மிகச்சிறந்த படைப்பாளன்
அழகிய வடிவமைப்பாளன்
கே. ரஹ்மதுல்லாஹ் மஹ்ளரீ
உறுதியாக நம்பிக்கை கொண்டோருக்கு இந்த பூமியில் பல சான்றுகள் உள்ளன. உங்களுக்குள்ளேயும் பல சான்றுகள் உள்ளன. அவற்றை நீங்கள் கவனிக்கவேண்டாமா? வானத்தில் உங்களுக்கான உணவும் உங்களுக்காக வாக்களிக்கப்பட்டவையும் உள்ளன. (குர்ஆன் 51 : 20,22)
படைத்த ஒருவன் இருக்கிறான் என்பதற்கு… மேலே, வானத்திலும் கீழே, பூமியிலும் நிறைய சான்றுகள் உள்ளன.
மேலே கீழே, அங்கே இங்கே என நாம் ஆராய வேண்டிய தில்லை. நம்மை நாமே சற்று சிந்தித்துப்பார்த்தால், நமக்குள்ளேயே பல்வேறு வகையான சான்றுகள் நிறைந்து கிடப்பதை நாம் காணலாம்.
அறிந்தால் மனிதன் அடிபணிவான்
ஒருவன், தான் படைக்கப்பட்டவிதம் குறித்து முறையாக சிந்தித்தால், இறைவனை உணர்ந்து, இயல்பாக அவனுக்கு அடிபணிய ஆரம்பித்துவிடுவான். -அறிஞர் கத்தாதா ரஹ்மதுல்லாஹி அலைஹி.
தன்னை அறிந்தவன் தலைவனை அறிவான்
மன் அறஃப நஃப்ஸஹூ ஃபக்கத் அறஃப றப்பஹூ
‘ஒருவன் தன்னை முழுமையாக அறிந்தால், படைத்த இறைவனை அவன் தெளிவாக அறிந்துகொள்வான்!’ -அறபு பழமொழி.
பொருத்தமான மனித உடலமைப்பு
(இறைத்தூதரே!) உயர்வான உம் இறைவனைத் துதிப்பீராக! அவனேஅனைத்தையும் படைத்தான்; ஒவ்வொன்றையும் பொருத்தமாகவும் அமைத்தான். (குர்ஆன் 87 : 01)
அழகான தோற்றம், நேர்த்தியான வடிவமைப்பு
நுணுக்கமான செயல்பாடு…எல்லாவற்றையும் விட… மிருகங்களிலிருந்து வேறுபட்டு நிமிர்ந்து நிற்கும் நிலைப்பாடு… இவற்றோடு மனிதனை, தான் படைத்திருப்பதாக கூறுகிறான் இறைவன்.
கண்களுக்கென ஒரு பாதுகாப்பு அமைப்பு
நெற்றி கன்னம் இரண்டுக்கும் இடைப்பட்ட ஓர் எலும்புப் பாத்திரத்தின் நடுவே பத்திரமாய், பாதுகாப்பாய் இரு கண்களையும் அமைத்துவைத்துள்ளான் இறைவன்.
வெளித்தூசிகள் கண்களுள் சென்று விடாதிருக்க உடனே மூடிக்கொள்ளும் இமைவிழிகளின் பாதுகாப்பு. மீறி உள்ளே தூசு சென்றுவிட்டாலும் அதை வெளியேற்ற தோதுவாய் கண்ணீர் துளிகளின் ஊற்றெடுப்பு.
எல்லாம் இரண்டு; அது மட்டும் ஒன்று!
கண்கள் இரண்டு, காதுகள் இரண்டு
கைகள் இரண்டு, கால்கள் இரண்டு
மூக்கு ஒன்றென்றாலும் ஓட்டை இரண்டு
இப்படியாக எல்லாம் இரண்டிரண்டாக இருந்தாலும்
நாவு மட்டும் ஒன்று! அதுவும் வாயின் உள்ளே.
இன்னும் பற்கள் என்ற சிறைக்கம்பிகளுக்குள்ளே!
ஏன், என்ன காரணம்?
நிறைய பார்க்கவேண்டும்; நிறைய கேட்கவேண்டும்
நிறைய நுகரவேண்டும்; நிறைய பணிபுரியவேண்டும்;
நிறைய நடக்கவேண்டும் என்பதற்காக அவை எல்லாம் இரண்டு.
ஆனால், குறைய பேசவேண்டும்; குறைய உண்ணவேண்டும் என்பதற்காக நாவும் வாயும் ஒன்று!
ஒரு கற்பனை : உறுப்புகள் இப்படி இருந்தால்…?
