= MUST READ =
சமூகங்களுக்கு இடையில் அமைதியும் பாதுகாப்பும் அதற்கான வழிமுறைகளும்
சமூகங்களுக்கு இடையேயான அமைதியும் பாதுகாப்பும் நம் நாட்டின் வலிமை
உலகிலேயே நம் நாடுதான் மிகப்பெரிய குடியரசு நாடு. நம் நாட்டின் பல்வேறு சமூக அமைப்பு அதன் தனிச்சிறப்பு. உலகின் முக்கிய மதங்களைச் சேர்ந்த கிறித்தவர்கள், இஸ்லாமியர்கள், இந்துக்கள், யூதர்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், ஜைனர்கள், பார்சீக்கள் ஆகியோருக்கு இது தாய்நாடு.
ஏறத்தாழ 1700 மொழிகள் இங்கு தாய்மொழியாகப் பேசப்படுகின்றன. இந் நாட்டின் 125 கோடி மக்கள், ஆறாயிரத்துக்கும் அதிகமான சாதிகளாகப் பிரிந்துள்ளதை நாம் காண முடியும். இப் புவியின் முக்கியமான இனங்களுள் ஆறு இனங்கள் இங்கு செழித்து வளர்ந்து வருகின்றன.
இப்படியான பல்வேறு சமூக அமைப்பையும் மீறி, நினைவுக்கு எட்டிய காலம் முதல், இந் நாட்டு மக்கள் அமைதியுடனும் இணக்கமுடனும் வாழ்வதை உலகமே வியந்து பார்க்கிறது.
பல்வேறு மதங்களையும் இனங்களையும் சேர்ந்த மக்கள் ஒரே கிராமத்தில் வசிப்பர். அவர்களுடைய பொருளாதாரமும் சமூக வாழ்வும் ஒன்றுக்கொன்று பின்னிக் கிடக்கும். அனைவரும் தத்தம் மகழ்ச்சியையும் துக்கத்தையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்வதும் பொதுப் பிரச்னை என்று வரும்போது ஒன்றாக இணைந்து எதிர்கொள்வதும் இயல்பான நிகழ்வு. ஏனெனில் மொழி, இனம், மதம் என்பதையெல்லாம் தாண்டி மனிதநேயம் எனும் கயிறு அவர்களை ஒன்றாக இணைத்துக் கட்டியுள்ளது.
வேற்றுமையில் ஒற்றுமையும் சமூகங்களுக்கு இடையே ஆழமாகப் பதிந்துள்ள அமைதியும் பாதுகாப்பும்தாம் நமது ஆகப்பெரிய வலிமை. அவை நமது தனித்தன்மையைப் பறைசாற்றுபவை. பல்வேறு மதங்களையும் இனங்களையும் சேர்ந்த மக்கள் நெடுங்காலமாய் ஒன்றிணைந்து வாழ்வதென்பது உலகில் வெகு சில சமூகங்களிடம் மட்டுமே எஞ்சியுள்ளது.
‘சனநாயகத்தின் தூண்கள், மனித உரிமையின் பாதுகவாலர்கள்’ என்று மார்தட்டிக்கொள்ளும் ஐரோப்பிய நாடுகளாலுமேகூட, சமூகங்களுக்கு இடையிலான அமைதியான கூட்டு வாழ்வை தங்கள் நாடுகளில் சாதிக்க இயலவில்லை. இன்னும் சொல்லப்போனால், அவர்கள் மேற்கொள்ளும் பன்முகப் பண்பாட்டுச் சோதனை அவர்களுடைய சமூகத்தினரிடையே பதற்றத்தைத்தான் தோற்றுவிக்கிறது.
உலகமயமாதல் நடைமுறையில் உள்ள இக்காலத்தில், பன்முகப் பண்பாட்டுச் சமூகங்களின் எண்ணிக்கை அதிகமாவது, சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பல நாடுகளிலும் இன்றியமையாததாகிவிட்டது. வேற்றுமையைத் திறம்படக் கையாளும் நமது பன்னெடுங்கால அனுபவத்திற்கு அது அதிக முக்கியத்துவத்தை அளித்துள்ளது.
உலகம் நமது அனுபவத்திலிருந்து பாடம் பயில விரும்புகிறது. சமூகங்களுக்கு இடையிலான அமைதியும் பாதுகாப்பும் நமது மிகப்பெரிய வலிமை; சொத்து. அது உலக அரங்கில் இந்தியாவுக்கு பெருமைக்குரிய இடத்தை அளித்து, இந்தியா தனது பொருளாதாரத்தை குறிப்பிடத்தக்க அளவில் விரிவாக்க உதவியுள்ளது. நமது இந்த மேன்மை நாம் உலகிலுள்ள பண்பாடுகளுடன் கலக்கவும் ஒன்றிணையவும் வாய்ப்பு அளித்துள்ளது. மட்டுமின்றி அவர்கள்மீது நாம் ஆதிக்கம் செலுத்தவும் வழி செய்துள்ளது.
எந்தவொரு மதத்தை, இனத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி, நமது அரசியல் சாசனம் குடிமக்கள் அனைவருக்கும் தன்னுரிமை அளித்துள்ளது. மக்கள் குழுக்களுக்கு இடையே நட்புறவும் அமைதியும் இணக்கமும் நமது அரசியல் சாசனத்தின் மைல்கல். அரசியல் சாசனத்தின் ஆன்மாவான அதன் முகப்புரை, தார்மிக உயர்ப் பண்புகளான தன்னுரிமை, தோழமை, தனி ஒருவரின் கண்ணியத்திற்கான காப்புறுதி, சமத்துவம், வாய்ப்புரிமை, கற்பனைச் சுதந்திரம், கருத்துரிமை, நம்பிக்கை, வணக்கவழிபாடு, சமூக, பொருளாதார, அரசியல் நீதி ஆகியனவற்றின் மீது தன் அடிப்படையைக் கட்டமைத்த ஒரு நாட்டைத்தான் கற்பனை செய்கிறது.
அரசியல் சாசனத்தின் 25 ஆவது பிரிவு, அனைவருக்கும் கருத்துச் சுதந்தரத்தை அளித்து, அவரவரும் தமக்குப் பிடித்தமான் மதத்தை ஏற்கவும் பின்பற்றவும் பரப்பவும் உரிமை அளிக்கிறது.
சமூகங்களுக்கு இடையிலான அமைதியும் பாதுகாப்பும்
பெருமைக்குரிய நம் நாட்டின் நிலை கடந்த சில ஆண்டுகளாக வெகுவேகமாகச் சீர்குலைந்து வருகிறது. இது பெரும் கவலைக்குரிய விஷயம். தீவிரவாதச் சித்தாந்தங்கள் சமூகத்தில் வேகமாக ஆதிக்கம் பெற்று வருகின்றன. சில சந்தர்ப்பவாதச் சக்திகள், அரசியல், நிதி, பண்பாடு சார்ந்த தங்களது சில்லறைத்தனமான இச்சைகளுக்காக, தொன்றுதொட்டு நிலவிவரும் இந்தச் சமூக இணக்கத்தைத் தகர்த்தெறிவதில் உறுதியாக உள்ளன. சமூகத்தில் பிரிவினைக்கான விதையைத் தூவுவதன் மூலம் இலாபத்தை அறுவடை செய்யலாம் என்று இந்தச் சக்திகள் கருதுகின்றன.
இந்த நாட்டை, குறிப்பாக இனப்பிரச்னைக்கு இலகுவான பகுதிகளை, தொடர்ந்து இனக்கலவரப் பதட்டத்தில் ஆழ்த்தி வைப்பதே இந்தச் சக்திகளின் நோக்கம் என்பதை அறிய முடிகிறது. பெரிய அளவிலான இனக்கலவரம் உலக நாடுகளின் கண்டனங்களுக்கு வழிவகுத்து, இந்தியாவிற்கு எதிர்மறை விளம்பரம் கிடைத்து உலக அரங்கில் அதன் பிம்பத்தின் மீது கறைபடியச் செய்துவிடுகின்றது. ஆகவே, பெருங்கொடிய தீமைகளை, குறைந்த எண்ணிக்கையில் நிகழ்த்தி, அவற்றைக் குறுகிய இடைவெளிகளில் தொடர்வது என்பது இந்த இனக்கலவரச் சக்திகள் கடைப்பிடிக்கும் புதிய உத்தி.
உள்துறை அமைச்சம் மக்களவையில் சமர்ப்பித்த தகவல்களின்படி, கடந்த ஓர் ஆண்டில் (2015) மட்டுமே இனக் கலவரங்களின் எண்ணிக்கை 17% அதிகரித்துள்ளது; ஒரே ஆண்டில் 751 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தக் கலவரங்களில் பெரும்பாலானவை (ஏறத்தாழ 87%) ஏழு மாநிலங்களில் நிகழ்த்தப்பட்டுள்ளன (உத்தரப்பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரம், மத்தியப்பிரதேசம், பீஹார், ராஜஸ்தான், குஜராத்). அதுவும் தேர்தல் காலங்களில் குறிப்பிடத்தக்க அளவில் அவை அதிகரித்துள்ளதாக அந்தத் தகவல் தெரிவிக்கிறது. அதேபோல், தேசிய அளவில் 2013ஆம் ஆண்டு, அதிகப்படியான அத்தகைய வழக்குகள் (823 வழக்குகள்) பதிவு செய்யப்பட்டுள்ளன.
