ஸலாத்துல்லாஹ் அலா ரஸூலில்லாஹ்
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அல்லாஹ் கூறுகிறான்:
اِنَّ اللّٰهَ وَمَلٰٓٮِٕكَتَهٗ يُصَلُّوْنَ عَلَى النَّبِىِّ
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا صَلُّوْا
عَلَيْهِ وَسَلِّمُوْا تَسْلِيْمًا
“நிச்சயமாக இந்த நபியின் மீது அல்லாஹ்வும் அவனது மலக்குகளும் ஸலவாத் சொல்கின்றனர். விசுவாசிகளே! நீங்களும் அவர் மீது ஸலவாத்தும் ஸலாமும் சொல்லுங்கள். (அல்குர்ஆன் : 33:56)
எப்போதெல்லாம் ஸலவாத் சொல்ல வேண்டும்?
1, நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பற்றிப் பேசப்படும் பொழுது:
யாரிடத்தில் என்னை நினைவூட்ட படுகிறதோ அவர் என்மீது ஸலவாத் சொல்லவில்லை என்றால் அவர் கஞ்சன் ஆவார். (திர்மிதீ)
2, பாங்கு சொல்லிய பிறகு:
பாங்கு சொல்பவர் பாங்கு சொல்லக் கேட்டால் அவர் சொல்வது போல் நீங்களும் சொல்லுங்கள்! பிறகு என் மீது ஸலவாத் சொல்லுங்கள்! யார் என் மீது ஒரு ஸலவாத் சொல்கிறாரோ அவர் மீது அல்லாஹ் பத்து ஸலவாத் சொல்லுகிறான். (முஸ்லிம்)
3, பள்ளிவாசலில் நுழையும்போதும் வெளியேறும்போதும்:
உங்களில் யார் பள்ளிவாசலில் நுழைகிறாரோ அவர் அல்லாஹ்வின் தூதர் மீது ஸலாம் சொல்லட்டும், பிறகு “இறைவா! உன் அருட்கொடையின் வாசல்களை எனக்குத் திறந்து வைப்பாயாக” என்று பிரார்த்திக்கட்டும்.
அங்கிருந்து வெளியேறும் பொழுது “இறைவா! உன் கிருபையிலிருந்து கேட்கிறேன்” என்று சொல்லட்டும். (அபூதாவூத்)
4, தொழுகையில் இருப்பில்:
(அத்தஹிய்யாத்) இருக்கும் போது:
அல்லாஹ்வின் தூதரே தொழுகையில் உங்கள்மீது ஸலவாத் சொல்லும்படி நாங்கள் கட்டளையிடப்பட்டிருக்கிறோம்,
எப்படி சொல்ல வேண்டும்? என்று கேட்ட பொழுது, இவ்வாறு சொல்லுங்கள் :
اللهم صل على محمد، وعلى آل محمد كما صليت على إبراهيم،
وعلى آل إبراهيم إنك حميد مجيد،
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد،
என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி அவர்கள் கூறினார்கள்.
5, சபையில் இருக்கும் பொழுது:
மக்கள் சபையில் இருக்கும் பொழுது அல்லாஹ்வை நினைவு கூறாவிட்டால் மேலும் அவர்களுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மீது ஸலவாத் சொல்லாவிட்டால் அது அவர்களுக்கு நஷ்டத்துக்கு உரியதாகி விடும். அல்லாஹ் நாடினால் தண்டிப்பான், அல்லது மன்னிப்பான் !(திர்மிதீ)
6, ஜும்ஆ தினத்தன்று:
உங்களது நாட்களில் சிறந்தது ஜும்ஆ நாளாகும். அதில் என் மீது அதிகமாக ஸலவாத் சொல்லுங்கள் !உங்களுடைய ஸலவாத் என்னிடத்தில் எடுத்துக்காட்டப்படும்.
அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் மண்ணாகி விட்ட பிறகு எப்படி எங்களுடைய ஸலவாத் உங்களுக்கு காட்டப்படும் ? என்று கேட்ட பொழுது, அல்லாஹ் நபிமார்களின் உடல்களை மண்ணுக்கு விலக்கி (ஹராம்) விட்டான், என்றார்கள். (அபூதாவூத்)
ஜும்ஆவுடைய பகலிலும் இரவிலும் என் மீது அதிகமாக ஸலவாத் சொல்லுங்கள்! என் மீது யார் ஒரு ஸலவாத் சொல்கிறாரோ அவருக்கு அல்லாஹ் பத்து ஸலவாத் சொல்லுகிறான். (பைஹகி)
7, மரணித்தவருக்காக தொழும்போது:
மரணித்தவருக்காக தொழும் போது இமாம் தக்பீர் சொல்லட்டும். முதல் தக்பீருக்கு பிறகு ஃபாத்திஹா அத்தியாயத்தை தனக்குள் (சப்தமின்றி) ஓதிக் கொள்ளட்டும். பிறகு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மீது ஸலவாத் சொல்லட்டும், கடைசி தக்பீர்களில் இறந்தவருக்காக துவா செய்து கொள்ளட்டும். (பைஹகீ)
8 , பிரார்த்தனைகளின் போது:
நீங்கள் யாராவது பிரார்த்தனை செய்தால் முதலில் இறைவனை மேன்மைப் படுத்தி புகழட்டும், பிறகு நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி அவர்கள் மீது ஸலவாத்து சொல்லட்டும், பிறகு விரும்பியதை இறைவனிடம் கேட்கட்டும். (அபூதாவூத்)
9, வாழ்வில் ஏற்படும் முக்கியமான தருணங்களின் போது:
ஒரு மனிதர் சொன்னார்: அல்லாஹுவின் தூதரே, நான் என் எல்லா ஸலவாத்களையும் உங்கள் மீது அர்ப்பணிப்பது பற்றி நீங்கள் என்ன சொல்வீர்கள்? அவர்கள் கூறினார்கள்: இம்மையிலும் மறுமையிலும் ஏற்படும் முக்கியமான அனைத்து சூழ்நிலைகளிலும் அல்லாஹ் உனக்கு போதுமானவனாக இருப்பான் என்றார்கள். (அஹ்மது, ஹாக்கிம்)
10, அனைத்து நேரங்களிலும்:
மறுமை நாளில் மக்களில் என்னிடம் மிக சிறப்பானவர்கள் யாரென்றால் யார் என் மீது அதிகமாக ஸலவாத்து சொல்கிறார்களோ அவர்கள் தான், என்றார்கள் நபிகள் ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்கள். (ஸஹீஹுத் தர்ஹீப்)
இன்னும் பல்வேறு சமயங்களில் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி அவர்கள் மீது ஸலவாத் சொல்ல வலியுறுத்தப்பட்டுள்ளது.
கூர்ந்து கவனியுங்கள்.
ஒரு நாளின் பெரும்பகுதி நேரங்களில் இறைவனை பிரார்த்திக்கும் பொழுதும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றி பேசும் பொழுதும் அவர்கள் மீது நாம் ஸலவாத்து சொல்லிக் கொண்டிருக்கிறோம்.
ஆக, வருடம் முழுவதும் நாம் அவர்களுடைய கட்டளைகளை நிறைவேற்றி கொண்டிருக்கிறோம். கூடவே பெருமானாரை நினைத்துக் கொண்டிருக்கிறோம்,
போற்றிக் கொண்டிருக்கிறோம்.
அவற்றின் அடையாளமாக ஸலவாத் சொல்லிக்கொண்டிருக்கிறோம்.
எம் இறைத்தூதரின் நேசத்தை பெறுவதற்கு! மறுமையில் அவர்களது பரிந்துரையை அடைவதற்கு!!
(அல்குர்ஆன் சிந்தனைகள் – மவ்லவி ஜே எஸ் ரிஃபாய்)