பிரச்சினைக்குத் தீர்வு சுன்னாவிலா பித்ஆவிலா?
அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் 3 கூற்றுகள்;
1. முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மரணித்து விட்டார்கள் என்பதை அவர்களை யார் வணங்கினார்களோ அவர்கள் அறிந்துகொள்ளட்டும். யார் அல்லாஹ்வை வணங்கினார்களோ அவன் உயிருடனே உள்ளான்.
2.அல்லாஹ்வின் மீது சத்தியமாக கொடிய மிருகங்கள் என்னைத் தாக்கினாலும் உஸாமாவின் படையை அனுப்பியே தீருவேன்.
3. அல்லாஹ்வின் மீது ஆணையாக தொழுகையையும் ஸகாத்தையும் பிரித்து நோக்குவோருடன் போர்செய்தே தீருவேன்.
மேற்கூறிய அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் வார்த்தைகள் இன்று முஸ்லிம்கள் எதிர்நோக்கியுள்ளதை விட பன்மடங்கு சோதனைகள் நிறைந்த காலத்தில் கூறப்பட்டவையாகும்.
உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மரணிக்கவில்லை என்று கூறிக்கொண்டு மக்களெல்லோரும் அல்லோலகல்லோலப்பட்டு இருந்த போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மரணித்துவிட்டார்கள் என அடித்துக்கூறினார்கள் அபூ பக்ர் ரழி அவர்கள். நபியவர்களுக்கு மிக நெருக்கமான முஸ்லிம் சமுதாயத்தில் ஈமானில் முதல் தரத்தையுடைய அவர்களின் உறுதியையே இது பறைசாற்றுகின்றது. ஆனால் இது போன்று இன்று நடைபெற்றால் இவருக்கு நபியின் மீது அன்பில்லை, பிரச்சினையின் ஆழம் தெரியாது என்றெல்லாம் வசைபாடத் தொடங்கிவிடுவார்கள்.
அது போன்றுதான் இஸ்லாத்தின் அனைத்து எதிரிகளும் மதீனாவை எந்த நேரத்திலும் தாக்கலாம் என்ற ஐயம் இருந்த போதும் நபியவர்கள் அனுப்பிய படையை தன்னுடன் வைத்துக்கொள்ள விரும்பவில்லை.
மூன்றாவது நிலைப்பாடுதான் மிகவும் ஆச்சரியமானது. எனெனில் ஒரு பக்கம் உஸாமாவின் படையில் பெரும்பாலான நபித்தோழர்கள் செல்கின்றனர். இன்னொரு பக்கம் இஸ்லாத்தை விட்டும் பல முஸ்லிம்கள் மதம்மாறிவிட்டனர். இந்த நேரத்தில் ஸகாத் தரமாட்டோம் எனக் கூறியோருடன் போராட வேண்டுமா என மக்கள் ஆட்சேபனை செய்தபோதுதான் அந்த வார்த்தைகளைக் கூறினார்கள்.
அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் இந்த மூன்று நிலைப்பாடுகளும் அவர்களின் தைரியத்தினாலும் துணிவினாலும் பிறந்ததல்ல. மாறாக குர்ஆன் சுன்னாவைப் பற்றிய அறிவு, அவற்றின் மீதிருந்த பற்று ஆகியவற்றால் ஏற்பட்டதாகும். ஏனெனில் வீரத்துக்கு முன்னுதாரணமான உமர் ரழி அவர்கள் கூட நிலைகுலைந்து போன சந்தர்ப்பமே அது.
எனவே மார்க்கக் கல்வியில் ஆழம் கண்டவர்களின் அறிவை ஒரு போதும் உணர்ச்சிகள் மறைத்துவிடமாட்டாது. மாறாக அவர்கள் உணர்ச்சிவசப்படுபவர்களைக் கட்டுப்படுத்தி தெளிவான மார்க்க வழிகாட்டலை வழங்குவார்கள். எவரது பழிச் சொல்லுக்கும் அஞ்சமாட்டார்கள்.
ஆனால் இன்று ஒரு மார்க்கத் தீர்ப்புத் தவறு எனச் சுட்டிக்காட்டினால் உங்களுக்குத் தெரியுமா நமக்கிருக்கும் பிரச்சினை? அப்படி இப்படி என்றெல்லாம் கிளம்பி வருகின்றனர்.
ஆனால் எந்த நிலையிலும் மார்க்க வழிகாட்டலை மீறாமலிருப்பதே ஒரு முஃமினின் பண்பு என்பதை மறந்துவிடுகின்றார்கள்.
( ஆக்கம். அப்துல்லாஹ் உவைஸ் மீஸானீ )