சாபப் பிரார்த்தனையா? சாதகப் பிரார்த்தனையா?
நூ. அப்துல் ஹாதி பாகவி
சாலையில் செல்லும்போது ஆங்காங்கே குண்டும் குழியுமாக இருக்கலாம். சில இடங்களில் கழிவுநீர் தனது ஓடுதளத்தைத் தாண்டி நாம் செல்லும் சாலையில் நம்மோடு ஓடி வரலாம்.
சில இடங்களுக்குச் செல்லும்போது நமக்குப் பிடிக்காத அலுவலர்களைச் சந்திக்க நேரிடலாம். நமக்குப் பிடிக்காத ஆள்களை நாள்தோறும் தாண்டிச் செல்லும் நிர்ப்பந்தம் ஏற்படலாம். இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான நிகழ்வை நாள்தோறும் எதிர்கொள்ளலாம்.
குண்டும் குழியுமான சாலையைப் பார்த்து, “ச்சே, என்ன இவனுக. சாலை போடுவதிலும் ஊழல் செய்யிறானுக. ஒழுங்கா சாலை போடுறதே இல்ல. நாசமாப் போறவனுக… என்று வாய்விட்டுத் திட்டுவோர் உண்டு. அல்லது மனத்துக்குள் நினைத்துக்கொண்டு செல்வோர் உண்டு.
கழிவுநீர் தன் ஓடுதளத்தைவிட்டு, எல்லைமீறி நாம் நடக்கும் சாலையில் நம்மோடு ஓடிவருவதைப் பார்க்கின்ற நம்முள் சிலர், “ச்சே, இந்த கார்ப்பரேஷன் காரனுக ஒழுங்கா வேலையே செய்யறதில்ல. சம்பளம் மட்டும் வாங்கிக்கிறானுக. எப்பப் பார்த்தாலும் இப்டித்தான் கெடக்கு இந்த ரோடு” என்று புலம்பிக்கொண்டே செல்வர் சிலர்; திட்டிக்கொண்டே செல்வர் பலர்.
இப்படி நமக்குப் பிடிக்காததை நாம் எதிர்கொள்ளும்போது, நாம் சாபப் பிரார்த்தனை செய்வதைவிட, அதையே சாதகமாகப் பிரார்த்தனை செய்யலாமே? அவ்வாறு செய்தால் அதனுடைய பலனை நீங்கள் விரைவில் அனுபவிப்பீர்கள்.
சரி! எப்படி அதை நமக்குச் சாதகமான பிரார்த்தனையாக மாற்றிக்கொள்வது?
குண்டும் குழியுமான சாலையைக் கடந்து செல்லும்போது, “இறைவா! இந்தச் சாலையைச் செப்பனிட்டுத் தருவாயாக. இந்தச் சாலையை அழகுபடுத்தித் தருவாயாக. விரைவில் உரியவர்கள் நடவடிக்கை எடுக்கச் செய்வாயாக” என்று சாதகமான பிரார்த்தனை செய்ய வேண்டும். இவ்வாறு அச்சாலையைக் கடந்து செல்லும்போதெல்லாம் நாம் செய்துகொண்டிருந்தால் விரைவில் அச்சாலை செப்பனிடப்பட்டிருப்பதைக் காண்பீர்கள்.
உங்களுக்குப் பிடிக்காத அலுவலரைச் சந்திக்கும்போது, அவரைத் திட்டாமல், அவர்மீது சாபப் பிரார்த்தனையைப் பொழியாமல், “இறைவா! இவரை எனக்குப் பிடித்தவாறும் என்னை இவருக்குப் பிடித்தவாறும் ஆக்குவாயாக” என்று சாதகப் பிரார்த்தனை செய்துகொண்டே வந்தால், காலப்போக்கில் நம்மைப் பிடிக்காதவர்களும் நம்மோடு அன்பாகப் பேசத் தொடங்கிவிடுவார்கள்.