அண்மைக்காலமாக, இத்தகைய குறைந்த எண்ணிக்கையிலான கொடிய நிகழ்வுகள் பல நடைபெற்றுள்ளன. ஜார்க்கண்டில் இரு வாலிபர்களைக் கொன்று மரங்களில் தொங்கவிட்டது, மாட்டிறைச்சி வைத்திருந்தார் என்று பொய் சொல்லி முஹம்மது அக்லாக் என்ற முதியவரை தாத்ரியில் அடித்துக் கொன்றது, இனவாதத்திற்கு எதிராகக் குரல் உயர்த்தும் சமூகச் சிந்தனையாளர்களைக் குறிவைத்துக் கொலை புரிவது, டெல்லி, ஹரியானா, மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், ஆக்ரா, மும்பை நகரங்களில் கிறித்தவர்களின் ஆலயங்களைத் தாக்கியது, நாட்டின் பல பகுதிகளில் உள்ள பல்கலைக்கழகங்களின் வளாகங்களில் தலித் மாணவர்களைத் தாக்கி அட்டூழியம் புரிவது, புனேவில் கணினிப் பொறியாளரை அடித்துக் கொன்றது – இவையெல்லாம் ஊடகங்கள் அண்மையில் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்த கொடூர நிகழ்வுகள் சிலவற்றின் பட்டியல்.
இத்தகைய குற்றங்கள் ஒருபுறமிருக்க, இன அடிப்படையிலான கேலி, வசை, வன்முறை ஆகியனவும் கிராமங்களிலும் வீதிகளிலும் பேருந்துகளிலும் ரயில் வண்டிகளிலும் பணியிடங்களிலும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. நாட்டின் வட பகுதிகளிலும் மேற்குப் பகுதிகளிலும் குறிப்பாக உத்தரப்பிரதேசத்தின் புறநகர் பகுதிகளிலும் கர்நாடகா, கேரளா மாநிலங்களின் சில குறிப்பிட்ட பகுதிகளிலும் நிலைமை விரைந்து மோசமடைந்து வருகிறது. அரசியல் லாபங்களுக்காகப் பற்றவைக்கப்பட்ட இன வெறுப்பு நம் நாட்டின் வலுவான சமூக பிணைப்பையும் நெடுங்காலமாய் நிலவிவந்த சமூக ஒழுங்கையும் மதிப்புமிக்க சகிப்புத் தன்மையையும் சகோதரத்துவத்தையும் எரித்து சாம்பலாக்கிக் கொண்டிருக்கிறது.
இதுநாள்வரை, இனக்கலவரங்கள் பெருநகரங்களில் நடைபெறும் நிகழ்வுகளாக இருந்தன. அவை அந் நகரங்களுக்குள்ளேயே நடைபெற்று அடங்கிவிடும். அல்லது புறநகர்ப் பகுதிளில் வெடித்து, சுற்றியுள்ள கிராமங்களில் பரவும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக, நம் நாட்டில் நடைபெற்றுள்ள இனக்கலவரங்களின் கொடூரம், குறிப்பாக மேற்கு உ.பி.யில் நடைபெற்ற நிகழ்வு, நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி திகிலில் ஆழ்த்தியுள்ளது. இனக்கலவரத்தின் சுவடே இன்றி, 1992இல் நடைபெற்ற கலவரங்களின் போதெல்லாம்கூட அமைதியுடன் இருந்த கிராமங்களிலும் இப்பொழுது கலவரத் தீயைத் தோற்றுவித்திருக்கிறார்கள். கடந்த 3 ஆண்டுகளில், மேற்கு உ.பி. கிராமங்களிலிருந்து மட்டும் இரண்டு டஜன் இனக் கலவரங்கள் நிகழ்ந்துள்ளன.
இனவாத அரசியலுக்கு தலித் சமூகம் எப்பொழுதுமே இரையாகி வருகிறது. இப்பொழுதோ, அவர்கள்மீது திகிலூட்டும் வன்முறைக் கொடுமைகள் தொடர்ச்சியாகக் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. குஜராத்திலும் நாட்டின் இதரப் பல பகுதிகளிலும் பசு பாதுகாப்பு என்ற போர்வையிலும் பொய்யான காரணங்கனை அடுக்கியும் அத்தகைய நிகழ்வுகள் அதிகரித்துள்ளன. தலித் சமூகப் பெண்களைக் குறிவைத்துத் தாக்குவதும் அவர்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக நடக்க விடும் அக்கிரமங்களும் நிகழ்கின்றன. கணநேரத்தில் சிறிய அளவில் நடந்த இனச் சச்சரவு போலன்றி, இத்தகைய நிகழ்வுகள் உள்ளபடியே சமூகத்தில் மிகப் பெரிய அளவிலான பிரிவை ஏற்படுத்துபவை என்பது இந்த இனக் கலவரங்களில் பொதிந்துள்ள பேரபாயம்.
கடந்த காலங்களிலும் நம் நாட்டில் கலவரங்கள் நிகழ்ந்துள்ளனதாம். ஆனால் கலவரம் அடங்கி அமைதி திரும்பியதும் மக்கள் ஒன்றிணைந்து இணக்கமாகி தம் வாழ்க்கையைத் தொடர்வார்கள். அந்தக் கலவரங்களின் காரணங்கள் தற்காலிகமானதாக இருக்கும். இறுதியில் அமைதி திரும்பியவுடன் மக்கள் அதை மறந்தும் விடுவார்கள். ஆனால் இன்றோ மக்களைப் பிரித்து அழிப்பதற்கு வலுவான, நிரந்தரமான பிரச்னைகள் புனையப்படும் அளவிற்கு நிலைமை மோசமாகியுள்ளது. இப்பொழுதைய பதட்டங்கள் தற்காலிகமானதாகவோ, எங்கோ நடக்கிற களேபரங்கள் நடக்கின்றன என்று உதாசீனப்படுத்தக் கூடியதாகவோ இருப்பதில்லை.
மாறாக, உலகளாவிய அரசியல், வரலாறு, கருத்தியல் தொடர்பான பிரச்னைகள் கிளறிவிடப்படுகின்றன. அவை வெகுதொலைவு பரவி, காலாகாலத்திற்கும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை. உலக அரசியல், வரலாறு, வரலாற்று அனுமானங்கள் தொடர்புடையதும் நிரந்தரமான தாக்கத்தை ஏற்படுத்தவல்லதுமான பிரச்னைகளின் அடிப்படையில் கருத்து வேறுபாடுகளும் மனத்தாங்கல்களும் சந்தேகங்களும் சமூகங்களுக்கு மத்தியில் பரப்பப்படுகின்றன. இத்தகைய மனத்தாங்கல்களும் கருத்து வேறுபாடுகளும் எளிதில் அழிக்க முடியாதவை. அவை சமூகங்களின் இடையே நிரந்தரமானப் பிளவைத் தோற்றுவிக்கும்.
கலவரங்கள் நடந்து முடிந்து பல மாதங்கள் ஆகியும் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய வீடுகளுக்குத் திரும்ப அனுமதி மறுக்கப்படுவது இத்தகு துல்லிய காரணங்களுக்காகத்தான். நகரங்களில், மதப் பாகுபாட்டின் அடிப்படையில் வாடகை வீடோ, குடியிருப்புப் பகுதிகளோ மக்களுக்கு மறுக்கப்படுகிறது. தெருவில் நிகழ்வுறும் யதார்த்தமான மோதல்களுக்கும்கூட மதச்சாயம் பூசப்பட்டு தீவிரவாத முத்திரை எளிதாகக் குத்தப்படுகின்றன. இன அடிப்படையிலான வழக்குகளை ஏற்று நடத்த வக்கீல்கள் முன் வருவதில்லை.
காவல்துறையிலும் சட்டத்துறையிலும் இருக்கும் சிலரோ இனவெறுப்புடன் தூற்றத் தொடங்கியுள்ளனர். சிறு கிராமங்களில் மதப் பூசலை ஆழமாக்கும் விதத்தில் பொருளதாரத் தடை பரப்பப்படுகிறது. சிறுபான்மையினரின் மொழிகளும் மதச் சின்னங்களும் வெறுப்புக்குரிய சின்னங்களாகக் குறி வைக்கப்படுகின்றன. அவை வெறுப்புக்குரியவை எனப் பழி சுமத்தப்பட்டு அதை மக்கள் முழுவதும் நம்புவதற்கு தீயப் பரப்புரை புரியும் இயந்திரமும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.
