பங்களாவின் விலை ஒரு ரூபாய்!
ரஹமத் ராஜகுமாரன்
பெரிய செல்வந்தன் வியாபார விஷயமாக வெளிநாடு போனவன் கப்பலில் ஊர் திரும்பிக் கொண்டிருக்கிறான்.
கப்பல் நடுக்கடலில் வந்துகொண்டிருக்கிறது. திடீர் என்று கடல் கொந்தளிக்கிறது. கப்பலையே கவிழ்த்து விடும் அளவுக்கு மலை போல் அலைகள் எழும்புகின்றன! சூறாவளி வீசியது!
“ஆண்டவா என்னை நீ பத்திரமாக கரை சேர்த்தால் என் பங்களாவை விற்று ஏழைகளுக்கு தானம் கொடுக்கிறேன் ” என்று பதற்றத்தோடு வேண்டிக் கொள்கிறான் செல்வந்தன்.
கொஞ்ச நேரத்தில் எல்லோரும் ஆச்சரியப்படும்படியாக சுத்தமாக புயல் குறைந்து விடுகிறது. கடல் கொந்தளிப்பும் நின்றுவிடுகிறது. எந்தவித மாற்றமும் இல்லாமல் கப்பல் சுகமாய் பயணம் செய்து கரை சேர்க்கிறது.
செல்வந்தன் இப்போது நினைக்கிறான் “நமது பங்களாவே விற்று ஏழைக்கு தானம் கொடுப்பதாகக் அவசரப்பட்டு இறைவனிடம் பிரார்த்தனை செய்துகொண்டு விட்டோமே.! என்ன செய்யலாம்?”
ஊரை அடைந்த செல்வன் தனது பங்களாவை விற்கப் போவதாக அறிவிக்கிறான். பணம் உள்ளவர்கள் எல்லாம் அந்த பங்களாவை வாங்க போட்டி போட்டுக் கொண்டு வீட்டின் முன் குவிகிறார்கள்.
அப்போது செல்வந்தன் சொல்கிறான்:
“என் பங்களாவின் விலை ஒரு ரூபாய்” இதைக் கேட்டதும் கூடியிருந்த எல்லோருக்கும் அதிர்ச்சி ஆச்சரியம். அட, கடல் பயணம் இவனை பைத்தியக்காரன் ஆகிவிட்டதோ?
அப்போது நமது செல்வந்தன் ஒரு நிபந்தனை வைக்கிறான்.
“என் பூனையை யார் வாங்குகிறார்களோ அவர்களுக்கு தான் என் பங்களாவை விற்பேன்.”
“பூனை என்ன விலை ?”
“ஒரு கோடி ரூபாய்!
பங்களாவை வாங்க இருந்தவர்கள் குழம்பிப் போகிறார்கள். ஆனால் பங்களா நிச்சயம் ஒரு கோடி ரூபாய் போதுமானதுதான் என்பதால் வந்திருந்தவர்களில் ஒருவர் பங்களாவை ஒரு ரூபாய்க்கும் பூனையை ஒரு கோடி ரூபாய்க்கு வாங்கிக் கொள்கிறார்.
பணத்தை வாங்கிக் கொண்ட நமது செல்வந்தன் ஒரு பிச்சைக்காரனுக்கு அந்த ஒரு ரூபாயையும் கொடுத்துவிட்டு,
ஆண்டவனிடம் சொல்கிறான் : “கடவுளே நான் உன்னிடம் வேண்டிக் கொண்டபடி என் பிரார்த்தனையை சரியாக நிறைவேற்றி விட்டேன். பங்களா விற்ற பணத்தை ஏழைக்கு தானம் செய்து விட்டேன்!”
وَاِذَا غَشِيَهُمْ مَّوْجٌ كَالظُّلَلِ دَعَوُا اللّٰهَ مُخْلِصِيْنَ لَهُ الدِّيْنَ ۙ فَلَمَّا نَجّٰٮهُمْ
اِلَى الْبَـرِّ فَمِنْهُمْ مُّقْتَصِدٌ وَمَا يَجْحَدُ بِاٰيٰتِنَاۤ اِلَّا كُلُّ خَتَّارٍ كَفُوْرٍ
(கப்பலில் செல்லும்) அவர்களை, மலைமுகடுகளைப் போன்ற அலை சூழ்ந்து கொள்ளுமானால், அல்லாஹ்வுக்கே வழிபட்டு அந்தரங்க சுத்தியுடன் அவனிடம் பிரார்த்திக்கின்றனர்;
ஆனால் அவன் அவர்களைக் காப்பாற்றிக்கரைசேர்த்து விட்டால், அவர்களில் சிலர் நடுநிலையாக நடந்து கொள்கிறார்கள் – எனினும் மிகவும் நன்றி கெட்ட, பெருந்துரோகிகளைத் தவிர வேறு எவரும் நம் அத்தாட்சிகளை நிராகரிப்பதில்லை. (அல்குர்ஆன் : 31:32)
– ர.ரா