள் வாப்பா மௌத் ஆகிவிட்டார்கள். நல்ல முறையில் ஜனாஸா தொழுக வைத்து, அடக்கம் செய்து துஆ செய்ய வேண்டும்” கண்ணீரோடு உங்களின் அடுத்த தலைமுறை என்னை தொடர்பு கொள்கிறது..
இப்படி உங்கள் ஊரின் ஒவ்வொரு குடும்பத்தினரின் சுக, துக்கத்திலும், உங்களின் நல்வாழ்விற்காகவும், ஒவ்வொரு நிகழ்வின் பரக்கத்திற்காகவும் துஆ செய்த என்னை அவ்வளவு லேசில் நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள்…
ஊரில் செல்வம் படைத்தவர்கள் பலர் இருந்தாலும், மாதந்தோறும் பள்ளிக்கு வருமானங்கள் பல லட்சம் வந்தாலும் பத்தாயிரத்தை தாண்டி கொடுக்க மனம் வந்தது இல்லை உங்களுக்கு.
வானுயர்ந்த மினாராக்களோடு, குளு குளு குளிர்சாதன வசதியுடன் இரண்டடுக்கு பள்ளியாக இருந்தாலும், எங்களுக்கு படிக்கட்டின் கீழ் சிறிய ஒரு அறை.
என் மஹல்லாவாசிகளே..
உங்கள் வாழ்வின் ஒவ்வொரு பொழுதிலும் உங்களின் நல்வாழ்விற்காய் துஆ செய்த நான் தடுமாறி நிற்கும்போது கைதூக்கி விட உங்களுக்கு மனம் வரவில்லையே ஏன்..?
எங்களின் வாழ்க்கை கண்களைப் போல…!
ஆம்… கையில் அடிபட்டால் கண் அழுகும். காலில் அடிபட்டால் கண் அழுகும். தலையில் அடிபட்டால் கண் அழுகும். உடம்பின் எந்தப் பகுதியில் அடிபட்டாலும் கண் உடனே கவலையுடன் கண்ணீர் சிந்தும். ஆனால் கண்ணுக்கு அடிபட்டால் எந்த உறுப்புகளும் கண்ணீர் சிந்துவது இல்லை.
.
அதுபோல் ஊரில் உள்ள ஒவ்வொருவரின் கஷ்டத்திற்காக ஒவ்வொரு பொழுதும் கண்ணீர் சிந்தி துஆ கேட்ட அந்த இமாம் கஷ்டப்படும்போது அவரின் கண்ணீரை துடைக்க ஊரில் உள்ள உங்கள் யாருக்கும் மனம் வரவில்லை.
ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள்…
இந்த இமாம்களுக்கு கஷ்டம் இல்லாத வேலை என்று நீங்கள் நினைப்பது போல் எங்களின் பணி அவ்வளவு சுலபமானது அல்ல.
எங்களின் தியாகம் என்னவென்று உங்களுக்கு தெரியுமா..?
அன்று .. என் வீட்டில் என்னுடைய குழந்தைக்கு கடுமையான ஜுரம் வந்து மருத்துவமனையில் சேர்த்து இருந்தேன். அப்போது உங்கள் வீட்டு கல்யாணம். மண்டபத்தில் நீங்களும் வந்திருப்பவர்களும் கல்யாண சந்தோஷத்தில் மூழ்கி இருக்க.. என் குழந்தையின் நிலை குறித்து உள்ளுக்குள் நான் அழுது கொண்டிருந்தாலும் அந்த சபைக்காக உங்கள் முன் சிரித்துக் கொண்டிருந்தேனே! அதன் வலியை உங்களால் உணர முடியாது.
இன்னொன்றையும் சொல்கிறேன் கேளுங்கள்…
அன்று எங்கள் வீட்டில் ஒரு சந்தோஷமான நிகழ்வு.. குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்கும் சூழலில் அப்போது ஊரில் இன்னார் இறந்துவிட்டார் என்று பள்ளியிலிருந்து அழைப்பு வருகிறது. மையித்தின் வீட்டிற்குச் சென்ற நான் என் வீட்டு சந்தோஷத்தை எல்லாம் மனதினுள் புதைத்துவிட்டு கண்ணீரோடு நின்ற அந்த குடும்பத்தின் சோகத்தில் நானும் சோகத்தோடு பங்கு கொண்டேனே. அந்த உணர்வின் வேதனை என்னவென்று உங்களால் உணர முடியுமா?
