வாரத்தின் நாட்களும் அவைகளின் சிறப்புகளும்
அல்லாஹுத்தஆலா பூமியை சனிக்கிழமையும், மலைகளை ஞாயிற்றுக்கிழமையிலும்,
மரம் மட்டை போன்ற தாவர ஜாதிகளை திங்கட்கிழமையும்,
பெருத்த கேடான காரியங்களை செவ்வாய்க் கிழமையிலும்,
ஒளியை புதன்கிழமையிலும், ஊர்ந்து திரியும் உயிர்ப் பிராணிகளை வியாழக்கிழமையிலும்,
மனிதனை வெள்ளிக்கிழமை அஸருக்குப் பிறகும் படைத்தான் என்றும் ஹதீஸில் வந்திருக்கிறது!
வியாழக்கிழமையிலும், சனிக் கிழமையிலும் அல்லாஹ் பரக்கத் செய்திருக்கிறான் என்று ஹதீஸில் வந்திருப்பது குறித்து ஹஜரத் ஷேக் ஸத்துருதீன் கூனவி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் வினவிய போது, “அந்த இரு தினங்களும் வெள்ளிக்கிழமைக்கு அடுத்து இருப்பதால்தான்” என்று பதில் கூறினார்கள்.
ஞாயிற்றுக்கிழமை
ஞாயிற்றுக்கிழமையை பற்றி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வினவப்பட்டது . அதற்கு அந்த நாள் மரங்கள் வைப்பதற்கும், வீடு கட்டுவதற்கும் உரிய நாள் என்று பதில் கூறப்பட்டது. ஏனெனில் அந்த நாளில்தான் அல்லாஹுத்தஆலா இவ்வுலகை படைக்க ஆரம்பித்தான்.
சுவர்க்கலோகம் அன்று தான் கட்டப்பட்டது.
திங்கட்கிழமை
திங்கட்கிழமை குறித்து வினவப்பட்டதற்கு, “பிரயாணத்திற்கும் வியாபாரத்திற்கும் உரிய நாள் ” என்று பதில் சொல்லப்பட்டது.
இத்தினத்தில் தான் நபி ஷுஹைப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வியாபாரத்திற்காக பிரயாணம் சென்று தக்க லாபத்தை அடைந்தார்கள்.
செவ்வாய்க்கிழமை
செவ்வாய்க்கிழமை பற்றி குறித்து வினவப்பட்டதற்கு “ரத்தத்தின் நாள்” என்று பதில் கூறப்பட்டது.
இன்றைய தினத்தில் தான் ஹவ்வா அவர்கள் மாதாந்திர ருதுவை கண்டார்கள் . இத்தினத்தில் தான் ஹஜ்ரத் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் புதல்வர்கள் தனது சகோதரர் ஹாபீலைக் கொலை செய்தார்.
ஜக்கரியா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் புதல்வர் யஹ்யா அலைஹிஸ்ஸலாம் அவர்களை சூனியக்காரர்களால் கொல்லப்பட்டார்.
பிர்அவ்னின் மனைவி ஆசியா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஷஹீதாக்கப்பட்ட நாளும் இதே நாளில்தான்.
இந்நாளில் இரத்தம் குத்தி வாங்குவதே நபிகள் நாயகம் ஸல் அவர்கள் பலமாக தடுத்திருக்கிறார்கள். இது ஒரு ‘ஸாஅத்து ‘ இருக்கிறது. அந்த ஸாஅத்தில் வெளிப்பட்ட உதிரம் நிற்பதே இல்லை . சிற்சில சமயங்களில் அந்த ஸாஅத்தில் வெளிப்பட்ட உதிரம் நின்றவுடன் அந்த மனிதர் இறந்து விடுவதும் உண்டு என்றும் சொல்லப்படுகிறது
.
இன்றைய தினத்தில் தான் அல்லாஹுத்தஆலா இப்லீஸை பூமிக்கு அனுப்பினான் . இந்நாளில் தான் நரகம் உண்டாக்கப்பட்டது. ஆதமுடைய மக்களின் ஆன்மா கைப்பற்றும் அதிகாரத்தை மலக்குல் மவுத்திற்கு இன்றைய தினத்தில் தான் அல்லாஹ் கொடுத்தான்.
புதன்கிழமை
புதன்கிழமை குறித்து வினப்பட்டதற்கு, “நஹஸான நாள்” என்று பதில் கூறப்பட்டது. ஏனெனில் இந்த தினத்தில்தான் ஃபிர்அவனும் அவனைச் சார்ந்தவர்களும் கடலில் மூழ்கடிக்கப்பட்டனர்.
ஆது தமூது கூட்டத்தாரும் ஸாலிஹ் நபியின் சமூகத்தினரும் அழிந்த நாளும் இதுவே!
.
இன்றைய தினத்தில் நாம் நகம் வெட்டிக் கொள்வது குறித்து விலக்கப் பட்டிருக்கிறது . இவ்வாறு புதன் அன்று வெட்டிக்கொள்வது வெண்குஷ்டத்தை உண்டு பண்ணுமாம்.
புதன் அன்று நோயாளிகளை விசாரிக்கச் செல்வதை சிலர் அதிருப்தியாக கருதுகிறார்கள்.
புதன்கிழமையில் அடித்திரும்பிய பிறகிலிருந்து (நடுப்பகலிருந்து) அஸருடைய நேரத்திற்குள் துஆ கபூலாக்கப்படும் என்பதாக மின்ஹாஜுல் ஹலீமீ என்ற நூலில் கூறப்பட்டிருக்கிறது.
