ஆடைத் தத்துவம் அற்புதமானது
ரஹமத் ராஜகுமாரன்
கவிக்கோ கட்டுரைகள் – ஓர் ஆய்வு
ஆதி மனிதர் ஆதாமும் ஏவாளும் தொடக்கத்தில் நிர்வாணமாக இருந்தனர்.
ஆனால் அவர்கள் நிர்வாணமாக இருக்கிறோம் என்பதை அறியாமல் இருந்தார்கள்.
எப்போது அவர்கள் அறிவுக் கனியை உண்டார்களோ அப்போதுதான் தாங்கள் நிர்வாணமாக இருப்பதை உணர்ந்தார்கள்.
அவர்கள் தங்கள் பாலுறுப்புகள் வெளிப்படையாகத் தெரிவதைப் பார்த்து வெட்கப்பட்டார்கள். உடனே அத்தி மர இலைகளைப் பறித்துத் தங்கள் பாலுறுப்புகளை மறைத்துக் கொண்டார்கள்.
ஆடை மனிதனின் முதல் கண்டுபிடிப்பு. அந்த ஆடையே மனிதனை மற்ற உயிரினங்களிலிருந்து பிரித்தது; உயர்த்தியது.
ஆடைத் தத்துவம் அற்புதமானது.
யோனத்தன் ஸ்விஃப்ட் ‘மனிதனே ஆடைதான்’ என்கிறார். அதாவது மனிதன் தோன்றுவதற்கு முன் பூமி நிர்வாணமாக இருந்தது.
அறிவியலின் சாரமே ஆடை பற்றிய தத்துவத்தில் அடங்கியிருக்கிறது என்கிறார் கார்லைல்.
ஆடையில்லாமல் எதுவுமில்லை.
கண்ணுக்கு இமை ஆடை. விண்ணுக்கு மேகம் ஆடை. மண்ணுக்குக் கடல் ஆடை. இதயத்திற்கு எண்ணங்களே ஆடை. ஆன்மாவுக்கு உடல் ஆடை. மதமே மனிதனின் ஆடைதான். சொல் பொருளின் ஆடை.
‘பத்துக்கு மேலாடை பதினொன்று’ என்று கூறி அசத்துகிறார் உவமைக் கவிஞர் சுரதா.
சமணர்களில் ஒரு பிரிவினர் திகம்பரர். அவர்கள் நிர்வாணமாக இருப்பார்கள். கேட்டால் ‘நாங்கள் நிர்வாணத்தையே உடுத்தியிருக்கிறோம்’ என்கிறார்கள்.
காவெண்ட்ரி நாட்டு அரசி காடிவா, மக்களை வரிக் கொடுமையிலிருந்து நீக்குவதற்கு மன்னன் விதித்த நிபந்தனைப்படி வீதிகளில் குதிரையில் நிர்வாணமாக ஊர்வலம் வந்தாள்.
அதை வருணித்த டென்னிசன் ‘அவள் கற்பை ஆடையாக உடுத்தி வந்தாள்’ என்கிறார்.(!!!)
இதே காட்சியை நான் ‘அவள் மக்கள் இமைகளையே ஆடையாக உடுத்தி வந்தாள்’ என்று எழுதியிருக்கிறேன்.
கணவன் – மனைவி உறவு எப்படி இருக்க வேண்டும் என்பதை விளக்க வந்த திருக்குர்ஆன், ஆண்களை நோக்கி, ‘அவர்கள் உங்களுக்கு ஆடை; நீங்கள் அவர்களுக்கு ஆடை’ என்கிறது. அதாவது மனைவி கணவனுக்கு ஆடை. கணவன் மனைவிக்கு ஆடை.
பாலுறவு வெட்கப்படத்தக்கதல்ல; வெறுக்கப்படத் தக்கதுமல்ல ஏனெனில் ஆடையை போல் அது அவசியமானதாக இருக்கிறது.
பாலுணர்வு என்பது உயிர்களின் அடிப்படை உணர்வு ; உயிர் தோற்றத்தின் ஊற்று. உணவு உடை உறையுள் போலவே ஆணுக்கு பெண்ணும் பெண்ணுக்கு ஆணும் அடிப்படைத் தேவை.
உணவு, உடை, உறையுள் மூன்றும் மனிதனுக்கு இன்றியமையாத தேவைகள்.
கணவன்- மனைவி உறவை உணவாகவோ, உறையுளாகவோ கூறாமல் உடையாகக் கூறுகிறது குர்ஆன்.