நீங்கள் சிரிக்கும்போது நாங்கள் சிரிக்க வேண்டும். நீங்கள் அழும் போது நாங்கள் அழ வேண்டும். இதுதான் உங்கள் ஊர் இமாம் ஆகிய எங்களின் வேதனை கலந்த வாழ்க்கை. அதற்கு உங்களால் எந்த விலையையும் யாராலும் கொடுக்க முடியாது.
எனதருமை இஸ்லாமிய சமூகமே… இமாம்களின் கண்ணியமும் , அவர்களின் தியாகங்களும் புரிந்து கொள்ளாத நிர்வாகிகளை பள்ளியின் பொறுப்புதாரிகளாக நீங்கள் தேர்வு செய்து வைத்திருக்கும் வரை அவர்களால் நாங்கள் ஒரு கடைநிலை ஊழியரை போல், அவரின் அலுவலகப் பணியாளர் போல்தான் மதிக்கப்பட்டு கொண்டிருக்கிறோம். என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
உங்களின் அலுவலகப் பணியாளர் பத்து நிமிடங்கள் தாமதித்து வந்து கூட தன் பணியை பார்த்துக் கொள்ளலாம். ஆனால் தொழுகைக்கான எங்களின் நேரத்தில் ஒரு நிமிடம் கூட நாங்கள் தாமதித்து வந்து தொழுகைக்காக நிற்கமுடியாது… “நேரம் தவறாமை” என்பது எவ்வளவு மிகப்பெரிய ஒரு பணி என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
உங்களுக்கு ஒன்று தெரியுமா..?
எந்த ஊழியனும் எந்த பணியாளனும் நல்லநாள் பொழுதுகளில் உங்களோடு இருக்க மாட்டான். பெருநாளில் அவன் குடும்பத்தோடு சந்தோஷமாக இருப்பான்.
ஆனால் என் போன்ற இமாமின், இமாமின் குடும்பத்தின் உண்மையான பெருநாள் என்பது பெருநாளின் மறுநாள் தான்.
எங்களின் குடும்பங்களை ஊரில் வைத்துக் கொண்டு இங்கே உங்களுக்காக பெருநாள் தொழுக வைத்துவிட்டு அன்றைய இரவு புறப்பட்டு மறுநாள் பொழுது விடிய ஊர் சென்று இறங்கினால் என் குழந்தைகளும் என் குடும்பமும் என் வரவை பார்த்து சந்தோஷப்படுமே அதுதான் எங்களுக்கான, எங்கள் குடும்பத்திற்கான உண்மையான பெருநாள்.
எனவே பணியாளர்களின் பார்வையை எங்கள் மீது செலுத்த வேண்டாம். எங்களின் தியாகம் வேறு. அவர்கள் வேறு.
என் இஸ்லாமிய சமூகமே! இறுதியாய் உங்களுக்கு ஒன்றை சொல்லிக் கொள்கிறேன்…
உலகில் வாழ்க்கைக்கு இன்றியமையாத முக்கியத்துவமான சிலவற்றை அல்லாஹ் இலவசமாக நமக்கு தந்திருப்பதால் அதன் அருமை நமக்கு புரிவதில்லை.
காற்றும் நீரும் நமக்கு கஷ்டமில்லாமல் கிடைப்பதால் அவைகளின் அருமை நமக்கு புரிவதில்லை.
அதுபோல்தான் உங்கள் இம்மை மறுமை வாழ்க்கையின் வெற்றிக்கு முக்கிய காரணமான உங்களின் இமாமின் முக்கியத்துவத்தையும் உங்களால் இப்போது உணர முடியவில்லை.
*இமாம்களை இழிவாய் பார்க்கும் உங்களின் மனநிலையை மாற்றிக் கொள்ளுங்கள்.. அவர்களுக்கான கண்ணியத்தையும் ஊதியத்தையும் அழகுபட கொடுத்து வாழ்க்கையை அழகுபடுத்துங்கள். ஏனென்றால் இப்போதே பல மதரஸாக்களில் ஆலிம்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
தன் மகனை ஆலிம் ஆக்குவதற்கு ஒரு ஆலிமே தயங்கும் நிலைக்கு இன்றைய சமூகம் ஆலிம்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கி வைத்திருக்கிறது. இதே நிலை உங்களில் தொடர்ந்தால் ஆலிம்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலைக்கு இந்த சமூகம் ஒரு நாள் கண்டிப்பாக தள்ளப்படும். அப்போது இந்த சமூகத்திற்கு புரியும். ஆலிம்களின் அந்தஸ்து என்னவென்று, இன் ஷா அல்லாஹ்.
From Shahul Hameed, face book