முடிவுக்கு வந்த அர்மேனியா – அஜர்பைஜானுக்கு இடையிலான போர்
ஆஷிக் அஹமது
கடந்த ஆறு வாரங்களாக நடைபெற்று வந்த அர்மேனியா மற்றும் அஜர்பைஜான் நாடுகளுக்கு இடையேயான போர், இரஷ்யாவின் உதவியுடன் முடிவுக்கு வந்திருக்கிறது. அஜர்பைஜானில் கொண்டாட்டங்களும், அர்மேனியாவில் அரசுக்கு எதிரான போராட்டங்களும் இதனால் அதிகரித்திருக்கின்றன.
அஜர்பைஜானின் எல்லைக்கு உட்பட்ட 4,400 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட நகோர்நோ – கரபாக் பகுதியை அர்மேனியா நீண்ட காலமாக ஆக்கிரமித்திருக்கிறது.
இது தொடர்பில் இவ்விரு நாடுகளுக்கும் கடந்த காலங்களில் நடைப்பெற்ற போர்களில் பலர் இறந்திருக்கின்றனர் என்பதோடு மட்டுமல்லாமல் இப்பகுதியை சேர்ந்த இலட்சக்கணக்கான அஜர்பைஜானிய மக்கள் அகதிகளாக பல்வேறு பகுதிகளுக்கு புலம்பெயர்ந்தனர்.
ஆறு வாரங்களுக்கு முன்பாக தொடங்கிய சமீபத்திய மோதல் சில நாட்களில் முடிந்துவிடும் என்று எண்ணப்பட்ட நிலையில் ஒரு முழுமையான போராக மாறியது. ஆக்கிரமிப்பு பகுதிகளில் அஜர்பைஜான் இராணுவத்தின் முன்னேற்றம் அர்மேனிய அரசுக்கு பெருத்த ஆச்சர்யத்தை கொடுத்தது.
இரஷ்யாவுடன் இராணுவ கூட்டணியில் உள்ள அர்மேனியா இதனை சற்றும் எதிர்பார்க்கவில்லை.
அஜர்பைஜானுக்கு துருக்கி வெளிப்படையான ஆதரவை கொடுத்ததோடு மட்டுமல்லாமல் இராணுவ உதவிகளையும் செய்தது. துருக்கியின் சர்வதேச புகழ் பெற்ற ஆளில்லா விமானங்கள் (Drones) இப்போரில் அஜர்பைஜானுக்கு பெரிதும் உதவின. இரு தரப்பிலும் உயிர் சேதங்கள் ஏற்பட்ட நிலையில், கரபாக் பகுதியின் 15-திற்கும் மேற்பட்ட கிராமங்களை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து விடுவித்தது அஜர்பைஜானிய இராணுவம்.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக இப்பகுதியின் மிக முக்கிய நகரங்களின் ஒன்றான சுஷா-வையும் சில நாட்களுக்கு முன்பாக கைப்பற்றியது அஜர்பைஜானிய இராணுவம். இவையெல்லாம் அர்மேனியாவிற்கு பெருத்த பின்னடைவாக கருதப்பட்ட நிலையில், இரஷ்யா மேற்கொண்ட அமைதி நடவடிக்கைகளுக்கு அர்மேனிய அரசு ஒப்புக்கொண்டது.
அர்மேனியா-இரஷ்யா-அஜர்பைஜான் ஆகிய நாடுகளுக்குள் கையெழுத்தாகியுள்ள இந்த அமைதி ஒப்பந்தத்தின்படி, இதுவரை கைப்பற்றியுள்ள கரபாக் பகுதிகளை அஜர்பைஜான் தன்னிடமே வைத்துக்கொள்ளலாம். ஆக, இதுவரை அர்மேனியா ஆக்கிரமித்து நிர்வகித்து வந்த பகுதிகளில் கணிசமான அளவு திரும்பவும் அஜர்பைஜானுக்கு கிடைத்திருக்கிறது. இந்நாட்டு மக்களின் கொண்டாட்டத்திற்கு இதுவே காரணம். இது வரலாற்று சிறப்புமிக்க தருணம் என அஜர்பைஜானிய அதிபர் வர்ணித்துள்ளளார்.
தங்களுக்கு இது வெற்றியல்ல என்று குறிப்பிட்டுள்ள அர்மேனிய பிரதமர், இம்முடிவை எடுக்கும் போது ‘பேச முடியா வலியை’ அனுபவித்ததாக குறிப்பிட்டுள்ளார். தங்கள் நாடு அடிபணிந்துவிட்டதாக கூறி அர்மேனிய மக்கள் போராட்டத்தில் குதித்தனர். பிரதமர் அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்ட நிலையில், பிரதமர் இராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுத்திருக்கிறது.
நகோர்நோ – கரபாக் பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டு அகதிகளாக இருக்கும் மக்கள் ஐ.நா அகதிகள் சங்கத்தின் உதவியுடன் திரும்பவும் இப்பகுதிகளில் குடியமர்த்தப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. குறைந்தபட்சம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இரஷ்யாவும், துருக்கியும் இப்பகுதிகளில் அமைதி பணியை மேற்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
படங்கள்:
1. அஜர்பைஜான் எல்லைக்குள் நகோர்நோ – கரபாக் பகுதியை காட்டும் படம்.
2. வெற்றிக்கொண்டாட்டத்தில் அஜர்பைஜான் மக்கள்.
செய்திக்கான ஆதாரங்கள்:
1. DW News
2. The Indian Express
3. TRT World
4. Wikipedia
source: https://www.facebook.com/photo?fbid=3581209741976389&set=pcb.3581211808642849