பொருளா? தாரமா?
ரஹமத் ராஜகுமாரன்
பெண்ணைப் பற்றி கவிக்கோ கட்டுரைகள் – ஓர் ஆய்வு
தமிழ் அகப்பொருளில் பாலை பிரிவு நிகழும் இடமாக சொல்லப்பட்டிருக்கிறது. தலைவன் இல்லற வாழ்க்கைக்கு தேவைப்படும் பொருள் ஈட்டுவதற்காக வறண்ட பாலை வழியாகச் செல்வான் என இலக்கியங்கள் கூறுகின்றன.
இன்றைக்கும் நம் நாட்டு இளைஞர்கள் புது மனைவியை துடிக்க விட்டு விட்டு பொருள் ஈட்டுவதற்காக பாலைவன நாடுகளுக்குச் செல்கிறார்கள்.
அவர்கள் தங்கள் குடும்ப விளக்குக்கு எண்ணெய் தேடி எண்ணெய் நாடுகளுக்குப் போகிறார்கள்.
புது மனைவி விரகதாபம் என்ற பாலையில் வெந்து துடிக்கிறாள்.
கணவனோ இரண்டு பாலைகளில் எறிகிறான்.
ஒன்று – வெப்ப பாலை.
மற்றொன்று _ பிரிவு பாலை
அவர்கள் குரலால் மட்டுமே கூடுகிறார்கள்.
கடிதங்களிலும் ஒலிப்பேழைகளிலும் கண்ணீரையும் பெருமூச்சுகளையும் பரிமாறிக் கொள்கிறார்கள்.
ஒன்றை பெறுவதற்காக ஒன்றை இழக்க வேண்டும் என்பார்கள். ஆனால் அவர்கள் இழப்பது அவர்கள் பெறுவதை விட பல மடங்கு அதிகமானது.
வாழ்க்கைக்குப் பொருள் தேவை ஆனால் அவர்கள் பொருள் தேடுவதில் வாழ்க்கையை இழந்து விடுகிறார்கள்.
கையில் பொருள் கிடைக்கிறது. ஆனால் வாழ்க்கை பொருளற்றதாகி விடுகிறது. வாழ்க்கைக்குப் பொருள் ஆதாரம்தான் ஆனால் எது முக்கியம் ? பொருளா?தாரமா ? என்ற கேள்வி எழுகிறது.
இதே கேள்வியை சங்க காலத்திலும் எழுந்தது. கலித் தொகையில் ஒரு பாடல் இந்தப் பிரச்சினையை அழகாக அலசுகிறது.
தலைவன் பயண ஏற்பாடுகள் செய்து கொண்டிருப்பதை தலைவியின் தோழி பார்த்து விடுகிறாள்.
அவள், எங்கே புறப்படுகிறாய்? என்று அவனைக் கேட்கிறாள்.
அவன், ‘இல்லறம் நடத்தப் பொருள் வேண்டாமா? அதை ஈட்டுவதற்காகத்தான் புறப்பட்டு கொண்டிருக்கிறேன்!’ என்கிறான்.
தோழி பேசுகிறாள் :
“பொருள் தேடுவதற்காகப் போகும் நீ கடந்து செல்ல வேண்டிய வழி எத்தகையது தெரியுமா?
அது கொடிய காடு அங்கே மறவர்கள் இருப்பார்கள். அவர்கள் பயங்கரமானவர்கள்.
ஓர் அரசனே தன் படையோடு வந்தாலும் அவர்கள் அஞ்சமாட்டார்கள். அவர்கள் சிலை மரத்தால் செய்த வில்லை வளைத்து நாண் பூட்டுவார்கள். அரசப் படை மீது கணை தொடுப்பது தம் வீரத்திற்கு தகுதியற்றது என்று கருதி வெறுமே நானைத் தெறித்து ஒலி எழுப்புவார்கள்.
அவ்வொலி கேட்ட அரசனும் அவன் பெரும் படையும் சிங்கக் குரல் கேட்ட விலங்கினம் போல் சிதறி ஓடி விடுவார்கள்.
அவரவர்களுடைய தாடி கலைமானின் கொம்புகளைப் போல முறுக்குண்டு கொண்டு திருகித் தாழ்ந்து தொங்கும். அவர்கள் அந்த காட்டு வழியாக வருபவர்களின் பொருள்களை எல்லாம் பறித்துக் கொண்டு அதற்கு ஈடாக புண்களை கொடுப்பார்கள்.
அவர்களிடம் அன்போ அருளோ கொஞ்சம் கூட இருக்காது.
அத்தகைய கொடியவர்கள் இருக்கும் காட்டைக் கடந்து சென்று பொருள் தேடி அதே வழியில் மீள்வதற்கு எண்ணுகிறாய்.
நீ பொருள் தேடி மீண்டு வருவாய் என்பது என்ன நிச்சயம்?
புறப்பொருளை விரும்பி அகப்பொருளைக் கைவிட்டு விடப் போகிறாய்.
தலைவியை விட்டு நீ பிரிந்தால் அவள் வாடி போவாள்.
அசோகின் இளந்தளிர் போன்ற அவளுடைய அழகை எல்லாம் பசலை நோய் தின்றுவிடும்.
நீ திரும்பி வரும்போது அவள் தோற்றமே மாறிப்போயிருக்கும்.
நீ தேடிக் கொண்டுவரும் பொருளால் இழந்துபோன அவளுடைய அழகை மீட்டுத் தர முடியுமா?
அவள் முகம் இனிய ஒளியுடைய மதியைப் போன்றது.
நீ பிரிந்தால் அந்த முகம் கிரகணம் பிடித்த சந்திரனைப் போல் ஆகிவிடும்.
நீ சான்றோரிடம் சென்று மெய்ப்பொருள் பெற்று மாசற்ற மனத்தோடு வருவேன் என்கிறாயே! அந்த மெய்ப்பொருளால் அவளுடைய முக அழகை மீட்டுத் தர முடியுமா?
அவருடைய கண்கள் நறுமணம் கமழும் நீல மலர்கள் போன்றவை.
நீ பிரிந்தால் அந்தக் கண்கள் அழும்.
எரியும் தீயிலிருந்து சொட்டும் எண்ணெய் போலச் சூடான கண்ணீர்த் துளிகளைச் சொரியும்.
அவளுடைய காதல் தொடர்பை அறுத்து விட்டு, வேற்று நாட்டில் புதிய வணிக தொடர்புகளை ஏற்படுத்த போகிறேன் என்கிறாய்! அந்த புதிய தொடர்புகளால் மங்கிப்போன அவளுடைய கண்ணொளியை மீட்டு தர முடியுமா?
எனவே நீ செய்ய வேண்டியதை நன்றாக சிந்தித்து முடிவுக்கு வா செல்வத்தை எப்போதும் தேடலாம் இங்கிருந்தும் பெறலாம் கண்ணியர் கூட்டத்திலேயே மிகச் சிறந்த அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட கலவியின் இளமை தொலைந்து போனால் பின்னர் எதனாலும் அதை மீட்க முடியாது என்பதை தெரிவித்துக் கொள் என்கிறது கலித்தொகை பாடல் ஒன்று.
பூக்காலம்
கவிக்கோ அப்துல் ரகுமான்
source: https://www.facebook.com/photo?fbid=2734724303453574&set=a.1412423615683656