‘பெரும்பான்மையினர்’, ‘சிறுபான்மையினர்’என்று சமூகத்தை பிரிப்பதே இன வெறுப்பைப் பரப்பும் மக்களின் குறிக்கோள். சிறுபான்மையினர் தள்ளி வைக்கப்பட்டவர்கள், நாட்டிலுள்ள ஒவ்வொரு சச்சரவுக்கும் பிரச்னைக்கும் அவர்கள்தாம் காரணம் என்று பெரும்பான்மையினர் கருத ஆரம்பித்து, சிறுபான்மையினரை விட்டுத் தம்மைப் பிரித்துக் கொள்கிறார்கள். சிறுபான்மையினர் தொடர்புடைய அனைத்து விஷயங்களையும் பெரும்பான்மையினர் காமாலைக் கண்களுடனும் சந்தேகத்துடனும் பகைமையுடனும் வெறுப்புடனும் மட்டுமே அணுக ஆரம்பித்துவிட்டனர்.
‘நாம்’, ‘அவர்கள்’ என்ற பிரிவினை மக்களின் உள்ளத்தில் ஊன்றிப்போய், அந்த ‘மற்றவர்கள்’ எதிர்கொள்ளும் மிகக் கொடூரமான அக்கிரமம் சற்றுகூட அவர்களிடத்தில் சலனத்தை ஏற்படுத்துவதில்லை. அந்த ‘மற்றவர்களின்’ மிக நியாயமான கவலைகள் எவ்வித அனுதாபத்தையும் தோற்றுவிப்பதில்லை. அழுத்தமான, தர்க்க ரீதியிலான வாதங்கள் எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்காய் முடிகின்றன. இவை சமூகத்தை இட்டுச்செல்லும் நிலையைத்தான் சமூகவியலாளர்கள் ‘துருவங்களாக்கும் நிலைப்பாடு’ என்கிறார்கள்.
அதாவது, இரு குழுவினர் ஒன்றாகச் சேர்ந்திருந்தாலும் அவர்களுடையே மனப்பான்மையிலும் சித்தாந்தங்களிலும் ஆழமான பிரிவை உருவாக்கி, இரு துருவங்களாகப் பிரித்து, பொதுவான இணக்கம் என்பதே இல்லாமல் ஆக்கிவிடுவது. இதனால், ஒரு நிகழ்வு இரு பிரிவினராலும் தத்தம் முன்முடிவுக் கருத்துடன் அணுகப்பட்டு, ஒருவருக்கொருவர் மாற்றமான, எதிரெதிரான முடிவுக்கு வருகிறார்கள். தங்களுடைய நலனுக்கு எதிர் குழுவினர்தாம் முட்டுக்கட்டை போடுகிறார்கள் என்று நினைக்க ஆரம்பிக்கிறார்கள்.
எதிர் அணியின் ஒவ்வோர் எதிரியும் நம் நண்பன், அவர்களின் ஒவ்வொரு நண்பனும் நம் எதிரி என்று இருதரப்பும் கருதுகிறது. அப்படியான நிலை உருவாகும்போது, இருதரப்புக்கும் இடையிலான பரஸ்பர தகவல் தொடர்பு மரித்துப் போவது மட்டுமில்லாமல் அது மீண்டும் உயிர் பெறுவதற்கான வாய்ப்பே இல்லாமல் ஆகிவிடுகிறது. பொதுவான நடுநிலைப்பாடு என்பதே இல்லாமற்போய், நிலைமை வெடித்துச் சிதறும் தீவிர நிலையை அடைந்துவிடுகிறது.
நிச்சயமாக நம் நாட்டில் இன்னும் அந்த அளவிற்கு நிலைமை மோசமில்லை. இன்றும் இந்துக்களும் முஸ்லிம்களும் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இணக்கமுடன் இணைந்து வாழ்கின்றனர். மத நல்லினக்கத்தை நம்புவதோடு மட்டுமின்றி அதைக் கட்டிக்காத்து நிர்வகிப்பதற்கு அயராது செயல்படும் பெரும்பான்மையான மக்களால் சமூகம் நிரம்பியிருக்கிறது. ஆயினும், நாட்டின் பெரும் பகுதிகளில் சமூகப் பிளவு ஆழமாகிவரும் நிலையில், இந்த இனிய சூழ்நிலை விரைந்து தேய்ந்துவருவதை மறுக்க முடியாது. வெடித்துச் சிதறும் தீவிர நிலை என்று மேலே குறிப்பிடப்பட்டுள்ள சூழ்நிலைக்கு நாம் வெகுசீராக நகர்ந்து கொண்டிருக்கிறோம்.
இது மிகமிக இக்கட்டான நிலைமை. நம் நாட்டின் விஞ்ஞானிகள், ‘மோசமான வகையில் துருவங்களாகப் பிரிக்கப்பட்டுள்ள சமூகம் வெடிக்கத் தயாராக உள்ள அணுகுண்டுக்கு ஒப்பானதாகும்’, என்று குடியரசுத் தலைவருக்கு எழுதினார்கள். எனவே, இந்த இருண்ட நிலையைப் பற்றிய உடனடியான விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் விரிவடைந்துவரும் இந்தச் சமூகப் பிரிவைச் சீர்செய்வதும் தகுந்த நடவடிக்கைகளின் மூலம் பரஸ்பரம் நம்பிக்கையான சூழ்நிலையை உருவாக்குவதும் தலையாயச் செயல்.
காரணிகள்:
நம் நாட்டிலுள்ள இந்த இன வெறுப்பிற்கான மூலக் கிருமி, பிரிட்டிஷாரின் பிரித்தாளும் கொள்கையினால் உருவாகி, பரவியது என்பது ஏறக்குறைய கருத்தொருமித்த உண்மையாக இருக்கிறது. பிரிட்டிஷார் இந்தியாவில் கால்பதிப்பதற்குமுன், வகுப்புவாத சச்சரவுகள் சிறுசிறு அளவில் இருந்திருக்கின்றன; ஆயினும் இன அடிப்படையிலான சமூகப் பிளவு என்பது நாம் கேள்விப்படாத ஒன்று. இந்தியாவை ஆள்வதற்கு இத்தகு மதப் பிரிவினை இன்றியமையாதது என்று பிரிட்டிஷார் கருதினர் என்பதிருக்கட்டும்.
சுதந்தரத்திற்குப்பின், நம்முடைய தலைவர்கள் இந்த அருவருப்பான கொள்கையைத் தொடர்வது மிகவும் வருந்தத்தக்கது. பிரிட்டிஷாரைப் போலவே, நம்முடைய இனவாரி வகுப்பினர் தாங்கள் அரசியல் செல்வாக்கை ஈட்டி அதை நிலைநிறுத்திக் கொள்ள சமூகப் பிளவை எளிமையான வழியாகக் கருதியுள்ளனர்.
மதவாதச் சக்திகளால் குறிப்பாக உற்பத்தி செய்யப்பட்டு தீவிரமாகப் பரப்படும் குறிப்பிட்ட வகையிலான கோஷங்களும் கருத்துகளுமே இந்தப் பிரிவிற்கான அடிப்படைக் காரணங்கள். ‘பண்டைய காலத்தில் இந்தியா ஒரு வளமான நாடாக இருந்தது, முஸ்லிம் ஆட்சியாளர்கள் இருண்ட காலத்திற்கு அதைத் தள்ளிவிட்டனர்’, ‘அவர்கள் தங்களுடைய குடிமக்களை அடக்குமுறைக்கு உள்ளாக்கினர்’, ‘அவர்கள் மக்களை வலுக்கட்டாயமாக மதமாற்றத்திற்கு உள்ளாக்கி, கோவில்களை அழித்தனர்’, ‘இந்நாட்டுப் பிரிவினைக்கு முஸ்லிம்களே பொறுப்பு’, ‘இஸ்லாம் தம் மக்களிடம் முஸ்லிமல்லாதவர்களை வெறுக்கச் சொல்கிறது, குர்ஆன் வன்முறையையும் இரத்த வெறியையும் போதிக்கிறது’.
‘மதரஸாக்கள் வெறுப்பை போதிக்கின்றன’, ‘முஸ்லிம்களின் மக்கள் தொகை சரமாரியாக உயர்கிறது’, ‘கிறித்தவப் பரப்புரையாளர்கள் மக்களை கட்டாயமாக மதம் மாற்றுகின்றனர்’, ‘சிறுபான்மையினருக்கு இந் நாட்டின் மீது பற்றில்லை’, என்பன போன்ற கருத்தாக்கங்கள் திட்டவட்டமான பொய் என்பதை ஆரோக்கியமான விவாதங்கள் சந்தேகமின்றி நிரூபித்துள்ளன.
ஆயினும் அவற்றையெல்லாம் புறந்தள்ளி, இந்தக் கருத்துகள் குறையாத வேகத்துடன் சாத்தியமான அனைத்து வழிவகைகளிலும் பரப்பப்படுகின்றன. பெரும்பான்மைச் சமூகத்தினரின் மனங்கள் இத்தகைய கருத்தாக்கங்களால் ஊடுருவப்பட்டு அதன் அடிப்படையில் அவர்களின் எண்ணங்கள் வடிவமைப்புக்கு உள்ளாகின்றன என்பது தெளிவாகப் புலனாகிறது. இதைப் போன்ற விஷக் கருத்துகள் சிறுபான்மையினச் சமூகத் தலைவர்களாலும் பரப்பப்படுகின்றன.
