நூறு வருடங்கள் மரணமானதில் பெற்ற ஞானம்
[ அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் ஒன்று; உஜைர் அலைஹிஸ்ஸலாம், அஜீஸ் அலைஹிஸ்ஸலாம் வியத்தகு வரலாறு!]
ரஹ்மத் ராஜகுமாரன்
ஒரே சூலில் இரட்டைக் குழந்தைகள்.. ஒரு குழந்தை மற்ற குழந்தை விட ஒரு சில நிமிடங்களுக்கு முன் பிறந்தது. அவர்கள் இருவரும் ஒரே நாளில் இறப் பெய்தனர் .ஆனால் .. அவர்களில் ஒருவருக்கு வயது 50 .மற்றவருக்கு வயது 150 .இது எவ்வாறு சாத்தியம் ?
1905 ஆம் ஆண்டு சூரிச் (Zurich) பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான அறிஞர் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் சிறப்பு சார்பியல் தத்துவத்தை சமர்ப்பித்தார்.
– காலம் என்று தனிப்பட்டுஒன்றும் கிடையாது !
– சம்பவங்கள் இல்லையேல் காலமே கிடையாது !
மேற்கண்ட தத்துவத்தின் சாரம்சம் “தவ்ராத்” என்னும் பழைய ஏற்பாடு வேதம், இஞ்ஜீல் என்னும் பைபிள்- விவிலியம்புதிய ஏற்பாடு மற்றும் அல்குர்ஆன் ஆகியவற்றில், சில சம்பவங்கள் குறித்து பேசும்போது சம்பவங்கள் இல்லாத நிகழ்வுகளுக்கு காலமே இல்லாது இருப்பது குறித்து நம்மை வற்றாத ஆச்சரியத்தில் திளைக்கச்செய்கிறது.
கணிதப்பாடத்தில் நீங்கள் படித்திருப்பீர்கள். “Empty Set” என்னும் வெறுமை, அது போன்றே வேதத்தின் சில நிகழ்வுகள் காலமே இல்லாத வெறுமையாக காட்சி அளிக்கிறது.
ஒரு வரலாற்று சம்பவத்தைப் பார்ப்போம். அதன் முடிவில் மேற்கண்ட கேள்விக்குறிய பதிலைத் தேடுவோம்.
“புஸ்து நஸ்ர்” என்பவனுக்கு தவ்ராத் வேதம் எங்கு ஓதக் கேட்டாலோ அல்லது அதை மனப்பாடம் செய்தவரைக் கண்டாலோ முதல் வேலை அவர்களைக் கொன்றொழித்து விட்டு தான் மறுவேலை! இது என்ன சைக்கோ…? தெரியவில்லை.
அவனுக்கு ஒரு செய்தி கிடைத்தது. பைத்துல் முகத்தஸ் (ஜெருஸ்ஸலம்) செல்லும் வழியில் ஒரு நகரம்; அங்குள்ளோர் பனீ இஸ்ராயீல்கள் அனைவரும் தவ்ராத் வேதத்தைக் கற்றவர்கள் என்று!
உடனே அவனின் படையெடுப்பால் அந்த சின்ன நகரம் சின்னாபின்னமாக்கப்பட்டு அதன் முகடெல்லாம் உடைந்து பாழடைந்து போனது.
அவ்வழியே நபி உஜைர் (Uzyre) அலைஹிஸ்ஸலாம் (வயது 30) செல்லும்போது அந்நகரை எப்படி இறைவன் மீண்டும் உருவாக்குவான்? என்ற சிந்தனையிலேயே ஒரு மர நிழலில் அமர்ந்து சில அத்திப்பழங்களையும், திராட்சைப் பழச்சாறையும் சிறிது குடித்ததும், அல்லாஹ் அவரை நூறு ஆண்டுகள் வரை மரணித்திருக்கச் செய்து, பின்னர் அவரை உயிர்ப்பித்தான். தன் அருகில் இருந்த அவருடைய உணவும், அவருடைய பானமும் கெட்டுப் போகவில்லை.
