“மதரஸாக்களில்
கிளிப் பிள்ளைகள் தான் வளர்க்கப்படுகிறார்கள்!”
குற்றச்சாட்டு உண்மையா?
அ. நௌஷாத் அலி பாகவீ
“மதரஸாக்களில் கிளிப் பிள்ளைகள் தான் வளர்க்கப்படுகிறார்கள்” என்ற வாதத்தை தங்களைத் தாங்களே பெரும் சீர்திருத்த கருத்துக்கு சொந்தக்காரர்களாக கருதிக் கொள்ளும் ஒருசிலர் பேசுகிறார்கள்.
‘கிளிப்பிள்ளைகள்’ என்ற வார்த்தையைக் கேட்டதும் திருச்சியில் நத்ஹர் வலிய்யுல்லாஹ் மற்றும் குந்தவை நாச்சியார் அடக்கப்பட்டுள்ள இடத்திலேயே அடக்கம் செய்யப்பட்ட குந்தவை நாச்சியாரின் கிளியின் பக்கம் என் நினைவலைகள் திரும்பியது.
அரண்மனையில் குந்தவை நாச்சியார் வளர்த்த அக்கிளி குர்ஆன் ஓதுமென்றும், அதனிடமிருந்து பலர் குர்ஆன் ஓதக்கற்றுக் கொண்டுள்ளார்கள் என்றும் வரலாறு உள்ளது.
நாங்கள் குந்தவை நாச்சியாரின் குர்ஆன் ஓதும் கிளிப்பிள்ளைகளாக இருக்கிறோமே தவிர, மெக்காலே கல்வித்திட்டத்தில் வளர்ந்த ‘குட்மார்னிங்’ சொல்லும் கிளிப்பிள்ளைகள் அல்ல.
இன்னும் சொல்லப்போனால், இவர்களால் இலாபம் இருக்கிறதோ இல்லையோ புதிய கோணத்தில் கருத்து சொல்கிறேன் என்று கிளம்பி குர்ஆனுக்கும், ஹதீஸ்களுக்கும் மார்க்கத்தின் நோக்கத்திற்கும் முற்றும் முரணான கருத்துச் சொல்லும் அபாயம் ஆலிம் கிளிப்பிள்ளைகளிடம் இல்லை.
அந்த அபாயம் மெக்காலே கிளிப்பிள்ளைகளிடம் மிதமிஞ்சி இருப்பதை பச்சையாக காண்கிறேன். மார்க்கத்தை பரப்புவதை விட ‘தவறாக பரப்பிவிடக் கூடாது’ என்ற எச்சரிக்கை உணர்வு ஆலிம்களிடம் நிரம்பி இருப்பது கூட ஒருவேளை உங்கள் இரசனையைக் கெடுக்கிறதோ என்னவோ.
ஒவ்வொரு ஆலிமிற்கும் ஒவ்வொரு தளம் இருக்கும். எல்லாருக்கும் ஒரே தளம் வாய்க்கப்பெறாது. அவர்கள் தத்தமது தளங்களில் தங்களால் இயன்றதைச் செய்கிறார்கள்.
நேற்று ஒரு நண்பர் (குறிப்பு: அவர் ஆலிம் இல்லை) எனக்கு, “நல்லவைகளைக் கேட்டுப் பயன்பெற வேண்டும் என்று வரும் ஐவேளைத் தொழுகையாளிகள் யாருமே பயான்களைக் குறை சொல்வதில்லை. வாரம் ஒருமுறை நானும் முஸ்லிம் தான் என்று காட்டிக் கொள்வதற்காக ஜுமுஆ மாத்திரம் தொழ வரும் தாடி சிரைத்த படித்த மேதைகள் இரசனைக்காக கேட்க வருகிறார்கள் ஹஜ்ரத். நீங்கள் அவர்களை ஒரு பொருட்டாக கருத வேண்டாம்” என்று தொலைபேசினார்.
