ஜும்ஆ தொழுகையை விட முடியுமா?
ஹாபிஸ் அ. செய்யது அலி மஸ்லஹி
[ ஒருவர் தன் உயிரையும், தமது குடும்பத்தினரின் உயிர்களையும், யாவரின் உடமைகளையும் பாதுகாப்பதற்காக ஜும்ஆக்களை விடுவது குற்றமாக அமையாது.
நம் நாட்டில் பல கட்டமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு தொடர்கிறது. கிட்டத்தட்ட 5 மாதங்களுக்கு மேலாக பெரும்பாலான இடங்களில் ஜும்ஆக்கள் நடைபெறவில்லை. நோன்புப் பெருநாள் தொழுகையும் பள்ளியிலோ ஈத்காவிலோ நடைபெறவில்லை. இதுபோன்று ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகையையும் முறைப்படி நிறைவேற்ற முடியவில்லை.
இவ்வளவு கடமைகளையும் நாம் வேண்டுமென்று அலட்சியத்தால் கைவிடவில்லை. மாறாக அரசாங்கத்தின் ஊரடங்கு உத்தரவால் நமது கைநழுவிச் சென்றுள்ளது. இந்தக் குற்றம் நம்மைச் சாராது.
இஸ்லாமைப் பொருத்தவரை இறைநம்பிக்கை(ஈமான்)க்குப் பிறகு சிறந்த விஷயமாக ஆரோக்கியமே தேர்வு செய்யப்படுகிறது. இந்த இரண்டிற்கும் அப்பால் தான் மற்றவை தேர்வாகும்.]
ஜும்ஆ தொழுகையை விட முடியுமா?
ஹாபிஸ் அ. செய்யது அலி மஸ்லஹி
ஜும்ஆ தொழுகை என்பது கட்டாயக் கடமை (ஃபர்ளு).
“ஜும்ஆவுடைய நாளில் தொழுகைக்காக நீங்கள் அழைக்கப்பட்டால், வியாபாரத்தை விட்டுவிட்டு, இறைவனை தியானிக்க (பள்ளிகளுக்கு) விரைந்து செல்லுங்கள். நீங்கள் அறிந்தவர்களாக இருப்பின் இதுவே உங்களுக்கு மிக மேலானதான நன்மையுடையதாகும்.” (அல்குர்ஆன் 62:9)
இறைவன் நமக்கிட்ட இக்கட்டளையை கடைசிவரை… மரணம் வரும்வரை விடாமல் நிறைவேற்றி வர வேண்டும். சில சூழ்நிலைகளில் நிறைவேற்றிட முடியாத பட்சத்தில், நிர்பந்தமான நிலையில், நிர்பந்தம் விலகும் வரையில் ஜும்ஆ தொழுகையை கைவிடுவதற்கு மார்க்கத்தில் அனுமதியும் உண்டு.
“மழையின்போது ஜும்ஆ தொழுகைக்குச் செல்லாமலிருக்க அனுமதியுண்டு”
அப்துல்லாஹ் பின் அல்ஹாரிஸ் அறிவித்தார்கள்; பாங்கு சொல்பவரிடம் ஒரு மழைநாளில் “அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரஸூலுல்லாஹ் என்று கூறிய பிறகு “ஹய்ய அலஸ் ஸலாத்- தொழுகைக்கு வாருங்கள்” என்பதைக் கூறாமல் உங்கள் வீடுகளிலேயே தொழுது கொள்ளுங்கள் என்று கூறும் என இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறினார்கள்.
இவ்வாறு கூறுவதை மக்கள் வெறுப்பதுபோல் இருந்தபோது, “என்னைவிடவும் மிகச்சிறந்தவர்களான நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வாறு செய்துள்ளனர்” என்று கூறி.. நிச்சயமாக ஜும்ஆ அவசியமானது தான்; எனினும், நீங்கள் சேற்றிலும், சகதியிலும் நடந்து வந்து, அதனால் உங்களுக்குச் சிரமம் தருவதை நான் விரும்பவில்லை என்றார்கள். (நூல்: புகாரி 901)
இந்த நபிமொழியிலிருந்து நமக்குப் புலப்படுவது; இயற்கை பேரிடர் சமயங்களில் ஜும்ஆ தொழுகையை கைவிடுவதற்கும், பள்ளிக்கு வராமல் வீட்டிலேயே தொழுதுகொள்வதற்கும் மார்க்கத்தில் அனுமதி உள்ளது என்பதாகும்.
ஜும்ஆ தொழ முடியாத பட்சத்தில் ளுஹருடைய ஃபர்ளை நான்கு ரக்அத்களாக தொழுதுகொள்ள வேண்டும். மேலும் கடமையான ஐங்காலத் தொழுகைகளையும் இயற்கை பேரிடர் விலகும் காலம் அவரை வீட்டிலேயே தொழுகைகளை நிறைவேற்ற சலுகை உள்ளது.
காரணமின்றி ஜும்ஆ தொழுகையை கைவிடுவது கண்டனத்திற்குறியது:
“எவன் காரணமின்றி (பயம், இருள், மழை) ஜும்ஆவை கைவிடுகிறானோ அவன் அழியாத மாற்றப்படாத ஏட்டில் நயவஞ்சகன் என்று எழுதப்படுகிறான் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.” (அறிவிப்பளர்: இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: ஷாஃபியீ)
மற்றொரு அறிவிப்பில்,
“எவன் அலட்சியத்தால் மூன்று ஜும்ஆக்களை கைவிடுகிறானோ அவன் உள்ளத்தின் மீது இறைவன் முத்திரை குத்திவிடுகிறான் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியுள்ளார்கள்.” (அறிவிப்பாளர்: அபூ ஜஃதுள்ளம்ரீ ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அபூதாவூத், திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜா, தாரமீ) . ஜும்ஆ தொழுவதை வலியுறுத்தி இன்னும் பல நபிமொழிகளும் உள்ளன.
