ஷிர்க் (ஓரிறைவனைவிட்டு வேற்றுத் தெய்வங்களுக்கு அடிபணிதல்) (2)
“ஷிர்க்” என்றால் என்ன?
“ஷிர்க்” என்றால் அரபி மொழியில் “பங்கு” என்று அர்த்தம். நீங்களும் உங்களுடைய நண்பர்களும் சேர்ந்து ஒரு கம்பெனியை ஆரம்பக்கிறீர்கள். தமிழில் அதை “குழுமம்” என்கிறோம். (குழுவாக ஆரம்பித்துள்ளதால்) அரபியில் அதை “ஷிர்க்கா” என்கிறார்கள். பங்காளியை அதாவது பார்ட்னரை “இஷரீக்” என்கிறார்கள். எல்லோருக்கும் எல்லாமும் சமம் என்று கூறுகின்ற பொது உடைமைக்கொள்கையை (கம்யூனிஸக் கொள்கையை) அரபியில் “இஷ்திராகிய்யா” என்கிறார்கள்.
ஷரீஅத்தில் “ஷிர்க்” என்றால், படைத்த இறைவனோடு இன்னொன்றை இணையாக்குவது என்று பொருள். அதாவது…
1) அல்லாஹ்வை விட்டுவிட்டு இன்னொருவனை இறைவனாக படைத்தவனாக கருதினால் அது “ஷிர்க்”
2) நமது வாழ்க்கைக்கு தேவையான வசதிகளையும் வாழ்வாதாரங்களையும் அல்லாஹ் அல்லாத இன்னொருவன் அளிப்பதாகக் கருதினால் அது “ஷிர்க்”.
3) நன்மையையும் தீமையையும் தரக்கூடிய சக்தி யாருக்காவது இருப்பதாக நினைத்தால் அது “ஷிர்க்”.
4) அல்லாஹ் அல்லாத இன்னொரு சக்தியிருப்பதாக நம்பி, அல்லது இன்னொருவருக்கு சக்தியிருப்பதாக நம்பி அவரையோ அதனையோ திருப்திப்படுத்த முயற்சி செய்தால் அது “ஷிர்க்”.
5) அல்லாஹ் அல்லாத ஒரு சக்திக்கு முன்னால் தலை வணங்கினாலோ நேர்ச்சை செய்தாலோ துஆ கேட்டாலோ அது “ஷிர்க்”.
6) அல்லாஹ்விடம் சிபாரிசு செய்யும் அளவுக்கு சக்தி இருக்கின்றது என்று யாரைப் பற்றியாவது நம்பினால் அது “ஷிர்க்”.
7) இறந்துபோன அவ்லியாக்கள், நல்லடியார்கள் நமக்காக அல்லாஹ்விடம் வாதாடுவார்கள் என்ற நம்பினால் அது “ஷிர்க்”. அதே போன்று,
8) அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தமான ஆற்றலும் வல்லமையும் இன்னொரு பொருளுக்கும் இருப்பதாக நினைத்தால் அதுவும் “ஷிர்க்”.
9) அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தமான அதிகாரங்களை இன்னொரு பொருளுக்கு அளித்தால் அதுவும் “ஷிர்க்”.
10) அல்லாஹ்வின் ஆணைகளையும் கட்டளைகளையும் புறந்தள்ளிவிட்டு இன்னொரு பொருளுக்கு கட்டுப்பட்டு நடந்தால் அதனுடைய கட்டளைகளுக்கு செவிசாய்த்தால் அதுவும் “ஷிர்க்”.
11) அல்லாஹ்வின் கட்டளைகளை இப்போது கடைப் பிடிக்க முடியாது என்று ஒதுக்கிவிட்டு இன்னொரு பொருளின் கட்டளையை கடைப்பிடிக்க முன்வந்தால் அதுவும் “ஷிர்க்”.
12) இறைனின் தூதர் எடுத்துரைத்த இறைவனுடைய சட்ட திட்டங்களை இந்தக் காலத்தில் கடைப்பிடிக்க முடியாது. அவை இந்தக்காலத்துக்கு பொருந்திவராதவை என்று முடிவு கட்டிவிட்டு வேறுவேறு கொள்கைகளை பின்பற்றத் தொடங்கினால் அதுவும் “ஷிர்க்”.
முஸ்லிம்களை வழிகெடுப்பது எப்படி?
ஒட்டுமொத்த மக்கள்அனைவரையும் இறைவனுக்கு கட்டுப்படாமல் ஆக்கவேண்டும். இறைவனை ஏற்றுக்கொண்டு அவன் வழியில் வாழ்கின்ற மக்களையும் வழிகெடுத்து வெளியில் கொண்டுவரவேண்டும் இதுதானே ஷைத்தானுடைய திட்டம். குறிக்கோள். முஸ்லிம்களிடம்போய் சிலைகளை வணங்குங்கள் என சொல்ல முடியாது. வேறுவகையில் அவர்களை “டீல்” பண்ணவேண்டும். ஆகையால், கொஞ்சம் கொஞ்சமாக முஸ்லிம்களிடையே ஷைத்தான் “தர்கா” வழிபாட்டைப் புகுத்தினான். சிலைகளுடைய இடத்தில் அவ்லியாக்களைக் கொண்டுவந்து வைத்தான்.
சில நாட்களிலேயே, தர்கா வழிபாடு கூடாது என்ற பிரச்சாரம் ஆரம்பித்து தர்காவுக்கு போவது மிகப்பெரிய தீமை என்பதையும் அதை ஒருபோதும் இஸ்லாம் ஆதரிக்கவில்லை என்பதையும் முஸ்லிம்களுக்கு தெளிவாக உணர்த்தப்பட்டது. இதனால், பெரும்பாலான முஸ்லிம்கள் தாங்கள் செய்துவந்த தீமையை உணர்ந்து நேர்வழிக்கு திரும்பினார்கள்.
நவீன சிலைகள்
முஸ்லிம்கள் சிலைகளைவும் வணங்குவதில்லை, தர்காக்களுக்கும் போவதில்லை. அவ்வளவுதான் இனிமேல் அவர்களை வழிகெடுக்கவே முடியாது என்று ஷைத்தான் சோர்ந்துபோய் உட்கார்ந்து விட்டானா என்றால் அதுதான் கிடையாது. நாம் ஏற்கனவே பார்த்தது போல, சிலைகளுடைய பெயர்கள் மாறிக்கொண்டே வந்துள்ளன. சிலைகளுக்கு பதிலாக மக்கள் தர்காக்களுக்கு போய் அவ்லியாக்களிடம் கையேந்த தொடங்கினார்கள். ஏதேனும் ஒருவகையில் அல்லாஹ்வை விட்டும் அல்லாஹ்வின் பாதையைவிட்டும் மக்களை அப்புறப் படுத்தவேண்டும் என்பதுதானே ஷைத்தானுடைய நோக்கம்.
தர்காக்களுக்கு போவதை முஸ்லிம்கள் நிறுத்திவிட்டால் ஷைத்தானும் தன் முயற்சிகளை நிறுத்திவிடுவானா? அல்லது வேறு ஏதேனும் வழியில் முயற்சிசெய்து அல்லாஹ்வின் பாதையில் இருந்து அவர்களை அகற்ற நினைப்பானா? நாம் கொஞ்சம் அக்கறையோடு யோசித்துப் பார்க்கவேண்டும்.
