தேசப் பிரிவினையால் ஏன் குற்ற உணர்ச்சி?
இந்திய சுதந்திரத்திற்கு ஊனுயிர் தியாகம் செய்த நம் முப்பாட்டனை நாம் ஏன் விட்டுக் கொடுக்க வேண்டும்?
உலகிற்கு உன்னத வழிகாட்ட வந்த அல்குர்ஆனின் 6666 வசனங்களில் ஏறத்தாழ 600-700 வசனங்கள் முந்திய சமூக வரலாற்றைப் பேசுகின்றன.
வாழும் சமுதாயத்திற்கும் வரப் போகும் சமுதாயத்திற்கும் வழிகாட்ட வந்த வான் மறை, முன் சென்று விட்ட சமுதாயங்களின் சரித்திரங்கள் பேசும் காரணம் என்ன? இதை இன்றைய முஸ்லிம் சமுதாயம், குறிப்பாக இளைய முஸ்லிம் சமுதாயம் ஆராய்ந்து உணரத் தலைப்பட வேண்டும்.
அதிலும் குறிப்பாக இன்றைய சுதந்திர இந்தியாவில் வாழக் கூடிய முஸ்லிம் சமுதாய இளைஞர்களும் மாணவர்களும், நம் சமுதாயச் சரித்திரத்தை, சமுதாயத் தலைவர்களின் தியாகங்களை, 1400 ஆண்டுகால இந்திய முஸ்லிம்களின் வரலாற்றுத் தொடர்ச்சியாகத் துவக்கப்பட்ட அகில இந்திய முஸ்லிம் லீக், அதன் தொடர்ச்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வரலாற்றையும் கட்டாயம் படித்தே ஆக வேண்டிய சூழ்நிலை இன்று உள்ளது.
சமுதாயத்தில் போட்டி இயக்கங்களை ஆரம்பித்தவர்கள், சமுதாயத்திற்கான அரசியல் அங்கீகாரம் எந்த வழியிலும் கிடைத்து விடக் கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு நூறாண்டு காலமாக இந்த தேசத்தில் உழைத்துக் கொண்டே இருக்கும் ஆதிக்க சக்திகள், பல்வேறு பரப்புரைகள் செய்து வரும் காலத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகினுடைய வரலாற்றைப் படித்துணர்வது காலத்தின் கட்டாயமாகின்றது.
கண்ணியத்திற்குரிய நம் தலைவர் காயிதே மில்லத் முஹம்மத் இஸ்மாயில் ஸாஹிப் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள், அறிந்தும், படித்தும், கற்றுணர்ந்தும், முஸ்லிம் லீக் தலைவர்களிடத்தில் கேட்டுணர்ந்தும், அவர்களுடைய அரசியல் எதிரிகளே புகழ்ந்துரைத்தும் நாம் தெளிந்த வகையில் அப்பழுக்கற்ற ஓர் வாழ்க்கை வாழ்ந்த இறைநேசச் செல்வர் ஆவார்கள்.
எக்காலத்திலும் தம்முடைய நம்முடைய முன்னோர்களுடைய மாண்புகளை எடுத்துச் சொல்வதில் பின் வாங்கியவர்கள் அல்ல அவர்கள்.
எத்தகைய சூழ்நிலையிலும் அவர்களுடைய தியாக வரலாற்றிலிருந்து நம்மைப் பிரித்தெடுத்து, அவர்களைக் கெட்டவர்களாக்கி நம்மை நல்லவர்களாகக் காட்டிக் கொள்ள வேண்டும் என்ற வழிமுறையைக் காட்டியவர்களும் அல்ல.
எல்லா வரலாற்றுக்கும் ஒரு பின்னணி உண்டு. அந்த வரலாற்றுச் சம்பவங்களுக்குக் காரண காரணிகள் உண்டு.அந்த வரலாற்றுச் சம்பவங்களை படிக்கத் தலைப்படும் பொழுதும், ஆராய முற்படும் போதும், அந்தச் சம்பவங்களின் பின்னணியோடு அந்த வரலாற்றைப் படித்துணர வேண்டும் என்று நமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள்.