ஜும்ஆவை கைவிடுவதற்கு இஸ்லாம் கூறும் அளவுகோல்:
ஜும்ஆவை கைவிடுவதற்கு இஸ்லாம் சில அளவுகோலை நிர்ணயித்துள்ளது. இந்த அளவுகோலுக்குக் கீழ் வருபவர்கள் மீது தற்காலிகமாக ஜும்ஆ கடமையாகாது.
கடுமையான மழை, கடுமையான இருள், சகதி நிறைந்து காணப்படும் நிலை, உயிருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை, உடமைகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை, குடும்பத்தினருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை, அச்ச நிலை, அவசர நிலை, கொள்ளை நோய், காலரா போன்ற உயிர்களை பறிக்கும் நோய் பரவல் ஏற்படும் அசாதாரண நிலை போன்ற காலங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஜும்ஆக்களை நிர்பந்தம் காரணமாக விடுவதில் எவ்வித குற்றமும் இல்லை. இவ்வாறு விட்டதற்காக இறைவன் நம் மீது குற்றம் சுமத்த மாட்டான்.
உயிர்களை பாதுகாப்பதும் கடமைதான்:
ஒருவர் தன் உயிரையும், தமது குடும்பத்தினரின் உயிர்களையும், யாவரின் உடமைகளையும் பாதுகாப்பதற்காக ஜும்ஆக்களை விடுவது குற்றமாக அமையாது.
நம் நாட்டில் பல கட்டமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு தொடர்கிறது. கிட்டத்தட்ட 5 மாதங்களுக்கு மேலாக பெரும்பாலான இடங்களில் ஜும்ஆக்கள் நடைபெறவில்லை. நோன்புப் பெருநாள் தொழுகையும் பள்ளியிலோ ஈத்காவிலோ நடைபெறவில்லை. இதுபோன்று ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகையையும் முறைப்படி நிறைவேற்ற முடியவில்லை.
இவ்வளவு கடமைகளையும் நாம் வேண்டுமென்று அலட்சியத்தால் கைவிடவில்லை. மாறாக அரசாங்கத்தின் ஊரடங்கு உத்தரவால் நமது கைநழுவிச் சென்றுள்ளது. இந்தக் குற்றம் நம்மைச் சாராது.
இஸ்லாமைப் பொருத்தவரை இறைநம்பிக்கை(ஈமான்)க்குப் பிறகு சிறந்த விஷயமாக ஆரோக்கியமே தேர்வு செய்யப்படுகிறது. இந்த இரண்டிற்கும் அப்பால் தான் மற்றவை தேர்வாகும்.
“நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிம்பர் படி மீது நின்று கொண்டு, “நீங்கள் இறைவனிடம் மன்னிப்பையும், உடல் ஆரோக்கியத்தையும் வேண்டுங்கள். எவரும் இறைநம்பிக்கைக்குப் பிறகு உடல் ஆரோக்கியத்தை விட சிறந்த வேறெதுவும் வழங்கப்படவில்லை” என்று கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதீ, இப்னுமாஜா)
இறைநம்பிக்கை(ஈமான்)க்குப் பிறகு இறைவணக்கத்தைவிட சிறந்த செல்வம் உடல் சுகம் தான். உடல் சுகம் இருந்தால் தான் இறைவணக்கம், தான தர்மம், நோன்பு, ஹஜ், ஜகாத் யாவும் நிறைவேற்றிட முடியும்.
எனவே நோய் பரவிவரும் இந்த கொரோனா காலத்தில் முஸ்லிம்களின் உடல் ஆரோக்கியம் முக்கியமானது. சமூக இடைவெளியும் அவசியம்.
சில ஜும்ஆக்கள் நமது கைநழுவிப் போனாலும் பரவாயில்லை, நாம் யாருக்கும் தீங்கு விளைவிக்கக்கூடாது. பிறரிடமிருந்தும் நமக்கு தீங்கு நேரிடக்கூடாது.
“இஸ்லாமில் எந்த தீங்கும் கிடையாது; தீங்கை பிறருக்கு கொண்டு சேர்ப்பதும் கிடையாது” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூ ஸயீத் குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு, நூல்: இப்னுமாஜா)
“எவன் ஒரு முஸ்லிமுக்கு தீங்கு விளைவிக்கின்றானோ அவனுக்கு இறைவன் தீங்கை ஏற்படுத்தி விடுகின்றான்; என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: அபூதாவூத், திர்மிதீ)
நாம் நோயாளியாக இருந்து அதை பிறருக்கும் பரப்பி தீங்கை ஏற்படுத்தக்கூடாது. பிறருடன் கலந்து அவராலும் நாமும் பாதிக்கப் படக்கூடாது.
நாமும் நாசத்தின் பக்கம் செல்லக்கூடாது, நாசத்தை ஏற்படுத்தும் எந்த காரியங்களிலும் ஈடுபடக்கூடாது.
நோயிலிருந்து விலகியிருப்போம்.
சமூக இடைவெளி பேணுவோம்.
கொரோனா இல்லாத உலகை கட்டமைப்போம்.
அதற்காக இறைவனை இருகரமேந்தி பிரார்த்திப்போம்.
(ரஹ்மத் மாத இதழ், ஆகஸ்ட் 2020)