விடாமல் தொடரும் இத்தகைய வெறுப்புப் பரப்புரைக்கு கல்வி அமைப்பும் அதன் பாடத் திட்டமும் பயனுள்ள சாதனமாகத் திகழ்கின்றன. அதன் மூலம் பிஞ்சு மனங்கள் மூளைச்சலவை செய்யப்பட்டு, அந்த விஷக் கருத்துகளின் அடிப்படையில் அவர்களுடைய மனோபாவம் உருப்பெறுகிறது. இத்தகைய கல்வி அமைப்பில் பயின்ற இந்நாட்டின் இளைய சமுதாயமும் ஆழமாக விதைக்கப்பட்ட காழ்ப்புணர்வு, வெறுப்பு, பரஸ்பர சந்தேகம் ஆகியவற்றுடன் வெளிவந்து அது மூன்று நான்கு குழுவாகப் பிரிந்து நிற்கும் போது, இறுதியில் சமூகம் எத்தகு நிலைக்கு உள்ளாகும் என்பதை யூகிப்பது கடினமே அன்று. நாடளாவிய வகையில் பற்பல கல்வி நிறுவனங்கள் இத்தகைய கல்வியையும் வேண்டுமென்றே மாற்றியைமக்கப்பட்ட பாடத்திட்டத்தையும் புகட்டுகின்றன என்பதைக் காணும்போது மிக அதிகமான கலக்கம் ஏற்படுகிறது.
இந்தக் கருத்துகளின் அடிப்படையில், அடிப்படையற்ற கோஷங்களான, ‘வெடிக்கும் முஸ்லிம் மக்கள் தொகை’, ‘லவ் ஜிஹாத்’, ‘முஸ்லிம்களற்ற இந்தியா’, ‘மதமாற்ற அச்சுறுத்தல்’, ‘(கைரானாவிலிருந்து) ஹிந்துக்களின் வெளியேற்றம்’ ஆகியன அவ்வப்போது எழுப்பப்படுகின்றன. இந்தக் கருத்துகளையும் கோஷங்களையும் மக்களின் மனத்தில் விதைப்பதற்காகவே வெறுப்பை உமிழும் பேச்சுகள் பரப்பப்படுகின்றன. அனல் கக்கும் அத்தகைய பேச்சுகள், நடுநிலை வகுப்பினரிடமும் இளைஞர்களிடமும் உணர்வைத் தூண்டிக் கிளறிவிடும் அபார ஆற்றல் மிக்கவை.
இவற்றுள் சிறப்பான வகையில் கலந்திருக்கும் மதவாத, இனவாதச் செருக்கு இந்தத் தீயை விரைவாகப் பரப்பி விடுகிறது. கடந்தகால மதக் கலவரங்களை ஆராய்ந்தால் இனவாத உணர்வைத் தூண்டுவதில் அனல் கக்கும் பேச்சுகளின் பங்கு முதன்மையானதாகவும் ஆணிவேராகவும் இருந்துள்ளது என்பதை அது திட்டவட்டமாய் நிரூபிக்கின்றது. கலவர நிகழ்வுகளை ஆராய அமைக்கப்பட்ட பல விசாரணைக் கமிஷன்கள் இந்த உண்மையை உறுதி செய்கின்றன.
கடந்த சில ஆண்டுகளில், உணர்வுகளைத் தூண்டும் விஷம் கக்கும் பேச்சுகள் வெள்ளமாய்ப் பெருக்கெடுத்துள்ளன. அவை நம் நாடு முழுவதையும் சூழ்ந்துள்ள மிகப்பெரும் அச்சுறுத்தல். கொலையும் இரத்த வெறியும் வெகு சாதாரணமாய் ஆமோதிக்கப்படுகின்றன; கொடுஞ் செயல்களுக்குப் பரிசுகள் அறிவிக்கப்படுகின்றன; ‘உங்களுக்குப் பாடம் கற்பிக்கப்படும்’ என்று மக்கள் அச்சுறுத்தப்படுகின்றனர்; ‘பாலியில் கொடுமைக்கு உள்ளாவீர்கள்’ என்று குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் மிரட்டப்படுகிறார்கள்; உச்சப்பட்சக் கொடூரமாக பிணங்கள் மானபங்கப்படுத்தப் படுகின்றன. இதில் திகைக்க விஷயம் என்னவென்றால், நாட்டின் முழு சட்ட அமைப்பும் இத்தகைய அச்சுறுத்தலை சற்றும் கொண்டுகொள்ளாமல் மந்தமாய்ப் பார்த்துக் கொண்டிருக்கிறதே அதுதான்.
நச்சுக் கருத்துகளின் பரப்புரைக்கு இரண்டாவதாக அமைந்துள்ள சாதனம் ஊடகம். கலவரங்களை விசாரிக்கும் கமிஷன்கள், ஒவ்வொரு நிகழ்விலும், மதவாத வெறுப்புத் தீயை ஊதிப் பெரிதாக்குவதில் ஊடகங்களின் ஒரு பகுதியினரின் பங்கு இருப்பதைச் சுட்டிக் காட்டுகின்றன. பொருத்தமற்ற நேரத்தில் மதப் பிரச்னைக்கு ஏதுவான விஷயங்களை எழுப்புவது, ஒன்றுமில்லாத விஷயங்களைப் பிரச்னையாக்குவது, பல்வேறு சமூகத்தினரிடையே, மதத்தினரிடையே மனவேறுபாட்டைப் பரப்புவது, பொய்ச் செய்திகளையும் வதந்திகளையும் பதிப்பது, பரப்புவது, ஒளிபரப்புவது, சிறு விஷயங்களையும் பரபரப்பாக்கி அதன் விகிதத்திற்கு அதிகமாய் ஊதிப் பெரிதாக்குவது – இவையும் இவற்றுக்கு மேலும் அச்சு, மின்னணு ஊடகங்களால் நிறைவேற்றப்படுகின்றன.
கொலையாளியும் பாதகனும் சிறுபான்மை அல்லது அடித்தட்டு இனத்தைச் சேர்ந்தவனாக இருந்தால் மட்டும் அவனது பெயர் வெளியிடப்படுகிறது. ஒவ்வொரு தீவிரவாதத் தாக்குதலும் அவசர அவசரமா ஒரு குறிப்பிட்ட மதம், அந்த மத அமைப்புகளுடன் முடிச்சிடப்படுகின்றன. ஊடக நெறி என்பெதல்லாம் சர்வசாதாரணமாக மீறப்பட்டு காற்றில் பறக்க, எவரும் அதைப் பற்றி மூச்சு விடுவதில்லை!
இப்போதெல்லாம் குறிப்பிட்ட மின்னணு ஊடகங்கள் திராவகமும் விஷமும் கக்கும் சொற்பொழிவார்களை விஞ்சுவதற்குப் போட்டியிடுவதைப் போல் தோன்றுகிறது. அதன் தொகுப்பாளர்கள் கோபமும் சீற்றமும் கொண்டவர்களைப்போல், நுரைதள்ளாத குறையாகக் கத்தி, சண்டையிட்டு, நிகழ்ச்சியில் பங்குபெறுபவர்களின் விவாதத்தை ஏதோ வாள் சண்டைப் போட்டியைப் போல் நடத்துகின்றனர். முக்கிய நேரச்செய்தி விவாதங்களையும் கலந்துரையாடல்களையும் இத்தகு சண்டைத் தன்மையுடன் நடத்துவது நவீன வகையிலான நிகழ்ச்சித் தொகுப்பு என்று அங்கீகரிக்கப்பட்டுவிட்டது. அத்தகைய விவாதங்களில் அர்த்தமுள்ள, சாரமுள்ள கலந்துரையாடல்கள் என்று எதுவுமே இல்லை என்பது வெள்ளிடை.
ஊடகங்கள் தங்களது TRP யை அதிகப்படுத்த நிகழ்த்தும் அந்தக் குழாயடிச் சண்டை, நாட்டுக்குத் தேடித் தருவது அவமானம் மட்டுமே. அத்தகு தொலைக்காட்சி விவாதங்கள் உருவாக்கும் வெறுப்பும் பகைமையும் நிச்சயமான இனப்பிரிவினை நிகழ்ச்சிகளே; வெகு நிச்சயமாக சமூகத்தை இன அடிப்படையில் துண்டாடும் நோக்கம் கொண்டவை. மட்டுமல்லாது அவை தொலைக்காட்சி ஸ்டூடியோக்களுடன் மட்டுப்பட்டு விடுவதில்லை. ஆனால் நாடு முழுவதும் சமூக இணையப் பொதுவெளிகள், இணையப் பின்னூட்டங்கள், அலுவலகங்கள், தொழில் கூடங்கள், கல்லூரி உணவகங்கள், ரயில்கள், பேருந்துகள், இன்னும் சொல்லப் போனால் சிறார் பள்ளிகள் என அனைத்து இடங்களிலும் அதே அனலுடனும் அருவருக்கும் அணுகுமுறையுடனும் பரவுகின்றன.