இந்தியாவின் தேசப் பிரிவினை என்ற ஒன்று நிகழ்ந்தது உண்மை தான். காலம் காலமாக அதற்கு ஒரு குறிப்பிட்ட சமுதாயமும், ஒரு குறிப்பிட்ட இயக்கமுமே காரணம் என்பதை அன்றிலிருந்து பழைய காங்கிரஸ்காரர்கள் முதல், காங்கிரஸில் இருந்த இந்து மகாசபையினர், ஆர்எஸ்எஸ் ஆர்வலர்கள் முதல் அனைவரும் தொடர்ந்து ஓர் வரலாற்றுப் புரட்டை, தங்களிடத்தில் இருக்கும் ஊடக வலிமையின் வழி ஓர் பெரும் பரப்புரையாகச் செய்து வந்துள்ளார்கள். செய்து வருகின்றார்கள்.
அதையே நம்பும் படி ஒரு நாட்டினுடைய குறிப்பிடத் தக்க மக்கள் மூளைச்சலவை செய்யப்பட்டு உள்ளார்கள்.
இந்நிலையில் சரியான சரித்திரத்தைச் சொல்வதுதான் ஒரு நீண்ட காலத் தீர்வாகும். எண்ணிக்கையில் நாம் சிறுபான்மையினர் என்றாலும், எண்ணத்தில் உயர்வும், அந்த உயர்வில் உறுதியும் கொண்டு உண்மையான சரித்திரத்தை பதித்திட வேண்டும்.
நம்மை நல்லவர்களாகக் காட்டிக் கொண்டு, இந்த நாட்டிற்காக தங்கள் உயிர் பொருள் ஆவி அனைத்தையும் தியாகம் செய்த நம் முன்னோர்களின் வரலாற்றிலிருந்து நம்மைப் பிரித்துக் கொள்வது எக்காலமும் இறைவனின் பொருத்தத்திற்கு உரியதாக ஆகாது.
இந்திய முஸ்லிம் சமுதாயத்தை ஓர் குற்ற உணர்ச்சிக்கும் (Guilty Conscious), தாழ்வு மனப்பான்மைக்கும் (Inferior Complex) உள்ளாக்கக் கூடிய ஒரு தத்துவார்த்த சித்தாந்தப் போர் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
இந்த தேசப் பிரிவினைக்கு இந்த சமுதாயம் மட்டுமே காரணம் அல்லது அகில இந்திய முஸ்லிம் லீக் மட்டுமே காரணம் என்கின்ற வரலாற்றுப் புரட்டு திட்டமிட்டு தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
அறிந்தோ அறியாமலோ தெரிந்தோ தெரியாமலோ இந்த சித்தாந்தப் போருக்கு சரியான ஈடு கொடுக்க முடியாமல், நம்மவர்களும் ஆதிக்க சக்திகளின் சதிகளுக்குப் பலியாகி, தேசப் பிரிவினைக்கு இந்தச் சமுதாயமும், அகில இந்திய முஸ்லிம் லீக் மட்டுமே காரணமாக இருக்குமோ என்கின்ற ஒரு குற்ற உணர்ச்சிக்கும், தாழ்வு மனப்பான்மைக்கும் ஆளாகி விடல் ஆகாது.
தேசப் பிரிவினைக்கு ஓர் குறிப்பிட்ட சமுதாயம் மாத்திரம் காரணம் அல்ல என்பதை உலகிற்கு உரத்துச் சொல்வோம். அதற்குரிய நீண்ட நெடிய விளக்கமான வரலாற்று ஆதாரங்கள் வால்யூம் வால்யூம்களாக உள்ளன.
யாருக்கும் சந்தேகம் ஏற்படுமானால், இந்திய தேசப் பிரிவினையின் போது ஏற்பட்ட ஒப்பந்த ஷரத்துக்களை யாராவது படித்து உள்ளார்களா? அல்லது அவ்வாறு படித்துள்ளவர்கள் தான் இந்தக் குற்றச்சாட்டுகளைச் சுமத்துகின்றார்களா என்பதையும் துணிந்து கேட்போம்.
கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் நமக்கு தெளிவான வழிகாட்டுதலை அரசியல்ரீதியாக தந்து விட்டுச் சென்றுள்ளார்கள்.
