இஸ்லாமைத் தழுவிய
பிரபல ராக் இசை குழுவான ஷிகாத்தை நிறுவிய
ஜோன் டூகுட் (Jon Toogood)
Aashiq Ahamed
“தீவிர நாத்திகனாகவே இருந்தேன். மதங்களை நம்புபவர்கள் ஏமாற்றப்படுவதாக தீர்க்கமாக நம்பினேன்”
– இப்படி கூறுபவர் நியூசிலாந்தின் பிரபல ராக் இசை குழுவான ஷிகாத்-தை நிறுவியவர்களில் ஒருவரான ஜோன் டூகுட் (Jon Toogood). தன் பாடல்களில் நாத்திக கருத்துகளை விதைத்துக்கொண்டிருந்த டூகுட், இஸ்லாமின் பக்கம் வந்தது எப்படி என்பது குறித்து ஆஸ்திரேலியாவின் ABC ஊடகம் சில தினங்களுக்கு முன்பு கட்டுரை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
ஆப்பிரிக்காவின் சூடான் நாடு. ஒரு நிகழ்வில், தன் வருங்கால மனைவியான டானா சாலிஹ்-ஐ சந்திக்கிறார் டூகுட். சூடானை சேர்ந்த ஐ.நா அதிகாரி ஒருவரின் மகளான டானா சாலிஹ்-யின் பண்புகளால் கவரப்பட்ட டூகுட், சில நாட்களுக்கு பிறகு, அவரை திருமணம் செய்துக்கொள்ள சம்மதம் கேட்கிறார்.
“எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, நான் டானாவிடம் கேட்டேன், உன்னை திருமணம் செய்ய வேண்டுமென்றால் இஸ்லாமை தழுவ வேண்டும், அப்படித்தானே?”. சிறிதும் நேரம் கடத்தாமல் டானாவிடம் இருந்து பதில் வந்தது, “ஆம், சரி தான்”
இத்தனை நாட்களாக தான் கொண்டிருந்த நம்பிக்கைகளை டூகுட் தற்போது மீளாய்வு செய்ய வேண்டும். இஸ்லாம் குறித்து தீவிரமாக ஆராய ஆரம்பித்தவர், முடிவில் இஸ்லாமில் ஐக்கியமாகிறார்.
“தேவையுடையோர்க்கு உதவி செய்வதற்கு மதங்கள் தேவையில்லை என்று நாம் சொல்கிறோம். மனிதம் மற்றும் கருணையே போதும் என்கிறோம். டானாவின் கையில் இருபது டாலர்கள் மட்டுமே இருக்கும் நிலையிலும், யாரேனும் உதவி என கேட்டு வந்தால் கொடுத்து விடுவார். அல்லாஹ் எனக்கு திரும்ப கொடுப்பான் என்பார். எனக்கு இது வினோதமாகவே இருந்தது.
அவர் செல்வ செழிப்பான குடும்பத்தில் இருந்து வருபவர். அவருக்கு பிரச்சனையில்லை, ஆனால் நான்? ஏழ்மையான குடும்ப சூழலில் இருந்து வந்தவன். செல்வத்தை சிறுகச் சிறுக சேமித்தவன். என்ன தான் கருணை, மனிதம் என்று பேசினாலும் அடுத்தவருக்கு உதவி என வரும் போது, கொடுப்பதற்கு தயக்கம் இருக்கவே செய்கிறது. இத்தகைய சிந்தனையை இஸ்லாம் உடைத்தது, இப்படியான சூழலில் இறை நம்பிக்கை எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தியது.
இஸ்லாமை பொறுத்தவரை, இவ்வுலகில் நீங்கள் வைத்திருப்பவை எல்லாம் உங்களுக்கு இறைவனால் கொடுக்கப்பட்டவை. அதனை நீங்கள் எப்படி செலவிடுகிறீர்கள் என்பதை வைத்தே நீங்கள் மதிப்பிடப்படுகிறீர்கள். அதிக செல்வம் கொடுக்கப்பட்டவர் அதிகப்படியான சோதனைக்கு உள்ளாக்கப்படுகிறார் என்றே அர்த்தம். உண்மையில், இஸ்லாம் காட்டிய வழிப்படி நான் செலவிட தொடங்கிய பிறகு மனம் நிறைவாக இருப்பதை உணர்ந்தேன். மிகுந்த மகிழ்ச்சியை இஸ்லாமிய வழிகாட்டல் தந்தது.
இஸ்லாமில் சாதி/இன பாகுபாடு கிடையாது. நீங்கள் சேர்த்த சொத்தில் இருந்து ஒரு பகுதி ஒவ்வொரு வருடமும் கட்டாயம் தேவையுடையவருக்கு கொடுக்க வேண்டும். இவையெல்லாம் என்னை மிகவும் கவர்ந்தன”
ஜோன் டூகுட் இஸ்லாமை தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டாலும், அந்தவொரு குறிப்பிட்ட தருணம் வரை, தன் தழுவலை பொதுவில் சொல்லவில்லை. 2019 கிறிஸ்ட்சர்ச் அல்-நூர் பள்ளிவாசல் தீவிரவாத தாக்குதல் தான் அந்த தருணம்.
“தாக்குதல் நடந்த நேரம். ஆழ்ந்த வருத்தம் ஒருபுறம். நான் பெரிதும் விரும்பிய என் நாடும் வெறுப்பு பிரச்சாரத்திற்கு இலக்காகிவிட்டதே என்ற கடுமையான கோபம் மறுபுறம். உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்லும் விதமாக ஒரு நிகழ்ச்சி அப்பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நானும் சென்றிருந்தேன்.
தொழுகை நேரம். என்னை அழைத்து முன்வரிசையில் நிற்க வைத்தார்கள். தொழ தொடங்கினோம். தொழுகை நிலைகளில் ஒன்றான ஸஜ்தாவிற்கு* சென்ற போது, அப்பள்ளியின் தரையானது அட்டைத்தாள்களால் நிரப்பப்பட்டிருந்ததை உணர்ந்தேன்.
வெளியே வந்து காரணம் கேட்ட போது, இரத்தத்தால் தோய்ந்திருந்த தரையை சுத்தப்படுத்தி அதன் மேல் அட்டைகளை பரப்பியிருப்பதாக சொன்னார்கள் பள்ளிவாசல் நிர்வாகத்தினர். என்னால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. உடைந்து அழுதேன்.
நான் இவர்களுக்கு ஆறுதல் கூற வந்தேன். ஆனால் இப்போது இவர்கள் தான் எனக்கு ஆறுதல் கூறிக்கொண்டிருக்கிறார்கள். என்னுடைய இஸ்லாமிய தழுவலை பொதுவில் பேச வேண்டுமென்றால் இதுவே சரியான தருணம் என முடிவெடுத்தேன்”
படம்: தன் தாய், மனைவி மற்றும் மனைவியின் குடும்பத்தாருடன் ஜோன் டூகுட்.
*ஸஜ்தா – தொழுகையின் நிலைகளில் ஒன்று. தரையில் நெற்றி படும்படியாக தொழுவது.
செய்திக்கான ஆதாரங்கள்:
1. ABC Australia, November 2020.
2. DOCNZ Studios Interview with Jon Toogood, January 2020
source: https://www.facebook.com/photo?fbid=3604204563010240&set=a.103673699730028