சொர்க்க வாசலும் பெண்தான்!
நரக வாசலும் பெண்தான்!
ஒரு பாலைவனத்தில் சிற்றூர்.
குதிரையில் வந்த ஒரு பெரியவர் ஒரு வீட்டின் முன் நின்றார்.
“வீட்டில் யார் இருக்கிறார்கள்?” என்று குதிரையில் இருந்தபடியே கேட்டார்.
வீட்டுக்குள்ளிருந்து ஒரு பெண் வாசற்படியில் வந்து நின்றாள்.
பெரியவர் அவளிடம், “உன் கணவர் எங்கே?” என்று வினவினார்.
அவள் சிடுசிடுப்போடு, “வீட்டில் இல்லாதவரைப் பற்றி ஏன் கேட்கிறீர்கள்?” என்றாள்.
அவர் “உன் கணவர் எப்போது திரும்புவார்?” என்று கேட்டார்.
அவள் “யாருக்கு தெரியும்? என்றாள்.
அவர் “உண்ண ஏதேனும் கிடைக்குமா?” என்றார்.
அவள் “நாங்களோ பசியிலும் பட்டினியிலும் வாடிக்கொண்டிருக்கும் இதில் உங்களுக்கு எதைக் கொடுப்பது?” என்றாள்.
அதைக் கேட்ட அந்த பெரியவரின் முகம் வாடியது.
அவர், “நல்லது நான் சென்று வருகிறேன். உன் கணவர் வீட்டுக்கு வந்ததும் இன்ன இன்ன அடையாளம் உடையவர் இங்கே வந்து இருந்தார். தங்களுக்கு வாழ்த்துக் கூறினார். அதன்பின் இந்த வாசல்படி நன்றாக இல்லை எனவே அதை மாற்றி அமைக்கச் சொன்னார் என்று உன் கணவரிடம் சொல்” என்று கூறி விட்டு போய்விட்டார்.
அவளுடைய கணவர் மாலையில் வீடு திரும்பினார்.
அவள் அவரிடம் “இன்ன இன்ன அடையாளம் உடைய ஒரு பெரியவர் வந்திருந்தார். உங்களுக்கு வாழ்த்துக் கூறினார்” என்றாள்.
வந்தவர் யார் என்பதை புரிந்து கொண்ட அவர், “அவரை வீட்டுக்குள் அழைத்தாயா? உணவு கொடுத்து உபசரித்தாயா? என்று கேட்டார்.
அவள் குற்ற உணர்வோடு தலை குனிந்து நின்றாள்.
‘அவர் “அந்தப் பெரியவர் ஏதாவது சொன்னாரா?” என்று கேட்டார்.
அவள் “ஆம். இந்த வீட்டு வாசற்படி நன்றாக இல்லை அதனால் வேறு வாசற்படியை வைக்கச் சொன்னார்” என்றாள்.
அவர் “பாவி பெண்ணே! வந்திருந்தவர் என் தந்தையார். நெடுங்காலத்திற்கு பிறகு என்னை பார்க்க வந்திருக்கிறார். நெடும் தூரத்திலிருந்து வந்து இருக்கிறார். அவரை நீ உபசரிக்க வேண்டுமா?” என்று கேட்டார்.
“அவர் உங்கள் தந்தை என்று என்னிடம் கூறவே இல்லையே!”
“நீ கேட்டிருக்கலாமே? அவர் உன்னை சோதித்திருக்கிறார். சரி, யாராக இருந்தால் என்ன? நெடுந்தூரப் பயணம் செய்து களைத்து போயிருக்கும் ஒரு முதியவரை நீ உபசரிக்க வேண்டாமா? அவர் “வாயிற்படி” என்று சொன்னது உன்னைதான். அவரை உன்னை சரியாக மதிப்பிட்டு இருக்கிறார். வீட்டுக்கு வந்தவர்களை அன்போடு உபசரிப்பவள்தான் இல்லத்தரசி. அந்த குணம் கொஞ்சம் கூட இல்லாத உன்னோடு குடும்பம் நடத்துவது பாவம். இல்லறம் என்பதற்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும் என்று கூறி அவர் அவளுக்கு மண விலக்கு அளித்து அனுப்பி விட்டார்.
பின்னர் அவர் மற்றொரு பெண்ணை மணம் புரிந்துகொண்டார்.
அடுத்த ஆண்டு அதே பெரியவர் அதே வீட்டிற்கு முன் வந்து நின்றார்.
வெளியிலிருந்து வந்த ஓசையைக் கேட்டு ஒரு பெண் வாயிற்படியில் வந்து நின்றாள்.
பெரியவர் “அம்மா நீ யார் ? “என்று கேட்டார்.
அந்த பெண், “நான் இன்னாரின் மனைவி இன்னாரின் மகள்” என்றாள்.
“நீங்கள் நலமாக இருக்கிறீர்களா?” என்று பெரியவர் கேட்டார்.
“இறைவனின் அருளால் நலமாக இருக்கிறோம்.
“உன் கணவர் எப்படிப்பட்டவர்?
“நல்லவர் என்னை அன்போடு பார்த்துக் கொள்கிறார்”.
“உன் கணவர் எங்கே?
“வேட்டைக்காக போயிருக்கிறார்”
“எப்போது வருவார்?”
“இது அவர் வரும் நேரம்தான். நீங்கள் வயது முதியவராக இருக்கிறீர்கள். நெடுந்தூரம் பயணம் செய்த களைப்பும் பசியும் உங்கள் முகத்தில் தெரிகிறது தயவுசெய்து நீங்கள் எங்கள் வீட்டில் தங்கி இளைப்பாற வேண்டும் .ஏதோ எங்களிடம் இருக்கும் உணவை தருகிறேன். நீங்கள் பசியாற வேண்டும்.