1947 ஆகஸ்ட் 15 க்கு பிறகு இந்திய யூனியனில் வாழும் முஸ்லிம் சமுதாயம், இந்த நாட்டிலுள்ள மற்ற சமுதாயத்தினரைப் போல சம உரிமை பெற்றவர்கள். நாம் முதலிலும் இந்தியர்கள். முடிவிலும் இந்தியர்கள். இந்த நாட்டில் உள்ள ஈ, கொசுவை வெளியேற்றுவதற்குக் கூட யாருக்கும் உரிமை இல்லை.
சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமத் ஸாஹிப் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறினார்கள். நாம் யாரிடத்திலும் சலுகைகளை கேட்டு போராடவில்லை. நம்முடைய உரிமைகளை மானம் மிக்க வழியில் கேட்டுப் பெறுவோம்.
1947 ஆகஸ்ட் 15 ற்கு முன்னாலுள்ள வரலாறுகளை யாரும் பேச முன் வருவார்களேயானால், அவர்கள் நியாய உணர்வோடு வருவார்களேயானால், அதற்குரிய வரலாற்று ஆதாரங்களோடு வருவார்களேயானால், அவர்கள் படிக்க வேண்டியது ஒரு முஸ்லிம் எழுதிய சரித்திரத்தை அல்ல!
அவர்களுடைய சித்தாந்தத்தில் இருந்து வெளிப்பட்டு, அவர்களுடைய அமைச்சரவையில் முக்கிய அமைச்சராகப் பங்கு வகித்து, அவர்களே நாட்டிற்கு இனங் காட்டிய திரு ஜஸ்வந்த் சிங் அவர்கள் எழுதிய புத்தகமே, அவர்களின் வரலாற்றுப் புளுகு மூட்டைகளுக்கு சாவுமணி அடிக்கும்.
அதிலும் அவர்களுக்குச் சந்தேகம் இருக்குமானால், தமிழகத்தைச் சேர்ந்த சுப்பிரமணி அவர்கள், 2009 இல் சீதை பதிப்பகம் சார்பில், காயிதே ஆஸம் முகமது அலி ஜின்னா என்று பெயரிட்டு எழுதிய புத்தகத்தை வாங்கிப் படிப்பார்களேயானால், இந்திய தேசப் பிரிவினை என்பது எல்லோராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட, அன்றைய பிரச்சினைகளின் தீர்வுகளாக, ஆச்சார்ய கிருபளானி, பல்லாயிரம் கோடி செலவழித்து குஜராத்தில் அவர்கள் சிலை நிறுவி இருக்கின்ற சர்தார் வல்லபாய் பட்டேல் உள்ளிட்ட தலைவர்கள் அனைவரும் கூடி எடுத்த முடிவே தவிர, ஓர் சமுதாயம் மாத்திரம் கூடி எடுத்த முடிவு அல்ல என்பதே தெள்ளத் தெளிவாக நிரூபிக்கப்பட்ட வரலாறு!
வேண்டுமென்றால் 1947 ஜூன் மாதம் 14 ஆம் தேதி மௌண்ட் பேட்டனின் ஜூன் 3 திட்டத்தை விவாதிப்பதற்காகக் கூடிய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் கோவிந்த் வல்லப பந்த் அவர்கள் என்ன பேசினார் என்று கேட்டுப்பாருங்கள். கோவிந்த் வல்லப பந்த் அகில இந்திய முஸ்லிம் லீக்கின் தலைவர் அல்ல!
எனவே இந்திய தேசியப் பிரிவினைக்கு எக்காலத்திலும் எந்த ஓர் குறிப்பிட்ட சமுதாயம் மட்டும் பொறுப்பேற்க முடியாது!
அதற்கான குற்ற உணர்ச்சியோ, தாழ்வு மனப்பான்மையோ வருவதற்கு எள்ளளவும், எள்ளின் முனையளவும் இந்த சமுதாயத்தினருக்கு தார்மீக முகாந்திரம் இல்லை என்பதை மாத்திரம் இப்போதைக்குச் சொல்லி வைப்போம்.
– Hameed Rahman
source: https://www.facebook.com/photo?fbid=10158450806456357&set=a.409670086356