நாடு முழுவதையும் மல்யுத்த மேடையாக மாற்றும் சக்தியை அவை பெற்றுள்ளன. ஊடகங்கள் என்ற பெயரில் நடக்கும் அத்தகு மல்யுத்தப் போட்டிகளுக்கு நாகரிக வளர்ச்சியடைந்த மக்களாட்சி நாட்டில் இடமிருக்கக்கூடாது. ஆனால், TRP என்ற கவர்ச்சியில் ஏமாந்து சில்லறை ஆதாயங்களுக்காக நெருப்புடன் விளையாடுவதற்கு மக்கள் தயாராக இருப்பது நிச்சயமாக வருத்தற்குரியது, பரிதாபகரமானது. பொறுப்பின்றி, அழிவை நோக்கிச் செல்லும் இவற்றைக் கண்டு நமது சட்டத்துறையும் கையாலாகாத் தனத்துடன் நிற்கிறது.
இன விரோத நெருப்பைத் தூண்டுவதிலும் மனங்களை மூளைச்சலவை செய்வதிலும் சமூக ஊடகமும் பெரும் பங்கு வகித்துள்ளது. மேற்கு உ.பி.யின் மதக் கலவரத்தை மோசமாக்குவதில் சமூக ஊடகத் தளங்களான வாட்ஸ்அப் போன்றவை தீய பங்கு வகித்துள்ளதை சமூக ஆய்வாளர்கள் கவனித்துள்ளார்கள். மக்களுக்கு இடையேயான (குறிப்பாக இளைய சமதாயம்) நேர்முகத் தொடர்பை சமூக ஊடகம் கடுமையாகக் குறைத்துவிட்டது. அவர்கள் தங்களுடைய பெரும்பாலான நேரத்தை அலைபேசிகளில்தாம் செலவழிக்கிறார்கள்.
கிராமங்களில், கல்வியறிவு குறைவாக உள்ள நிலையில், கணினி, இணையத் தொடர்புடன் அமைந்த சமூக ஊடகத் தளங்களை விட, வாட்ஸ்அப் போன்ற தளங்கள் உடனடி வரவேற்பைப் பெறுகின்றன.
ஒத்த கருத்தியல் கொண்ட மக்கள் மூடிய குழுமங்கள் எனப்படும் சமூக ஊடகப் பகுதிகளை தத்தமக்கு உருவாக்க வாட்ஸ்அப் போன்ற தளங்களில் சுலபமாகி, மற்றவர்களின் கோணத்தைப் பற்றிய கவலையின்றி, அவர்கள் தங்களுக்குள் தங்களது சித்தாங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள். பொய்யான, புனையப்பட்ட செய்திகள் மட்டுமின்றி, தகிடுதத்தம் செய்யப்பட்ட நிழற்படங்கள், வீடியோக்கள் தடையின்றி பகிரப்பட்டு இறுதியில் வதந்திகள் காட்டுத் தீயாய்ப் பரவுகின்றன. மற்றக் குழுவினருடன் நேரடி தகவல் பரிமாற்றம் குறைந்துவிட்ட காரணத்தால் கருத்து வேறுபாடுகளைக் களைந்து கொள்ளவும் வாய்ப்பின்றி போய்விடுகிறது.
இன்றைய நாள்களில், இணைய வெளிகளிலும் சமூக ஊடகத் தளங்களிலும் கட்டுரைகளிலும் நாளிதழ்களிலும் செய்தித் தளங்களிலும் பிளாக்குளிலும் பெருகி வரும் பகைமையும் காணப்படும் கொச்சைத் தன்மையும் மெய்யான நாட்டுப் பற்றுடைய ஒவ்வொருவரின் நிம்மதியையும் இழக்கச் செய்கின்றன. வடிகட்டிய பொய்கள் எவ்வித வெட்கமும் இன்றி பரப்பப்படுகின்றன. “ஃபோட்டோஷாப்” மூலம் தகிடுதத்தம் செய்யப்பட்ட படங்களும் திருட்டுத்தனம் செய்யப்பட்ட வீடியோக்களும் குறிப்பிட்ட சமூகத்தினர் கொடுங்கோலர்கள், காட்டுமிராண்டிகள், இரத்தவெறி பிடித்தவர்கள் என்பதைப் போல் சித்திரிக்கின்றன.
அடியோடு வெறுக்கத்தக்க பொய் குற்றச்சாட்டுகள் இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்களின் மீதும் சுமத்தப்பட்டு அவை மீண்டும் மீண்டும் பரப்பப்படுகின்றன. அவை எந்த அளவு வீரியத்துடனும் வேகத்துடனும் பரப்பப்படுகின்றன என்றால் அவற்றை நடுநிலைச் சிந்தனையுள்ள பொது மனிதன் நம்பி விடுகின்றான். நம் நாட்டில் தகவல் தொழில்நுட்பச் சட்டம் நடைமுறையில் இருந்தாலும் இந்த பிரித்தாளும் அழிவுச் சக்திகளின் முன் அது செயலற்று நிற்கின்றது.
இரு தரப்பு மத உணர்வுகளும் ஒன்றுக்கொன்று தீனி அளித்துக் கொள்கின்றன. ஒரு தரப்பினரின் மிகைவாதக் கருத்துகளும் கோஷங்களும் மறு தரப்பைத் தூண்டி அவர்களின் மிகைவாதக் கருத்துகளுக்கும் கோஷங்களுக்கும் தூபமிடுகின்றன. குற்றச்சாட்டுகள் தீவிரமான எதிர்க் குற்றச்சாட்டுகளாலும் விஷம் தோய்ந்த பேச்சுகள் அதே போன்ற பேச்சுகளாலும் எதிர்வினை ஆற்றப்படுகின்றன. இவ்வாறான வினைகளும் எதிர்வினைகளும் சூழ்நிலையை வெடித்துச் சிதறும் அளவிற்குத் தள்ளிச் சென்று, இரு தரப்பும் ஒவ்வொரு விஷயத்தையும் மதச்சாயம் பூசப்பட்ட கண்ணாடி கொண்டு தவறான எண்ணத்துடனேயே அணுகுகின்றனர். அதன் விளைவாக உணர்ச்சிப்பூர்வமாகவும் உளவியல் ரீதியாகவும் எந்தளவு தொடர்பை அறுத்துக் கொள்கின்றனர் என்றால் பரஸ்பர தகவல் பரிமாற்றத்திற்கு எவ்வகையான வழிவகையுமே இல்லை என்றாகி விடுகிறது.
இந்த அளவிற்கு மோசமாகும் இனப்பதற்றம் தகவல் தொடர்பு இடைவெளிகளால் மேலும் எண்ணெய் ஊற்றி வளர்க்கப்படுகிறது. பிரிந்து கிடப்பவர்களுக்கு இடையே தனிப்பட்ட தனிப்பட்ட தகவல் பரிமாற்றம் அரிதாகி விடுகிறது (அல்லது அப்படி நிலை உருவாக்கப்படுகிறது). பரஸ்பரம் பிரச்சினைகளை அறிய, உலக ஆதாயத்தைச் சார்ந்த மூன்றாம் தரப்பினரின் தகவல்களை நம்ப வேண்டிய நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டு விடுகிறார்கள். அந்த மூன்றாம் தரப்போ தன்னுடைய ஆதாயத்திற்காக விஷயங்களை திரித்தும் புரட்டியும் கூறுகிறது.
மதப் பிரிவினையும் மிகைவாதமும் உருவாக்கியுள்ள அழிவுக்குரிய பின்விளைவுகள்
சமூகம் பிளவுபட்டால், அதனால் ஏற்படும் இழப்புகள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரிடம் மட்டும் பரவாது. மாறாக, ஒட்டுமொத்தச் சமூகமும் அதன் சுமையைத் தாங்க வேண்டியிருக்கும். மதக்கலவரங்களின் பெரும்பாலான சுமையை சாதாரண ஏழை மனிதன்தான் அதிகம் சுமக்கிறான் என்று சொல்லப்படுகிறது. மிகைவாதங்களினாலும் கலவரங்களினாலும் பாதிக்கப்படுவதெல்லாம் எப்பொழுதுமே சாதாரண ஏழை மனிதர்கள்தாம்; அழிவதெல்லாம் அவர்களுடைய குடியிருப்புகள்தாம். ஒரு மதக்கலவரம் ஏழைகளின் பலநாள் வருமான வாய்ப்பைப் பறித்து, அவர்களைப் பசி, பட்டினிக்குத் தள்ளி விடுகிறது.
