அறிவியல் போர்வையில் நாத்திகர்கள் செய்த பித்தலாட்டங்கள்
ஆஷிக் அஹமது
அறிவியல் போர்வையில், நாத்திக பக்தி முத்தி போய் இவர்கள் செய்த பித்தலாட்டங்களை அவ்வப்போது நினைவுக்கு கொண்டு வருவது காலத்தின் கட்டாயம்.
பல அறிவியல் ஊடகங்கள், பின்வரும் சம்பவத்திற்கு, அறிவியல் உலகில் நடந்த பித்தலாட்டங்களில் முதன்மையான இடத்தை கொடுக்கின்றன.
இங்கிலாந்தின் கிழக்கு சசெக்ஸ் பகுதியில் உள்ள கிராமம் பில்ட்டவுன். 1911-ஆம் ஆண்டு இலையுதிர் காலத்தில் இங்குள்ள ஒரு கல்சுரங்கத்தில் ஆய்வில் ஈடுபட்டிருந்தனர் தொல்லுயிரியலாளர்களான சார்லஸ் டாசனும், ஆர்தர் கீத் வுட்வர்ட்டும். இந்த குழு அந்த இடத்தில் சில புதைப்படிமங்களை கண்டெடுத்தது.
அவை, குரங்கு போன்ற ஒன்றின் தாடைப்பகுதி மற்றும் மனித மண்டை ஓடு பகுதிகள்.
மனித மண்டை ஓடும், குரங்கின் தாடையும் ஒரே இடத்தில் கிடைத்திருப்பதால் இவை இரண்டும் ஒரே உயிரினத்தின் படிமங்கள் தான் என்று நம்பப்பட்டது. அதுமட்டுமல்லாமல், குரங்கின் தாடைப் பகுதியில் இருந்த பற்கள் மனித பற்களைப் போன்று இருந்தன.
ஆக, இந்த படிமங்கள் குரங்கிலிருந்து மனிதன் வந்திருக்க வேண்டும் என்ற பரிணாம கருத்துக்கு ஆதரவாக இருந்ததால், மனிதனுக்கும் குரங்கிற்கும் இடைப்பட்ட உயிரினம் கிடைத்துவிட்டதாக நம்பப்பட்டது.
இந்த உயிரினத்துக்கு “பில்ட்டவுன் மனிதன்” என்று பெயர் சூட்டினர். இவன் ஐந்து இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவன் என்றும் கூறினர். 21-11-1912 அன்று இதுக்குறித்த செய்தியை கார்டியன் பத்திரிக்கை வெளியிட விஷயம் படுவேகமாக பரவியது. மிக முக்கிய கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்டதாக புகழப்பட்டது.
1924 – 1946 காலக்கட்டத்தில், உலகின் பல்வேறு இடங்களில் “ஆதி” மனிதனின் புதைப்படிமங்கள் சேகரிக்கப்பட்டிருந்தன. இவை அனைத்தும் பில்ட்டவுன் மனித படிமங்களோடு ஒப்பிடுகையில் வேறுபட்டன (பில்ட்டவுன் மனிதனின் குரங்கு தாடை போல எதுவும் இல்லை).
சுருக்கமாக கூறவேண்டுமென்றால், ஒரு கையில் பில்ட்டவுன் மனித படிமங்கள், மற்றொரு கையில் உலகின் பல்வேறு இடங்களில் இருந்து எடுக்கப்பட்ட படிமங்கள். இவற்றில் எது உண்மை என்பது புரியாமல் பரிணாம உலகம் குழம்பியது.
இருப்பினும் பில்ட்டவுன் மனிதனை தாங்கி பிடித்தார்கள். மற்ற படிமங்களை நிராகரித்தார்கள். காரணம், குரங்கிலிருந்து மனிதன் வந்திருக்கலாம் என்ற அவர்களது நம்பிக்கையை அது மெருகூட்டியதால் தான்.