உணவுக்குப் பிச்சை கேட்டே பிழைத்துக் கொள்ளலாம். வாடகை வீட்டிலேயே வாழ்க்கையை ஓட்டிவிடலாம். ஆடை விஷயத்தில் அப்படி இருக்க முடியுமா? ஆண்டிக்குக் கூடக் கோவணம் ஒன்று சொந்தமாகத் தேவை.
ஆடை ஆழமான அர்த்தங்களையுடைய அற்புதமான குறியீடு.
மனிதன் மட்டுமே ஆடை அணிகிறான். மற்றைய உயிரினங்கள் அணிவதில்லை. அதைப் போலவே உயிரினங்களுக்குப் பொதுவான பாலுறவைத் திருமணம் என்ற ஒன்றால் ஒழுங்காக்கிக் கொண்டவன் மனிதனே.
திருமணத்திற்கு முன் ஆணும் பெண்ணும் ஆடை அணிந்திருந்தாலும் நிர்வாணிகளே.
ஆண் பெண்ணையும் பெண் ஆணையும் உடுத்திக் கொள்ளும்போதுதான் அவர்கள் கௌரவம் பெறுகிறார்கள்.
ஆண் பெண்ணுக்காகவே நெய்யப்படுகிறான். பெண் ஆணுக்காகவே நெய்யப்படுகிறாள்.
கணவன் இல்லாத பெண் நிர்வாணமாக இருக்கிறாள்;
மனைவி இல்லாத ஆணும் நிர்வாணமாக இருக்கிறான்.
மணவாழ்க்கையில் யார் உயர்ந்தவர்கள் கணவனா? மனைவியா? என்ற பட்டிமன்றத்துக்கு இங்கு இடமில்லை இருவரும் ஒருவருக்கொருவர் ஆடை எனவே இருவரும் சமம்.
கணவன் மனைவி உறவை உணவாகவோ உறையுளாகவோ சொல்லாமல் உடையாக சொன்னதில் ஆழமான அர்த்தங்கள் உண்டு.
மற்ற உயிரினங்களுக்கும் உணவும் உறையுளும் தேவை; மனிதன் மட்டும்தான் ஆடை அணிகிறான் பாலுறவையும் அழகாக்கிக் கொண்டவன் அவன்தான்; அதனால்தான் அவன் “மண”க்கிறான்.
திருமணம் என்றாலே ஆடை அவிழ்ப்பதற்கு என்று நினைக்கிறார்கள். ஆனால், திருமணம் என்பதே ஆடை உடுப்பது என்கிறது குர்ஆன்.
ஆடை நமக்குப் பிடித்திருக்க வேண்டும். அதற் காகத்தான் அதை நாமே தேர்ந்தெடுக்கிறோம். நாம் விரும்பித் தேர்ந்தெடுத்ததை அணியும் போதுதான் நாம் மகிழ்கிறோம். திருமண உறவும் அப்படித்தான். விரும்பியதைத் தேர்ந் தெடுக்க வேண்டும். இல்லையென்றால் உடுத்த முடியாது.
ஆடை நமக்குப் பொருத்தமானதாக இருக்க வேண்டும். இயற்கை ஒவ்வோர் ஆணையும் பெண்ணையும் ஆயத்த ஆடையாகவே தயாரிக்கிறது. அதில் பொருத்தமானதையே நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். பத்துப் பொருத்தம் பார்க்கிறார்கள். ஆனால், மனப் பொருத்தம் பெரும்பாலும் பார்ப்பதில்லை. அது முக்கியம்.
ஆடை மானத்தைக் காக்கிறது. திருமணமும் மானத்தைக் காக்கிறது. பால் இச்சை பயங்கரமானது. அது மனிதனை அவமானப் படுகுழியில் தள்ளிவிடக்கூடியது. திருமண உறவில் ஆணும் பெண்ணும் ஒருவர் பால் இச்சையை மற்றவர் தணிக்கின்றனர். இதனால் ஒருவர் மானத்தை மற்றொருவர் காக்கின்றனர்.
ஆடை நம்மீது அழுக்குப் படாமல் காக்கிறது . தீய குணங்கள் என்ற அழுக்கு படாமல் கணவன் மனைவியை காக்கிறான் மனைவி கணவனை காக்கிறாள். ஆடை உடற் குறைகளை மறைக்கவும் உதவுகிறது . கணவன் குறைகளை வெளியே தெரியாதபடி மறைப்பவளாக மனைவி இருக்க வேண்டும். மனைவியின் குறைகளை வெளியே தெரியாதபடி மறைப்பவனாக கணவன் இருக்க வேண்டும்.
