சூது சூழ் உலகு
நூருத்தீன்
உலகில் நடைபெறும் குற்ற நிகழ்வுகளுக்கு இரண்டு வகையான செய்திக் கோணங்களை ஊடகங்கள் உருவாக்கி வைத்துள்ளன. குற்றவாளி முஸ்லிம் எனில் அதற்கான சிறப்பு வாசகங்களை உள்ளடக்கிய அனல் கக்கும் யூகங்கள்; இல்லையெனில் கேழ்வரகில் நெய் வடியும் தகவல்கள்.
அண்மைக் காலமாக இந்தக் கோணங்களில் மூன்றாவதாக மேலும் ஒன்று இணைந்துள்ளது.
குற்றமிழைத்தவன் யார் என்று தெரியாவிட்டால், அவன் முஸ்லிம்தான் என்று வலிந்து திணிக்கும் நஞ்சு! உலகெங்கும் ஊடகங்களுக்கு இது பொது விதியாகி, அவரவர் நாட்டிற்கும் அரசியலுக்கும் ஏற்ப, ‘சக்கரை கொஞ்சம் தூக்கலா’ , ‘கொஞ்சம் லைட்டா’ என்பதுபோல் அதன் வீரியம் கூடி, குறைந்து தென்படுகிறது.
முஸ்லிம்கள் மட்டுமின்றி பிறப்பால், நிறத்தால் பிற்படுத்தப்பட்டவர்கள் என்று நிர்ணயித்துள்ளவர்கள்மீது ஊடகங்கள் நிகழ்த்தும் அராஜகம் ஒளிவு மறைவற்றது. சென்ஸேஷன், TRP ரேட்டிங் என அலையும் மீடியாக்கள், அரசியல்வாதிகள்தாம் இப்படி என்றால் மேடையிலும் திரையிலும் அட்டகாச காமெடியன்களாக வலம் வரும் இருவர், மனத்தளவில் அட்ராசிட்டி வில்லன்கள் என்று அண்மையில் வெளிவந்த, அரிதாரம் பூசப்படாத அவர்களது நிஜ முகங்கள் போனஸ் அதிர்ச்சி.
ஏன் இப்படி? பலவித உப தலைப்புகளில் ஏகப்பட்ட காரணங்கள் உள்ளன. விவரித்து பக்கம் பக்கமாக எழுதலாம்; எக்கச்சக்கம் உரையாடலாம். அவற்றுள் முக்கியமான ஒன்று உயர்சாதி / உயர் இன குணம். அது மட்டும் சுருக்கமாக இங்கு.
தாம் பிறந்த இனத்தின் அடிப்படையில் ஒருவர் சக மனிதனைத் தாழ்வாக, இழிவாகக் கருதும் நொடியிலேயே அநீதிக்கான முதல் விதை நடப்பட்டுவிடுகிறது. அதன்பின் ஆளும் வளர, அறிவும் வளர, அதனுடன் சேர்ந்து வஞ்சனையே இல்லாமல் அந்த நஞ்சும் வளர அநீதியின் கட்டப்பஞ்சாயத்து ராஜாங்கத்திற்கு அங்கீகாரம் கிடைத்துவிடுகிறது. அப்படியானபின் அரசியல் சாசனமும் அடிப்படை விதிகளும் எதற்கு உதவும்? அவை வெறும் ஏட்டுச் சுரைக்காய்.
இந்தியா ஒருபுறம் இருக்கட்டும். அமெரிக்காவில் அதன் அரசியல் சாசனம் வழங்காத அடிப்படை உரிமைகளா? அவர்கள் காணாத நாகரிக வளர்ச்சியா? என்ன பயன்? இந்த இருபத்தோறாம் நூற்றாண்டின் பதினாறாம் ஆண்டிலும் அங்குள்ள கறுப்பினத்தவர்கள் ‘கறுப்பு உயிரும் பொருட்டே’ – Black Lives Matter – என்றல்லவா போராடிக் கொண்டிருக்கிறார்கள்; இறந்து கொண்டிருக்கிறார்கள்?
இந்தியாவுக்கு வர்ணாஸ்ரமம் என்றால் மேலை நாடுகளில் வெள்ளைத் தோல் மேலாண்மை. பாதிப்பின் விகிதாசாரம்தான் கூடுதல், குறைவே தவிர உயர்சாதி அகங்காரம் நிகழ்த்தும் அநீதி இந்தியாவிலும் மேலை நாடுகளிலும் ஆதிக்கம் செலுத்திக்கொண்டு ஆரோக்கியமாகவே உள்ளது!