ஆனால், காலம் செல்ல செல்ல, மற்ற இடங்களில் படிமங்கள் அதிகமாக கிடைக்கப்பட, பில்ட்டவுன் மனிதனுக்கு எதிரான கருத்துக்கள் அதிக அளவில் வெளிவர ஆரம்பித்தன. அது எப்படி பில்ட்டவுன் மனித படிமம் மட்டும் உலகின் மற்ற படிமங்களோடு ஒப்பிடும் போது வித்தியாசமாக இருக்கும்?
1953-ஆம் ஆண்டு ஆக்ஸ்போர்ட் பேராசிரியர் ஜோசப் வெய்னர், தொல்லுயிரியலாளர் கென்னத் ஓக்ளியுடன் சேர்ந்து இது குறித்து ஆய்வு செய்ய ஆரம்பித்தார்.
நன்கு முன்னேறிய யுக்திகளை வைத்து பில்ட்டவுன் மனித படிமங்களை சோதனை செய்து பார்த்ததில், மண்டை ஓடு மனிதனுடையது என்றும், தாடையோ ஓராங்குட்டான் குரங்கினுடையது என்றும் தெரியவந்தது. வேதிப்பொருட்களை கொண்டு அந்த படிமங்கள் ஒரே வயதானவையாக தெரியவைக்கப்பட்டிருக்கின்றன என்ற தகவலும் வெளிச்சத்திற்கு வந்தது.
ஆக இவை இரண்டும் ஒரே உயிரினத்தின் பகுதிகள் அல்ல, இரண்டும் வெவ்வேறு உயிரினங்களின் பகுதிகள் என்ற உண்மை வெளிவந்தது.
அதுமட்டுமல்லாமல், தாடைப்பகுதியில் இருந்த பற்கள் ஒராங்குட்டான் குரங்கின் பற்கள் என்றும், மனித பற்களாக தெரிய வைக்க அவை கருவிகளை கொண்டு தீட்டப்பட்டு, மண்டை ஓடு படிமத்திற்கு ஏற்றவாறு மாற்றப்பட்டிருப்பது தெரியவந்தது. பழங்கால பற்கள் போன்று தோற்றமளிக்க அதனை கறைப்படவும் செய்திருக்கின்றனர். நேர்த்தியாக செய்யப்பட்ட இப்படியொரு பித்தலாட்டத்தால் அறிவியல் உலகம் ஸ்தம்பித்து நின்றது.
1953-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இருபத்தி ஒன்றாம் தேதி “தி டைம்ஸ்” மற்றும் “தி ஸ்டார்” பத்திரிக்கைகள் இதுக்குறித்து செய்தி வெளியிட்டன. தி டைம்ஸ் நாளிதழ் இதனை “பித்தலாட்டம்” என்றும் “நேர்த்தியான மோசடி” என்றும் தலையங்கத்தில் குறிப்பிட்டது.
லண்டன் ஸ்டார் பத்திரிக்கையின் தலையங்கமோ “இருபதாம் நூற்றாண்டின் மிகப் பெரிய அறிவியல் மோசடி” என்று கூறியது.
ஆனால் காட்சி இதோடு முடியவில்லை. இதற்கு மேல் தான் க்ளைமேக்ஸ்சே இருந்தது.
1959-ஆம் ஆண்டு கார்பன்-14 யுக்தியை கொண்டு ஆராய்ந்து பார்த்ததில், பில்ட்டவுன் மனிதனின் மண்டை ஓடு சுமார் 520-720 ஆண்டுகள் தான் பழமை வாய்ந்ததாகவும், தாடையோ சற்று இளையதாகவும் (சுமார் 500 ஆண்டுகள்) தெரியவந்தது. இந்த பித்தலாட்டத்தை செய்தவர்கள் அவற்றை எடுத்து, இலட்சக்கணக்கான ஆண்டுகள் பழமையானது என்ற உணர்வை கொடுக்க வேதிப்பொருட்களை கொண்டு அவற்றை மாற்றி அந்த கல்சுரங்கத்தில் போட்டிருக்கின்றனர். அடேங்கப்பா