கணவன் என்ற ஆடை கட்டிக் கொண்டிருப்பதால் ஒரு பெண் தவறான பார்வைகளிலிருந்து மறைக்கப்படுகிறாள். கணவனும் அப்படியே.
ஆடை தட்பவெப்பம், அழுக்கு போன்ற வற்றிலிருந்து பாதுகாக்க அணியப்படுகிறது. கணவனும் மனைவியும் துன்பம் தாக்காமல் ஒருவருக்கொருவர் பாதுகாப்பாக இருக்கின்றனர். அது மட்டுமல்ல; இருவரும் ஒருவருக்கொருவர் குளிருக்குக் கதகதப்பாகவும் வெயிலுக்கு இதமாகவும் இருக்கிறார்கள்.
ஆடை கெளரவத்திற்காக அணியப்படுகிறது. கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் கெளரவம் உண்டாக்குகிறவர்களாக இருக்க வேண்டும்.
சீருடை அடையாளத்திற்காக அணியப்படுகிறது. அதுபோலவே கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் அடையாளமாக இருக்க வேண்டும்.
ஆடையை நாகரிகம், பண்பாட்டுக்காக அணிகிறோம். கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் நாகரிகம் பண்பாட்டை உண்டாக்குகிறவர்களாக இருக்க வேண்டும்.
ஆடையை சுகத்திற்காக அணிகிறோம். கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் சுகம் தருகிறவர்களாக இருக்க வேண்டும்.
ஆடையை அழகுக்காக அணிகிறோம். கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் அழகுபடுத்துபவராக இருக்க வேண்டும்.
ஆடை அழுக்கானால் நாம் அதைத் தூக்கி எறிந்துவிடுவதில்லை. சலவை செய்து அணிந்துகொள்கிறோம். கணவனிடமோ மனைவியிடமோ குறைகள் தோன்றினால் தூக்கி எறிந்துவிடக் கூடாது. அந்தக் குறைகளை நீக்க முயல வேண்டும்.
ஆடை கொஞ்சம் கிழிந்தால் நாம் அதைத் தூக்கி எறிந்துவிடுவதில்லை. தைத்து அணிந்து கொள்கிறோம். கணவன் மனைவியரிடையே கோபதாபங்கள் ஏற்பட்டால் பிரிந்துவிடக்கூடாது. சமாதானம் என்ற தையலால் ஒன்று சேர்ந்துவிடவேண்டும்.
ஆனால் ஆடை அணியவே முடியாதபடி சுருங்கிப் போனால், தைக்கவே முடியாதபடி கிழிந்துபோனால், சலவை செய்யவே முடியாதபடி அழுக்காகிப் போனால், அதாவது ஆடை யின் பயனை அது தராது போனால், அந்த ஆடையை வைத்துக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. தூக்கி எறிந்துவிட்டுப் புதிய ஆடையை வாங்கிக்கொள்ள வேண்டியது தான்.
இன்பமாக இருப்பதற்குத்தான் இல்லறம்; துன்பப்படுவதற்கல்ல. கசப்பும் வெறுப்பும் முற்றி இருவரும் சேர்ந்து வாழவே முடியாது என்ற நிலை வந்துவிட்டால், பிறகு இல்லறம் என்பதற்கே அர்த்தமில்லை. இருவரும் பிரிந்து தமக்குப் பிடித்தமான புதிய உறவுகளை உண்டாக்கிக்கொள்வதே நல்லது.
‘அறிவு’க்கனி உண்டவுடன் ஆதாமும் ஏவாளும் செய்த முதல் வேலை ஆடை அணிந்துதான். அறிவு கெட்டுப் பைத்தியம் முற்றியவன் ஆடையைத் தான் முதலில் கிழிக்கிறான்.
‘ஆடை’ என்ற ஒரே ஒரு குறியீடு கணவன் மனைவிக்குரிய இலக்கணங்கள் அத்தனையையும் உணர்த்துவது வியப்புக்குரியது.
“பூப்படைந்த சப்தம்”
– கவிக்கோ அப்துல் ரகுமான்
ர.ரா
source: https://www.facebook.com/photo?fbid=2732570873668917&set=a.1412423615683656