ஆனால், கழுதை இறந்து அதன் எலும்புகள் மட்டும் கிடக்கக்கண்டார். இறந்த உயிரை தன்னால் உயிர்ப்பிக்க இயலும் என்பதை அவருக்கு உணர்த்த விரும்பிய இறைவன், அக்கழுதையை உயிர்ப்பெற்று எழச் செய்தான்.
இப்போது உயிர்ப்பெற்றெழுந்த உஜைர் (Uzyre) நபிக்கு வயது அதே 30 தான்!
நபி உஜைர் (Uzyre) அலைஹிஸ்ஸலாம் அவர்களுடன் ஒரே நேரத்தில் பிறந்தவர் அவரது சகோதரர் அஜீஸ் (Azeez) ஆவார். ஒரே சூலில் பிறந்த இரட்டையர். ஆனாலும் இப்போது அஜீஸ் அவர்களுக்கு வயது 130 ஆக இருந்தது. இதனால் 30 வயதுடைய தன் சகோதரர் நபி உஜைர் என்பதை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.
மேலும் என் தம்பி உஜைருக்கு தவ்ராத் வேதத்தை மனப்பாடமாக ஓதக் கூடியவர் எங்கே தவ்ராத்தை மனப்பாடமாக ஓதும் என்று அண்ணன் அஜீஸ் கேட்க , உஜைர் மனப்பாடமாக ஓத சுற்றியுள்ளவர் அதை எழுதிக் கொள்ள மறைந்து போன தவ்ராத் மீண்டும் உதயமானது ! உடனே பனீ இஸ்ராயீல்கள் ” இப்னுல்லாஹ்
இப்னுல்லாஹ்” – “அல்லாஹ்வின் மைந்தன் – அல்லாஹ்வின் மைந்தன்” என்றழைக்கலாயினர்
உஜைர் நபி மட்டும் அல்ல , தவ்ராத் வேதத்தை மீண்டும் புதுப்பிக்க இறைவன் செய்த ஏற்பாடுதான் இது.
உஜைர் நபி மரணிக்கச் செய்து 70 வருடங்களில் புஸ்து நஸ்ர் என்ற கொடுங்கோல் அரசனும் , அவனுடைய கூட்டத்தாரும் மாண்டு போயினர் .பின் பனீ இஸ்ரவேலர்கள் பைத்துல் முகத்திஸை முன் இருந்ததைப் பார்க்கினும் நல்ல வளப்படுத்தினர் .
பின்பு நபி உஜைரின் நபித்துவத்தின் அங்க முத்திரையான “நுபுவ்வத்” உடலில் மச்சமாக இருப்பதை இனம் காணப்பட்டு தன் தம்பி உஜைர் தான் என்பதை அவர் அண்ணன் அஜீஸ் ஏற்றுக்கொண்டார்.
அதற்குப்பின் நபி உஜைர் (Uzyre) அலைஹிஸ்ஸலாம் தனது சகோதரர் அஜீஸுடன் இவ்வுலகில் இருபது வருடம் வாழ்ந்தார். ஒரே நாளில் சகோதரர்கள் இருவரும் இறப்பெய்தினர். இறக்கும்போது உஜைர் நபிக்கு வயது 50 ஆக இருந்தது. அவருடைய சகோதரருக்கு இறக்கும்போது வயது 150 ஆக இருந்தது. உஜைர் நபி மரணித்திருந்த நூறு வருடங்களில் உலக சம்பவங்கள் எதுவும் அவருக்கு இல்லை. எனவே, அவருக்கு காலமும் இயங்கவில்லை.
