விலா எலும்பு
ரஹமத் ராஜகுமாரன்
கவிக்கோ கட்டுரைகள் – ஓர் ஆய்வு
பெண்ணிடமிருந்துதான் பிறக்கிறோம். பெண்ணோடுதான் வாழ்கிறோம். ஆனால் அவளைப்பற்றி நாம் எந்த அளவிற்கு அறிந்திருக்கிறோம்?
பெண் எப்போதும் முத்திரையோடுதான் இருக்கிறாள். அதனால் நாம் அவளை முழுமையாகப் பார்க்க முடியவில்லை. அவள் நம் பக்கத்தில் இருந்தாலும், உண்மையில் அவள் தூரத்தில் இருக்கிறாள்.
பெண் அடிமையல்லள். பெண் ஆணின் உறக்கத்தில் படைக்கப்பட்டாள்.
உறக்கம் என்பது ஓய்வு, மயக்கம், மறதி. சுகம். சிறு மரணம். பெண் ஆணின் உறக்கமாக இருக்கிறாள். உறக்கத்தில் உதிப்பது கனவு. பெண் ஆணின் கனவாக இருக்கிறாள்.
பெண் ஆணின் விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டாள். விலா எலும்பு குறியீடு என்று வைத்துக்கொள்வோம். அதாவது பெண் விலா எலும்பு போன்றவள். எலும்பு உறுதியானது. பெண் ஆணுக்கு உறுதியாக இருக்கிறாள். அதாவது ஆணின் வெற்றிக்கு பின்னால் பெண் இருக்கிறாள்.
விலா எலும்பு இதயம், சுவாசப்பை போன்ற முக்கியமான உறுப்புகளைக் காக்கும் கவசமாக இருக்கிறது. பெண் ஆணைக் காப்பவளாக இருக்கிறாள்.
பெண் தலை எலும்பால் படைக்கப்படவில்லை. அப்படி படைக்கப்பட்டிருந்தால் அவள் ஆணுக்கு மேலானவளாக இருந்திருப்பாள்.
அவள் கால் எலும்பால் படைக்கப்படவில்லை. அப்படி படைக்கப்பட்டிருந்தால் அவள் ஆணுக்குக் கீழானவளாக இருந்திருப்பாள்.
அவள் விலா எலும்பால் படைக்கப்பட்டாள்.
எனவே அவள் ஆணுக்குச் சமமானவள்.
யூத மரபில் எலும்பு என்பது உயிரின் குறியீடாக அழியாத பகுதியாகக் கருதப்படுகிறது. அது விதையாகவும் எண்ணப்படுகிறது.
பெண் உயிரைப் படைப்பவளாக மறுவுயிர்ப்பைத் தருபவளாக இருக்கிறாள். ஆணும் பெண்ணும் சதையும் எலும்பும் போன்றவர்கள். இந்த பந்தம் ரத்த பந்தத்தை விடச் சக்தி வாய்ந்தது. அதனால்தான், ‘புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு தன் மனைவியோடே இசைந்திருக்கிறான்’ ஏனெனில் ‘அவர்கள் ஒரே மாம்சமாய்’ இருக்கிறார்கள்.அதாவது ஒரே உடலாய் இருக்கிறார்கள்.
பெண் ஆணிலிருந்து பிரிக்கப்பட்டுப் படைக்கப்பட்டவள். அதனால்தான் இருவரும் இணைய விரும்புகிறார்கள். அதனால்தான் ஒருவரை ஒருவர் ஈர்க்கிறார்கள்.
பெண் ஆணிலிருந்து எடுக்கப்பட்டவள். எனவே ஆண் குறையுடையவனாக இருக்கிறான். ஆண் பெண்ணோடு சேரும் போதுதான் அவன் நிரம்புகிறான் .
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விலா எலும்புக்கு வேறொரு பொருள் சொல்கிறார்கள்.
“பெண் விலா எலும்பால் படைக்கப்பட்டிருக்கிறாள், அவள் ஒரு வழியிலும் உனக்கு நேராய் நடக்கவே மாட்டாள். அவளால் நீ சுகம் பெற வேண்டுமென்றால் ,அவளிடம் கோணல் இருக்கும் நிலையிலேயே சுகம் பெறுவாயாக. அவளை நீ நேராக்க முயன்றால் அவளை முறித்து விடுவாய். அவளை முறித்தலாவது அவளுடைய மணவிலக்காகும்.” (நூல்: முஸ்லிம்)
விலா எழும்பு கோணலாக இருந்தால்தான் பயன்படும். அதற்காகத்தான் அது கோணலாகவே படைக்கப்பட்டிருக்கிறது. அதே நேராக்க முயலக் கூடாது. முயன்றால் உடைந்துவிடும். உடைந்தால் பயன்படாது.
பெண்களுடைய சில குணங்கள் நமக்கு கோணலாக தெரியலாம்.
அவற்றை மாற்ற முயலக் கூடாது.
ஏனெனில் அவை தேவை கருதியே படைக்கப்பட்டிருக்கின்றன.
எடுத்துக்காட்டாக பெண்கள் ஒன்றை எளிதில் பிடிக்க மாட்டார்கள். பிடித்துவிட்டால் பிறகு விடவே மாட்டார்கள். இது சில நேரங்களில் நமக்கு பிரச்சனையாக இருக்கலாம். ஆனால் இந்த குணம்தான் கற்புக்கு காரணமாகிறது என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
‘கோணல்’ என்பது இழிவானதல்ல. நேரைப் போல அதுவும் இயற்கை. வில் வளைய வேண்டும் அம்பு நேராக இருக்க வேண்டும். வில்லும் நேராக இருந்தால் அம்பெய்ய முடியாது.
ஆதம் – ஏவாள் தொன்மம் மற்றொர் உண்மையை உணர்த்துகிறது. ஆதாம் அவளைக் கண்டதும், ‘என் எலுபும்களின் எலும்பு. சதையின் சதை’ என்று கவிதை பாடினார். பெண்ணே கவிதையின் தோற்றத்திற்குக் காரணமாக இருக்கிறாள்.
பூக்காலம் – கவிக்கோ அப்துல்ரகுமான் .
-ர.ரா
source: https://www.facebook.com/photo/?fbid=2731951570397514&set=a.1412423615683656