கலங்கரை விளக்கம்
CMN SALEEM
[ தமிழக மதரஸாக்கள் மீளெழுச்சி பெறாமல் முஸ்லிம்களின் சமூக அரசியல் முன்னேற்றம் சாத்தியமில்லை. அதேபோல மதரஸா கல்வியின் மீளெழுச்சியை உலமாக்களால் மட்டும் கொண்டு வந்துவிட இயலாது.]
கால மாற்றங்களை எதிர்கொண்டு – ஒரு சமூகம் அனைத்து நிலைகளிலும் வளர்ச்சியடைவதற்கும், அந்த வளர்ச்சியை எல்லா காலத்திற்கும் நிலையானதாக ஆக்கிக்கொள்வதற்கும், அந்த சமூகத்தின் பாரம்பரியமான அறிவுசார் களஞ்சியங்கள் அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டும்.இன்னும் அவை உயிரோட்டமாகவும் இயக்கப்பட வேண்டும்.
இந்தியாவில் முஸ்லிம் சமூகத்தின் எழுச்சி குறித்து சிந்திக்கும் அனைவரும் எழுச்சியின் துவக்கப்புள்ளி எது என்பதில் தீர்க்கமான பார்வை வேண்டும்.
துவங்க வேண்டிய புள்ளியிலும் அடையவேண்டிய இலக்கிலும் தெளிவு இல்லாமல் முன்னெடுக்கப்படும் சமூக அரசியல் செயல் திட்டங்கள் எதுவும் எந்தப் பலனையும் அளிக்காது. அது நெருக்கடிகளை மேலும் மேலும் இறுகிப்போகவே செய்யும்.
இன்று முஸ்லிம்கள் சந்தித்து வரும் சிக்கல்களுக்கு நிலையான தீர்வை தருவதற்கான துவக்கப்புள்ளி எது என்பதற்கு இஸ்லாமிய வரலாற்றில் ஏராளமான முன்மாதிரிகள் உள்ளன. இந்தியாவில் நம் கண்முன்னாலேயே அதற்கான முன்மாதிரிகளும் உள்ளன.
651 ஆண்டு காலம் முஸ்லிம்கள் வைத்திருந்த இந்தியத் துணை கண்டத்தின் அரசியல் அதிகாரத்தை கிழக்கிந்திய கம்பெனி இராணுவத்திடம் 1857 இல் இழந்த பிறகு முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட பேரழிவை வார்த்தைகளால் விவரித்துவிட முடியாது.
முற்றிலும் உருக்குலைந்து போன முஸ்லிம் சமூகத்தை பூஜ்யத்திலிருந்து மீள்கட்டமைப்பு செய்ய அன்றைய அறிவார்ந்த பெருமக்கள் தாருல் உலூம் என்ற ஒரு அரபு மதராசாவைத் தான் முதலில் கட்டி எழுப்பினார்கள்.
தாருல் உலூம் தேவ்பந்த் உருவானதற்குப் பிறகான இந்த 155 ஆண்டுகளில்,இந்தியத் துணை கண்டத்திலும் உலக நாடுகளுக்கும் புலம் பெயர்ந்து சென்றவர்கள் உருவாக்கியிருக்கும் அரபு கல்லூரிகள் அனைத்திற்கும் தத்துவார்த்த ஆசானாக தாருல் உலூம் தேவ்பந்த் திகழ்கிறது.
மிகச்சரியான இலக்கோடு உருவாக்கப்படும் ஒரு கல்வி நிறுவனம் பல நூற்றாண்டுகள் நீடித்து நின்று இதை செய்யும் என்பதை சமுதாய வளர்ச்சியில் அக்கரையுள்ள பெருமக்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
முஸ்லிம்களின் அறிவுப் பாதையை,அவர்களின் நடைமுறை கல்வித் திட்டத்தை பாரம்பரிய முறையில் சீரமைத்து அதை நவீன காலத்திற்கேற்ப மெருகூட்டிக் கொண்டே செல்வது தான் உம்மத்தின் எழுச்சிக்கான துவக்கப் புள்ளியாக இருக்கிறது.
இன்றைய தேர்தல் அரசியலுக்கு அல்லது போராட்ட அரசியலுக்கு நமது அறிவின், நேரத்தின், பணத்தின் ஒரு துளியை செலவழித்தல் போதுமானது. அரசியல் நடவடிக்கைகளின் மூலமாக முஸ்லிம் உம்மத்தை கட்டமைத்து விட இயலாது.
அதேபோல முகநூலில் முண்டியடித்து சண்டையிடுவதால் விவாதித்துக் கொள்வதால் உம்மத்தின் வளர்ச்சிக்கான ஒரு துரும்பை கூட நகர்த்த இயலாது.
குடியரசு இந்தியாவில் இதுவரை சந்தித்திராத நெருக்கடிகளை முஸ்லிம் சமூகம் இனிவரும் காலங்களில் சந்திக்கக் கூடும். அவற்றை திறனோடு எதிர்கொள்ளும் தலைமுறையை உருவாக்குவது தான் இன்றைய கல்வியாளர்கள் புரவலர்கள் சமூகப் பணியாளர்கள் உலமாக்கள் ஆகியோரது முதன்மையான பொறுப்பாக இருக்கிறது.
அத்தகைய திறன் வாய்ந்த இளம் சிந்தனையாளர்களை உருவாக்கும் வகையில் தமிழக மதரஸாக்கள் இஸ்லாமிய வரலாற்றில் புகழ் பெற்றிருந்த மதரஸாக்கள் போல புனர்நிர்மாணம் செய்யப்பட வேண்டும்.
கேரளாவில் மிக நேர்த்தியாக கூர்மையாக கொண்டு செல்லப்படும் மதரஸா கல்வித் திட்டம் தமிழகத்தில் பெரும் பின்னடைவை சந்தித்து முடங்கிப்போய் கிடக்கிறது.
தமிழக மதரஸாக்கள் மீளெழுச்சி பெறாமல் முஸ்லிம்களின் சமூக அரசியல் முன்னேற்றம் சாத்தியமில்லை. அதேபோல மதரஸா கல்வியின் மீளெழுச்சியை உலமாக்களால் மட்டும் கொண்டு வந்துவிட இயலாது.
உலமாக்கள் சிந்தனையாளர்கள் புரவலர்கள் உள்ளடங்கிய அக்கறையுள்ள குழு முயற்சித்தால் குறுகிய காலத்தில் மஹல்லா தோறும் சிறப்பான மதரஸாக்களை உருவாக்கி விட முடியும். ஆயிரக்கணக்கான உலமாக்கள் ஆசிரியர்களாக பணி நியமனம் பெற்று கண்ணியப் படுத்தப்படுவார்கள்.
அல்லாஹ்வின் கிருபையால் அப்படி நடந்தால் அடுத்துவரும் 25 ஆண்டுகளில் மகத்தான முன்னேற்றங்களை முஸ்லிம் சமுதாயம் சந்திக்கும்.
– CMN SALEEM