இந்த நூற்றாண்டில் கண்டுபடிக்கப்பட்ட நவீன கொள்கைகளான மக்களாட்சி, ஜனநாயகம், முதலாளித்துவம் போன்றவற்றை, முஸ்லிம்களை வழிகெடுப்பதற்காக, ஷைத்தான் திறமையாக பயன்படுத்தி வருகிறான். “நிலப்பரப்பில் இன்று வணங்கப்படும் சிலைகளிலேயே கேடுகெட்ட சிலை தேசிய வாதம்தான்!” என்று மகாகவி அல்லாமா இக்பால் கூறியுள்ளார் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.
வழிபாடு என்றால் என்ன?
“வழிபாடு” என்றால் “வழியில் செல்வது” என்று அர்த்தம். ஒரே இறைவன் அல்லாஹ்வை ஏற்றுக்கொண்டு அவன் வழியில் நம் வாழ்க்கையை அமைத்துக்கொண்டால் “இறைவனுடைய வழியில் வாழ்கின்ற முஸ்லிம்கள் நாங்கள்” என்று நம்மை நாம் சொல்லிக்கொள்ளலாம்.
இறைவனுடைய வழியில் வாழ்க்கையை அமைத்துக் கொள்வது என்றால் குடும்பம், தொழுகை, ஜகாத் சொத்து பகிர்மானம் போன்ற நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான விஇஷயங்களில் மட்டும் இறைவனுக்கு கட்டுப்பட்டு அவனுடைய வழியில் வாழ்ந்தால் போதுமா? அல்லது, நமது கூட்டுவாழ்க்கையிலும் ஒரே இறைவன் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு வாழவேண்டுமா? என்றொரு கேள்வி இங்கே எழுகின்றது.
அதாவது, வியாபாரம், பொருளாதாரம், இஸ்லாமிய அழைப்புப்பணி, அரசியல், பண்பாடு போன்ற துறைகளிலும் நாம் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட வேண்டுமா? வாழ்க்கையின் எல்லா துறைகளிலும் எனக்கு கட்டுப்படுங்கள் என்று அல்லாஹ் சொல்கிறானா? இல்லை ஒருசில காரியங்களை மட்டும் நான் சொன்னபடி செய்துவிட்டு மற்ற விஇஷயங்களில் உங்கள் இஷ்டப்படி வாழ்ந்துகொள்ளுங்கள் என்று முழு அனுமதியை அளித்துள்ளானா என்று யோசித்துப்பார்க்கவேண்டும்.
வாழ்க்கையின் அனைத்து விஷஇயங்களிலும் இறைவனுடைய வழிகாட்டுதலின்படியே வாழ்ந்தாகவேண்டும், இறைவன் அதைத்தான் எதிர்பார்க்கிறான் என்றால் அதற்கு வழிகாட்டுகின்ற அதை செயல்படுத்துகின்ற “கூட்டமைப்பு” ஒன்று இருந்தாக வேண்டும் அல்லவா? இறைவனை ஏற்காத இறைவனே இல்லை என்று நிராகரிக்கின்ற ஒரு அமைப்பின் கீழாக ஒன்றுதிரண்டால் ஏக இறைவனான அல்லாஹுக்கு எப்படி கட்டுப்பட்டு வாழமுடியும்?
அல்லாஹ்வுக்கு எந்த நஷ்டமும் கிடையாது மாபெரும் பிரபஞ்சத்தை தனித்து ஒருவனாகப் படைத்து, தனித்து ஒருவனாக இயக்கி, நிர்வகித்து வரும் அல்லாஹ் எந்த விதமான தேவையும் அற்றவன். யாருடைய தேவையும், உதவியும் அவனுக்கு அவசியம் கிடையாது.
இந்த உலகிலுள்ள மக்களில் ஒருவர்கூட அல்லாஹ்வை இறைவனாக ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், அவனை வணங்கவோ, வழிபடவோ ஒரேயொருவர் கூடத் தயாராகாது அனைத்து மக்களும் ஒட்டுமொத்தமாக அவனை புறக்கணித்தாலும் அவனுக்கு யாதொரு நஷ்டமும் ஏற்படாது. அவனது அதிகாரமோ ஆளுமையோ இம்மியளவுகூட குறைந்துவிடாது. அதே மயம் இந்த உலகமக்கள் அனைவரும் அல்லாஹ்வை ஏற்றுக்கொண்டுவிட்டார்கள், அவனை மட்டுமே வணங்குகிறார்கள், அவனது கட்டளையை மட்டுமே பின்பற்றுகிறார்கள் என்றாலும் அவனது அதிகாரத்தில், அவனது ஆளுமையில், அவனது பெருமையில் இம்மியளவுகூட மிகைத்துவிடாது.
அல்லாஹ்வை நாம் உலகத்தின் ஆட்சியாளர்களோடு, மன்னர்களோடு ஒப்பிட்டமுடியாது. மன்னர்களை மக்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டால், அனைவரும் அம்மன்னனுக்குக் கட்டுப்பட்டால் அவருடைய ஆதிக்கம் உயர்கின்றது. நாட்டு எல்லை பரவுகின்றது. ஆனால், அனைத்து மக்களும் கட்டுப்படுவ தாலோ, அனைத்து மக்களும் ஒட்டுமொத்தமாக நிராகரிப்பதாலோ எந்தவொரு பயனும் அல்லாஹ்வுக்கு ஏற்படப் போவதில்லை. அவனை வணங்கினால் அவனுக்கு மட்டுமே வழிப்பட்டால் அவனது கட்டளைகளை ஏற்றுநடந்தால் நன்மையையும், இலாபமும் நமக்குத்தான் ஏற்படுமே ஒழிய, அல்லாஹ்வுக்கு எந்தவித நன்மையும் ஏற்படாது.
அல்லாஹ்வை மறுத்தால், அல்லாஹ்வை நிராகரித்தால், அல்லாஹ்வோடு இன்னும் வேறு வேறு தெய்வங்களை, வேறு வேறு கொள்கைகளை இணைவைத்தால் அதனால் நஷ்டமும், தொல்லையும், துன்பமும் நமக்குத்தான் ஏற்படுமே ஒழிய, அல்லாஹ்வுக்கு அதனால் மனவருத்தம்கூட ஏற்படாது. அல்லாஹ் அனைத்தையும் விட தூய்மையானவன். இணைவைப்பது பகுத்தறிவுக்கே ஒவ்வாதது பல்வேறு கோணங்களிலிருந்து பல்வேறுவகை ஆய்வுகளுக்கு பிறகு இந்த உலகத்தை தனித்த ஒருவனாக இருந்து படைத்ததும், பரிபாலித்து வருவதும், பாதுகாத்து வருவதும், அல்லாஹ் மட்டுமே என்பது தெளிவானதற்குப் பின்னால், அல்லாஹ்விற்கு மட்டுமே மனிதன் அடிபணியவேண்டும், அல்லாஹ்வை மட்டுமே இறைவனாக ஏற்றுக்கொள்ளவேண்டும், அவனது கட்டளைகளுக்கு மட்டுமே செவிசாய்க்க வேண்டும், அதற்கு ஏற்பவே வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவேண்டும். அவனிடமே தனது தேவைகளை, கோரிக்கைகளை முறையிட வேண்டும், அவனுக்கென்றே வாழவேண்டும், அவனுக்கென்றே சாக வேண்டும், அவனுக்கென்றே தனது வாழ்க்கையை அர்ப்பணித்து விட வேண்டும்!.
ஆனால், கெடுவாய்ப்பாக அல்லாஹ்வின் தன்மைகளைப் பற்றியும் அல்லாஹ்வின் பண்புகளைப் பற்றியும், அல்லாஹ்வின் அதிகாரங்களைப் பற்றியும் இவ்வளவு விஷயங்கள் தெரியவந்த பிறகும் இறைவனை ஏற்றுக்கொள்ளாமல், தனது அறிவை கொஞ்சம்கூட பயன்படுத்தாமல், தன்னைப்போன்ற சாதாரண மனிதர்களின் கற்பிதங்களை கடவுளாக எண்ணிக் கொண்டு இறைவனை மறுத்து அந்தப் பொய்க் கடவுளர்களை வணங்கி வருகின்றான் மனிதன்!
