பகுத்தறிவால் ஞானத்தை வளர்த்த நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம்
ரஹமத் ராஜகுமாரன்
பாபல் நாட்டை (இன்றைய ஈராக்) கிமு 2230 வாக்கில் மன்னன் நம்ரூது ஆண்டுவந்தான்.
அவனுடைய அரசவையில் நட்சத்திர கலை வல்லுனர் காலித் பின் ஆஸ், நம்ரூதை நோக்கி, “மன்னா! ஜென்ம நட்சத்திரம் ஒன்று தோன்ற இருக்கிறது. அது உச்சம் ஆகும்போது ஜனிக்கும் குழந்தையால் உம் ஆட்சிக்கும், உம் மார்க்கத்திற்கும் சாவு மணி அடிக்கும்”
நம்ரூது அமைச்சர்களை நோக்கி “இன்றிலிருந்து எவரும் தம் மனைவியரை மறுவாதிருக்க ஆண் காவலர்களையும், காவல் மகளிரையும் நியமியுங்கள்! இவ்வாண்டு பிறக்கும் எல்லா ஆண் குழந்தைகளையும் கொன்றொழியுங்கள்”
ஆண் காவலரும், அரசனின் மெய்க்காப்பாளருமான ஆஸர் இரவு காவல் நேரத்தின் போது தன் வீடு சென்று மனைவி உஷாவைப் பார்த்த போது விரக தாபத்தல் வீடு கூடினார்.
கிமு 2160-ல் முஹர்ரம் மாதம் 10 நாள் வெள்ளி இரவு நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பிறந்தார்கள்.
உஷா தன் இல்லத்தின் அடியில் சுரங்கம் தோண்டி, அச் சுரங்கம் வழியே மலைக்குகையை அடைந்தார். அங்கு குழந்தையை பாதுகாப்பாக வைத்தார்.
பல நாட்கள் சென்றபின் ஆஸர் இல்லம் வந்து, குழந்தையைப் பற்றி விசாரிக்க “பிறந்ததும் இறந்தது. புதைத்து விட்டேன்.”
அன்னை உஷா வழக்கம் போல் சுரங்க நிலவறையில் குழந்தைக்கு அமுதூட்டி வர, அன்று தாமதமாகி விட்டது .குழந்தை தம் பிஞ்சு பெரு விரலை வாயில் வைத்து சுவைத்து கொண்டிருக்க,
“மகனே! ஏன் பெருவிரலை வாயில் வைத்துள்ளாய்? பசிக்கிறதோ? என்று கூறி பெருவிரலை எடுத்த போது, அதிலிருந்து தேன் ஒழுகி ஓடியது. மற்ற விரல்களை நோக்கும் போது கலிமா விரலில் பாலும், நடுவிரலில் பாகும், மோதிர விரலில் நெய்யும், சுண்டு விரலில் சுவன நீரும் வழிந்தோடக் கண்டார்.
வான சாஸ்திரிகள் முன்னறிவிப்புச் செய்த திருமகன் என்பது நன்கு தெரிய வந்தது.
குழந்தை “அன்னையே எனக்கு உணவு அளிப்பது யார்?”
“நான்”
“உமக்கு உணவளிப்பவன் யார்?”
“உன்னுடைய தந்தை”
“என்னுடைய தந்தைக்கு உணவளிப்பது யார்?”
“அரசர்”
“அரசருக்கு உணவளிப்பவன் யார்?
“மகனே இவ்வாறெல்லாம் வினவாதே அரசரை விட மேலானவர் எவரும் இல்லை.. அவரை எல்லாவற்றுக்கும் அதிபதி” என்று கூறி மைந்தனின் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் அன்னை.
மைந்தர் தம் பேச்சை விடவில்ல..
“அம்மா தாங்கள் அழகானவரா? நான் அழகானவனா?”
“என் செல்லமே நீ தான் அழகிலும் அழகு” என்று கூறினார்.
“தாங்கள் அழகானவரா? தந்தை அழகானவராக?”
“நான்தான் அழகானவள்”
“தந்தை அழகானவரா? அரசர் அழகானவரா?
“தந்தை”
“அரசர் தாம் என் தந்தைக்கு உணவளிப்பவர் எனில் ஏன் அவர் தன் தந்தையைத் தம்மிலும் அழகானவராக படைத்தார்?
என்னுடைய தந்தை ஆஸர் தான் தங்களுக்கு உணவளிப்பவர் எனில் ஏன் அவர் தங்களைத் தம்மினும் அழகானவராக ஏன் படைத்தார்?
தாங்கள் தான் எனக்கு உணவளிப்பவர் எனில், என்னைத் தங்களினும் அழகாக ஏன் படைத்தீர்?”
