தொழுகை உங்கள் இறைவனோடு ஓர் உரையாடல்
சையத் அப்துர் ரஹ்மான் உமரி
தொழுகை பேரொளியாம், (மறுமையில் இரட்டிப்பாய் கிடைக்கும் எனும் எதிர்பார்ப்போடு இறைவழியில் செய்யும்) செலவு காக்கும் கேடயமாம், எந்நிலையிலும் நிலைகுலையாத பொறுமை வழிகாட்டும் பெருவிளக்காம். வான்மறை குர்ஆன் உனக்கு ஆதரவாகவோ உனக்கு எதிராகவோ சாட்சி சொல்ல போதுமானதாம்.
كُلُّ النَّاسِ يَغْدُو فَبَائِعٌ نَفْسَهُ فَمُعْتِقُهَا أَوْ مُوبِقُهَا
மனிதர் அனைவரும் அதிகாலையில் தம் ஆன்மாவை வணிகம் செய்தவர்களாக விழித்தெழுகிறார்கள். சிலர் கொள்முதல்செய்து வென்றுவிடுகிறார்கள். சிலர் விற்றுவிட்டு தண்டனைக்கு ஆளாகி றார்கள்’. (முஸ்லிம்)
நாம் இன்று தொழுகையை சடங்காக ஆக்கிவிட்டதால், அது தன் இயற்தன்மையை இழந்துநிற்கின்றது. முகவரியற்றுப் போய்விட்டது.
வெற்றுச்சடங்குகள் இறைவனின் நெருக்கத்தை என்றுமே பெற்றுத்தருவதில்லை. அவை மோதல்களையும், பிளவுகளையுமே உருவாக்குகின்றன. அவற்றைத்தான் நாம் அன்றாடம் பார்த்துக்கொண்டுள்ளோம்.
நாம் தொழுகையை தொலைத்துவிடும் நிலையில், முற்றிலும் அபாய கட்டத்தில் உள்ளோம்.
நாம் ஒருபக்கம் உள்ளிருந்தவாறே தொழுகையை சுரண்டிக்கொண்டிருக்க வெளியிலிருக்கும் தாகூத்திய சக்திகளும் தம் பங்குக்கு தொழுகைக்கு சமாதிகட்ட நினைக்கின்றன. இறையில்லங்களைக் குறிவைத்து தாக்குகின்றன!
அண்ணலெம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எச்சரித்துச் சென்றுள்ளார்கள்
لَيَنْتَقِضَنَّ عُرَى الإِسْلامِ عُرْوَةٌ عُرْوَةٌ، فَكُلَّمَا انْتَقَضَتْ عُرْوَةٌ
تَشَبَّثَ النَّاسُ بِالَّتِي تَلِيهَا، فَأَوَّلُهُنَّ نَقْضًا الْحُكْمُ، وَآخِرُهُنَّ الصَّلاةُ
இஸ்லாமின் பிடிமானங்கள் ஒவ்வொன்றாக அறுந்து விழத்தான் போகின்றன. ஒவ்வொரு பிடிமானம் அற்றுவிழும்போதும் (அதை இறுக்கிக்கட்ட முயற்சிக்காமல்) மக்கள் எஞ்சியுள்ளவற்றைக் கொண்டே திருப்தியுறுவார்கள்!. முதன்முதலாக அறுந்துவீழ்வது ஆட்சியதிகாரம். கடைசியாக அறுந்துவீழ்வது தொழுகை!. (முஸ்னத் அஹ்மத்)
அத்தகைய கேடுகெட்ட நிலையைநோக்கி சென்றுகொண்டுள்ளோமோ என மிகவும் அச்சமாக இருக்கின்றது. நமக்கு முன்னால் சென்ற இஸ்ரவேலர்கள் இதேபோன்ற ஒரு நிலையை அடைந்துள்ளார்கள்.
ஃபிர்அவ்ன் மீதான பயத்தினாலும் கொடுமைகளைத் தாங்கமுடியாமலும், துணிச்சலையும் தக்வாவையும் ஜிஹாதிய உணர்வையும் இழந்துபோய், கூட்டுத்தொழுகையை கைவிட்டார்கள்.
இதனை வான்மறை குர்ஆன் குறிப்பிடுகின்றது
மூஸா அவர்களுக்கும் அவரது சகோதரருக்கும் இறைச்செய்தி வழங்கினோம் நாம். உங்கள் சமூகத்தினருக்காக மாநகரத்தில் சில வீடுகளை ஏற்படுத்துங்கள். உங்கள் வீடுகளையே கிப்லா ஆக்கிக்கொள்ளுங்கள், தொழுகையை நிலைநிறுத்துங்கள்!. (அல்குர்ஆன் 10:87)
.
அரசு பயங்கரவாதம், ஆட்சியாளர்களின் கொடுங்கோன்மை போன்றவற்றை தாங்கமுடியாமலும் தமது சொந்த ஈமான் பலம் குன்றிப்போய் விட்டதாலும், கூட்டுத்தொழுகையையே அவர்கள் கைகழுவிவிட்டார்கள்.
என்ன கொடுமை இது?
மார்க்கத்தின் முக்கிய பிடிமானத்தையே – கடைசிப்பிடிமானத்தையே – இழந்துவிட்டபோது அவர்கள் தீன் – இஸ்லாம்- மரண விளிம்புக்கே சென்றுவிட்டது!
செத்துப்போன உணர்வுகளை உயிர்ப்பித்து இஸ்லாமிய எழுச்சியூட்டிய பிறகே மூஸா அலைஹிஸ்ஸலாம் கூட்டுத்தொழுகை முறையை – இகாமத்துஸ் சலாத்தை மறுநிர்மானம் செய்தார்கள்
அத்தகைய ஒரு மோசமான முன்னுதாரணம் நம் சமூக வாழ்விலும் ஏற்பட்டு விடக்கூடாது. எச்சரிக்கையோடு இருக்கவேண்டும்
(தொழுகை – உங்கள் இறைவனோடு ஓர் உரையாடல் – நூலில் இருந்து….)
நம் தொழுகை உயிர்ப்போடும் துடிப்போடும் திகழுகின்றதா? என்பதை ஆய்வுக்கு உட்படுத்தியாக வேண்டும்.
உயிர்ப்போடும் கொஞ்சம் செழிப்போடும் இருந்தால் இறைவனுக்கு மனதார நன்றிசெலுத்தவேண்டும். அதனை மென்மேலும் மெருகூட்டிக் கொள்ளவேண்டும்
இல்லையென்றால் வேறொன்றாக காட்சியளிக்கின்றது என்றால் கவலையோடு அதனை சீர்திருத்தி செம்மைப்படுத்தவேண்டும் – என கேட்டுக்கொள்கின்றது இந்நூல்
வாசித்துப்பாருங்கள்…. பாதுகாக்கத்தக்க செம்பதிப்பாய்
நூல் :
தொழுகை உங்கள் இறைவனோடு ஓர் உரையாடல்
சையத் அப்துர் ரஹ்மான் உமரி
விலை ரூ 160
(கூரியர் செலவையும் சேர்த்து)
தொடர்பில் வருக..
7871611173