அவனது இந்தப் போக்கிற்கு இரண்டே இரண்டு காரணங்கள்தான் இருக்கமுடியும்.
(1) நாம் நமது படைப்பினங்களில் இந்தப் படைப்பினத்தை, இந்தப் பெயருடையவரை நமது பணியில் துணையாளராக சேர்த்திருக்கிறோம். உலகை நிர்வகிப்பதில், பிரபஞ்சத்தை கட்டுப்படுத்துவதில் இவர் எனக்கு துணைசெய்து வருகிறார் என்று குறிப்பிட்ட நபரைப்பற்றி அல்லாஹ் அறிவித்திருக்க வேண்டும். ஏதேனும் ஓர் இறைத்தூதர், ஏதேனும் ஒரு வான்வேதம் மூலமாக இதனை நமக்கு அறிவித்திருக்க வேண்டும். அப்படி ஏதேனும் தகவல் நமது காதுகளுக்கு எட்டியிருக்கின்றதா என்றால் கண்டிப்பாக இல்லை. இல்லையென்றால்,
(2) அல்லாஹுத்தஆலா தனித்து நின்று இந்த உலகத்தை இயக்க சக்திபடைத்தவன் கிடையாது, தனித்து நின்று இந்த உலகைக் கட்டுப்படுத்தவோ இயக்கவோ, செயல்படுத்தவோ அல்லாஹ்வால் முடியாது என்று நமது அறிவு கூறவேண்டும், நாம் ஆராய்ச்சிசெய்து தெரிந்துகொண்டிருக்க வேண்டும். ஆனால் நாம் அல்லாஹ்வை பற்றி நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறோம்.
இந்த மனிதர்களையும் மனிதர்களைப்போல ஏராளமான படைப்பினங்களையும் தனித்து அவன் படைத்திருக்கின்றான். மற்ற எந்த படைப்பினங்களோடும் நாம் அவனை ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. ஒரு படைப்பினத்தின் தன்மைகளையோ, பண்புகளையோ, அதற்கென்று உள்ள அதிகாரங்களையோ அல்லாஹ்வின் தன்மைகளோடு, பண்புகளோடு, அதிகாரங்களோடு ஒப்பிட்டுப்பார்க்கவே முடியாது.
ஒரேயொரு ஆணையை அவன் செலுத்தினால் போதும். ஒரேயொரு சொல்லை அவன் உச்சரித்தால், ஒற்றைச் சொல்லால் “ஆகுக!’ என்று சொன்னாலே போதும். இந்த உலகமென்ன! அகிலமென்ன! இந்த பிரபஞ்சம்தான் என்ன! இதைப்போல கோடிக்கணக்கான பிரபஞ்சங்களை அவனால் படைத்துவி முடியும்! அந்தளவுக்கு பரந்து விரிந்த அதிகாரங்களை கொண்டவன் அவன். அப்படி இருக்கும் பொழுது இந்தச் சாதாரண இந்தச் சின்னஞ்சிறு உலகத்தை அவனால் நிர்வகிக்க முடியாதா? இந்தச் சின்னஞ்சிறு உலகத்தை கட்டுப்படுத்தவும் செயல்படுத்தவும் முடியாதா?
எந்தவித மாடலும் இல்லாமல், எந்தவித முன்மாதிரியும் இல்லாமல் சூன்யத்திலிருந்து உலகத்தைத் தோற்றுவித்த அந்த பரம்பொருளால், அந்த அல்லாஹ் ஏக இறைவனால் அதை நடத்துவதிலா சிக்கல் வந்துவிடப் போகின்றது? இவ்வளவு பெரிய உலகத்தை சூன்யத்திலிருந்து தோற்றுவிக்கும்போதுகூட அவன் களைப்படைந்து விடவில்லையே? அப்படியிருக்கும் போது இதை நடத்திச் செல்வதில் அவனுக்கு என்ன களைப்பு தோன்றிவிடமுடியும்?
ஷிர்க்கைப் பற்றிய தவறான கண்ணோட்டம்
சிலர் கூறுவகை கேட்டிருக்கலாம், நாங்கள் அல்லாஹ்வைத்தான் இறைவனாக ஏற்றுக்கொண்டுள்ளோம். இந்தச் சிலைகளையும், இந்த மனிதர்களையும் ஏன் வணங்குகிறோமென்றால், இவர்கள் மூலமாக அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெற்றுக் கொள்ளலாம். இவர்களது தொடர்பினால், இவர்களது வசீலாவினால் அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என்கிறார்கள். எவ்வளவு பெரிய முட்டாள்தனம் இது! எவ்வளவு பெரிய அறியாமை இது! ஒரு நாட்டின் அரசன், தனது அரசவையை எல்லா மக்களுக்காகவும் எல்லா நேரத்திலும் திறந்து வைத்திருக்கின்றான்.
தன்னை யாரும் எந்த நேரத்திலும் சந்திக்கலாம் என்று அனுமதியளித்திருக்கின்றான். அவனை யார் சென்று, எப்போது சந்தித்தாலும் அவருடைய குறைகளை உடனே அவன் கேட்கின்றான். அதைத் தீர்க்க தக்க நடவடிக்கைகளை எடுக்கின்றான். அப்படி இருக்கும்பொழுது ஒரு மனிதர். “நான் நேரடியாக சந்திக்கமாட்டேன். அதிகாரிகளில் யாரையாவது பிடித்துக்கொண்டு அமைச்சர்களில் யாருடைய சிபாரிசையாவது பெற்றுக்கொண்டு தான் அரசனை சென்றுசந்திப்பேன்’ என்றால் அவர் எவ்வளவு பெரிய முட்டாளாக இருப்பார்! நீங்களே கணக்கிட்டுக் கொள்ளலாம்.
அப்படி இருக்கையில் அரசருக்கெல்லாம் அரசனான அகிலத்தையெல்லாம் கட்டியாள்கின்ற அல்லாஹுத்தஆலா எத்தகைய மனிதரிடத்திலும் காணப்படாத அசாதாரணமான தன்மைகளை, பண்புகளை பெற்றிருக்கின்ற அல்லாஹ் “தனது அடியார்க்கு பக்கத்தில் இருக்கிறேன். அவர்கள் கூறுவதையெல்லாம் கேட்கின்றேன்’ என்று கூறும்போது அதைப் பயன்படுத்தாமலிருப்பதும் அதற்கென்று இடைத்தரகர்களை நாடிநிற்பதும் எவ்வளவுப் பெரிய கேனத்தனம்?
உங்கள் மீது உங்களுக்கு எந்த அளவு உரிமை இருக்கின்றதோ, அதைவிட அதிகமான உரிமை உங்கள்மீது அல்லாஹ்வுக்கு இருக்கின்றது. நீங்கள் அவனுக்கு பக்கத்தில் இருக்கின்றீர்கள். உங்கள் உள்ளங்களில் நீங்கள் நினைப்பதை நீங்கள் உணர்வதற்கு முன்னால் அல்லாஹ் உணர்ந்துகொள்கிறான். அந்தளவுக்கு அவனது அறிவு விசாலமானது. நாம் எந்த மனிதரிடமாவது அடிக்கடி கேள்விகேட்டால், கோரிக்கைகளை வைத்துக் கொண்டிருந்தால் மனிதர்களாகிய நமக்கு கோபம் வருகின்றது. எரிச்சல் வருகின்றது. ஆனால் அல்லாஹ்வுக்கோ கேட்காமல் இருந்தால் கோபம் வருகிறது அல்லது குறைவாகக் கேட்டால் கோபம் வருகின்றது.