اَوْ كَالَّذِىْ مَرَّ عَلٰى قَرْيَةٍ وَّ هِىَ خَاوِيَةٌ عَلٰى عُرُوْشِهَا قَالَ اَنّٰى يُحْىٖ هٰذِهِ اللّٰهُ بَعْدَ مَوْتِهَا فَاَمَاتَهُ اللّٰهُ مِائَةَ عَامٍ ثُمَّ بَعَثَهٗ قَالَ كَمْ لَبِثْتَ قَالَ لَبِثْتُ يَوْمًا اَوْ بَعْضَ يَوْمٍ قَالَ بَلْ لَّبِثْتَ مِائَةَ عَامٍ فَانْظُرْ اِلٰى طَعَامِكَ وَشَرَابِكَ لَمْ يَتَسَنَّهْ وَانْظُرْ اِلٰى حِمَارِكَ وَلِنَجْعَلَكَ اٰيَةً لِّلنَّاسِ وَانْظُرْ اِلَى الْعِظَامِ كَيْفَ نُـنْشِزُهَا ثُمَّ نَكْسُوْهَا لَحْمًا فَلَمَّا تَبَيَّنَ لَهٗ ۙ قَالَ اَعْلَمُ اَنَّ اللّٰهَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ
(நபியே!) அல்லது ஒரு கிராமத்தின் மீது சென்றவரைப் போல் (நீங்கள் பார்த்திருக்கின்றீரா? அவர்) அ(க்கிராமத்)திலுள்ள (வீடுகளின்) முகடுகளெல்லாம் இடிந்து (பாழாய்க்) கிடக்க(க் கண்டு) “இவ்வூர் (மக்கள் இவ்வாறு அழிந்து) இறந்தபின் அல்லாஹ் இதனை எவ்வாறு உயிர்ப்பிப்பான்?” என்று கூறினார்.
ஆகவே, (அவருடைய சந்தேகத்தை நிவர்த்தி செய்வதற்காக) அல்லாஹ் அவரை நூறு ஆண்டுகள் வரையில் மரணித்திருக்கச் செய்து பின்னர் அவரை உயிர்ப்பித்து…
(அவரை நோக்கி “இந்நிலையில்) நீங்கள் எவ்வளவு காலம் இருந்தீர்கள்” எனக் கேட்க “ஒருநாள் அல்லது ஒரு நாளின் சிறிது பாகம் இருந்தேன்” எனக் கூறினார்.
(அதற்கு அவன்) “அல்ல! நீங்கள் நூறு ஆண்டுகள் (இந்நிலையில்) இருந்தீர்கள். (இதோ!) உங்களுடைய உணவையும், உங்களுடைய பானத்தையும் பாருங்கள். (அவை இதுவரை) கெட்டுப்போகவில்லை. (ஆனால்) உங்களுடைய கழுதையைப் பாருங்கள். (அது செத்து மக்கி எலும்பாகக் கிடக்கின்றது.) இன்னும் உங்களை(ப் போல் சந்தேகிக்கும்) மனிதர் களுக்கு ஓர் அத்தாட்சியாக ஆக்குவதற்காக (கழுதையின்) எலும்பு களையும் நீங்கள் பாருங்கள். எவ்வாறு அவைகளைக் கூடாகச் சேர்த்து அதன் மீது மாமிசத்தை அமைக்கின்றோம் என்று கூறி (எலும்பின் மீது மாமிசம் அவர் கண் முன்னே தானாகவே இணைந்து அவ்வாறே உயிர்ப்பித்துக் காட்டி)னான்.
(இவை அனைத்தும்) அவர் முன் தெளிவாக நடைபெற்றபோது (அவர்) “நிச்சயமாக அல்லாஹ் அனைத்தின் மீதும் மிக பேராற்றலுடையவன் என்பதை நான் உறுதியாக அறிந்துகொண்டேன்” என்று கூறினார். (அல்குர்ஆன் : 2:259)
اۨلَّذِىْ خَلَقَ الْمَوْتَ وَالْحَيٰوةَ لِيَبْلُوَكُمْ اَيُّكُمْ اَحْسَنُ عَمَلًا وَهُوَ الْعَزِيْزُ الْغَفُوْرُۙ
உங்களில் மிகத்தூய்மையான அமல் செய்பவர்கள் யார் என்று சோதிப்பதற்காகவே, அவன் மரணத்தையும், வாழ்க்கையையும் படைத்திருக்கின்றான். அவன் (அனைவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்புடையவன். (அல்குர்ஆன் : 67:2)
ரஹ்மத் ராஜகுமாரன்
https://www.facebook.com/photo/?fbid=2815562032036467&set=a.1412423615683656