ஏனெனில் இந்த தினத்தில்தான் இதே சமயத்தில்தான் “ஜங்கே அஹ்ஜரா”பைக் குறித்து நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் துஆ கேட்டு அது கபூலாயிற்று. மற்ற தினத்தில் குளிக்காவிட்டாலும் இத்தினத்தில் குளிப்பது நல்லதென சொல்லப் பட்டிருக்கிறது.
புதன்கிழமை ஆரம்பிக்கப்பட்ட காரியம் பூர்த்தியாகாமல் போகவில்லை என்றும் சொல்லப்படுகிறது. எனவே கல்வி போன்றவைகளும் இத்தினத்தில் ஆரம்பிப்பது நல்லது.
இந்நாளில் நூல்களை எழுத ஆரம்பிக்க வேண்டும் என்பதற்காக இந்த நாள் வருவதை ‘ஹிதாயா’ என்ற நூலின் ஆசிரியர் எதிர்ப்பார்த்துக் கொண்டிருப்பாராம்.
வியாழக்கிழமை
வியாழக்கிழமை குறித்து வினப்ப்பட்டதற்கு “நாட்டங்கள் நிறைவேற்றுவதற்கும் , அரசர்களிடம் செல்வதற்கும் உரிய நாள்” என்று கூறப்பட்டது. ஏனெனில் இன்றைய நாளில்தான் ஹஜரத் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் எகிப்து அரசனிடம் சென்று தங்களது தேவைகளை அவனைக் கொண்டு நிறைவேற்றிக் கொண்டார்கள்.
அன்னை ஹாஜிரா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஹஜரத் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு சமர்ப்பிக்கப்பட்ட நாளும் இதுவே.
வெள்ளிக்கிழமை
வெள்ளிக்கிழமை குறித்து வினப்பட்டதற்கு “விவாகத்திற்குரிய நாள்” என்று கூறப்பட்டது.
ஹஜரத் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஹவ்வா உம்மாவையும், ஹஜரத் யூசுப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஸுலைகா உம்மாவையும், ஹஜ்ரத் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நபி ஷுயைப் அலைஹிஸ்ஸலாம் அவர்களது புதல்வி ஸஃபூரா உம்மாவையும், ஹஜ்ரத் சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பல்கீஸ் உம்மா அவர்களையும் விவாகம் செய்த நாள் இதுவே ஆகும்.
நமது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இத்தினத்தில் தான் உம்முல் மூமினீன் ஹஜரத் கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களையும், உம்முல் மூமினீன் ஆயிஷா ஸித்திக்கா ரளியல்லாஹு அன்ஹா அவர்களையும் விவாதம் செய்தார்கள்.
இந்த நாளில் நகம் வெட்டிக் கொள்பவரின் நோயை அல்லாஹுத்தஆலா குணமாக்கி அவருக்கு சுகத்தை கொடுக்கிறான் என்பதாக இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் ரிவாயத்துச் செய்திருக்கிறார்கள்.
குர்ஆனில் அல் ஜும்ஆ (வெள்ளிக்கிழமை) என்று 62 -வது அத்தியாயத்திற்கு பெயரிட்டுள்ளான் . சனிக்கிழமை என்று குறிப்பிடும் அல்லாஹ் வெள்ளிக்கிழமையை “யவ்ம ஜும்ஆ” (62 : 9, 10) ஜும்ஆ உடைய நாள் என்பதாக குறிப்பிடுகின்றான்.
இதிலிருந்து ஜும்ஆ தினத்தின் சிறப்பை தெரிந்து கொள்ள முடிகிறது.
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِذَا نُوْدِىَ لِلصَّلٰوةِ مِنْ يَّوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا اِلٰى ذِكْرِ اللّٰهِ وَذَرُوا الْبَيْعَ ذٰ لِكُمْ خَيْرٌ لَّـكُمْ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ
ஈமான் கொண்டவர்களே! ஜுமுஆ உடைய நாளில் தொழுகைக்காக நீங்கள் அழைக்கப்பட்டால், வியாபாரத்தை விட்டுவிட்டு, அல்லாஹ்வைத் தியானிக்க (பள்ளிக்கு) விரைந்து செல்லுங்கள் – நீங்கள் அறிபவர்களாக இருப்பின் இதுவே உங்களுக்கு மிக மேலான நன்மையுடையதாகும். (அல்குர்ஆன் 🙂 62:9)
فَاِذَا قُضِيَتِ الصَّلٰوةُ فَانْتَشِرُوْا فِى الْاَرْضِ وَابْتَغُوْا مِنْ فَضْلِ اللّٰهِ وَاذْكُرُوا اللّٰهَ كَثِيْرًا لَّعَلَّكُمْ تُفْلِحُوْنَ
பின்னர், (ஜுமுஆ) தொழுகை நிறைவேற்றப்பட்டு விட்டதும், (பள்ளியிலிருந்து வெளிப்பட்டு) பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக் கொள்ளுங்கள்; அன்றியும், நீங்கள் வெற்றியடையும் பொருட்டு, அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யுங்கள். (அல்குர்ஆன் : 62:10))
ர.ரா
source: https://www.facebook.com/photo?fbid=2711910992401572&set=a.1412423615683656