இத்தகைய உயர் பண்புகளை, இத்தகைய உயர் அதிகாரங்களைப் பெற்றிருக்கின்ற நமது படைப்பாளன், நமது உரிமையாளன் தனது அடியார்களோடு தொடர்புகொள்ள வேறு யாருடைய உதவியையாவது நாடுவானா? இத்தகைய அல்லாஹ்வோடு தொடர்புகொள்ள தெய்வங்களையும், சிலைகளையும், அவ்லியாக்களையும், பிற மனிதர்களையும் அவர்களது தயவை நாடி நிற்கத்தான் வேண்டுமா? கண்டிப்பாக கிடையாது! தேவையே இல்லை.
ஷிர்க் என்பது அல்லாஹ்வுக்கு எதிரான சதி
அல்லாஹ்வின் பண்புகள் என்ன? அல்லாஹ்வின் தன்மைகள் என்ன? என்பதைப்பற்றி விளக்கமாக தெரிந்து வந்திருக்கிறோம். அத்தகைய அல்லாஹ்வின்மீது ஈமான் கொண்டு, இறைநம்பிக்கை கொள்வதுதான் இயற்கையான வழி! எளிதான வழி! அதற்கு நேர்மாறாக ஷிர்க்கை செய்கிறோமென்றால், இறைவனை நிராகரித்து குஃப்ரை செய்கிறோமென்றால் அது அறியாமை! முட்டாள்தனம்! அதேசமயம் அல்லாஹ்வுக்கு எதிரான சதி! நமக்கு நாமே இழைத்துக் கொள்கின்ற அநீதி. அல்லாஹ்வுக்கு எதிரான இத்தகைய சதிவேலையை உலகத்தில் எந்தவொரு படைப்பும் செய்வதுகிடையாது. எல்லா படைப்பினங்களும், எல்லா உயிரினங்களும் அல்லாஹ்வுக்கு கீழ்ப்படியவே செய்கின்றன. மனிதன் ஒருவனைத் தவிர!
ஷிர்க் என்றால் என்ன? அதனால் ஏற்படுகின்ற கெடுதிகள், தீமைகள், பின்விளைவுகள் என்ன? என்பதைப் பற்றியெல்லாம் தெரிந்துகொள்ளாமல் ஷிர்க் என்கின்ற பாதாள சாக்கடையில் அவன் மூழ்கிவிடுகிறான். ஒரு மனிதனிடத்தில் கோடிக்கணக்கான பணம் இருக்கின்றது. ஆனால் அவனுக்கு ஒருவாய் சோறு சாப்பிட முடியவில்லை. ஒரு சொட்டுத்தண்ணீர் குடிக்க முடியவில்லையென்றால் அவ்வளவு பணம் இருந்தும் என்ன பயன்? அதுபோலத்தான் இந்த அறிவும். அறிவைக்கொண்டு மனிதன் நிலவில் இறங்கி நடந்திருக்கிறான். செவ்வாய் கோளுக்கே போய்ச்சேர்ந்து ட்டான். ஆனாலும் என்னபயன்? அவனைப்படைத்து பரிபாலித்து வரும் அல்லாஹ்வைப்பற்றி அறிவின்மூலம் அறிந்துகொள்ள முடியவில்லையே!
அல்லாஹ்வின் மாண்பைப்பற்றியும், அவனது ஓர்மையைப்பற்றியும் இரண்டு வார்த்தைகளை சொல்லக்கூட அறிவு அவனுக்கு வழிகாட்டவில்லையே! எந்த மூளையைப் பயன் படுத்தி, எந்த அறிவைப் பயன்படுத்தி, எந்த நாவைப்பயன்படுத்தி உலகத்தில் மதிப்பையும், மரியாதையையும் ஈட்டிக்கொண்டிருக்கிறானோ இதே உடல் உறுப்புகள்தான் மரணத்திற்குப்பிறகு அவனுக்கு எதிராக சாட்சியம் சொல்லப் போகின்றன. எந்த மனிதனை இறைவன் படைத்து, அவனுக்கென்று இந்த உலகத்தையே படைத்து அவனுக்குத் தேவையான எல்லா வசதிகளையும், வாய்ப்புகளையும் ஆக்கிக் கொடுத்திருக்கின்றானோ அதே அல்லாஹ்வால் கொடுக்கப்பட்ட இந்த உடலுறுப்புகளை அவனுக்கு எதிராக மனிதன் பயன்படுத்துகிறான் என்றால் எவ்வளவு பெரிய நம்பிக்கைத் துரோகம்!
இந்த நம்பிக்கைத்துரோகத்திற்கு அல்லாஹ் நாடினால் எப்படியெல்லாம் தண்டிக்கலாம்! அவனுக்கு உணவையே தராமல் புறக்கணிக்க லாம்! ஒரு சொட்டுத்தண்ணீர்கூட கொடுக்காமல் தாகத்தால் தவிக்கச் செய்யலாம். ஆனால், கருணை மிகுந்த அல்லாஹ் அப்படியெல்லாம் செய்வதில்லை. அவன் மிகவும் பெருந்தன்மையாளன்! தன்னை ஏற்று மனப்பூர்வமாக ஒப்புக்கொண்டு தனக்குக் கீழ்படிந்து வாழ்கின்ற முஃமின்களைப் போலவே தன்னை ஏற்றுக் கொள்ளாத, இறைநம்பிக்கை கொள்ளாத நிராகரிப்பாளர்களையும் நடத்திவருகிறான். அவனுக்கு எல்லா வகையான வாய்ப்புகளையும், வசதிகளையும் தந்திருக்கிறான்.
ஷிர்க்கையும், குஃப்ரையும் விட்டுவிட்டு ஓரிறைக் கொள்கையின்பால் திரும்பிவிடமாட்டானா என அவனுக்கு போதுமானதைவிட இன்னும் சொல்லப்போனால் அதைவிட அதிக கால அவகாசத்தையும் தருகிறான். ஆயிரக்கணக்கான, இலட்சக்கணக்கான மக்கள் இந்த அவகாசத்தை சரியாகப்பயன்படுத்தி இஸ்லாமையும், ஓரிறைக் கொள்கையையும் ஏற்றுக்கொண்டு தங்களை சுத்தப்படுத்தி வருகிறார்கள், வந்து கொண்டிருக்கிறார்கள்
ஷிர்க் என்பதே அறியாமை
ஒருவனுக்கு எழுதத்தெரியாது என்றால், படிக்கத்தெரியாது என்றால், பள்ளிக்கூடத்தின்பக்கம் அவன் போகவே இல்லையென்றால், மழைக்குக்கூட பள்ளிக்கூடத்தில் ஒதுங்கவில்லையென்றால் அவனை நாம் முட்டாள், படிக்காதவன் என்கிறோம், பாமரன் என்றெல்லாம் சொல்கிறோம்! ஆனால் இந்த உலகத்தை யார் படைத்தது? இந்த உலகத்தை யார் நிர்வகித்து வருகின்றது? இந்த மனிதனை படைத்ததற்கான காரணமென்ன? மனிதன் யாரை வணங்க வேண்டும்? இன்னும் இது போன்ற கேள்விகளுக்கெல்லாம் ஒரு மனிதனால் விடையை கண்டுபடிக்க முடியவில்லை என்றால், அவன் என்னதான் பெரிய பெரிய படிப்புகளை படித்திருந்தாலும், என்னதான் உயர்கல்வி கற்றிருந்தாலும், அவனும் ஒரு படிக்காத முட்டாளைப் போன்றவனே!
