இஸ்லாமும் மனஅமைதியும்
LockDown, Quarantine போன்ற வார்த்தைகளை எல்லாம் நாம் கடந்த ஆண்டு வரையில் பெரும்பாலும் பயன்படுத்தியே இருக்க மாட்டோம்.
ஆனால் இந்த ஆண்டின் ஆரம்ப முதலே பெருந்தொற்று குறித்த அச்சம், பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த உலகின் பல பகுதிகளை முடக்கிப்போட்டது.
அறிவியல் தொழில்நுட்ப பலமும், பொருளாதார வளமும் இருந்தால் எதையும் செய்ய இயலும் என்ற கருத்தியல் பலத்த அடிவாங்கியுள்ளது. எல்லாம் இருந்தும் எதையும் பயன்படுத்த முடியவில்லை. நிம்மதி இழந்து மனஉளைச்சலுக்கு ஆளானோரின் எண்ணிக்கை 33.2% என்கிறது ஒரு இணையவழி ஆய்வு.
2020-ஆம் ஆண்டு நமது அன்றாட செயல்பாடுகளை முடக்கியிருந்தாலும், நாம் நமது கொள்கை, நம்பிக்கை போன்றவற்றை மறுபரிசீலனை செய்வதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளது.
நம்மை சூழ்ந்திருக்கும் அனைத்தும் நிச்சயமில்லாமல் மாறியுள்ள நிலையில், சில அடிப்படை கேள்விகளை குறித்து நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.
1. அறிவியல், நிர்வாகம், பொருளாதாரம் மற்றும் ராணுவம் என மனித பலம் முழுமையும் தோல்வியை சந்தித்துள்ள நிலையில், இந்த உலகம் உண்மையில் யாரின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது?
2. இறைவனின் இருப்பை மறுக்க முடியுமா?
3. மனித சமூகம் சந்திக்கும் அனைத்து பிரச்சனைகளுக்குமான தீர்வை நீதியின் அடிப்படையில் மனிதனே இயற்ற முடியுமா?
4. அவனது மரணத்திற்கு பின்பு என்ன நடைப்பெறுகின்றது?
இஸ்லாம்:-
இறைவன் ஒருவன் தான்; இறைவன் சகல ஆற்றலும் பெற்றவன். அவன் எத்தகைய தேவையுமற்றவன். அவனுக்கு குடும்பம் இல்லை. அவன் ஈடு இணையில்லாதவன். அவனது தோற்றம் குறித்து அறிவில்லாத நிலையில், உருவ வழிபாடு என்பது அர்த்தமற்றது. இது இறைவன் குறித்த இஸ்லாமிய கொள்கை.
இறைவன் தன்னை குறித்து மக்களுக்கிடையில் பிரச்சாரம் செயவதற்காக பல இறைத்தூர்களை நியமித்தான்; வேதங்களையும் அருளினான். இறைத்தூதர்களில் இறுதியானவராக முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இருக்கின்றார்கள். வேதங்களில் இறுதியானதாக குர்ஆன் இருக்கின்றது.
இஸ்லாம் மனிதனை உயரிய படைப்பாகவும், இறைவனின் அடியானாகவும் அடையாளப்படுத்துகிறது.
இறைவனை நிராகரிப்பதை பகுத்தறிவின் உச்சமாக போற்றும் போக்கை நாம் இன்று காண்கிறோம். ஆனால், இறைவனை நிரூபிக்க அறிவியல் ஆதாரம் இல்லாதது போன்றே நிராகரிக்கவும் வலுவான ஆதாரங்கள் எதுவுமில்லை என்பதை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.
உண்மையை சொல்ல வேண்டுமென்றால் ஆன்மீகமும் அறிவியலும் செயல்படும் தளங்களே வேறு. சமூகவியல் கோட்பாடுகளை இயற்பியல் மூலம் எவ்வாறு நிரூபிக்க இயலாதோ, அதுப்போன்றதே இதுவும்.
ஆன்மீகம் நம்மை சுற்றி சுழன்று கொண்டிருக்கும் உலகியல் விவகாரங்களில் முழுமையாக சரணடைவதை விட்டும் தடுத்து, ஈடில்லாத மறுமை (மரணத்திற்கு பின்புள்ள வாழ்வு) வெற்றி சார்ந்த சிந்தனையை தூண்டிவிடுகின்றது. ஏனெனில் மறுமையில் தான் மனிதன் செயல்களுக்கான கூலியோ தண்டனையோ வழங்கப்படும்.
நாம் சந்திக்கும் நெருக்கடி காலங்களில், இதயத்தின் கவலையும், மனஉளைச்சலும், இறைநினைவை கொண்டு நம் இதயத்தை நனைக்கும் போது மறைந்து விடுகின்றன. இறைவனின் வார்த்தைகளை படிக்கும் போதும், இறைவனை மனம் ஒன்றி தொழும்போதும் நிலையற்ற இவ்வுலகின் சச்சரவுகளிலிருந்து விலகி, இதயம் முழுமையான அமைதியை தழுவிக்கொள்ளும்.
இஸ்லாம் ஓர் வாழ்வியல் நெறி என்ற வகையில் ஆன்மீகம் கடந்து, மனித வாழ்வின் அனைத்து பகுதிகளுக்கும் தேவையான வழிக்காட்டுதல்களை வழங்குகின்றது. மனிதர்கள் எவ்வித வரம்புகளுமின்றி சட்டங்களை இயற்ற முனையும் போது அது ஆதிக்க சக்திகளின் பாதுகாப்புக்கே வழிவகுக்கின்றது என்பதை கருத்தில் கொண்டு, நீதியை நிலைநாட்டும் பொருட்டு இறைவன் வகுத்தளித்த வரம்புகளை பேணி சட்டங்களை உருவாக்குமாறு அது கட்டளையிடுகின்றது.
ஒடுக்குமுறை அரசியல், சுரண்டல் பொருளாதாரம், பண்பாட்டு எதேச்சதிகாரம், அமைதியிழந்த உள்ளம் போன்ற இருளிலிருந்து மீட்டு சமத்துவ-சமதர்ம-நீதி- ஆன்மீகம் போன்ற ஒளியின் பக்கம் அழைக்கிறது.
இந்த ஒளியில் தான் மனிதனுக்கு தேவையான அக அமைதியும் புற நிம்மதியும் இருக்கின்றன.
“நிச்சயமாக அல்லாஹ்-வை நினைவு கூறுவதால் தான் உள்ளங்கள் அமைதிப் பெறுகின்றன.” (அல்குர்ஆன் 13:18)
Jazaakallaahu khair – mohamed aslam