சிறுபான்மையினரும் ஒடுக்கப்பட்ட மக்களும்தாம் மதக் கலவரத்தின் தாக்குதலுக்கு பெருமளவு ஆட்படுகிறார்கள் என்று மீண்டும் மீண்டும் தெரிவிக்கப்படுகிறது. இந்த மக்கள் தரப்பினர்தாம் உயிருக்கும் உடைமைக்குமான இழப்பிற்கு பெருமளவு ஆளாகிறார்கள் என்றும் அவர்கள்தாம் காவல்துறையினரால் குறிவைக்கப்பட்டும் பெருவாரியான கைதுகளுக்கும் உட்படுகிறார்கள் என்றும் புள்ளிவிவரங்களின் அடிப்படையிலான தகவல்கள் தெரிவிக்கின்றன. இது அவர்கள் மத்தியில் பாதுகாப்பற்ற உணர்வைத் தொடர்ந்து ஏற்படுத்தி, நம் நாட்டுச் சட்ட அமைப்பின் மீது நம்பிக்கையின்மையை உருவாக்கி, அவர்கள் தங்கள் கல்வி மேம்பாட்டையோ பொருளாதார மேம்பாட்டையோ தொடர இயலாமல் ஊக்கம் குன்றச் செய்து விடுகிறது.
இவ்விரு வாதங்களும் வெகு நிச்சயமாக உண்மையே; ஆனால் இவை மத மிகைவாதங்கள் உடனடியாக ஏற்படுத்தும் தற்காலிகமான பாதகம் மட்டுமே. மதப் பிரிவினையின் விளைவாய் நீண்ட நெடிய அழிவும் பாதிப்பும் உள்ளன. அவற்றிலிருந்து எந்தச் சமூகத்திற்கும் விலக்கில்லை. அந்த பாதிப்பானது இறுதியில் நாடு முழுவதையும் பலவீனப்படுத்தியே தீரும்.
ஒரு நாட்டின் 400-500 மில்லியன் மக்கள் தொகையினர் பாதுகாப்பின்மையினாலும் கடுமையான மன உளைச்சலினாலும் தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளாகி வாழ நேர்ந்தால் அந்த நாடு முன்னேற்றமடையாது. எந்த நாடாக இருந்தாலும் சரி, சமூகமாக இருந்தாலும் சரி, அவர்கள் பொருளாதாரத்தில், கல்வியில், பண்பாட்டில், தொழில்துறையில் விரைவான முன்னேற்றமடைவதற்கு அவர்களது சமூகத்தின் மத்தியில் இணக்கமான சூழ்நிலை, அமைதி, பாதுகாப்பு, பரஸ்பர நன்னம்பிக்கை, சகோதரத்துவம் ஆகியன இருந்தால் மட்டுமே சாத்தியம் என்பதை அவர்களது சமூக பகுப்பாய்வு சுட்டிக் காட்டுவதை வரலாறு நெடுகக் காணலாம்.
அந்த மக்கள் சட்டத்தை மதிப்பவர்களாய், பரந்த மனத்தினராய், தம் நாட்டினருக்கு மட்டுமன்றி அந்நியருக்கும் விருந்தோம்பல் புரியும் குணமுடையவர்களாய் இருப்பர். இப்படியான சூழ்நிலை ஒரு சமூகத்தில் எப்பொழுது தேய்கிறதோ அப்பொழுதே அதன் முன்னேற்றமும் நின்றுவிடும். ஆகவே, இந்தியா போன்ற ஒரு நாட்டிற்கு மதப் பிரிவினை, பகைமை என்பதைவிட மிகப் பெரிய எதிரி இருக்க முடியாது, ஆனால் நீண்ட நெடிய பாதையும் செழிப்புக்கும் தொடர்ச்சியான முன்னேற்றத்துக்கும் முனைந்து நடைபோட வேண்டிய சூழ்நிலையும் அதன் முன் காத்து நிற்கின்றன.
அப்படியான ஒரு பிரிவினை ஏற்படுமேயானால், நாட்டின் முன்னேற்றத்தையும் வளர்ச்சியையும் நினைத்து அனைவரும் காணும் கனவை மெய்ப்படுத்த குடிமக்களின் கூட்டு முயற்சியும் ஆற்றலும் ஒருமுகப்படுத்தப் படாமல் போய்விடும். மாறாக உள்ளுக்குள் ஒருவரை ஒருவர் வீழ்த்துவதும் எதிர்தரப்புச் சமூகத்தினரை விஞ்சும் மேலாண்மையை நிலைநிறுத்த முனைவதும் மட்டுமே அவர்களது ஒரே கனவாக மாறி அதற்காகவே அவை பயன்படுத்தப்படும். பரஸ்பர குறைகளையும் குற்றச்சாட்டுகளையும் எதிர் குற்றச்சாட்டுகளையும் சுற்றியே அவர்களது விவாதமெல்லாம் அமைந்துவிடும். அவர்களது ஆற்றலும் முயற்சியும் அழிவுக்கான இந்த இலக்கை நோக்கியே செலவிடப்படும்.
எத்தகைய பாகுபாடும் ஓரவஞ்சனையும் இன்றி சட்டத்தை நடைமுறைப்படுத்தும்வரை மட்டுமே சட்டத்தின் நோக்கம் வலுவானதாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும். மதவெறி தலைக்கேறும் போது மக்கள் சட்டத்தைத் தங்கள் கையில் எடுத்துக் கொள்கிறார்கள்; வக்கிரமான கூட்டு மனப்பாங்கின் அடிப்படையில் அவர்களுக்கு அதற்கான சமூக அங்கீகாரமும் கிடைத்துவிடுகிறது. அப்பொழுது மக்களின் மீதான அந்நாட்டுச் சட்டத்தின் பிடி தளர்ந்து விடுகிறது.
அரசியல், மதத் தலைவர்கள் நாட்டின் சட்டத்தை ஏளனப்படுத்தும்போது குற்றவாளிகள் ஊக்கமடைந்து துணிவுடன் செயல்படுகிறார்கள்; ஆனால் காவல் துறையோ அவர்களை விட்டுவிடுகிறது. கொள்ளைக்காரர்களும் திருடர்களும் இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அதன் விளைவாக, சட்டம் செயலற்றுப்போய் சட்டத்தின் நோக்கம் பலவீனமாகிவிடுகிறது. அவரவரும் சட்டத்தைத் தம் கையிலெடுத்து தம் விருப்பப்படி அதை வளைக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. சட்ட ஒழுங்கு சீரழிந்த இத்தகு சமூகம் வளம் பெறவே முடியாது.
பிரிந்து பலவீனப்பட்டுக் கிடக்கும் சமூகம் நாட்டின் எதிரிகளுக்கு எளிதில் இரையாகிவிடுகிறது. அவர்கள் நாட்டுக்கு எதிராகத் திட்டமிட்டு மக்களின் மத உணர்வுகளைப் பயன்படுத்திக்கொள்ள ஆரம்பிக்கிறார்கள். உயர்ந்துவரும் சட்ட ஒழுங்குச் சீர்கேடு அவர்களுக்கு வரமாக மாறி அதை அவர்கள் தவறாகப் பயன்படுத்தி நாட்டில் குழப்பத்தையும் கலவரத்தையும் பரப்புகிறார்கள்.
அமைதியின்றி பிளவுண்டுக் கிடக்கும் சமூகத்தைப் பொருளாதார முன்னேற்றத்திற்கு உகந்ததாகக் கருதவே முடியாது. இந்த நோய் பரந்து விரிந்து பரவுமேயானால், அந்நிய நாட்டு முதலீடுகள் தடைப்படுவதோடு மட்டுமின்றி நம் நாட்டு முதலீட்டாளர்களேகூட அந்நிய நாடுகளில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பைத் தேடும் நிலை ஏற்பட்டுவிடும். எந்த விதமான பொருளாதார செயல்பாடுகளும் இலாபத்தைக் கொடுக்காது; தொழிலும் தொழிற்சாலைகளும் இழப்பால் வாடும். அந்த இழப்பு பொருளாதார மந்தநிலை, வறுமை, வேலையின்மை ஆகியனவற்றை நோக்கிச் செலுத்திவிடும்.
மதச் சண்டையும் பரஸ்பர பகைமையும் உலகின் பல பகுதிகளை நரகமாகவும் பொங்கி எழும் தீக் கனலாகவும் மாற்றியுள்ளன. அந்நாடுகளின் நிலையைப் பற்றிய மேம்போக்கான பகுப்பாய்வேகூட ஒருவரை மெய்சிலிர்க்க வைத்துவிடும். கட்டுக்கடங்கா சமூகப் பிரிவினையும் பகைமையும் அந்தச் சமூகங்களை, குடிமக்களுக்கு இடையிலான பேதத்தை நோக்கி நெருக்கித் தள்ளி உள்நாட்டுப் போருக்கான சூழ்நிலைகளை உருவாக்கிவிட்டன. இந்த நெருப்பு கட்டுப்படுத்த இயலாத அளவை எட்டிவிட்டது. அதன் அழிவுகளுக்கு எதிராய் பெரிய நாடுகளே நிர்க்கதியுற்றுவிட்டன.
உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பற்ற நிலையில் ஒவ்வொரு குடிமகனும் நிரந்தரமான மரண நிழலில் வாழ்ந்து வருகிறான். அந்த நாடுகளைச் சேர்ந்த மக்கள் உலகிலுள்ள நாடுகளுக்கு அச்சுறுத்தலாய்த் தென்படுகின்றனர்; அவர்கள் சந்தேகக் கண்ணோட்டத்துடன் பார்க்கப்படுகின்றனர்; எங்குமே அவர்களுக்கு அடைக்கலம் மறுக்கப்படுகிறது. முன்னேறிய நாடுகள் இத்தகு நாடுகளில் முதலீடு செய்ய யோசிப்பது ஒருபுறம் இருக்க, தம் நாட்டு மக்கள் இத்தகு நாடுகளுக்குப் பயணம் புரிவதற்கே முன்னெச்சரிக்கை அறிவுரைகள் வழங்கி தடுத்து வருகிறது.
இத்தகைய உதாரணங்களை இன்று நாம் நம்மைச் சுற்றி நிறைய காணமுடியும். பன்முகப் பண்பாடு கொண்ட இந்தியா போன்ற பரந்து விரிந்த நாட்டில் மதக்கலவரத் தீ தன் பாதையில் உள்ள அனைவரையும் சுற்றிச் சூழ்ந்து அழித்துவிடும். பெரும்பான்மையினர், சிறுபான்மையினர் என்ற பாகுபாடின்றி அனைவரின் கனவுகளையும் அது அழித்துவிடும். பின்விளைவுகளை உணர்ந்த நிலையில் இத்தகைய அவலத்தை நோக்கி நாட்டைச் செலுத்துவதில் பிடிவாதமுடன் இருப்பவர்கள் சமூகத்திற்கான எதிரிகள் மட்டுமல்லர். அவர்கள் நாட்டின் பகைவர்கள்.
இவையெல்லாம் எளிதில் தெளிவாய் உணரக்கூடிய பின்விளைவுகள். இந்தியா மதநம்பிக்கை சார்ந்த நாடு. அனைத்து அண்டங்களையும் உருவாக்கிய இறைவனின் மீது நம்பிக்கை உள்ளோர், அவன் அட்டூழியத்தையும் கலவரங்களையும் அநீதியையும் அங்கீகரிப்பதில்லை என்பதையும் அதற்கான தண்டனை இவ்வுலகிலும் அளிக்கப்படும் என்பதையும் நம்புகிறார்கள். தனிநபர்களும் சமூகமும் தண்டக்கப்படும். எந்த சமூகத்திலும் ஓர் அட்டூழியம் நிகழ்த்தப்பட்டால், அது தனது பாக்கியத்தை இழக்கிறது; பேரிடர் அதன்மீது வந்து விடிகிறது; குற்றம் புரிபவர்களை இறைவன் இவ்வுலகிலும் தண்டிக்கிறான்.
குர்ஆன் கூறுகிறது, “இறுதியில், ஒவ்வொருவரையும் அவரவருடைய பாவத்தின் காரணமாக நாம் பிடித்தோம். பிறகு, அவர்களில் சிலர் மீது கல்மாரி பொழியும் காற்றை அனுப்பினோம். வேறு சிலரை ஒரே ஓர் உரத்த முழக்கம் பிடித்துக் கொண்டது; மற்றும் சிலரை நாம் பூமியில் புதைத்து விட்டோம். அவர்களில் மேலும் சிலரை மூழ்கடித்து விட்டோம். அல்லாஹ் அவர்கள் மீது கொடுமை புரிபவனாக இருக்கவில்லை. ஆனால், அவர்கள் தங்கள் மீது கொடுமை இழைத்துக் கொண்டிருந்தார்கள்.” (குர்ஆன் 29:40)
முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “அடக்குமுறைக்கு உள்ளானவனின் சாபத்தைக் கண்டு அஞ்சுங்கள், நிச்சயமாக அவனுக்கும் இறைவனுக்கும் இடையில் திரையில்லை.”
மற்ற மதங்களிலும் இத்தகைய எச்சரிக்கைகள் நிறைந்துள்ளன. அட்டூழியம், அநீதி, ஊழல் ஆகியன ஒரு சமூகம் முன்னேறுவதை அனுமதிப்பதில்லை; மாறாக அவை அச்சமூகத்தைப் பேரழிவுக்கே இட்டுச் செல்லும்.
இனவாத நிலையை மேம்படுத்துவது எப்படி?
இந் நிலையை சீர்செய்வதற்கான முதல் படி, குடிமக்களாகிய நாம் நம் கால்களின் கீழே எரிமலையின் குழம்பு கொதிக்கிறது என்ற உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும். நிலைமையின் தீவிரத்தை உணர வேண்டும். சூழ்நிலை அனைத்தும் சகிப்புத்தன்மையற்று உள்ளது என்று யாரும் நிச்சயமாகச் சொல்ல மாட்டார்கள். ஆனால், சகிப்புத்தன்மை நம் நாட்டின் சமூக இழையாக இன்னமும் தொடரத்தான் செய்கிறது. ஆயினும் உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், சூழ்நிலை சீரழிந்துவரும் வேகத்தில், நாம் நம் சகிப்புத்தன்மையை பெருமையுடன் சொல்லிக் கொள்வதற்கான அருகதையை இழக்கும் நாள் தொலைவில் இல்லை.
தவிர, இன்று இந்தளவு அனுபவிக்கும் இணக்கமான சூழ்நிலைகூட நமது சந்ததியருக்கு வாய்க்காது. எனவே நாம் இந்த விஷயத்தைத் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டியது கட்டாயமானதாகும். நமது அரசியல் சார்புகளையெல்லாம் மீறி விரிவான சமூக அடிப்படையில் நாம் ஒன்றிணைந்து மதவாதத்தை எதிர்த்துச் செயல்பட வேண்டும். மத நல்லிணக்கத்தை நிலைநாட்ட, அனைத்துச் சமூகங்களையும் சேர்ந்த முக்கிய தலைவர்கள் முன் வர வேண்டியது அவசியம்.
சமூகத்தின் முக்கியமான நபர்களுக்கு இந்த விஷம் தோய்ந்த சூழலைத் தெளிவுபடுத்தி, மக்களுக்குப் புரிய வைத்து, பரஸ்பர நம்பிக்கையை மீட்டெடுக்கும் மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது. கிராமத் தலைவர்கள், சிந்தனையாளர்கள், வழக்கறிஞர்கள், தொழில்முனைவோர், பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகிய அனைவரும் இந்தப் பிரச்சினையின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டு அதற்குரிய முன்னுரிமையை அளிக்கவேண்டும். இவையெல்லாம் மதத்தின் பெயரால் நிகழ்த்தப்படுவதால், மதத் தலைவர்கள், அறிஞர்கள், ஆன்மீகத் தலைவர்கள் ஆகியோரும் இந்தப் பொறுப்பைத் தங்கள் தோள்களில் சுமக்க வேண்டும். மேலும், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் அவர்களின் தலைவர்கள் ஆகியோரும் முன்வர வேண்டும்.
எப்பொழுதெல்லாம் மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைகிறதோ, குறிப்பிட்ட குழுவினரோ, வகுப்பினரோ தாக்கப்படுகின்றனரோ, நீதியை விரும்பும் தனி நபர்கள், சமூக அமைப்புகள் அவற்றை எதிர்த்துக் குரலெழுப்புகின்றனர்; இது பாராட்டத்தக்க விஷயமாகும். இப்பொழுதும்கூட நீதியையும் அமைதியையும் விரும்பும் எல்லா மதங்கள், சாதிகள், அரசியல் கட்சிகள், சித்தாங்கள் ஆகியனவற்றைச் சேர்ந்த அனைத்து மக்களும் முன் வந்து தோளுடன் தோள் இணைந்து சமூக நல்லிணக்கத்திற்கும் பரஸ்பர உறவுக்கும் நம்பிக்கைக்கும் உகந்த சூழ்நிலையை உருவாக்குவதில் உழைக்க வேண்டும் என்று ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் விரும்புகிறது.
இது தொடர்பாக செய்ய வேண்டிய மிக முக்கியமான விஷயம், சாத்தியமான அனைத்து மட்டங்களிலும் நேர்மையான, பரந்த, தொடர்ச்சியான பரஸ்பர நம்பிக்கையுள்ள தகவல் தொடர்பு அலைவரிசையை, இந்து, முஸ்லிம் மற்றும் இதர மத, பண்பாட்டுக் குழுக்களின் அனைத்து மட்டங்களிலும் நிறுவ வேண்டும். இந்தப் பரஸ்பர தகவல் தொடர்பு, உயர் மட்டத் தலைவர்கள், சிந்தனையாளர்கள், கிராமங்களின் காலனிகள், பஞ்சாயத்துகள், வார்டுகள் என்று அனைத்து மட்டத்திலும் அமைய வேண்டும். இத்தகு பரஸ்பர நம்பிக்கைக்கும் தகவல் தொடர்பிற்கும் ஒரு சரியான அமைப்பு நிறுவப்பட்டு, வேறுபாடுகள் ஏற்படும் போதெல்லாம் அவை சரியான வகையில் களையப்பட வேண்டும்.