அதே சமயம் உலகக்கல்வியை கொஞ்சம்கூட பெற்றிராத மனிதன், உண்மையான இறைவன் என்றால் யார் என்பதைத் தெளிவாக புரிந்துகொண்டிருக்கிறான் என்றால், உண்மையிலேயே அவன்தான் படித்தவன், அறிவுள்ளவன், பண்பாடுள்ளவன்.
ஷிர்க் மன்னிக்க முடியாத பெருங்குற்றம்
இறைவனோடு ஏதேனும் ஒரு வகையில், ஏதேனும் ஒரு கோணத்தில் இன்னொன்றை இணையாக்குவது அதாவது ஷிர்க் செய்வது மனிதன் செய்கின்ற மாபெரும் குற்றம். மனிதன் இழைக்கின்ற மாபெரும் பொய். மனிதன் தனக்குத்தானே இழைத்துக் கொள்கின்ற மாபெரும் அநீதி. அதேசமயம் அல்லாஹுக்கு செய்கின்ற மிகப்பெரிய மாறு. இறைவனுக்கு எதிரான மிகப் பெரிய சதி. எனவேதான் அல்லாஹ் ஷிர்க்கிற்கான தண்டனையையும் மிகவும் கொடியதாக்கி இருக்கிறான்.
“என் அடியார்கள் எந்தக் குற்றம் செய்தாலும் நாம் நினைத்தால் அந்தக் குற்றத்தை மன்னித்துவிடுவோம். ஆனால் ஷிர்க்கை மட்டும் ஒருபோதும் மன்னிக்கவே மாட்டோம் எந்த நிலையிலும், எந்தக் காலத்திலும் ஷிர்க்கை மட்டும் மன்னிக்கவே மாட்டோம்’ என்று இறைவன் அருளியுள்ளான்.
மனிதன் சாவதற்குமுன் தான்செய்த ஷிர்க் எனும் கொடிய பாவத்தை எண்ணி, வருந்தி, அழுது பாவமன்னிப்பு கோரியிருந்தால் ஒருவேளை அவனுக்கு மன்னிப்பு கிடைக்கும். அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான நபிமார்கள், இறைத்தூதர்கள் சிபாரிசு செய்தாலும் அல்லாஹ்ஷிர்க்கை மன்னிக்கவே மாட்டான்.
ஒரு மனிதன் ஷிர்க் செய்கிறான் என்றால், அவன் என்ன தான் நல்லவனாக இருந்தாலும், எத்தனை தான் நல்ல நல்ல காரியங்கள் செய்து இருந்தாலும், அந்தக் காரியங்களையெல்லாம் அல்லாஹ் ஏற்றுக்கொள்ளமாட்டான். அவனுக்கு எந்தவிதமான நன்மையும் கிடைக்காது. அதே சமயம் ஒரு மனிதன் ஷிர்க் செய்யாமல் விலகி இருக்கின்றான் என்றால் ஷிர்க் செய்யாத நிலையில் என்னதான் குற்றத்தை மாபெரும் பாவத்தை செய்து இருந்தாலும் அவனுக்கு மன்னிப்பு கிடைக்க வாய்ப்பு இருக்கின்றது.
இந்த விஷயத்தை அல்லாஹ் தனது இறைத்தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு மிகத் தெளிவாக விளக்கிக் கூறியிருக்கிறான். “தூதரே! உங்களிடம் ஷிர்க்கின் நிழல் காணப்பட்டாலும்கூட உங்களது மிகச்சிறந்த நல்ல செயல்களெல்லாம் பாழாய்ப்போய்விடும்.”
ஷிர்க் என்பது அல்லாஹ்வுக்கு எந்தளவுக்கு கோபம் வரக்கூடிய மிகக்கொடிய குற்றம் என்பதைக் குர்ஆன் தெளிவாக விளக்குகின்றது. ஷிர்க் என்ற சொல்லைக்கேட்ட உடனேயே வானம் இடிந்துவிழ தயாராகிவிடுகின்றது. பூமி பிளந்துவிடத் தயாராகி விடுகின்றது. மலைகள் தகர்ந்துவிழத் தயாராகி விடுகின்றன. இவ்வாறாக ஈமான், இஸ்லாம் போன்றவற்றினால் எந்தளவுக்கு நற்பயன்கள் விளைகின்றனவோ அதேபோல ஷிர்க்கின் தீயவிளைவுகள் மிகவும் கொடுமையானவை பயங்கரமானவை. இதுவும் ஷிர்க் தான்.
இறைவன் மட்டுமே படைத்தவன், அவன் மட்டுமே அனைத்துக்கும் உரிமையாளன் என்பதை ஏற்றுக்கொள்ளாமல் நிராகரிப்பது மட்டும்தான் ஷிர்க் என கருதக்கூடாது அல்லது இறைவனை விட்டுவிட்டு இன்னொன்றை உலகத்தை படைத்தவனாகவும், இறைவனோடு இணையாக இருப்பவனாகவும் கருதுவதுமட்டுமே ஷிர்க் என எண்ணிவிடக்கூடாது. மாறாக, நான் இறைவனுடைய நெருக்கத்தை அடையவேண்டும் என்றால் இவருடைய சிபாரிசும், பரிந்துரையும் எனக்குத் தேவை என்று ஒருவரைப்பற்றி நினைத்தோம் என்றால் அதுவும் ஷிர்க் ஆகும்!
அதேபோல அல்லாஹ்வை விட்டுவிட்டு இன்னொருவருக்கு அவர் நபியாக இருக்கலாம். ரசூலாக இருக்கலாம் மறைவான விஷயமெல்லாம் தெரியும் என நினைத்தோம் என்றால், அவர் எல்லா இடத்திலும் இருக்கின்றார், யாவற்றையும் கண்காணித்துக் கொண்டிருக்கின்றார் பார்த்துக் கொண்டிருக்கின்றார் என்று நினைத்தோம் என்றால் மனிதர்களின் தேவைகளையெல்லாம் பூர்த்தி செய்கின்றார், துன்பங்களை, தொல்லைகளையெல்லாம் நீக்குகின்றார், துயரங்களின்போது ஆஜராகி ஆறுதல் அளிக்கின்றார் என்று நினைத்தோம் என்றால் அதுவும் ஷிர்க் ஆகும்!
அவருடைய பெயரைக்கூறி சத்தியம் செய்தோம் என்றால், அவருடைய பெயரைக்கூறி கால்நடைகளைக் குர்பான் கொடுத்தோம் என்றால், அவருடைய பெயரைக் கூறி துஆக்களை வேண்டினோம் என்றால் அதுவும் ஷிர்க் ஆகும். இறைவனுக்கென்றே இருக்கின்ற வழிபாட்டுச் சடங்குகளை, வழிபாட்டு செய்கைகளை உதாரணமாக தலைகுனிந்துநிற்பது, ஸஜ்தா செய்வது, ருகூவு செய்வது, போன்றவற்றை இன்னொரு மனிதருக்காக நாம் செய்தோம் என்றால் அதுவும் ஷிர்க் ஆகும்.
ஏதேனும் ஒரு நபியை, ஒரு ரசூலை இறைத்தூதரை அளவுக்கு அதிகமாக நேசிப்பதன் காரணத்தினால் மனித நிலையை விடவும் அவரை மேலே உயர்த்தி, இறைவனுடைய இடத்திற்கு அவரை இட்டுச் சென்றோம் என்றால் அதுவும் ஷிர்க் ஆகும். இத்தகைய ஷிர்க்கை விட்டு மிகவும் எச்சரிக்கையோடு விலகியிருங்கள் என்று அண்ணலெம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லிம் அவர்கள் எச்சரித்து விட்டு சென்றிருக்கின்றார்கள்.