அப்போது தான் எனக்கும் “அட… ஆமாம் தானே?” என்று புரிய வந்தது. இந்த இலட்சணத்தில் ‘அற்புதமான வாய்ப்பு உங்களுக்கு கிடைத்துள்ளது. அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று சொன்னால் சாபமிடுவார்கள் போல’ என்று ஒரு பெரியவர் குறிப்பிட்டிருந்தார்.
சரியாக பயன்படுத்துகிறோமா? இல்லையா? என்பதை பயான்களை கேட்டுவிட்டு அல்லவா பேச வேண்டும்?. முடிந்தவரை ஊர் சுற்றி விட்டோ, தொலைக்காட்சிப்பெட்டி முன்பு நேரத்தை நாசமாக்கிவிட்டோ கடைசி 5 நிமிடத்தில் வந்து கேட்டு விட்டு கருத்து சொல்கிறீர்களே… என்று கேட்டால் அது உங்களைச் சுடுகிறது.
சரியாகச் சொல்வதானால், பசிக்கு வருபவர்களுக்கு எங்களிடம் உணவு இருக்கிறது. பசி இருந்தாலும் ருசியாகத்தான் உண்பேன் என்று அடம்பிடிப்பவர்கள்… அந்த ஹோட்டலில் நன்றாக இருக்கிறது… இந்த ஹோட்டலில் நன்றாக இருக்கிறது என்று பேசுபவர்களிடம், ‘போதுமான அளவுக்கு எங்களிடம் பசியாற வருகிறார்கள். நாங்கள் அவர்களுக்கு புகட்டிக் கொள்கிறோம்’ என்று புறந்தள்ள வேண்டியது தான்.
உலமாக்கள் கட்டியெழுப்பிய சமூகநல்லிணக்கம் குறித்தும், அவர்கள் செய்த அரசியல் பங்களிப்புகள் குறித்தும், அயராத உழைப்புகளையும், ஓட்டங்களையும் ஒரு வெள்ளிமேடையில் பதிவு செய்தேன். அதில் சில முன், பின் செய்து கட்டுரை வடிவத்தில் ஏற்கனவே பதிவு செய்திருக்கிறேன். அதை இந்த இணைப்பில் மீள்பதிவு செய்திருக்கிறேன். வேண்டியவர்கள் வாசித்துக் கொள்ளலாம்.
https://www.facebook.com/100054411857991/posts/176792534144474/
பயானும் பின்னர் தொழுகையும் முடிந்து வெளியில் காலணி அணிந்து கொண்டிருக்கையில் ஒருவர், “என்ன இந்த அஜரத்து…. ராஜாஜி, பெரியார், காமராஜர் என்று என்னென்னவோ பேசுகிறார்… இது என்ன ஜுமுஆவா? இல்லை கட்சிக்கூட்டமா?” என்று பேசிக்கொண்டிருந்தார்.
முதல் விஷயம், உண்மையில் அவருக்கு பேசியது நான் தான் என்று தெரியவில்லை. காரணம் அவர் கடைசியாக வந்தவர். பள்ளியில் வரிசைக்கு சுமார் 25 பேர் நிற்கும் அளவு கொண்ட பள்ளியின் 13 வது வரிசையில் அமர்ந்திருந்ததால் என்னை அவருக்குத் தெரியவில்லை.
இரண்டாவது விஷயம், நான் அந்த உரையின் சாராம்சத்தை இறுதி 5 நிமிடத்தில் சொன்னேன். அதனால் தான் நான் என்ன பொருளில் (Subject) ல் பேசினேன் என்பதே அவருக்குத் தெரிந்தது.
இப்படி நான் சந்தித்த Incident களே அதிகம். ஓரிரு வாரங்களுக்கு முன்னர் தான் அந்த தலைப்பில் பேசியிருப்பேன். சிலர், “நீங்கள் ஏன் ஹஜ்ரத் இந்த தலைப்பில் பேசக்கூடாது?” என்று அதே தலைப்பை சொல்வார்கள். விசாரித்தால் அந்த ஜுமுஆவில் தாமதமாக வந்ததை ஒப்புக்கொள்வார்கள்.