இந்தஅமைப்பு வலுவானதாகவும் ஆற்றல் மிக்கதாகவும் இருக்க வேண்டும். ஊடகங்கள், சமூக ஊடகத் தளங்கள், வாட்ஸ்அப் மூலம் பொய்யான தகவல்களையும் வதந்திகளையும் பரப்புவதை உடனடியாக எதிர்கொண்டு அவை மேற்கொண்டு பரவாமல் தடுக்க வேண்டும். நாட்டிற்கு வெளியே என்ன நடந்தாலும் நாட்டிற்கு உள்ளே எந்தப் பகுதியிலும் குடியிருப்பிலும் கிராமங்களிலும் அதன் சமூக இழைக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படக் கூடாது.
ஊடகங்கள், சமூக ஊடகத்தளங்கள், பாடத் திட்டம் போன்றவை குடிமக்களுடைய சமூக அமைப்பின் பார்வைக்கு உட்படுத்தப்பட வேண்டும். நாட்டின் அமைதிச் சூழலைச் சிதைக்கும் விஷத்தை விதைப்பது யாராக இருந்தாலும் எந்த மதத்தை, பிரிவைச் சேர்ந்தவராக இருந்தாலும் எத்தகு செல்வாக்கு மிக்கவராக இருந்தாலும் அரசியல் தொடர்புடையவராக இருந்தாலும் அதையெல்லாம் புறந்தள்ளி சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டும். அதற்கு சமூகம் அரசாங்கத்திற்கு உதவ வேண்டும்; நிர்பந்தப்படுத்த வேண்டும். நாம் நமது இளைய சமுதாயத்திற்கு ஆலோசனையைப் பகிர்ந்து, அவர்களது மனங்களைத் திருத்தி, பொறுப்பான வகையில் சமூக ஊடகத் தளங்களைப் பயன்படுத்த கற்றுத்தர வேண்டும்.
சட்டத்தைத் தத்தம் கையில் எடுக்கும் போக்கைக் கண்டித்து ஒட்டுமொத்த சமூகமும் ஒன்றிணைந்து அதை எப்பாடு பட்டாவது தடுக்க வேண்டும். பசுவை அறுப்பது, பள்ளிவாசல்களை சேதப்படுத்துவது, பெண்களை மானபங்கப்படுத்துவது என எந்த விஷயமாக இருந்தாலும் நம் நாட்டில் அதற்குரிய சட்டங்கள் உள்ளன; அதற்குரிய நடவடிக்கையை மேற்கொள்ள சட்ட அமலாக்கப் பிரிவுகள் உள்ளன.
சட்டம் தன் கடமையைச் செய்வதற்கு அனுமதித்து, பொறுப்புள்ள குடிமக்கள் சட்ட அமலாக்கப் பிரிவுக்கு உதவவேண்டும். சட்டம் தன் கடமையைச் செய்வதற்கான சரியான வழி, குண்டர்கள் தங்கள் கையில் சட்டத்தைக் எடுத்துக் கொள்ளாமல் தடுப்பதே. குழுக்கள், அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், நாளிதழ், தொலைக்காட்சி என யாராக இருந்தாலும் அவர்கள் காவலராகவோ, நீதிபதியாகவோ, தண்டனை வழங்குபவராகவோ செயல்பட அனுமதிக்கக் கூடாது. சட்டத்தின் ஆட்சி, சமூகத்தின் அனைத்துத் தரப்பையும் சார்ந்த உறுப்பினர்களின் பொதுவான ஒன்றிணைந்த முயற்சிகளின் மூலம் மட்டுமே மேலோங்க முடியும் என்பதை நாம் வலியுறுத்துகிறோம்.
சிந்தனை மற்றும் பேச்சு சுதந்திரத்தை இஸ்லாம் ஆதரிக்கிறது. அது மதக் கட்டாயம், மிகைவாதம், சகிப்புத்தன்மையின்மை ஆகியவற்றுக்கு எதிரானது. ஒவ்வொருவரின் மதச் சுதந்திர, சித்தாந்த உரிமைகளை இஸ்லாம் அங்கீகரிக்கிறது; இந்தச் சுதந்திரத்தின் மூலமே ஒவ்வொருவரும் சோதிக்கப்படுவர். மத, சித்தாந்த வேறுபாடுகளை இணக்கமான சூழ்நிலையில் திறந்த மனத்துடன் முனைப்புடன் விவாதிக்க இஸ்லாம் அழைக்கிறது; அதன் மூலம், எவ்வித கட்டாயமும் வன்முறையும் வற்புறுத்தலும் இன்றி உண்மையை அறியும் வாய்ப்பு உண்டாகிடும்.
மதவெறி, குறுகிய மனப்பான்மை, மதத்தின் பெயரிலான வன்முறையை, இஸ்லாமிய போதனைகளின் ஒளியில், ஜஅமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் எப்பொழுதுமே எதிர்த்து வருகிறது. இந்தத் தீவினைகள் நாட்டிலிருந்து ஒழிய அது எப்பொழுதுமே பெருமுயற்சியில் ஈடுபட்டு வருகிறது. தற்போது நிலவும் ஆபத்தான நிலைமைக்கு எதிர்வினை ஆற்றும் வகையில் அனைத்துக் குடிமக்களுக்கும் அமைதி, மனிதநேயம் பற்றிய தகவலைத் தெரிவிக்க நாடளாவிய பரப்புரை ஒன்றை நடத்த முடிவு செய்துள்ளது.
அதன்படி, ‘அமைதி – மனிதநேயப் பரப்புரை’ 2016 ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பர் 4 வரை நாடு முழுவதும் நடைபெறும். இது வழக்கமான விழிப்பு உணர்வு பரப்புரை அல்ல; மாறாக, சமூகத்தில் பயன்தரத்தக்க வலுவான மாற்றங்களைக் கொண்டு வருவதே இதன் இலக்கு. நாட்டு மக்களின் மனசாட்சியிடம் முறையிட்டு அதைத் தட்டி எழுப்புவதும் இந்தப் பரப்புரையின் நோக்கம். ஆனால், அதையும் தாண்டி, சமூக மட்டத்திலிருந்து உள்ளூர் மட்டம் வரை தொடர்ச்சியான அமைப்புகளை நிறுவுவதும் வகுப்புவாத வெறுப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளத் தேவையான நடைமுறைகளை சீராக ஊக்குவிப்பதும் எங்களது குறிக்கோள்.
ஜஅமாஅத்தே இஸ்லாமி ஹிந்தும் அதன் ஊழியர்களும் அமைதியையும் சமூக நல்லிணக்கத்தையும் நிலைநாட்டும் உன்னத நோக்கத்திற்காகச் சேவையாற்ற எப்பொழுதுமே தயாராக உள்ளனர். நீதியை விரும்புபவர்களும் இந்நாட்டைப் பற்றி கவலையுடைய குடிமக்களுமாகிய உங்கள் ஒவ்வொருவருடைய செயல் உதவியையும் நாங்கள் விரும்புகிறோம். “இன்று, இந்த நாடு இத்தகு பரிதாபகர நிலையில் உள்ளதென்றால், அது கெட்டவர்களின் தீங்கினால் அன்று; மாறாக நல்லவர்கள் காக்கும் மௌனத்தினால்”.
உன்னத குடிமக்கள் உணர்ச்சி குன்றி, வாய் மூடிய பார்வையாளர்களாக மாறிவிட்டல் அது எந்தச் சமூகமாக இருந்தாலும் அதற்குப் பேரிழப்பே ஏற்படும். ஆக்கபூர்வமானவர்களும் அமைதியை விரும்புபவர்களும் நீதியை விரும்புபவர்களும் முன்வந்து செயலில் இறங்கி, ஒவ்வொரு மட்டத்திலும் கைகோர்த்து, வலிமையைப் பெருக்கி, ஒன்றிணைந்து, எதிர்காலத்தைக் கட்டமைக்க தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.
125 கோடி இந்தியர்கள் வலுவான மனிதநேயக் கட்டமைப்பிற்கான அடிப்படையில் இணைந்து கூட்டு முன்னேற்றம் மற்றும் செழிப்பிற்கு ஒருசேர காரியமாற்றினால் நமது அடுத்த தலைமுறை வெறுப்பிற்குரிய சமூகத்தை சந்திப்பதற்குப் பதிலாய் நாம் வாழும் சமூகத்தைவிடச் சிறந்த ஒன்றை அடைய முடியும். இது ஒவ்வொரு தலைமுறையினருக்கும் கடமை; நாம் நம்முடைய கடமையை நிறைவேற்றுவோம்.
அகிலங்கள் அனைத்தையும் படைத்த இறைவனிடம் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் நீடித்த சகோரத்துவத்துக்கும் நாட்டின் அனைத்துச் சமூகத்தினருக்கும் இடையிலான நன்னம்பிக்கைக்கும் நாம் இறைஞ்சுகிறோம்.
2016 ஆகஸ்டு 21 – செப்டம்பர் 4
அமைதி – மனிதநேயப் பரப்புரை
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்
தமிழ்நாடு & புதுச்சேரி
source: http://darulislamfamily.com/family/dan-t/dan-articles-t/794-peace-and-humanity-campaign.html