”என்னுடைய சமூக மக்களே! என் மீது நீங்கள் கொண்டிருக்கின்ற நம்பிக்கையின் காரணமாக அதிகப்பிரசிங்கத்தனமாக மிகைத்துச் சென்றுவிடாதீர்கள்! ஈசா அலைஹிஸ்ஸலாம் அவர்களை கிறிஸ்துவ சமுதாய மக்கள் எந்தளவுக்கு உயர்ந்த சிறப்பிடம் கொடுத்து தேவகுமாரனாக ஆக்கிவிட்டார்களோ, அது போன்ற உயர்ந்த இடத்தை எனக்கு தந்துவிடாதீர்கள். நான் வெறுமனே அல்லாஹ்வின் அடியானாக மட்டுமே இருக்கின்றேன். என்னை அல்லாஹ்வின் அடியானாக மட்டுமே, அல்லாஹ்வின் இறைத்தூதராக மட்டுமே கருதுங்கள்! என் மரணத்திற்குப் பிறகு என் அடக்கஸ்தலத்தை திருவிழாத்தளமாக ஆக்கிக்கொள்ளாதீர்கள்.”
“எந்தவொரு படைப்பினமாக இருந்தாலும் சரி அவர் நபியாக இருக்கலாம் ரசூலாக இருக்கலாம் துன்பங்களின் போது, அவரை அழைத்தோம் என்றால், மறைவான விஷயங்களையெல்லாம் அவருக்குத் தெரியும் என்று நினைத்தோம் என்றால் அது ஷிர்க் ஆகும். அது குஃப்ர் ஆகும் என்பதை நாம் இதுவரைக்கும் நன்றாகப் புரிந்து வைத்திருக்கிறோம்.
அதேபோல அடக்கஸ்தலங்கள், கப்ருகளுக்கு அருகில் போய் நின்றுகொண்டு, ஏதேனும் வலியை, ஏதேனும் நபியை நாம் அழைக்கிறோம் என்றால், அந்தக் கப்ரை தவாப் செய்கிறோம். வலம் வருகிறோம் என்றால், அங்கே நேர்ச்சைகளை நிய்யத்துகளை செய்துவருகிறோம் என்றால் இதுவும் ஈமானுக்கு எதிரான, இஸ்லாமிற்கு எதிரான செயலாகும்!
குர்ஆனுடைய கருத்தின் பிரகாரம் இந்த உலகத்தில் எத்தனையோ மனிதர்கள் தங்களை முஸ்லிம்களாக எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையில் அவர்கள் முஸ்லிம்களாக, முஃமின்களாக அல்லாஹ்விடத்தில் கருதப்படுவது கிடையாது. அவர்கள் அல்லாஹ்விடத்தில் முஷ்ரிக்குகளாக, காஃபிர்களாகத் தான் கருதப்படுகிறார்கள்.
மஹ்ஷர் மைதானத்தில் ஒரு மனிதன் கொண்டு வரப்படுவான். அவன் ஏராளமான நல்ல அமல்களை செய்து வைத்திருப்பான். எல்லா உலக மக்களும், ஏன் அவனும் கூட தன்னை முஸ்லிமாக எண்ணிக்கொண்டிருப்பான். ஆனால் அவனது அடிப்படைக் கொள்கையில் அகீதாவில் ஷிர்க் பயங்கரமாக கலந்திருக்கும். அவனது ஈமானையே அது தின்றுதீர்த்துவிட்டிருக்கும். வல்ல இறைவன் கூறுகிறான்@ உலகத்தில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் தங்களைத் தாங்களே முஸ்லிம்களாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அல்லாஹ்விடத்தில் கருதப்படுவது கிடையாது. அவர்கள் அல்லாஹ்விடத்தில் முஷ்ரிக்குகளாக, காஃபிர்களாகத்தான் கருதப்படுகிறார்கள்.
எவ்வாறு நீரும், நெருப்பும் ஒ சேர சேர்ந்திருப்பது சாத்தியமே இல்லையோ, அதைப்போலத்தான் ஒரு மனிதனிடத்தில் ஓரிறைக்கொள்கை தவ்ஹீதும், இணைவைப்பு ஷிர்க்கும் சேர்ந்திருப்பது சாத்தியமே கிடையாது. இத்தகைய எண்ணங்களோடு கூடிய இந்த மக்கள் முஸ்லிம்களாக அழைக்கப்படுகிறார்கள். அதில் எந்த தவறுமே கிடையாதென்றால் அரபுலக மக்கள் என்ன தப்பு செய்தார்கள்? அவர்கள் என்ன பாவம் செய்தார்கள்? அவர்கள் ஏன் இஸ்லாமை விட்டு வெளியேறியவர்களாக கருதப்பட்டார்கள்? அவர்களும் இதே செயல்களைத்தானே செய்து வந்தார்கள்?
உலகத்தைப் படைத்தவனாக, உலகத்தின் உரிமையாளனாக நாங்கள் அல்லாஹ்வைத்தான் எண்ணிக் கொண்டிருக்கிறோம். அல்லாஹ்விடத்தில் நெருக்கத்தைப் பெற்றுத்தருவார்கள். அல்லாஹ்விடத்தில் தொடர்பை ஏற்படுத்துவார்கள். அல்லாஹ்விடத்தில் எங்களுக்காக சிபாரிசு செய்வார்கள் என்பதற்காகத் தானே இந்த சிலைகளை வணங்கி வருகிறோம் என்பதுதானே அவர்களது வாதமாக இருந்தது!
சிலைகளை இந்த காரணத்திற்காக எண்ணி வணங்கி வந்ததுமிகப்பெரிய குற்றம் என்றால், இஸ்லாமை விட்டு வெளியேற்றி விடுகின்ற செயல் என்றால், அதே செயலை வலிமார்களுக்காக, நபிமார்களுக்காக நாம் செய்து வந்தோமென்றால் அது குற்றமாக ஆகாதா? அது தவறாக ஆகாதா? ஷிர்க் என்கின்ற தவறான கண்ணோட்டத்தை யார் செய்தாலும் எங்கே செய்தாலும் எந்த மனிதரைப் பற்றி நாம் அவ்விதம் கருதினாலும் அது மிகப்பெரிய குற்றமே.
இஸ்லாமோடு தொடர்பில்லாத முஸ்லிம்களின் செயல்கள்
இன்று முஸ்லிம்கள் செய்துவரும் எத்தனையோ செயல்களுக்கு இஸ்லாமோடு எந்தவித தொடர்பும் கிடையாது. கெடுவாய்ப்பாக நம்நாட்டைச் சேர்ந்த முஸ்லிமல்லாத சகோதரர்கள் இந்த செயல்களை இஸ்லாமிய செயல்களாகவே கருதுகிறார்கள். இந்த செயல்களை செய்துவரும் முஸ்லிம்களை இஸ்லாமின் பிரதிநிதிகளாகவே பார்க்கிறார்கள். விளைவாக, இஸ்லாமின் தூய்மையான போதனைகளை புரிந்துகொள்ளாமல் இஸ்லாமை ஏற்காது விலகியே இருக்கிறார்கள். அவர்கள் கூறுவதென்ன? இத்தகைய அறிவுக்குப் பொருந்தாத ஓரிறைக் கொள்கைக்கு எதிரான மூடநம்பிக்கைகளை செய்வதற்கு இஸ்லாமில் அனுமதி உள்ளதென்றால் உங்களுக்கும் எங்களுக்கும் என்னதான் வேறுபாடு?