அந்த பெண் வீட்டிற்குச் சென்று ரொட்டி, பால், இறைச்சி, பழங்கள் எல்லாம் கொண்டுவந்து பெரியவரை உண்ணுமாறு அன்போடு வேண்டினாள்.
தண்ணீர் கொண்டுவந்து பெரியவரின் கால்களைத் தூய்மைப்ப்படுத்தினாள்.
பெரியவர் உணவை உண்டு மகிழ்ந்தார்.
“இறைவா! இப்பொருள்களை இம்மண்ணில் அதிகமாய்க்கி வை!” என்று பிரார்த்தனை புரிந்தார்.
அந்தப் பெண்ணை நோக்கி, “அம்மா நன்றாக இரு. உன் கணவர் வந்தால், என் வாழ்த்தைக் கூறு. அவருடைய வாயில்படி நன்றாக இருக்கிறது என்றும், அதனால் அதை எதற்காகவும் எப்போதும் மாற்றக் கூடாது என்றும் நான்கூறியதாக அவரிடம் சொல். நான் சென்று வருகிறேன்”
அந்தப் பெரியவர் சென்றுவிட்டார் .சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்த கணவரிடம் அந்தப் பெண் நடந்ததைச் சொன்னாள்.
அவர் “அன்பே..! வந்தவர் என் தந்தை ஆவார். அவர் யார் என்று தெரியாமலே அவரை அன்போடு உபசரித்து இருக்கிறாய். உன்னை என் மனைவியாகப் பெற்றது அது என் பாக்கியம். என் தந்த உன்னை ஆசீர்வதித்திருக்கிறார். நீ பெரும்பேறு பெற்று விட்டாய். அவர் வாசற்படி என்று சொன்னது உன்னைதான்” என்று கூறி மகிழ்ந்தார்.
அவர் இறுதிவரை அந்த ஒரு மனைவி உடனேயே இல்லறம் நடத்தினார்.
அந்தப் பெரியவர், யூதமதம், கிறிஸ்தவம் இஸ்லாம் என்று இன்று மூன்றாகப் பிரிந்திருக்கும் சமயங்களுக்கு மூல பிதாவான இறை தூதர் இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஆவார்.
.
அவருடைய புதல்வர் இறைத்தூதர் இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் ஆவார்.
இது நடந்த இடம் மக்கா.
காலம் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்.
இறைத்தூதர் இப்ராஹிம் அவர்கள் கூறிய “வாயிற்படி” என்பது ஒரு அற்புதமான குறியீடு.
பொதுவாக பெண், சிறப்பாக இல்லத்தரசி எப்படி இருக்கிறாள், எப்படி இருக்க வேண்டும் என்பதை அந்த குறியீடு அழகாக விளக்குகிறது.
பெண் வாயிற்படியாக இருக்கிறாள்.
வாயிற்படி வழியாகத்தான் உள்ளே செல்ல வேண்டும்.
பெண்ணின் வழியாகத்தான் நாம் இந்த உலகத்திற்கு வந்தோம்.
நாம் இந்த உலகை வாழ்க்கைக்குள் நுழைய அவளே வாயிற்படியாகும் இருந்தாள்.
நாம் ‘வெளியேற’ வேண்டுமென்றாலும் அவள் வழியாகத்தான் வெளியேற வேண்டும்.
வேறு வழி இல்லை.
இல்லறத்திற்குள் நுழைய வாயிற்படி வேண்டும்.
இல்லறத்திற்குள் நுழையப் பெண் வேண்டும்.
நன்மையோ தீமையோ அவள் அனுமதித்தால்தான் வீட்டிற்குள் நுழைய முடியும்.
நன்மையோ தீமையோ அவள் கதவை’ச் சாத்திவிட்டால், உள்ளே நுழைய முடியாது.
எனவே நன்மைக்கும் கதவு திறந்து விடுவதும் தீமைக்கு கதவை அடைப்பதும் அவள் பொறுப்பு.
இல்லறத்திற்கு வேண்டியவை எல்லாம் அவள் வழியாகத்தான் வரவேண்டும்.
ஆணுக்கு வேண்டிய கூட அவள் வழியாகத்தான் வரவேண்டும்.
வீட்டில் இருப்பவர்களைக் ‘கத’வடைத்து காப்பதும் அவள் பொறுப்பு.
அவர்கள் வெளியே செல்ல வேண்டிய போது அவர்களுக்கு கதவு திறந்து விடுவதும் அவள் பொறுப்பு.
வீடு கட்டும் போது நிலையைத்தான் முதலில் வைப்பார்கள். பிறகுதான் சுவர் எழுப்புவார்கள்.
இல்லறத்திற்கு பெண்ணே முதன்மையானவள்.
வாயிற்படி குறுகலாக இருந்தால், நுழைவதும் சிரமும், வெளியேறுவதும் சிரமம்.
பெண் குறுகிய மனம் கொண்டவளாக இருந்தால் வாழ்க்கையே நரகமாகிவிடும்.
கலவி என்பது வந்த வாசல் வழியாக நுழையும் முயற்சியே .சொர்க்க வாசலும் பெண்தான்,
நரக வாசலும் பெண்தான்.
– பூக்காலம்
கவிக்கோ அப்துல் ரகுமான்.
கவிக்கோ கட்டுரைகள் – ஓர் ஆய்வு (வாயிற் படி)
– ரஹமத் ராஜகுமாரன்
source: https://www.facebook.com/photo/?fbid=2734069466852391&set=a.1412423615683656