குழந்தை வளர்ப்பை தன் கணவர் ஆஸரிடம் மறைக்காமல் உண்மையை கூறினார் அன்னை உஷா.
ஆஸர் நிலவறையில் தன் குழந்தை அழகே உருவெடுத்தாற்போல் இருந்தது.
“அப்பா!” என்றதும் பாசம் பொங்கி வழிந்தது.
அப்பா..! தங்களின் இறைவன் யார்?”
“நம்ரூத் “
“நம்ரூத்தின் இறைவன் யார்?”
“வாயை மூடு”
சிறுவர் நிலவறையில் இருந்து வெளியே வந்து, இந்த அகண்ட பாருலகைப் பார்த்தார். விரிந்த வானை பார்த்தார். இறைவனின் படைப்புகளைப் பார்த்தார் மனிதர்களைப் பார்த்தார். மக்களைப் பார்த்தார் .பறவைகளைப் பார்த்தார். புழுக்களை பார்த்தார். எல்லாம் அவருக்கு ஒரே வியப்பாக இருந்தது இவற்றையெல்லாம் படைத்தவன் யார்? இவற்றை ஏன் அவன் படைத்தான்?
என்ற வினாக்கள் அவரை முற்றுகையிடத் தொடங்கின.
காரிருள் சூழ்ந்த அவ்விரவில் அவர் வானத்தை உற்று நோக்கிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென ஒரு பெரும் விண்மீன் தோன்றி நாலா பக்கங்களிலும் ஒளி சிந்தியது. மக்களில் சிலர் அதை வணங்கினர்.
“இதுதான் என்னுடைய இறைவனாக இருக்குமோ? என்று அவர் தன்னைத்தானே கேட்டுக் கொண்டார்.
சற்று நேரத்தில் விண்ணில் மறைந்தது அது வீற்றிருந்த சுடர் வீசி அவ்விடத்தில் அதன் அடையாளமே இன்றி இருள் மங்கியது.
“இது அல்ல என் இறைவன்.” என்று அவர் தமக்குத்தாமே அறிவுரை கூறிக் கொண்டார். (அல்குர்ஆன் 6: 76)
பின்னர் வெண்ணிலா புன்னகை பூத்த வண்ணம் விசும்பின் அடியில் வெளிவருவதை கண்டு “இதுதான். அகிலங்களையெல்லாம் படைத்த இறைவன் ஆக இருக்குமோ?”
அதுவும் மறைய, “இதுவும் என் இறைவன் அல்ல. இறைவன் எனக்கு நேர்வழி காட்ட வில்லை எனில் நானும் வழி தவறியவர்களில் ஒருவனாகவே ஆகிவிடுவேன்” என்று அவர் கூறினார். (அல்குர்ஆன் 6: 77)
விடிந்தது. பொழுதும் தன் பொற்கிரணங்களை அள்ளி வீசிய வண்ணம் சூரியன் வெளியே வந்தது. அதனை கண்டதும் அவருடைய உள்ளம்
فَلَمَّا رَاٰ الشَّمْسَ بَازِغَةً قَالَ هٰذَا رَبِّىْ هٰذَاۤ اَكْبَرُ فَلَمَّاۤ اَفَلَتْ قَالَ يٰقَوْمِ اِنِّىْ بَرِىْٓءٌ مِّمَّا تُشْرِكُوْنَ
பின் சூரியன் (மிக்க ஒளியுடன்) உதயமாவதைக் கண்டபோது : “இதுவே என் இறைவன்; இது எல்லாவற்றிலும் பெரியது” என்று அவர் கூறினார். அதுவும் அஸ்தமிக்கவே, அவர், “என் சமூகத்தாரே! நீங்கள் (ஆண்டவனுக்கு) இணைவைக்கும் (ஒவ்வொன்றையும்) விட்டு நிச்சயமாக நான் விலகி விட்டேன்” என்று கூறினார். (அல்குர்ஆன் : 6:78)
اِنِّىْ وَجَّهْتُ وَجْهِىَ لِلَّذِىْ فَطَرَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ حَنِيْفًا وَّمَاۤ اَنَا مِنَ الْمُشْرِكِيْنَ
“வானங்களையும் பூமியையும் படைத்தவன் பக்கமே நான் உறுதியாக என் முகத்தைத் திருப்பிக் கொண்டேன்; நான் முஷ்ரிக்கானவனாக – (இணைவைப்போரில் ஒருவனாக) இருக்க மாட்டேன்” (என்று கூறினார்).
(அல்குர்ஆன் : 6:79)
இப்படியாக பகுத்தறிவால் கேள்விகள் பல கேட்டு தன் ஞானத்தை வளர்த்து கொண்டவர்கள்தாம் கேள்வியின் நாயகம் நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்
ர.ரா