முஸ்லிம்கள் கப்ருகளுக்கு முன்னால் தலைகுனிந்து, சிரம்தாழ்த்தி மரியாதை செய்கிறார்கள். நாங்களோ சிலைகளுக்கு முன்னால் மரியாதை செய்கிறோம். அவர்கள் அடக்க ஸ்தலங்களுக்குச் சென்று நேர்ச்சை, நிய்யத்துகளை மேற்கொள்கிறார்கள், படையல்களை படைக்கிறார்கள். நாங்கள் சிலைகளை இருக்கும் கோயில்களில் இவற்றைச் செய்கிறோம். இறந்துபோன சான்றோர்களிடம் அவர்கள் கோரிக்கைகளை வைக்கிறார்கள். நாங்கள் சிலைகளிடம் கோரிக்கைகளை வைக்கிறோம். அவர்கள் மர்ஹும்கள் இறந்துபோனவர்கள் மீது சத்தியம் செய்கிறார்கள். நாங்கள் எங்கள் தெய்வங்களின்மீது சத்தியம் செய்கிறோம். அவர்கள் கப்ருகளைசுற்றி தவாப்செய்கிறார்கள். நாங்கள் மரங்களையும் லிங்கங்களையும் வலம்வருகிறோம். அப்படி இருக்கும்போது எங்களுக்கும், அவர்களுக்கும் என்னதான் வேறுபாடு?
இஸ்லாம் என்றால் என்ன? ஷிர்க் என்றால் என்ன? என்பதைப் பற்றி இதுவரை நாம் பார்த்துவந்த விஷயங்களை கவனமாக ஆராய்ந்தால் முஸ்லிம்கள் செய்துவரும் இவ்வனைத்து விஷயங்களுக்கும் இஸ்லாமிற்கும் எந்தவொரு தோடர்பும் இல்லை எனும் தெளிவான முடிவுக்கு வரமுடியும். அல்லாஹ்வை விட்டுவிட்டு அவ்லியாக்களை, நபிமார்களை அழைப்பது இஸ்லாமில் மிகப்பெரிய குற்றம். அல்லாஹ்வைத் தவிர்த்து வேறு எந்த மனிதரும் உயிரோடு இருக்கிறார் என்று நினைப்பதுகூட ஷிர்க் என்ற புதைசேற்றில் நம்மைத் தள்ளிவிடும். இந்தியாவில் மட்டுமல்லாது இந்திய துணைக்கண்டத்திலும், ஆசியாவிலும் பல்வேறு நாட்டு முஸ்லிம்களிடமும் இத்தகைய மூடநம்பிக்கைகள், பித்அத்கள், வழிகேடான ஷிர்க் கொள்கைகள் காணப்படுகின்றன.
நீண்டதொரு காலம் முஷ்ரிக்கீன்கள் ஷிர்க் செய்கின்ற மக்களோடு இணைந்து வாழ்ந்து வருவதால் நம்மிடையே தொற்றிவிட்ட முக்கிய பழக்க வழக்கம் இது. மிகவும் சாமர்த்தியமாகவும், விவேகமாகவும் முஸ்லிம் சமுததாயத்திற்குள் இத்தகைய வழிகேட்டுப் பழக்கங்களை ஷைத்தான் புகுத்தி விட்டிருக்கிறான்.
முஸ்லிம்கள் அனைவருக்கும் படித்தவர்கள், பாமரர்கள்அனைவருக்கும் இஸ்லாமும், ஈமானும் மிகமிக உன்னத விஷயங்களாகும். இஸ்லாமை விட்டு விடுங்கள். ஈமானைத் துறந்து விடுங்கள் என்று அவர்களிடம் நேரடியாகப் பிரச்சாரம் செய்யவோ, நேரடியாக இஸ்லாமோடு, ஈமானோடு மோதுகின்ற விஷயங்களை அவர்களின்மீது திணிக்கவோ ஷைத்தானால் முடியாது. அத்தகைய காரியங்களில் அவனால் வெற்றி பெறவும் இயலாது.
எனவே அவன் இஸ்லாமின் பெயரிலேயே இஸ்லாம் அல்லாத கொள்கைகளை சாமர்த்தியமாக முஸ்லிம் சமுதாயத்திற்குள் புகுத்தும் முயற்சிகளை நீண்ட காலமாக மேற்கொண்டு வருகிறான். அம்முயற்சிகளில் வெற்றிபெவும் செய்கிறான். இத்தகைய பித்அத்களையும் வழிகேடுகளையும் இஸ்லாமிய செயல்கள் என்று நினைத்தே முஸ்லிம்கள் செய்து வருகிறார்கள். இதன் விளைவாக தங்களை அறியாமலேயே தங்களிடமுள்ள ஈமானிய செல்வத்தை தொலைத்துவிடுகிறார்கள்..
ஷிர்க் இயல்பும் வகைகளும் என்ன?
ஷிர்க் இயல்பும் வகைகளும் என்ன, ஏது? என்று விளங்கிக்கொள்ளாமல் எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் நம்மால் ஓர் அபிப்பிராயத்துக்கு வர முடியாது. ஆகையால், முதலில் ஷிர்க் என்றால் என்ன பொருள் என்று விளங்கிக் கொண்ட பிறகு அதன் வகைகள், வகையறாக்களைப் பற்றி பார்ப்போம்.
வான்மறை குர்ஆன், ஹதீதுகளிலிருந்து நமக்குக் கிடைக்கும் தரவுகளை முன் வைத்து ஷிர்க்கை விளக்க முனைந்தோம் என்றால், “”இறைவனுக்கென்றே உள்ள தன்மைகளையோ, இறைவனுக்கு என்றே உள்ள பண்புகளையோ, இறைவனுக்குள்ள உரிமைகளையோ இறைவன் அல்லாத இன்னொன்றுக்கு வழங்கினோம் என்றால், அது ஷிர்க் ஆகும்!” கொஞ்சம் நிதானமாக இதனைப் புரிந்துகொள்ள முயல வேண்டும். இறைவனுக்கென்றே உள்ள தன்மைகளில் இணை வைப்பது என்றால் என்ன?
இறைவன் ஏதேனும் ஒன்றிலிருந்து தோன்றியவன், தோற்றமூலம் இறைவனுக்கு உண்டு என்று நினைப்பது; இறைவனிலிருந்து இன்னொன்று தோன்றியது என்று எண்ணுவது; ஏதேனும் ஒன்றை/ஒருவரை இறைவனின் பங்காளியாக நினைப்பது; இறைவனின் மகனாக, தந்தையாக யாரையேனும் உருவகப்படுத்துவது (இயேசு இறைவனின் மூலத்திலிருந்து உருவானவர்; தேவகுமாரன்; மரியம் இறைவனின் தாய் என்றெல்லாம் கிறிஸ்துவர்கள் நினைக்கிறார்கள்.
வானவர்கள் இறைவனின் பெண் மக்கள் என்று அரேபியர்கள் நினைத்து வந்தார்கள்) இறைவன் நிரந்தரமானவன்; என்றென்றும் ஜீவித்திருப்பவன்; நிறைவான, பரிபூரண குணங்களைக் கொண்டவன் என்று அறிவும், மனித இயல்பும், சமய நெறியும் வகைப்படுத்தியுள்ள இறைத்தகுதிகளோடு இவைபோன்ற விஷயங்கள் முரண்படுகின்றன.
ஷிர்க் ஃபிஸ் ஸாத்
இறைத்தன்மைகளில் இணைவைப்பு என்பது இதுவே! பல்வேறு வடிவங்களில் முன்வைக்கப்படும் அத்வைதக் கோட்பாடு இவ்வகையின் பாற்படுகின்றது. அதிலும் குறிப்பாக பகவத் கீதை, இந்துமதத் தத்துவங்களில் கூறப்படும் அத்வை தம் முழுக்க, முழுக்க இறைத்தன்மையில் இணைவைப்பே என்பதில் சந்தேகமே இல்லை!