எங்கள் மீது சொல்லப்படுகிற எல்லாக் குறைகளையும் நாங்கள் பரிசீலிக்கிறோம். அதை சீர்தூக்கிப் பார்த்து அக்குறை சரி என்றால் சரி செய்து கொள்ளும்படி எங்களுக்கிடையேயான உரையாடல்களில் பரிமாறிக் கொள்கிறோம். தவறு என்றால் குப்பையில் வீசியெறிந்து விட்டு அடுத்த வேலைக்கு சென்று விடுகிறோம்.
உலமாக்களுக்கான பல்வேறு பயிலரங்குகளை ஜமாஅத்துல் உலமா நடத்தியிருக்கிறது.
2018 – ல் ஊடக பயிற்சிப் பட்டறை, இமாம்களுக்கான பயிலரங்கம், ஆலிம்களுக்கான திறன் வளர்ப்பு பயிலரங்கம் என மூன்று பயிலரங்குகளையும்,
2019 – ல் அரபுக் கல்லூரி பேராசிரியர்களுக்கான ஒருநாள் பயிலரங்கம், திருமணத்திற்கு முன், பின் ஆலோசகர்களுக்கான பயிலரங்கம், திருமணத்திற்கு முன்பு ஆலோசகர்களுக்கான பயிலரங்கம் என கடும் வேலைப்பளுக்கிடையில் 3 பயிலரங்குகளையும் ஜமாஅத்துல் உலமா செய்து வருகிறது.
இதுபோக ஆங்காங்கே சிறுசிறு குழுக்களாக ஏற்பாடு செய்து நடத்துவதும், இதே ஜமாஅத்துல் உலமா சபைகள் மாவட்ட வாரியாகவும், வட்டார வாரியாகவும் குறுகிய வட்டத்தில் நடத்திக் கொள்ளும் அரங்குகளும் உண்டு. இப்படி எல்லா விதமான முன்னெடுப்புகளையும், கடைத்தேற்றல்களையும் ஜமாஅத்துல் உலமா செய்து வருகிறது.
இது குறித்து எவ்வித தகவல்களும் அறியாமல் வலைத்தளங்களில் வந்து உட்கார்ந்து கொண்டு ‘ரிட்டயர்டு ஆகிவிட்டோம். சும்மா இருக்க முடியாதில்லையா?’ என்ற தொனியில் கருத்துகளையும், ஆலோசனைகளையும் ஏகத்துக்கும் அள்ளி எறிகிறார்கள். அப்பப்பா… அள்ளியணைக்கத்தான் கைகள் போதவில்லை.
சொல்கிற விஷயங்கள் வித்தாக இருந்தால் பிறர் மனதில் விதைக்கலாம். அவை உள்ளீடற்ற வெற்று அலங்கார ஆலோசனைகளாகவல்லவா இருக்கிறது. ஒருவேளை இந்த பெரியவர்களிடம் வலைத்தளக் கணக்கு இல்லாவிட்டால் என்ன செய்து கொண்டிருப்பார்கள் என்று சில நேரங்களில் யோசிப்பதுண்டு. அதையும் சொல்லி பகையை சம்பாதிக்க விரும்பவில்லை.
நல்ல ஆரோக்கியமான ஆலோசனைகளை, செயலாற்றும் தலைமைகளிடம் உரிய முறையில் கொண்டு சேருங்கள். உரிய சபைகளில் அவர்களும் கருத்துக்களை (Feedback) கேட்கிறார்கள். அந்த சபைகளில் உங்கள் கருத்துக்களை தாராளமாக சொல்லலாம். நல்ல கருத்து வைத்திருப்பவர்கள் இப்படியான இடங்களில் தான் கொண்டு சேர்க்கத் துடிப்பார்கள். ஏனோதானோக்களும், இறுதி நிமிட உரை கேட்பவர்களும் வலைத்தளங்களில் புலம்பத்தான் செய்வார்கள்.
அவர்களுக்கும் பொழுது போக வேண்டுமில்லையா?. அவர்களுக்கும் என் பிரார்த்தனைகள் உண்டு.
[ “உரிய இடங்களில் பேசுவோம்” – அ. நௌஷாத் அலி பாகவீ ]