தலைமுடி மென்மையாக இல்லாமல் முள்ளம்பன்றி போல வளையாத கம்பியாக இருந்தால்…
இடுப்பு வரையே உள்ள கைகள் கீழே நிலம் வரை நீண்டிருந்தால்…
எல்லை தாண்டி தலைமுடிபோல புருவம் வளர்ந்து கொண்டே சென்றால்…
புருவமே இல்லாமல் எல்லாருக்கும் ஒற்றைக் கண்ணாக இருந்தால்…
மடக்கக் கொள்ளமுடியாமல் மூட்டுக்களின்றி கைகால்கள் இருந்தால்…
ஒற்றைக்குழல் துப்பாக்கிபோல ஒற்றைத் துவாரமுள்ள மூக்காக இருந்தால்…
கற்பனையே நம்மை கதிகலங்க வைக்கிறதா, இல்லையா…?
உறுப்புகள் இடம் மாறி இருந்தால்…?
‘நிச்சயமாக நாம் மனிதனை மிகவும் அழகான வடிவமைப்பில் படைத்தோம்!’ (குர்ஆன் 95 : 04)
உச்சந்தலையில் உள்ள இருகண்கள் இடம் மாறி முழங்காலில் இருந்தால்…
இரு புஜங்களிலிருந்து வெளியாகும் கைகள் வயிற்றிலிருந்து வெளியேறுவது போலிருந்தால்…
தலை இருபுஜங்களுக்கு சென்டராக இல்லாமல் வலது அல்லது இடது பக்கமாக இருந்தால்…
வாய் இருக்கும் இடத்தில் மலத்துவாரம் மலத்துவாரம் இருக்குமிடத்தில் வாய் இருந்தால்…
அய்யய்யே…கேக்கவே அருவருப்பாக இருக்கிறதா இல்லையா?
அளந்துவைத்த அல்லாஹ்வின் அற்புதம்
எண்சாண் உடம்புக்கு சிரசே பிரதானம். ஒவ்வொருவரும் அவரவர் கையால் அளந்தால், அவரவர் உடம்பும் எட்டுசாண் அளவே இருக்கும்.
இதில் தலை ஒரு சாண். நமது உடம்புக்கு முக்கியமானது தலையே!
தலைநகரத்தில்தானே தலைவர் இருப்பார். தலைபோலே இருப்பதால்தான் தலைவர்.
ஒருவர்போல இன்னொருவர் இல்லை!
படைத்த இறைவனை விட கிராஃபிக்ஸ் கலைஞன் எவனும் உலகில் உண்டா என்ன..? உலகின் 600 கோடி மக்களுமே ஏதோ ஒரு வகையில் வித்தியாசமான முகச்சாயலைக் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள்.
ஒரு மனிதரின் முகச்சாயலில் ஏழுபேர் உலகில் இருப்பார்கள் என்று ஒரே தோற்றத்தைக்கொண்ட இரட்டையரைப் பார்க்கும்போது சிலர் கூறுவார்கள். ஆனாலும், உண்மையில் நுணுக்கமாக அவதானித்தால் வித்தியாசங்களைக் காணலாம்.
அப்படியே ஒரு பேச்சுக்கு ஒரே சாயலில் ஏழு மனிதர்கள் இருப்பார்கள் என்றே வைத்துக்கொள்வோமே. அப்பவும் இந்த100 கோடி வித்தியாசமான முகச்சாயலை வடிவமைத்த அந்த கிராஃபிக்ஸ் கலைஞன் யார்?
இறைவனின் அற்புதமான ஏற்பாடு
மனித உடலின் அச்சாணிகளான இதயமும் மூளையும் பாதுகாப்புப் பெட்டகத்துக்குள்!
நமது கண் விழிகளுக்குள்தான் எத்தனை விதமான விந்தைகள்…வினோதங்கள்!
நீண்ட குடல்களை அழகாய் சுருட்டி நம் சின்ன வயிற்றுக்குள் இறைவன் வைத்திருக்கும் அழகே தனியழகு!
நோய்களை எதிர்க்கும் ஆற்றலை ஓடும் குருதிக்கு கொடுத்துள்ளான் இறைவன்!
அந்த குருதி சுற்றி வரவும் சுத்தம் பெறவும் அழகாய் வழியமைத்துள்ளான் இறைவன்!
மனிதன் கருக்கொள்ளவும் உருக்கொள்ளவும் வயிற்றில் சிறு உலகையே வைத்துள்ளான் இறைவன்!
ஆக… உடலெங்கும் இறைவனின் அருள்மழை. நமது முழுவாழ்வையும் ஸஜ்தாவில் கழித்தாலும் போதாது!
-கே. ரஹ்மதுல்லாஹ் மஹ்ளரீ
source: https://www.facebook.com/photo?fbid=831128577448537&set=a.111142326113836