உங்களுக்குப் பிடிக்காத ஒவ்வொரு நிகழ்வுக்கும் இது பொருந்தும். இதை நான் என்னுடைய வாழ்வில் அனுபவித்து வருகிறேன். அதையே உங்களுக்குப் பகிர்கிறேன்.
காரணம், “என் அடியான் என்னை எவ்வாறு எண்ணுகிறானோ அப்படியே நான் அவனிடம் நடந்துகொள்கிறேன்” என்று அல்லாஹ் கூறியதாக நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். இந்த உலகம் நமக்கானது. நாம் எப்படி விரும்புகிறோமோ அப்படி அதை மாற்றியமைத்துக்கொள்வது நம் பொறுப்பு. மாறாக அதைச் சபிப்பதன்று.
நமக்குப் பிடிக்காதவர்களை மாற்றிவிடுமாறு கேட்கலாமே என்றால் அது இறைநியதிக்கு முரண். அல்லாஹ்தான் அவரை அவ்விடத்தில் வைத்துள்ளான். மாற்றிக் கேட்டால் எத்தனை பேரை மாற்றுவது? அடுத்து வருபவரும் அவ்வாறு இருந்தால் என்ன செய்வது?
இறைவனின் பேராற்றலை மர்யம் அலைஹிஸ்ஸலாம் மூலம் புரிந்துகொண்ட இறைத்தூதர் ஸகரிய்யா அலைஹிஸ் ஸலாம், தமக்கு ஒரு வாரிசை வழங்குமாறு பிரார்த்தனை செய்தார். அப்பிரார்த்தனையை ஏற்றுக்கொண்ட இறைவன், அவருக்கு யஹ்யா என்ற மகனைக் கொடுத்தான்.
இவ்விடத்தில் நாம் கவனிக்க வேண்டிய ஒரு நுட்பம் உள்ளது. அவ்வளவு காலம் அதே மனைவியோடுதான் அவர் வாழ்ந்தார். அத்தனை காலமும் பிறக்காத குழந்தை, மாசற்ற மனத்தோடு செய்த பிரார்த்தனைக்குப்பின் பிறந்தது. இவ்விடத்தில் அல்லாஹ் கூறும் வார்த்தை என்ன தெரியுமா? “நாம் அவருக்கு அவருடைய மனைவியைச் சீராக்கினோம்- செம்மையாக்கினோம்” என்கிறான்.
மனைவியை மாற்றவில்லை. மாறாக குழந்தை பிறப்பதற்கேற்ப உடலமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்தினான். ஆம்! அல்லாஹ்வின்மீது நாம் கொண்டுள்ள நம்முடைய ஆழ்ந்த நம்பிக்கைக்கேற்ப இவ்வுலக வாழ்க்கை நமக்காக மாற்றியமைக்கப்படும். அத்தகைய மகிழ்வான வாழ்க்கை இறைநம்பிக்கைகொண்டு நல்லறங்கள் செய்கின்ற, ஆழ்ந்த நம்பிக்கை கொண்டுள்ள ஒவ்வொருவருக்கும் உண்டு.
ஆகவே நண்பர்களே! இனிவரும் காலங்களில் நம் எண்ணங்களை நேர்மறை எண்ணங்களாக மாற்றியமைத்துக்கொள்வோம். எத்தகைய பிரச்சனைகளை நாம் எதிர்கொண்டாலும் அப்போது அல்லாஹ்விடம் நமக்குச் சாதகமான பிரார்த்தனையை முன்வைப்போம்.
எதிர்காலம் சிறப்பாகவும் வளமாகவும் நிச்சயம் மாறும் என்ற நல்லெண்ணத்தோடு எதிர்வரும் ஆண்டை எதிர்கொள்வோம். நம்மூலம் பிறர் மகிழ, பிறர்மூலம் நாம் மகிழும்படியான வாழ்க்கையை ஏகஇறைவன் எல்லோருக்கும் நல்குவானாக.
அன்புடன்
நூ. அப்துல் ஹாதி பாகவி
30.12.2020 14.05.1442