முஸ்லிம்கள் மறக்க கூடாத ஆப்பிரிக்காவின் ருவாண்டா நாடு
ஆஷிக் அஹமது
நவீன கால இஸ்லாமிய வரலாற்றில், நாம் யாருமே மறக்க கூடாத, நம் அடுத்த தலைமுறைகளுக்கு நிச்சயம் கடத்த வேண்டிய நிகழ்வு என்றால் அது ஆப்பிரிக்காவின் ருவாண்டா நாடு தொடர்பான சம்பவங்கள் தான்.
1994-ல், 1% மட்டுமே என்று இருந்த ருவாண்டாவின் முஸ்லிம் மக்கட்தொகை அடுத்த சில வருடங்களில் 14%-த்தை தாண்டியது. எப்படி மிக குறுகிய காலத்தில் இந்த அபார வளர்ச்சி சாத்தியம் என்ற கேள்விக்கான பதிலில் நம் எல்லோருக்கும் படிப்பினை இருக்கிறது.
ருவாண்டா இரு பெரும் இனப்பிரிவுகளை கொண்ட நாடு, ஹுடு மற்றும் டுட்சி இனங்கள் தான் அவை. இவற்றில் ஹுடு மக்கள் தான் பெரும்பான்மை. பல ஆண்டுகளாக இவர்களுக்குள் நீடித்து வந்த பனிப்போர் ஒரு கட்டத்தில் பூதாகரமாக வெடித்தது.
1994-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், ருவாண்டா அதிபர் விமான விபத்தில் கொல்லப்பட, இதற்கு காரணம் சிறுபான்மை டுட்சி மக்கள் தான் என்று குற்றம் சாட்டி வன்முறையில் ஈடுபட ஆரம்பித்தார்கள் ஹுடு இன வலதுசாரிகள். இதற்கு அரசும் உடந்தையாக செயல்பட, வன்முறை இனக்கலவரமாக வெடித்தது.
டுட்சி இன மக்களும், கலவரத்தை எதிர்த்த மிதவாத ஹுடு மக்களும் குறிவைக்கப்பட்டனர். ருவாண்டா முஸ்லிம்கள் இந்த இரு இன பிரிவுகளிலும் காணப்பட்டாலும், கலவரத்திற்கு எதிரான நிலைப்பாட்டையே எடுத்தனர். பள்ளிவாசல்களில் ஒருங்கிணைப்பை கொண்டுவந்து இனக்கலவரத்திற்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தினர்.
கொல்லப்படுவதில் இருந்து மக்களை காக்க பல்வேறு யுக்திகளையும் கையாண்டார்கள் ருவாண்டா முஸ்லிம்கள். பள்ளிவாசல்கள் மற்றும் தங்கள் வீடுகளில் இலட்சக்கணக்கான டுட்சி இனத்தவருக்கு அடைக்கலம் தந்தனர். சொல்லிமாளாத துயரங்களை எதிர்கொண்டு அவர்களுக்கு உணவு முதலிய அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்துக்கொடுத்தார்கள்.
மேலும், ஹுடு வன்முறையாளர்களிடத்தில் உளவாளிகளாக நுழைந்து அவர்களின் திட்டங்களை அறிந்துக்கொண்டு அதற்கேற்ப காய் நகர்த்தினார்கள். சவப்பெட்டிகளுக்குள் மக்களை அடைத்து ஒரு பிம்பத்தை கட்டமைத்தெல்லாம் பாதிக்கப்பட்டவர்களை காத்திருக்கிறார்கள். பல முஸ்லிம்கள் தங்கள் உயிரை இப்பணிக்காக இழந்திருந்தார்கள்.
தங்களின் இந்த செயல்பாட்டிற்கு ‘எவரொருவர் ஒரு ஆத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் (உலக) மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்’ என்ற குர்ஆன் வசனத்தையே (5:32) பல முஸ்லிம்களும் சுட்டிக்காட்டியதாக வாஷிங்டன் போஸ்ட் ஊடகம் செய்தி வெளியிட்டது.
இனக்கலவரம் முடிவுக்கு வந்தபோது, பெற்றோரை இழந்து தவித்த டுட்சி இன சிறுவர்களுக்காக, முஸ்லிம் பெண்கள் ஒரு கூட்டமைப்பை உருவாக்கி, அவர்களுக்கு கல்வி தந்ததுடன் தாயாக இருந்து கவனித்துக்கொண்டதாகவும் ஆவணப்படுத்தியது வாஷிங்டன் போஸ்ட்.
முஸ்லிம்களின் இத்தகைய நடவடிக்கைகளால் கவரப்பட்ட மக்கள், இனக்கலவரத்தின் முடிவில், கூட்டம் கூட்டமாக இஸ்லாமை ஏற்க ஆரம்பித்தனர். தங்களை முஸ்லிம்கள் காப்பாற்றியதற்கு பின்னணியில் குர்ஆன் இருந்ததை உணர்ந்த காரணத்தால் இஸ்லாமை தழுவினோம் என டுட்சி இன மக்களும், மிகச் சிறிய சமுதாயமாக இருந்த போதிலும் எதற்கும் அஞ்சாது பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் முஸ்லிம்கள் நின்றது தங்களை கவர்ந்த காரணத்தால் இஸ்லாமை தழுவினோம் என ஹுடு இன மக்களும் கூறினர்.
இனக்கலவரத்திற்கு முன்பாக 1%-மாக இருந்த முஸ்லிம்களின் எண்ணிக்கை அடுத்த சில வருடங்களில் 15%-மாக உயர்ந்தது இந்த காரணங்களால் தான். இஸ்லாமிய தழுவல் எந்த அளவிற்கு வீரியமாக இருந்தது என்றால், இந்த மனமாற்றத்தை தடுக்க வாடிகனின் ஆதரவை நாடும் அளவு சூழ்நிலை சென்றதாக குறிப்பிடுகின்றன சில ஊடகங்கள்.
இன்று ருவாண்டாவின் அமைச்சரவை, இராணுவம் என்று எல்லா துறைகளிலும் முக்கிய பொறுப்பு வகிக்கின்றனர் முஸ்லிம்கள். இனம் மொழி மதம் கடந்து பாதிக்கப்பட்ட மக்களை மட்டுமே கணக்கில் கொண்டு, அவர்களுக்கு உறுதுணையாக இருந்த இவர்களுடைய செயலில் நிச்சயம் உலக மக்கள் எல்லோருக்கும் படிப்பினை இருக்கிறது.
முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள்;
‘ஒருவர் தன் இனத்தின் மீது அன்பு செலுத்துவது இனவெறி அல்ல. மாறாக தன் இனத்தவர் தவறு செய்ய முற்படும் போது அவருக்கு துணை போவதே இனவெறியாகும்’ (நூல்: அபூதாவூத்)
தலைப்பில் உள்ள படம்: ருவாண்டா தலைநகர் கிகாலியில் உள்ள விளையாட்டரங்கத்தில் பெருநாள் தொழுகையை நிறைவேற்றும் முஸ்லிம்கள், 2019.
செய்திக்கான ஆதாரங்கள்:
1. The Washington Post
2. TRT World
3. Qantara
4. The New Times
5. BBC Sounds
6. Wikipedia
source: https://www.facebook.com/photo?fbid=3462677437162954&set=a.103673699730028