பிறப்பாலும் நிறத்தாலும் நான் உயர்ந்தவன் எனக் கருதுவது மன வியாதியின் உச்சம். அதை முற்றிலும் ஒழிக்காத வரை அனைவருக்கும் சமநீதி, ஊரெங்கும் சமத்துவம் என்பதெல்லாம் குருடனின் பகல் கனா. பேய்கள் நாடாளும்போது சட்டங்களும் சட்டத் திருத்தங்களும் என்ன சாதித்துவிடும்?
ஆனால் மன நோய்க்கு மருந்துண்டு. எது பூச்சாண்டி என்று பொய் சொல்லி மக்களை போதையில் ஆழ்த்தியிருக்கின்றார்களோ அந்த இஸ்லாமிய மார்க்கத்தில் அந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி உண்டு.
“உலகிலேயே புனிதமான, உனக்குப் பிடித்தமான கட்டடத்தைக் காட்டு” என்று உலகின் எந்த மூலையில் வாழும் எந்த முஸ்லிமைக் கேட்டாலும் கண்ணை மூடிக்கொண்டு மக்காவிலுள்ள கஅபாவை நோக்கி அவனது சுட்டுவிரல் நீளும். இன்றைய முஸ்லிம்கள் என்றில்லை, இஸ்லாம் மீளெழுச்சி பெறுவதற்கு முன்னருங்கூட அஞ்ஞானக் குரைஷிகளுக்கு அது வெகு புனிதம்.
இஸ்லாமியச் செய்தி மக்காவில் பரவத் தொடங்கியதும் கட்டவிழ்த்து விடப்பட்ட கொடூரத்திற்கு இலக்கானவர்களுள் அடிமை பிலால் வெகு முக்கியமானவர். கறுப்பர். அவருக்கு நிகழ்த்தப்பட்ட சித்ரவதையெல்லாம் சகிக்க இயலாத கொடூரம். காலம் உருண்டோடி முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம் மக்காவை வெற்றி கொண்டதும் உலகிலேயே புனிதமிக்க அந்த ஆலயத்தின்மீது ஏறி தொழுகைக்கு அழைப்புவிடுவதற்கு அழைக்கப்பட்டவர் அந்தக் கறுப்பர் பிலால் ரளியல்லாஹு அன்ஹு தாம். ஊரே குழுமி நிற்க அந்த விந்தை நிகழ்ந்தது.
இஸ்லாத்தின் இரண்டாவது கலீஃபாவான உமர் இப்னுல் கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு இந்தக் கறுப்பர் பிலாலை (ரளியல்லாஹு அன்ஹு) ‘எங்கள் தலைவர்’ என்றுதான் அழைத்திருக்கிறார்! ஒருமுறை கலீஃபா உமரைச் சந்திக்கக் குரைஷிக் குலத்தின் மேட்டுக்குடியைச் சேர்ந்த ஸுஹைல் இப்னு அம்ருவும் (ரளியல்லாஹு அன்ஹு) அபூஸுஃப்யான் இப்னுல் ஹர்பும் ரளியல்லாஹு அன்ஹு வந்திருந்தனர். போலவே குரைஷிகளின் முன்னாள் அடிமைகளான சுஹைப், பிலால் போன்றவர்களும் காத்திருந்தனர். முன்னாள் அடிமைகளுக்குத்தான் கலீஃபாவைச் சந்திக்க முதலில் அனுமதி கிடைத்தது. ஏனெனில் இஸ்லாத்திற்குள் நுழைந்தபின் உயர்ந்தவர் – தாழ்ந்தவர் இல்லையே!
தொழுவதற்கு நிற்கும் அணிவகுப்பில் முன் வரிசையில் நிற்பவர் கறுப்பரோ, வறியவரோ யாராக இருப்பினும் பின் வரிசையில் நிற்பவர் அரசனே என்றாலும் தொழுகையில் சிரம் தரையில் பதியும்போது மன்னரின் உச்சந்தலை முன்னவர் பாதத்தின் கீழ் என்பதுதானே இஸ்லாத்தின் எளிய நிஜம்.
இன இழிவை நீக்குவதற்கான நன்மருந்து தயாராகத்தான் இருக்கிறது. ஆனால் மக்கள் அதை அறிந்து விடாமலும் மக்களை அருந்த விடாமலும் ஆதிக்க வர்க்கமும் ஊடகங்களும்தான் அயராது வாது புரிகின்றன. வெற்று வாதமல்ல! தீவிரவாதம்!
-நூருத்தீன்
சத்தியமார்க்கம்.காம்-ல் 15 ஜூலை 2016 வெளியான கட்டுரை