ஷிர்க் ஃபில் சிஃபாத்
இறைவனுக்கென்றே உள்ள பண்புகளில் இணைவைப்பு என்றால் என்ன?
இறைவனுக்கு மட்டுமே உரித்தான பண்புகளான படைத்தல், நிர்வகித்தல், கட்டுப்படுத்துதல், ஆற்றல், வலிமை, அறிவு, ஞானம் போன்றவை பிறரிடத்திலும் உண்டு என்று எண்ணுவது ஆகும். எந்தப்பொருளில் இப்பண்புகள் இறைவனுக்கு வழங்கப்பெறுகின்றனவோ அப்பொருளில் இவற்றை பிறருக்கு வழங்கக் கூடாது என்பதே நிபந்தனை! ஏனென்றால், இறைவனுக்கு வழங்காத சாதாரண பொருளில் இவற்றை பிற படைப்பினங்களுக்கும் பயன்படுத்தலாம். இரண்டுக்கும் இடையிலான வேறுபாட்டை நாம் விளங்கி வைத்திருப்பது நலம்.
இறைவனுக்கு வழங்கப்படும்போது முழுமையான பொருளைத் தரும் இவை மனிதர்களுக்கு வழங்கப்படும் போது தம்பொருளின் சில கூறுகளையே வெளிப் படுத்துகின்றன. உதாரணமாக ஹகீம் (நுண்ணறிவாளன்) என்பதை நாம் ஒரு மனிதனுக்கும் கூறலாம்; இறைவனுக்கும் கூறலாம். ஆயின், இறைவனுக்கு மட்டுமேயான பொருளை மனதில் கொண்டு மனிதனுக்காக இதே பண்பைக் கூறினால் அது இறைவனுக்கென்று உள்ள பண்புகளில் இணை வைப்பதாக ஆகிவிடும்!
ஷிர்க் ஃபில் லவாஜிம்
இறைவனுக்குள்ள உரிமைகளில் இணைவைப்பு என்றால் என்ன?
இறைவனின் நிறைவான பண்புகளோடு நீக்கமற நிறைந்துள்ளவை பிரிக்க முடியாது அவற்றோடு இணைந்தவை, அப்பண்புகள் காரணமாக நம்மீது கடமையாபவற்றில் யாரையேனும்/எவற்றையேனும் இணையாக்குவது.
உதாரணமாக இறைவன் படைப்பாளன், முழு உலகையும் அவனே படைத்துள்ளான். ஆகையால், அவனே உலகை நிர்வகிக்கவும் கட்டுப்படுத்தவும் வேண்டும். உலகின் படைப்பாளனாக இறைவனை ஏற்றுக்கொண்டுள்ளோம்.அதேசமயம் உலகைக் கட்டுப்படுத்தி ஆளும் பொறுப்பு வேறு பலருக்கும் உள்ளதாக நம்புகிறோம் என்றால் இறைவனுக்குள்ள உரிமைகளில் இணைவைக்கிறோம் என்று பொருள். ஏனென்றால், படைக்கும் ஆற்றல் படைத்தவனுக்கு மட்டுமே அடக்கியாளும் உரிமை உண்டு! அந்த உரிமையை பிறருக்கும் நாம் பங்குபோடுகிறோம்.
வான்மறை குர்ஆன் விளக்குகிறது. ”படைக்கும் ஆற்றலும், கட்டளை பிறப்பிற்கும் அதிகாரமும் அவனுக்குரியவையே!” (அல்குர்ஆன் 7:54)
அகிலமனைத்தும் கட்டுப்படுத்தும் அதிகாரமும் கட்டளை பிறப்பிக்கும் அதிகாரமும் அவனுக்கே உரியது என்றால் அவனுக்கு மட்டுமே கீழ்ப்படிய/வழிபட வேண்டும். வேறு யாருக்கும் கீழ்ப்படியக் கூடாது / வழிபடுகிறோம் என்றால், அவனை நேசிக்காது வேறு யாருக்காவது நமது நேசத்தை உரித்தாக்குகிறோம் என்றால் உரிமையில் இணை வைக்கிறோம் என்றே பொருள்! இதையே வான்மறை குர்ஆன் வேண்டு கின்றது.
”நீர் அல்லாஹ்வையே வழிபடும்! கீழ்ப்படிதலை அவனுக்கே உரித்தாக்கிய நிலையில்..” (அல்குர்ஆன் 39:2)
வேறோரிடத்தில்.. ”இறைநம்பிக்கை கொண்டவர்களோ அனைவரையும்விட அதிகமாக அல்லாஹ்வை நேசிக்கிறார்கள்!” (அல்குர்ஆன் 2:165)
அதாவது இறைவனை நேசிப்பதை விடவும் குறைவாகத்தான் பிறரைநேசிக்கிறார்கள். இறைநேசம் மற்ற அனைத்து நேசங்களையும் மிகைத் துள்ளது. இணைவைப்பின் அடிப்படை வகைகள் இவைதாம்!
இந்த மூன்று வகைகளில் ஏதேனும் ஒன்றின் கீழ் வரும் இணைவைப்புகள் இன்னும் பல உள்ளன. ஆயினும் அவையனைத்தும் ஷிர்க்கின் வடிவங்கள் / வெளிப்பாடுகள் /உபகரணங்களாக உள்ளன. அவற்றை அனுமதித்து அப்படியே விட்டு வைத்தால் ஷிர்க் நுழைவதற்குத் தோதாக வாசலை அவை அகலத் திறந்துவிடும். தீமைகளை மட்டு மல்லாது தீமைகள் வரும் வழியையும் ஷரீஅத் தடைசெய்கின்றது; குற்றங்களுக்கான காரணங்களையும் அது கட்டுப்படுத்துகின்றது. அவ்வகையில் இத்தகைய ஷிர்க்கின் வெளிப்பாடுகள்/ வடிவங்களையும் ஷரீஅத் தடை செய் துள்ளது. உதாரணமாக இறைவன் அல்லாதவற்றுக்கு முன்னால் “ஸஜ்தா’ செய்வது (நெடுஞ்சாண் கிடையாக விழுவது) மாண்பை மனதில்கொண்டு அல்லாஹ் அல்லாதவற்றின் மீது சத்தியம் செய்வது!
ஏனென்றால், உச்சகட்ட பணிவின் / தாழ்மையின் அடையாளமாக “ஸஜ்தா’ விளங்குகின்றது. சிலைவணக்கம் நிகழும் சமூகங்களில் அம்மக்கள் சிலைகளுக்கு “ஸஜ்தா’ செய்கிறார்கள். அவ்வாறே சிலைகளின் மீது சத்தியமும் செய்கிறார்கள். ஆகவேதான், வாழ்வியல் நெறியை நிறைவுபடுத்த இறுதியாக வந்த இஸ்லாம் இவ்வனைத்து வடிவங்களையும் / ஷிர்க் வரக்கூடிய வாசல்கள் / தாழ்வாரங்கள் அனைத்தையும் அறைந்து சாத்திவிட்டது.
Title of the Book
Shirk – (Tamil)
Compiled by
Ustad Syed Abdur Rahman Umari
Publisher
Iqra College of Excellence,
2A, 2nd Floor, Apartment, 5/22, Abdul Gani Street,
Thiru Nagar Colony, Erode – 641 034
Edition-Year-Pages
First-2017-48
Price – Rs. 40.00
Printed at:
SKS Printers, Chennai
95519 44709
044 2861 2709
Typeset:
Maryam Graphics,
Coimbatore.
Mob: 78716 11173
©Iqra Educational Trust